எனது ஆச்சி பற்றி முன்னரும் சொல்லியிருக்கின்றேன். அந்தக்கால ஆச்சிமார் சிக்கனமாகவும் கச்சிதமாகவும் செலவுசெய்து குடும்பத்தின் தேரை நகர்த்துவதில் கைதேர்ந்தவர்கள்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மணியோடர் பொருளாதாரம் என்பர். அதற்குக் காரணம் இருந்தது. அங்கே படித்து அரசாங்க உத்தியோகம் பார்க்க, தென்னிலங்கை சென்ற ஆண்கள், மாதம் முடிய, மணியோடரில் அனுப்பிவைக்கும் சம்பளப்பணத்தை நம்பியே, வீட்டின் தேவைகளை பெண்கள் கவனித்தார்கள். இது பற்றி எனது நண்பர் எஸ்.பொ. எழுதிய சடங்கு நாவல் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எனது தந்தையார் தென்னிலங்கைக்கு புகையிலை வர்த்தகம் தொடர்பாக அடிக்கடி சென்று வருபவர். அவர் கொண்டுவரும் பணத்தை நம்பித்தான் எங்கள் ஆச்சி ( அம்மா) குடும்ப வண்டிலை செலுத்துவார். பூர்வீக சொத்துக்கள் ஏதுமில்லாத மத்தியதரக் குடும்பம் எங்களுடையது. அதனால், ஆச்சி மிகவும் சிக்கனமாகவே செலவுசெய்வார். அத்துடன் பசியோடு வரும் எவருக்கும் உணவளித்து அனுப்பிவைப்பார். ஆச்சி தினமும் உலையில் அரிசியை போடும் முன்னர், ஒரு பிடி அரிசியை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் போடுவார். அன்றாடம் நடக்கும் இந்நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கின்றேன். இத்தகைய நடைமுறை சிங்கள மக்களிடமும் இருந்ததாக பிற்காலத்தில்அறிந்துள்ளேன். உங்களில் பலருக்கும் 1971 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். அவர்கள் ஏழை, மத்தியதர குடும்பங்களிலிருந்து பொருளாதார ஏற்றதாழ்வுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப்போராட வந்தவர்கள். அந்த இயக்கம் தமிழில் மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கியது. People Liberation Front என ஆங்கிலத்திலும் ஜனதா விமுக்தி பெரமுன என்று சிங்களத்திலும் அழைக்கப்பட்ட இந்த இயக்கத்திலும் ஒரு நடைமுறை இருந்ததாக அறிகின்றேன். அதாவது அந்த இயக்கத்தின் இளைஞர்களின் தாய்மார் தினமும் சமைக்கும்போது, உலையில் அரிசி இடுவதற்கு முன்னர் ஒரு பிடி அரிசியை எடுத்து சேமிப்பில் வைப்பார்களாம். அவ்வியக்கத்தின் இளைஞர்கள், சில நாட்களின் பின்னர் வீடு வீடாகச்சென்று அவ்வாறு சேமிக்கப்பட்ட அரிசியை சேகரித்துக்கொண்டு காடுகளுக்குள் சென்று தலைமறைவாக இருக்கும் இயக்கத்தவரின் சமையலுக்கு கொடுத்து பசிபோக்குவார்களாம்.
தென்னிலங்கை பெரும்பான்மை இன மக்களில் கணிசமானவர்கள் மூன்று வேளையும் சோறு உண்பவர்கள் என்பதையும் அறிந்துள்ளேன். ஶ்ரீமா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு வந்தபோது, அவர், “ சந்திரமண்டலத்திலிருந்தாவது அரிசியை இறக்குமதி செய்து தருவோம் “ எனச் சொன்னதை, எதிர்க்கட்சிகள் எள்ளிநகையாடிப்பேசியதை அறிந்திருப்பீர்கள். எங்கள் ஆச்சியும் தினமும் பிடி அரிசி எடுத்து சேமித்ததை பார்த்துவிட்டு, “ ஏன்… அப்படி செய்கிறீர்கள் ..? “ எனக்கேட்டபோது, அவர்கள் சொன்ன வாழ்க்கைத் தத்துவம் என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. ஆச்சியின் தயாள சிந்தனை எமக்கு முன்னுதாரணம். நான் தற்போது வாழும் புகலிடத்தில் Mc Donald’s, KFC, Hungry jacks, Subway முதலான அவசர உணவு வகையறாக்களைப் பார்த்துவிட்டு, எங்கள் ஆச்சியின் அன்றைய உளப்பாங்கு பற்றி எனது பேரக்குழந்தைகளிடம் சொன்னால் எடுபடுமா..? என்றும் எண்ணிப்பார்க்கின்றேன்.
என்னைப்போன்ற முதியவர்கள் இரண்டு உலகிலும் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம். அந்த அனுபவத்தில் பேசுகின்றோம். ஆச்சியின் அரிசி சேமிப்பின் நோக்கம் தொடக்கத்தில் அந்த குழந்தைப்பருவத்தில் என்னிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது விடினும், நானும் ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக மாறியதும் அச்செயல் மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவு: ஒரு கவிதை பிறந்தது. அதன் தலைப்பு: பிடி அரிசி. சின்ன வயசில் திரிந்த களைப்பில் ஏதும் தின்னும் விருப்பு எழவே செல்கிறேன் என் ஆச்சி என்றும் போல் அங்கே எடுத்து மரக்கொத்தால் அன்றும் அளக்கின்றாள் குத்தரசி சென்று அடுத்தோர் மூலை அருகினிலே மூடிக் கிடந்த பனை ஓலைப் பழம்பெட்டி ஒன்றுள்ளே கோலியவள் ஓர் கை பிடி அரிசி எடுத்து இட்டாள் பின் மீதி சீர் செய்து உணவுக்கு உலையில் இட்டாள் தேராமல்…. ஏன் ஆச்சி அஃதென்றேன் எனை விழித்து அன்பாய்… ‘ மேனே கேள்… நாளும் ஒரு பிடியை பானையிலே போடாமல் எம்மை ஒறுத்துப் பிடித்து வைத்து நாடிவரும் ஏழை எளியோருக்குக் கோடாமல் கிள்ளிக் கொடுத்தல்தான் தானமடா ! …. உள்ளதனால் அள்ளிக் கொடுத்தல் அல்ல அஃது என்றாள் வள்ளல் அவள் தன்னை ஒறுத்து என்றும் தான உணர்வு ஓங்கும் வன்மை அன்னாளின் வளம். இக்கவிதையில் எனது ஆச்சியின் இயல்பை சித்திரித்திருந்தேன்.
நான் எழுதிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான இக்கவிதை தமிழ்நாட்டில் இந்திய சாகித்திய அகாதெமி வெளியிட்ட புவியெங்கும் தமிழ்க்கவிதை என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது. இதனை தொகுத்தவர் இந்தியாவில் பிரபலமான எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மாலன் அவர்கள். மாலன், நீண்டகாலமாக இலக்கிய ஊடக பொது வெளியில் இயங்கிவருபவர். இலங்கையிலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நண்பர்களை கொண்டிருப்பவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியையும் புகலிட இலக்கிய செல்நெறியையும் அவதானித்து வந்திருப்பவர். இம்மாதம் 16 ஆம் திகதிதான் அவருக்கு பிறந்த தினம். 1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி பிறந்திருக்கும் மாலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தப்பதிவு தற்செயலானது. திட்டமிட்டு எப்பொழுது மாலனின் பிறந்த தினம் வரும் என்று காத்திருந்து எழுதப்பட்டதும் அல்ல.
இவ்வாறு பல எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்வுகள் எனது வாழ்வில் தற்செயலாக நடந்தேறியுள்ளன.
மாலன் அவர்கள், திசைகள் இணைய இதழ், இந்தியா டுடே ( தமிழ் ) குமுதம், தினமணி, குங்குமம், புதிய தலைமுறை முதலான முன்னணி இதழ்களிலும் சன் தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர். அத்துடன் இந்திய சாகித்திய அகாதெமிக்காக பல நூல்களையும் தொகுத்திருப்பவர். அந்த வகையில் அவர் தொகுத்திருக்கும் புவியெங்கும் தமிழ்க்கவிதை என்னும் இந்த நூலும் முக்கியத்துவம் பெறுகிறது. கவிதைகளுக்கு முன்னால் சில சொற்கள் என்ற தலைப்பில் மாலன்
இந்நூலுக்கு நீண்ட முன்னுரையும் எட்டுப்பக்கங்களில் தந்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் – அபுதாபி, கத்தார், துபாய், ஷார்ஜா, கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், சீனம் , சீனம் ஹாங்காங், சீசெல்ஸ், டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பாப்புவா நியூகினி, பிரான்ஸ், மலேசியா, மியான்மார், ஜெர்மனி முதலான நாடுகளைச்சேர்ந்த கவிஞர்களின் கவிதைகளை சேகரித்து இத்தொகுப்பினை மாலன் வெளியிட்டதுடன், எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். அதனை நன்றியோடு இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றேன்.
இத்தொகுப்பு பற்றி வௌியான எனது கண்ணிற்குத் தென்பட்ட அறிமுகக்குறிப்புகளையும் இங்கே தருகின்றேன். தமிழ்க் கவிதை உலகில் தங்கள் கவிதைகளால் புகழின் சிகரங்களில் உலவும் மூத்த கவிஞர்கள் நுஃமான் (இலங்கை), க.து.மு.இக்பால் (சிங்கப்பூர்), அம்பி (பப்புவா நியூ கினியா) ஆகியோரின் கவிதைகள் இந்த நூலை கனப்படுத்துகின்றன.
தேசங்கள்தோறும் தேர்ந்தெடுத்த பூக்களைக் கொண்டு தலைசிறந்த கவிதைப் பூமாலையை உருவாக்கியதற்காக தொகுப்பாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ( தினமணி இணைய இதழ் - தமிழ்நாடு ) உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முடிந்தவரையில் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். சிறப்பானதொரு கவிதைத்தொகுதியினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள சாகித்திய அகாதெமியினருக்கும், தொகுத்த எழுத்தாளர் மாலனுக்கும், தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் . (பதிவுகள் இணைய இதழ் – கனடா ) புவியெங்கும் தமிழ்க்கவிதை நூலின் வெளியீட்டு அரங்கும்
தமிழ்நாட்டில் நடந்திருப்பதை அறிந்தேன். அந்த நிகழ்ச்சியின் அறிவித்தல் அழைப்பினையும் நீங்கள் இந்த அங்கத்தில் பார்க்கமுடியும். எனது ஆச்சி, எனது கவிதையை பார்க்காமலேயே கண்களை மூடிவிட்டார். புவியெங்கும் எனது ஆச்சியின் கருணை உள்ளம் இத்தொகுப்பின் மூலம் பரவியிருக்கிறது. (தொடரும் )
No comments:
Post a Comment