மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
பெய்யும் மழைக்குக் குடையாவேன்
பெருகும் நீருக்குக் கணையாவேன்
ஐயும் கிலியும் பறந்தோட
அமையும் மந்திரம் ஆகிடுவேன்
உய்யும் வழிக்கு ஒளியாவேன்
உணர்வில் ஒன்றாய் கலந்திடுவேன்
ஐயம் தெளிய உரைபகர்வேன்
அதுவே பிறவிப் பயனென்பேன் !
தவிக்கும் பலர்க்குத் தாயாவேன்
பசிக்கும் நிலைக்கு உணவாவேன்
கொடுத்துச் சிவக்கும் கையாவேன்
கொடுமை ஒழிக்கும் சினமாவேன்
எடுக்கும் தேனீ வண்டாவேன்
எறும்பாய் மாறி உழைத்திடுவேன்
பறக்கும் பறவை ஆகிடுவேன்
பண்பைச் சுமந்து பறந்திடுவேன் !
படகின் துடுப்பாய் ஆகிடுவேன்
பந்தல் காலாய் அமைந்திடுவேன்
உணவில் உப்பாய் இருந்திடுவேன்
உணர்வில் இனிப்பாய் கலந்திடுவேன் !
ஓடும் நதியில் படகாவேன்
உருளும் சில்லில் அச்சாவேன்
வாடும் பயிரில் மழையாவேன்
மலரும் பூவில் மணமாவேன் !
No comments:
Post a Comment