மழைக்காற்று ( தொடர்கதை ) --- அங்கம் 54 முருகபூபதி


இன்னும் எத்தனைபேரை இந்த கொரோனா கொல்லப்போகிறது…? முடிவே இல்லையா…?   அபிதா,  வீட்டின் விறாந்தாவிலிருந்து  தலையில் கைவைத்து யோசித்துக்கொண்டிருந்தாள். வெறுமை  சூழ்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வோடு,  எதனையும் செய்யப்பிடிக்காமல்,  வாசல் கேட்டையே வெறித்துப்பார்த்தாள். விறாந்தாவின் அரைச்சுவர் குந்திலிருந்து அவள் பார்த்தபோது வழக்கமாக அந்த கேட்டின் கைப்பிடியில் வந்தமரும் சிட்டுக்குருவியையும் காணவில்லை.   அன்றொருநாள்  காலைப்பொழுதில்   மழைக்காற்றோடு  வந்து இறங்கி, இந்த கேட்டை தள்ளித்திறந்துகொண்டுதானே இந்த வீட்டுக்குள்  பிரவேசித்தேன்.  வாய்பேசமுடியாத இந்த கேட், திறந்து மூடும்போது மாத்திரம் கிறீச் என்று ஒலி எழுப்பி பேசுகிறது.  உள்ளத்தின் கதவை  மூடித்திறக்கும்போது ஏதும் ஓசை எழுகிறதா…? அபிதா அறுசுவை நிகழ்ச்சியை  முதல் நாள் முன்னிரவில்  தொலைக்காட்சி ஒளிபரப்பியபோதும், அதனைப்பார்த்து ரசிக்கும் ஆவலும்  அவளுக்கு இருக்கவில்லை.  உதயசங்ககரின் தாய் தமயந்தியும்  கண்டியிலிருந்து மஞ்சுளாவும், அவளது தாய் சிவகாம சுந்தரியும் பார்த்துவிட்டு நன்றாக இருந்ததாக சொன்னார்கள்.  நுவரேலியாவிலிருந்து சுபாவும், யாழ்ப்பாணத்திலிருந்து கற்பகம் ரீச்சரும் அந்த

நிகழ்ச்சியை பார்த்தார்களோ தெரியாது. அவ்வாறு அவர்களும் பார்த்துவிட்டு சொல்லியிருந்தாலும் சுரத்தின்றித்தான் கேட்டிருப்பாள்.  மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைக்கழிந்தது.  பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்  அபிமான ரசிகை அவள்.  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இணையத்தில் வெளியான செய்திகளையும் அடிக்கடி பார்த்திருந்தவளுக்கு,  மறைந்தார் என்ற செய்தி வந்ததும்,  மஞ்சுளாவுடனும் சுபாஷினியுடனும் கைத்தொலைபேசியில் பேசினாள்.  அவர் பாடித் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை மனதிற்குள் பாடினாள். மகள் தமிழ்மலரதும்,  காணாமல்போன கணவன் பார்த்திபனதும்  நினைவு வரும்போதெல்லாம், பாலசுப்பிரமணியத்தின் மனதை வருடிச்செல்லும் குரலும் நினைவுக்கு வரும்.  வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு  காற்றுக்கு ஞானமில்லை நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை ! நீண்ட பெருமூச்சு  மெதுவாக  உதிர்ந்தது.  மனம் உறைந்துபோயிருந்தது. கசிந்த கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.  ஜீவிகா இன்றும் வீடு திரும்பவில்லை.  

நாளை வருவதாகச்சொல்லிவிட்டாள்.  கொழும்பில் நிரந்தரமாகத் தங்குவதற்கான


முன்னேற்பாடுகளில் அவள் மூழ்கியிருக்கவேண்டும் என்று அபிதாவுக்கு விளங்கியது. லண்டன்காரரின் மகள்,   இறுதியில் இந்த வீட்டை விற்கும் மட்டும், ஏதும் தனியார் துறை பாதுகாப்பு  சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம்.  யாராவது ஒரு செக்கியூரிட்டி கார்ட்  அடிக்கடி வந்து  பார்க்கலாம்.  இரவில் காவலுக்கு இருக்கலாம்.  அந்த லண்டன்காரியிடம் அதற்கெல்லாம் தாராளமாகப்  பணம் இருக்கும்.  இவ்வளவு நாட்களும் இந்த வீட்டிலிருந்தவர்களின் தேவைகளைத்தான் கவனித்தேன்.  அவரவர் தத்தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டு விடைபெற்றிருக்கும்போது,  இன்னமும் நான் ஏன் அவர்களைப் பற்றியே யோசிக்கவேண்டும்..? இனிமேலாவது எனக்குரிய வழியை நான் தேர்ந்தெடுக்காதுபோனால்,  இறுதியில் பெரிய ஏமாற்றத்தைத்தான் சந்திக்கவேண்டும் ! இனித் தேவை இருப்பதற்கு ஒரு இடம். உதய சங்கரின்  தாய்  தமயந்தி ,  தன்னோடு வந்திருக்கலாம் எனச்சொல்லியிருக்கிறா.  தற்போதைக்கு அதுதான் நல்ல யோசனை.  அங்கிருந்து அவள் செல்லும் அறநெறிப் பாடசாலைக்கும் பிள்ளைகளுக்கு சமய பாடம் சொல்லிக்கொடுக்கப்  போகலாம். இந்த ஊரில் இரவில் சமைக்கப்பஞ்சிப்பட்டு,  தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கியிருக்கும் குடும்பங்களுக்கு இடியப்பம், புட்டு, தோசை செய்து கொடுத்து எஞ்சியிருக்கும் காலத்தை ஓட்டிவிடலாம்.    வைத்திருக்கும் சேமிப்பிலிருந்து  மிக்ஸி, கிரைண்டர், சாதனங்களையும் வாங்கிக்கொள்ளலாம்.  சில வேளை இந்த வீட்டிலிருப்பவற்றையே எடுத்துக்கொள்ளுமாறு ஜீவிகா சொல்லவும் கூடும்.  இவற்றை கொழும்புக்கு எடுத்துச்சென்று அவள் என்ன செய்யப்போகிறாள்..? இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜீவிகா அலுவலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த பத்திரிகையையும் பழைய பத்திரிகைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் கொரிடோரில் போடுவதற்கு எடுத்துச்சென்றபோது,  மீண்டும் அதனை ஒரு முறை பார்த்துவிடும் எண்ணத்தில்,

விறாந்தா  அரைச்சுவர் குந்திற்கு எடுத்துவந்து விரித்துப்பார்த்தாள். செய்திகளில் பார்வை ஓடியது.  பத்திரிகையின் பக்கங்களை புரட்டியபோது     ஒரு மூலையில்   கண் நிலை குத்தியது.  வீடு விற்பனைக்கு அனைத்து வசதிகளுடன்   நான்கு  படுக்கை அறைகள் கொண்ட  வீடு நிகும்பலையில்   விற்பனைக்கு வருகிறது.  மேலதிக விபரங்களுக்கு:   அபிதா தொடர்ந்து பார்த்தாள்.   ஒரு வீடு விற்பனை முகவர் அலுவலகத்தின்  தொலைபேசி எண்ணும், அதன் இணையத்தள விபரமும் மாத்திரம் இருக்கிறது. அபிதா எழுந்து சென்று  தனது கணினியை இயக்கிவிட்டு,  குறிப்பிட்ட இணையத்தளத்தை தரவிறக்கம் செய்து பார்த்தாள். அவள் எதிர்த்பார்த்தவாறு இந்த வீட்டின் படமோ ஏனைய  விபரங்களோ இல்லை.  இனிமேல்தான் இந்த முகவர் தரப்பிலிருந்து எவரேனும்  இந்த வீட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் படம் எடுக்க வரலாம்.  நிகும்பலையூரில் எத்தனையோ வீடுகள் விற்பனைக்கு வரலாம்.  நான் ஏன் இந்த வீடுதான் இந்த விளம்பரத்திற்குரியது என்று எண்ணிக்கொள்ளவேண்டும்.  எதற்கும் ஜீவிகாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஜீவிகாவுக்கு அழைப்பு எடுத்தாள்.  “ என்ன அபிதா…  போரடிக்கிறதா..?   “  கொட்டாவி விட்டு சோம்பல் முறித்துக்கொண்டு  அவள் கேட்பது அபிதாவுக்கு தெரிந்தது.   “ என்னம்மா… இன்னுமா நித்திரை.  இன்றைக்கு வேலை இல்லையா..?  “  “  இனித்தான் புறப்படவேண்டும்.  ஏதும் நியூஸ்..? மஞ்சு, சுபா எடுத்தாங்களா..?  கற்பகம் ரீச்சரம்மாவிடமிருந்து ஏதும் தகவல்…?  “    “ அப்படி ஒன்றும் இல்லையம்மா..? உங்கட பேப்பரில் ஒரு வீடு விற்பனை விளம்பரம் ஒன்று வந்திருக்கிறது. பார்த்தீங்களா..?  முழு விபரமும் இல்லை.  சிலவேளை  உங்கட  இந்த வீடாகத்தான் இருக்கலாம் என நம்புகிறேன். லண்டன் பெரியப்பா… உங்களுக்கு ஏதும் சொன்னாரா..?  “ அபிதா ஆர்வத்துடிப்புடன் கேட்டாள்.  “ அப்படியா… அபிதா…?   எதற்கும் அந்த விளம்பரத்தை ஒரு முறை வாசியுங்க பார்க்கலாம்  “ அபிதா வாசித்தாள். “ ஒஃபீஸுக்குப் போன பிறகு விளம்பரப் பிரிவில் கேட்டு விசாரிக்கிறன்.   சிலவேளை அவள் தர்ஷினி, பெரியப்பாவின் மகளின்ட  வேலையாக இருக்கலாம்.  பெரியப்பா, இதுவரையில் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.  பார்ப்போம்.  இனியும் அவளின்ட  அந்த வீட்டை கட்டி அழுவதற்கு நான் தயார் இல்லை.  “  “  ஜீவிகா அம்மா, நீங்க கட்டி அழமாட்டீங்க என்பது எனக்குத் தெரியும். ஆனால், இனிமேல் நான் யாரையாம் கட்டி அழுவது… சொல்லுங்க…?  “ அபிதா துடுக்குத்தனத்துடன் கேட்டாலும்,  அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காண்பித்தாள்.  ஒரு செக்கண்ட் மறுமுனையில் மௌனம் நீடித்தது,  “ அபிதா… அதுதான் நான் சொன்னேன்தானே… நீங்களும் என்னோடு கொழும்புக்கே வந்துவிடலாம்.  பிரச்சினை இல்லை.” என்றாள் ஜீவிகா.  “ இல்லையம்மா… அது சரிப்படாது.   சீலனின் வீடு இரண்டு அறை குடியிருப்பு.  உங்கள் இரண்டுபேருக்குமே காணாது.  வேண்டாம்.  நான் இங்கே தமயந்தி வீட்டிலிருந்துகொள்கிறேன்.  பிரச்சினை இல்லை. இடைக்கிடை கொழும்பு வந்து உங்களையும் சீலன் தம்பியையும் பார்க்கிறேன்.   எப்படியும் மாதம் ஒரு தடவையாவது ரி.வி. நிகழ்ச்சிக்கும் வரவேண்டியிருக்கும்தானே..?   “    “ சரி அபிதா… உங்கட இஷ்டம்.    நான் நாளைக்கு வந்துவிடுவேன். நேரில் பேசுவோம்.  வீட்டில் சாமான்கள் எல்லாம் இருக்கிறதுதானே… ? ஏதும் தேவை என்றால் கோல் தாங்க… என்ன…?  “   “ இல்லையம்மா… எல்லாம் இருக்கிறது.  இருப்பதைத்தான்  இனி முடிக்கவேண்டும்.    தினமும் ஐந்துபேர் இருந்து சாப்பிட்ட வீடு. இப்போது ஒன்றாகச் சுருங்கிப்போய்விட்டது. அதுதான் எனக்கு பெரிய கவலை.   இப்போது இருப்பதை வைத்து சமாளிக்கலாம்.  முடிந்தால் நாளைக்காவது  வாங்க.  இரவில் தமயந்தி வந்து கொஞ்சநேரம் இருந்து பேசிவிட்டுப்போவா.  அவவின்ட மகன் ஒரு சில நாட்கள் வந்து என்னோடு நின்று  வீட்டுப் பாடம் கேட்டுப்படிப்பான்.  அந்தக்குடும்பம் பக்கத்தில் இருப்பது    கொஞ்சம்  ஆறுதல்  “ என்றாள் அபிதா.  சொல்லும்போது அவளுக்கு தொண்டை அடைத்தது. கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு, மீண்டும் அந்த வீடு விற்பனை விளம்பரத்தை பார்த்த அபிதா, அதனைச்சுருட்டி எடுத்துவந்து கொரிடோரில் விட்டெறிந்தாள்.  தனது செயலை எண்ணி தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். இதற்கு முன்னர், இவ்வாறு எங்கும் வீடுகளில் வேலைக்குச்சென்று வயிற்றைக்கழுவியிருந்தால், எதுவுமே சாதாரணமாகத்தான் இருந்திருக்கும்.   ஜீவிகாவின்  வீடு என நினைத்துக்கொண்டுதான்  இந்த வீட்டில் இவ்வளவு நாளும் குப்பை கொட்டியிருக்கிறேன்.  அந்த லண்டன்காரரின்  மகளின் வீட்டைத்தான்  நேசத்துடன் கழுவித் துடைத்திருக்கிறேன். யாரோ முகம் தெரியாதவர்களின்  ஆஸ்திக்கு காவல் இருக்க நேர்ந்திருப்பதும்  விதியின் விளையாட்டாகத்தான்  இருக்கும். ஃபிரிட்ஜில் தோசை மாவு இருந்தது.  எடுத்து குளிர் போவதற்கு எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச்சென்றாள். சமையலறையிலிருந்த கைத்தொலைபேசி சிணுங்கியது.  அந்த ஓசை கேட்டும் எடுக்க மனமில்லாமல்,  ஷவரைத் திறந்தாள்.  மீண்டும் தனிமை சூழ்ந்துவிட்டதாக உணரும் சந்தர்ப்பங்கள் அவளுக்கு குளிக்கும்போதும், உறங்கும்போதும்தான் வரும்.  அதற்காக குளிக்காமலும் உறங்காமலும் இருக்கத்தான் இயலுமா..? குழந்தையின் ஸ்பரிசம் கிட்டாமல், கணவனின்  சுவாசம் படராமல் எவ்வளவு நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் தொடர்ந்து ஓடப்போகும் நாட்கள் எத்தனை.   எஞ்சியருக்கும் சொந்தம் பெருமூச்சு மாத்திரம்தான் என்பது திடமாகத் தெரிந்த பின்னர் வருந்துவதில் எந்தப்பயனும் இல்லை.  அபிதாவின் உடலில் பட்டுத்தெறிக்கும் தண்ணீர் திவலைகளை ஏந்தி வாயில் ஏந்தி கொப்பளித்தாள்.  தலையை துவட்டிக்கொண்டு வந்து கைத்தொலைபேசியை எடுத்துப்பார்த்தாள். வந்திருப்பது லண்டன் கோல்.  தர்சினியின் அழைப்பு.  மீண்டும் எடுப்பாள்.  எங்கே போய்த்தொலைந்தாய் என்று கேட்டு எரிந்தும்  விழலாம். அப்படிக்கேட்டால்,  “ தொலையத்தானே போகிறேன். அதற்கு ஒத்திகை பார்க்கப்போயிருந்தேன்  “ என்றுதான் சொல்லவேண்டும்.  இவள் யார் எனக்கு அதிகாரம் காண்பிப்பதற்கு.  இதுவரையில் எனது முகத்தையே பார்த்ததில்லை. சில வேளை தகப்பன் போனில் எடுத்துச்சென்ற படங்களில் என்னை அவளுக்கு காண்பித்திருக்கலாம்.  அபிதா  ஈர உடைகளை வெளியே கொடியில் காயப்போட்டுவிட்டு திரும்பி வந்து உடைமாற்றும்போது,  அவளது கைத்தொலைபேசி மீண்டும் சிணுங்கியது. ( தொடரும் )   

No comments: