எமைப்பிரிந் திட்டான்! இசைஇனி இலையோ?
புன்னகை முகமும் பொலிவுறு வடிவும்
புவியினில் இனியெப் பொழுது காண்பதுவோ!
'ஆயிரம் நிலவே வா'என முதலில்
பாயிரம் பாடினாய்! தொடர்ந்தெழு பாடல்கள்
ஆயிரம் ஆயிரம் அமுதமாய்ப் பொழிந்தாய்!
அவற்றால் தமிழும் அழகாய்ப் பொலிந்தது!
பலமொழி களிலே பாடிய உந்தன்
பாடல்கள் புவியுள பலரையும் கவர்ந்தன!
நிலவின் தண்மையைச் சிந்திடும் உன்குரல்
நித்தமும் எத்தனை பாடல்கள் தந்தன!
திரையிசைப் பின்னணி நடிப்பென எத்தனை
திசையினில் உன்கலைத் திறனும் விரிந்தது!
உரையினுக் கடங்கா உன் திறம் உரைக்கின்
உணர்வுளோர் உளங்களில் என்றுமே ஒளிர்வாய்!
பற்பல பட்டங்கள் பாரினில் பெற்றாய்!
பலரையும் இசையால் கட்டிநீ ஆண்டாய்!
அற்புதப் பாடகன் நீ!உனை ஏனோ
ஆண்டவன் விரைந்து வானுல கழைத்தான்!
வானுள தேவரும் மகிழ்ந்திட வென்றா
வையத்து மாதவனைக் கூட்டியவன் சென்றான்?
வானுலகு சென்றாலும் பாலு எமக்காக
வளமிக்க குரலாலே பாடியின்பம் சேர்ப்பான்!
கவிஞர் க. கணேசலிங்கம்
கன்பெரா
No comments:
Post a Comment