தமிழர் மனங்களில் திலீபன் – பரமபுத்திரன்.

“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்  துன்பம் துடைத்தூன்றும் தூண்” என்கிறது வள்ளுவம். தனக்கு, தன் உடலுக்கு  இன்பம் தேடாது, தன்  உடல் படக்கூடிய வேதனைகளும் தெரிந்து கொண்டு, தான் வாழும்  சுற்றத்திற்கு நன்மை செய்யப் புறப்பட்ட கொடையாளி திலீபன்.  இந்த உலகு உள்ளவரை திலீபன் பெயர் ஒலிக்கும் என்று திடமாக கூறலாம். எனவே உன்னைக் கொண்டாடத்  தடைகள் வரலாம்.  ஆனால்  திலீபன் நிரந்தரமாக தமிழரால் கொண்டாடப்படுவான். அதனை யாராலும் மாற்றமுடியாது. உன்னை விரும்புவோர், தமிழை விரும்புவோர், தமிழ் மண்ணை விரும்புவோர் நீ செய்தது தற்கொடை என்று போற்றுகிறார்கள். உன்னை எதிர்ப்போரும் இல்லாமல் இல்லை. தமிழர்களே எதிர்க்கும் போது ஏனையோர் சொல்லும் குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. ஆகவே உன்னைப் போற்றுவோரும்,  வசைபாடித் தூற்றுவோரும் உன்னால் உருவாக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல உன்பெயரை உச்சரிப்பவர்கள். அதுதான் நீ தமிழ் மக்களை நேசித்ததன்  சான்று எனலாம்.  “போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்”  இவை எல்லாம் ஆதியிலேயே  இருந்தமையால் தான் அன்றைய தமிழ்ப் புலவர்களால் பாடப்பட்டுள்ளது என்பதனை உறுதிபட உரைக்கலாம். எனவே சொன்ன சொல் மாறாது, சொல்லும் செயலும் ஒன்றாக  வாழ்பவர்கள் வையகத்தில் ஒரு சிலர்தான். அவர்களிடம்  இருப்பது வெற்றி என்ற இலக்குக் கொண்ட நோக்கு ஒன்று மட்டுமே. அதிலிருந்து அடுத்த படியான  தங்களைத்  தாங்களே மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கை வாழ வழிகாணல் அல்ல. கொள்கையின் வழி எண்ணியபடி மட்டுமே  செல்வர். எம்மைப் போன்று  உலகியல் இன்பம் முதன்மையாய் வேண்டியே வாழ்வோரக்கு நீ ஒரு புதிர்  மட்டுமல்ல, வாழ்த் தெரியாதவனும் கூட. 

உன் செயல் எங்களுக்கு வேடிக்கையாகவே தெரிகிறது. சாதனையாகத் தெரியவில்லை. ஆனால் உனது கொடையின் உச்சம் தெரிந்ததால் உன் செயலைக்   களங்கப்படுத்தவும் பலர் ஆரம்பித்து விட்டார்கள்.  நோயில் விழுந்ததால் உண்ணா நோன்பில்  இருந்தார் என்கிறார்கள். தேசியத்தலைவர் வலுக்கட்டாயமாக இருத்தினார் என்றும் கூறுகிறார்கள். நாமும் அதனைத்  நம்பத் தயாராகவே உள்ளோம். காரணம் தமிழர்களை எதனையும் சுலபமாக நம்பவைக்க முடியும். ஆனால் எமக்கு நோய் வந்தால் கூட, எங்கள் குடும்பம் அன்றி எவருக்கும் எதையும் செய்யும் வலுவற்ற அல்லது விருப்பற்ற  நாங்கள் இதனைப் பேச அருகதை உண்டா என்று தெரியவில்லை. காரணம் இறப்பிலும் நீ மக்களை நேசித்தவன். இதனைவிட தன்னையும், தன்குடும்ப சூழலையும் சிறப்பாக மாற்றும் வாய்ப்பு வந்தபோது அதனையும் தூக்கியெறிந்து தமிழர் தேசம்  வெல்லவேண்டும் என்று விரும்பிய தலைவர் உன்னை வலுக்கட்டயமாக இருத்தியதாகவும் செய்திகள் உண்டு. இறுதி வரை தனது குடும்பத்தைக் காக்கவோ அவர்களுக்காக எதனையும் சேர்க்கவோ விரும்பாத தலைவனை இவ்வாறு சொல்வது சரியா என்றும்  தெரியவில்லை.  ஆனால் போராட்டத்தில் வலுவான பற்றும், உறுதியான நம்பிக்கையும் உள்ளவர்களே வெற்றியை சமைப்பார்கள் என்பது தலைவனின் நம்பிக்கை என்பது சரியானது. எனவே  மக்களை  நேசித்து, உண்ணா நோன்பில் இருந்தவேளை, வானில் வாழும் அறுநூற்றைம்பது போராளிகளுடன் இணைந்து மலரும் தமிழ் ஈழத்தை நான் பார்ப்பேன் என்ற உணர்வுள்ள வார்த்தைகள்,  மண்காக்க உடலை வருத்தி  உயிர்கொடுத்த   உன் தூய்மையை சொல்லும் எனலாம்.  எனவே இந்த வார்த்தைகள் தமிழ் ஈழத்தின் மீதில் நீ கொண்ட நேசத்தின் ஆழத்தைக் காட்டுகின்றது. அதுவே உன்னை நிரந்தரமாக தமிழர் நெஞ்சங்களில் உட்கார வைத்துவிட்டது. பின் வந்த சந்ததியும் உன்னை ஏற்றுக்கொண்டு விட்டது.        உண்மையில் ஈழத்தமிழ்  மண்ணில் நீ இருந்த உண்ணா நோன்பு இந்தியாவிற்கு எதிரான ஒன்று. அன்றைய காலத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்ததை இலங்கையின் பெரும்பான்மையும் எதிர்த்தது. இன்று பெரும்பான்மை  உன்னை நினைக்கவும் தடுக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளல் மிகவும் கடினமாக உள்ளது. இதற்கும் மேலாக இந்தியா வந்தது. மாகாணசபை தந்தது. ஆனால் எல்லாவற்றையும் குழப்பியது புலிகள் என்ற பேச்சும் உண்டு. அன்று எங்களை உரிமையுடன் வாழவிடுங்கள் என்று கேட்டவர்கள் தமிழர்கள். ஆனால் வந்தது இலங்கை முழுவதற்கும் மாகாணசபைகள். எனவே இது தமிழ்  மக்களுக்கான தீர்வல்ல  என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இன்றும் தவற விட்டுவிட்டார்கள் என்கின்றோம். அன்றைய வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராசப்பெருமாள் அவர்களும், பின்னே வந்த வடக்கு முதலமைச்சர் விக்கினேசுவரன் அவர்களும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அதாவது அதிகாரமாற்ற பதவிநிலை என்பதுதான் அது. எனவே இந்திய அமைதிப்படை வருகை எமக்கு சாதகமான ஒன்றை செய்வதற்கானது அல்ல என்பதனை அப்போதே நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நாம் இப்போதும் புரிந்துகொள்ள முடியாமல் நிற்கின்றோம்.     தமிழர்களைப் பொறுத்தவரையில் எங்களை நாங்களே மிகவும் குறைத்து மதிப்பிடுகின்றோம். அதாவது என்னை உயர்வாகவும் மற்றைய தமிழர்களை தாழ்வாகவும் எண்ணிப் பழகிவிட்டோம்.  தமிழனே தனது சொந்த விருப்பு வெறுப்பு, பிற இனங்களுடன் கொள்ளவுள்ள நட்பு என்பவற்றுக்காக எங்களை நாங்களே இழித்துப்பழக்கி விட்டோம். தமிழர்களே உன்னை நினைக்கக்கூடாது என்பதற்கு வலுவாகத்  துணை போகிறார்கள். என்ன செய்வது? யாரை  நோவது? இருப்பினும் சேகுவாரா சொன்னது போல “எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் முழுமையான வாழ்கையை வாழவில்லை என்பதே கருத்து” என்பதற்கு இணங்க உனக்கும்  எதிரிகள் இருக்கத்தான் வேண்டும். வரலாறு மட்டும் தமிழன் வீரன் என்கிறது. ஆனால்     தமிழன் என்பவன் தலைநிமிர்ந்து வாழ்வது தவிர்த்து இணங்கி வாழும் நிலையிலேயே இருக்கின்றான் என்பதுதான் உண்மையான இயங்கியல் நிலையாக உள்ளது. அது மட்டுமல்ல அவ்வாறு  இருக்கவேண்டும் என்று மற்றவர்கள் மட்டுமல்ல நம்மவர்களும்  நினைக்கிறார்கள். நாம் என்றும் அடிமை எண்ணத்துடன் வாழ நன்கு பயிற்றப்பட்டு விட்டோம். அதனால் அடிமை இல்லை என்று இடித்துச் சொன்னாலும் நம்பமறுக்கின்றோம். விடுதலையை வெறுக்கின்றோம்.  இதனை எடுத்துச் சொல்பவனை வாழத்தெரியாதவன் என்கின்றோம்.  இதுதான் இன்றைய தமிழரின் நிலையாகிப்போனது. நாமும் எழுதுகிறோமே தவிர வேறொன்றும் செய்யமுடியாது என்று வலுவாக நம்பும் மனிதர்களாகவே இருக்கின்றோம்.  உன்னையும் ஒரு தாய்தான்  பெற்றெடுத்தாள். அவளும் உனக்காக பத்தியம் காத்திருப்பாள். பசிக்குப் பால் தந்து, செல்லமாய்க்  கொஞ்சி, மெள்ளவாய் நடை பழக்கி இந்த உலகினுக்கு அறிமுகப்படுத்தி இருப்பாள். அப்படி  வளர்ந்த உடலை தமிழ் மக்களுக்காக மெல்லமெல்லமாய் நீ உருக்கி, அதனுள் இருந்த உயிரை வெளியேற்றிவிட்டாய். விடுதலைப்புலிகள் உன் உடலைப் பக்குவமாய்க் காத்து வைத்தனர். தமிழ் மக்கள் உன் நினைவுகளை உலகளாவிய வகையில் தேக்கி வைத்திருக்கின்றனர். எனவே வானிலிருந்து நீ உன் தோழர்களுடன் சேர்ந்து விடுதலை பெற்ற தமிழர்களைப்  பார்க்கும் நாள் வந்தே ஆகும்.     No comments: