உலகச் செய்திகள்

 அமெரிக்கா மீது சீனா கண்டனம்    

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா

நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தாய்நாடு திரும்ப முடிவு

லிபியாவில் அகதிப் படகு கவிழ்ந்து 24 பேர் பலி

கொலம்பியாவில் ஆக்கிரமிப்பாளர் சிலையை கவிழ்த்த பழங்குடியினர்

வெறுப்புப் பேச்சினை எதிர்த்து ஒருநாள் பேஸ்புக் புறக்கணிப்பு

மத நிந்தனை குற்றச்சாட்டில் நைஜீரிய சிறுவனுக்கு சிறை

இஸ்ரேலுடன் பஹ்ரைன், ஐ.அ.இராச்சியம்; வெள்ளை மாளிகையில் அமைதி ஒப்பந்தம்

கொவிட்-19 தடுப்பு மருந்து: ஏற்கனவே பாதியை வாங்கிய உலகின் செல்வந்த நாடுகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஹோட்டல் குடிநீரிலேயே விசம்


அமெரிக்கா மீது சீனா கண்டனம்    

சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்க அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசியப் பாதுகாப்பு, இராணுவத்தை நவீனமயமாக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கா மீண்டும் அவதூறு பேசுவதாக சீன பாதுகாப்பு அமைச்சு சாடியது.

அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அறிக்கையில், சீனா அதன் நில, ஆகாய, கடற்படைகள் அனைத்தையும் வலுப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

தாய்வானைக் கைப்பற்றவோ, அதனுடன் போரிடவோ அவை பயன்படுத்தப்படலாமென அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

ஆனால் அந்த வட்டாரத்தில் தைவானிய அரசாங்கமும் வெளிநாட்டுச் சக்திகளும் பிரச்சினை உண்டாக்குவதாக சீன பாதுகாப்பு அமைச்சு குறைகூறியுள்ளது.

அமெரிக்கா வட்டாரப் பூசல்களைத் தூண்டிவிடுவதாகக் கூறிய சீனா, மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்கா தலையீட்டை அதற்கு ஆதாரங்காட்டியது.    நன்றி தினகரன் 





ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா (Yoshihide Suga) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டு பாராளுமன்றம் அவரை தெரிவு செய்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான 71 வயதுடைய ஷின்சோ அபே, பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சுகவீனம் காரணமாக தனது இராஜினாமாவை கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் தேசிய சட்டமன்றமான டயட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 462 வாக்குகளில் 314 வாக்குகளை பெற்று அவர் இலகுவாக வெற்றி பெற்றுள்ளார்.

70 வீத வாக்குகளுடன் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராக யொஷிஹிடெ சூகா தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராக வருவதற்கு முன்னர் நாட்டின் தேசிய சட்டமன்றமான டயட்டின் ஆதரவு அவருக்கு தேவைப்பட்டதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷின்சோ அபேயின் நெருங்கிய வலது கரமான புதிய பிரதமர்  யொஷிஹிடெ சூகா, தனது முன்னோடிக் கொள்கைகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்தோடு, முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே தனது இரண்டாவது பதவிக்காலம் முழுவதும் கிட்டத்தட்ட 8 வருடங்கள் பதவியில் இருந்தபோது, ​​அவரது வலது கையாக யொஷிஹிடெ சூகா இருந்ததோடு, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையில் பிரதான அமைச்சரவை  செயலாளராகவும்பதவி வகித்திருந்தார்.

தான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் அட்டைப்பெட்டி நிறுவனமொன்றில் தொழிலாளராக பணி புரிந்துள்ள யொஷிஹிடெ சூகா, மீன் சந்தையொன்றிலும் பணியாற்றியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    நன்றி தினகரன் 






நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தாய்நாடு திரும்ப முடிவு

நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி மீண்டும் ரஷ்யா திரும்புவார் என்று அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

ஜெர்மன் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் சேர்க்கப்பட்ட அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் மெலிந்த நிலையில் இருக்கும் நவல்னியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவரது செய்தித் தொடர்பாளரான கிரா யர்மிஷ் வெளியிட்டுள்ளார்.  

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி செர்பியாவில் விமானப் பயணத்தின்போதே நவல்னி மயங்கி விழுந்தார். அவருக்கு நொவிசொக் என்ற விசம் ஊட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சரிட் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.  

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவுக்கு அமையவே அவர் நஞ்சூட்டப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் அதனை ரஷ்யா மருத்து வருகிறது. நவால்னி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆதரவாளர்களுக்காக ஒரு இடுகையை பதிவிட்டுள்ளார். “நான் நவால்னி பேசுகிறேன். உங்களை எல்லாம் மிகவும் பிரிந்துள்ளதாக உணர்கிறேன். இப்போது என்னால் முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், ஒருநாள் முழுவதும் எனது சொந்த முயற்சியில் கருவிகளின்றி மூச்சு விட முடிந்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.  நன்றி தினகரன் 







லிபியாவில் அகதிப் படகு கவிழ்ந்து 24 பேர் பலி

லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற இரப்பர் படகு கவிழ்ந்த விபத்தில் 24பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.  

இதுதொடர்பாக சர்வதேச இடம் பெயர்வு அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், லிபியா அருகே மத்தியதரைக் கடலில் 3இரப்பர் படகுகளில் அகதிகள் ஏறிச் செல்வதை லிபிய கடல்படையினர் கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.  அதில் ஒரு படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர் என்றார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லிபியா கடலோர படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.  

அப்போது 24 அகதிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், மாயமான சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் லிபிய கடல் படையினர் தெரிவித்தனர்.  நன்றி தினகரன் 









கொலம்பியாவில் ஆக்கிரமிப்பாளர் சிலையை கவிழ்த்த பழங்குடியினர்

கொலம்பியாவில் பழங்குடியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தென் மேற்கு நகரான பொபானில் உள்ள ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர் செபஸ்டியன் டி பெலகசாரின் சிலை தரையில் கவிழ்க்கப்பட்டுள்ளது.

1537 இல் இந்த நகரை நிறுவியவரான டி பெலகசார் கொலம்பிய வரலாற்றில் சர்ச்சைக்குரிய ஒருவராக உள்ளார். அவரது சிலை மீது கயிற்றை கட்டி கீழே வீழ்த்திய மிசான் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அந்த சிலை ஐந்து நூற்றாண்டுகளில் இனப்படுகொலை மற்றும் அடிமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பழங்குடித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பல் கலாசார நகர் ஒன்றின் அடையாளத்திற்கு எதிரான தாக்குதலாக இது உள்ளது என்று பொபாயன் நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்காவின் வட மேற்கு பகுதிகளில் பல்வேறு பயணங்களை மேற்கொண்்டவராக டி பெலகசார் உள்ளார். தற்போதைய ஈக்வடோர் தலைநகர் குயிடோவும் அவரால் நிறுவப்பட்டதாகும். இந்த ஆக்கிரமிப்பாளர் தமது ஏனைய முன்னோர்களை கொன்று குவித்து நிலங்களை அபகரித்ததாக மிசாக் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  நன்றி தினகரன் 










வெறுப்புப் பேச்சினை எதிர்த்து ஒருநாள் பேஸ்புக் புறக்கணிப்பு

கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் டீ. ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் நேற்று தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகளை இடுவதை புறக்கணித்தனர்.

சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

வெறுப்புப் பேச்சை நிறுத்தும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் பதிவிடப் போவதில்லை என்று பிரபலங்கள் தெரிவித்திருந்தனர்.

“அமெரிக்காவில் வேண்டுமென்றே பிளவை ஏற்படுத்துவதற்குப் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றைச் சில குழுக்கள் பரப்புவதைத் தளங்கள் அனுமதிக்கின்றன. ஒன்றும் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று 188 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களைக் கொண்ட கார்டேஷியன் கூறினார்.

பாகுபாடு, பகைமை, வன்முறை ஆகியவற்றை ஏற்படுத்தும் தகவல் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆர்வலர்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன.   நன்றி தினகரன் 









மத நிந்தனை குற்றச்சாட்டில் நைஜீரிய சிறுவனுக்கு சிறை

நைஜீரியாவில் இஸ்லாமிய நீதிமன்றம் ஒன்றினால் 13 வயது சிறுவனுக்கு மதநிந்தனை குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை மீள் பரிசீலனை செய்யும்படி ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் நைஜீரிய நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு கானோ மாநிலத்தில் நண்பர் ஒருவருடன் விவாத்தில் ஈடுபட்டிருந்தபோது இறைவன் பற்றி அவமதிக்கும் கருத்துகளை கூறியதாகவே இந்த சிறுவனுக்கு கடந்த மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நைஜீரியாவின் மதச்சார்பற்ற சட்டத்திற்கு மத்தியில் ஷரியா சட்டத்தை பின்பற்றும் 12 மாநிலங்களில் ஒன்றாக கானோ உள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

“13 வயது சிறுவன் மீதான தண்டனை, நைஜீரியாவில் சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் நீதி தொடர்பிலான அனைத்து அடிப்படை கொள்கைகளையும் மீறுவதாக உள்ளது” என்று நைஜீரியாவின் யுனிசெப் பிரதிநிதி பீட்டர் ஹோகின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி மேன்முறையீடு செய்ததாக அந்தச் சிறுவனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 









இஸ்ரேலுடன் பஹ்ரைன், ஐ.அ.இராச்சியம்; வெள்ளை மாளிகையில் அமைதி ஒப்பந்தம்

பலஸ்தீனமெங்கும் ஆர்ப்பாட்டம்; ரொக்கெட் வீச்சு

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கையை கண்டித்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதன்போது இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இதனை ஒட்டி கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்புப் பெறும் வகையில் முகக்கவசம் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலஸ்தீன கொடியை ஏந்தியபடி மேற்குக் கரை நகரங்களான நப்லுஸ் மற்றும் ஹெப்ரோன், அதேபோன்று காசா பகுதியில் பேரணி நடத்தினர். பலஸ்தீன அதிகார சபையின் தலைமையகம் இருக்கும் ரமல்லாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில் “துரோகிகள்”, “ஆக்கிரமிப்பாளர்களுடன் எந்த உறவும் இல்லை” மற்றும் “இந்த உடன்படிக்கைகள் வெட்ககரமானது” என்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.  

காசாவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எமாத் இஸ்ஸா கூறும்போது, இந்த கரையோரப் பகுதி வழியே நடந்தால், “இஸ்ரேலிய முற்றுகையை எதிர்த்து வெறுமனே ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கால்களை இழந்த காசா இளைஞர்களையும் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதையும் பார்க்கலாம்” என்றார்.  

“மேற்குக் கரை மற்றும் ஜெரூசலத்தில் இஸ்ரேலிய புல்டோசர்கள் தொடர்ந்து பலஸ்தீன வீடுகளை தரைமட்டமாக்கி நாளாந்தம் தமது நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பலஸ்தீனர்கள் இனச்சுத்திகரிப்புக்கு ஆளாகின்றனர்” என்றும் இஸ்ஸா, அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா மற்றும் அபூதாபி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் செயித் அல் நஹ்யான் ஆகியோரின் படங்களை எரித்தனர்.   

மறுபுறம் கடந்த கால் நூற்றாண்டில் முதல் முறையாக அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது.  

எனினும் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேறினால் மாத்திரமே மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.  

“இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியும் வரை பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது” என்று அப்பாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.  

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய உடன்படிக்கைகள் பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் அமைதியை கொண்டுவராது என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி தெரிவித்தார். “பிராந்தியத்தில் இருக்கும் மக்கள் தமது உண்மையான எதிரியான இந்த ஆக்கிரமிப்பாளர்களை தொடர்ந்து எதிர்க்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.  

இந்த உடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு பலஸ்தீனர்களின் மக்கள் எதிர்ப்பின் ஒருங்கிணைந்த கட்டளையகம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் ‘கறுப்புத் தின’ பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனிடையே வெள்ளை மாளிகையில் உடன்பாடு எட்டப்படும் அதே நேரத்தில் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி இரு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. காசாவின் வடக்காக இருக்கும் அஷ்கலோன் மற்றும் அஷ்டோட் நகரங்களில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இதனால் மூன்று இஸ்ரேலியர்கள் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.  

இந்நிலையில் நேற்றுக் காலையில் இஸ்ரேலை நோக்கி 13ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதேவேளை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கையை எதிர்த்து பஹ்ரைனில் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.  

பஹ்ரைன் எதிர்க்கட்சியான அல் வெபக் தேசிய இஸ்லாமிய கழகம் ட்விட்டரில், “தற்போது துரோகம் இழைக்கப்படுவதோடு பலஸ்தீன் மற்றும் அல் குத்ஸிற்கு (ஜெரூசலம்) எதிராக அவர்கள் சதியில் இடுபடும்போது, இறைவன் பெரியவன் என்று நாம் கோசம் எழுப்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி தினகரன் 









கொவிட்-19 தடுப்பு மருந்து: ஏற்கனவே பாதியை வாங்கிய உலகின் செல்வந்த நாடுகள்

செல்வந்த நாடுகள் எதிர்காலத்தில் வரப்போகும் கொவிட்–19 தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கனவே வாங்கிவிட்டதாக ஒக்ஸ்பாம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செல்வந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை உலக மக்கள் தொகையில் 13 வீதம் மாத்திரமாகும்.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரச சார்பற்ற அமைப்பான ஒக்ஸ்பாம் ஆராய்ந்துள்ளது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என ஒக்ஸ்பாம் கணக்கிட்டுள்ளது.

ஒருவருக்கு 2 மருந்து அளவு தேவைப்படும் என்றால், அது 3 பில்லியன் மக்களுக்குப் போதுமானது. ஏற்கனவே 5.3 பில்லியன் மருந்து அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

மொடர்னா மருந்து நிறுவனம் 2.5 பில்லியன் டொலர் பொதுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது மருந்துகள் அனைத்தையும் செல்வந்த நாடுகளுக்கு விற்றுவிட்டதாக ஒக்ஸ்பாம் சுட்டிக்காட்டியது.

பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பு மருந்தைத் தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அந்தத் தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அது மலிவாக இருப்பதும் அதே அளவு முக்கியம் என்று ஒக்ஸ்பாம் குறிப்பிட்டது.

கொவிட்–19 நோய்த்தொற்று எல்லா இடங்களிலும் இருப்பதை அது சுட்டிக்காட்டியது. தடுப்பு மருந்து அனைவருக்கும் இலவசமாகவும் தேவைக்கேற்ப நியாயமாக வழங்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.  நன்றி தினகரன் 








ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஹோட்டல் குடிநீரிலேயே விசம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அருந்திய நீரில் நச்சு கலக்கப்பட்டிருப்பதாக அவரது உதவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.

நவல்னி விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் செர்பியாவின் டோம்ஸ்க் நகரில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவர் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது அறையில் இருந்த தண்ணீர் போத்தலில் நோவிசோக் நச்சுப் பொருள் படிந்திருந்ததாக அவரது உதவியாளர்கள் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான நவல்னி அதற்காக பல முறை சிறை சென்றுள்ளார்.

ஏற்கனவே அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.

தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் நவல்னி மீண்டும் தாய் நாடு திரும்பப்போவதாக அறிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 








No comments: