இலங்கைச் செய்திகள்

எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில் 

மட்டக்களப்பு அபிவிருத்தி குழு இணைத்தலைவராக பிள்ளையான் நியமனம்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்க ஐ.நா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

20வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

பூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID

வடக்கில் விளையாட்டுத் துறையை முன்னேற்ற தேவையான நடவடிக்கை

பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன்

நீர்நிலைகளின் அபிவிருத்திக்கு உதவ நோர்வே தயார் நிலையில்

மலையக தொழிற்சங்க வரலாற்றில் சாதனையாளர் அமரர் அருள்சாமி

 நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிரத போராட்டம்

வாய் மூல உத்தரவுகளையும் சுற்றறிக்கைகளாக கருதவும்

சம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை

இந்திய - இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி


எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில் 

எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில்-20th Amendment Presented to Parliament Amidst Opposition Protests

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று (22) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் குறித்த திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.   நன்றி தினகரன்   


மட்டக்களப்பு அபிவிருத்தி குழு இணைத்தலைவராக பிள்ளையான் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பமிட்ட நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நேற்று காலை ைகயளிக்கப்பட்டது. இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   நன்றி தினகரன்   





உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்க ஐ.நா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

இலங்கை அதையே எதிர்பார்ப்பதாக உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதி ருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதிஇதனை குறிப்பிட்டார்.

"உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில், "எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை", என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆட்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்கும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த ஒரு நாட்டையும் பிணையாக வைத்திருக்காததன் மூலம் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையிலான கூட்டாண்மயை மிகச் சிறந்த முறையில் பேண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா. தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஐ.நா. பொதுச் சபையின் ஒரு நாள் உயர்மட்டக் கூட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 திங்கட்கிழமையன்று பன்முகத்தன்மைக்கான கூட்டு உறுதிப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் விரும்பும் எதிர்காலம், எமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் சபை’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதாக ஐ.நா. உறுப்பு நாடுகள் 2019 ஜூன் மாதம் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுச் சபையின் 75 ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ. நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை நிகழ்த்தினர். 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர். "முன்னெப்போதுமில்லாத வகையில் கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது நமது பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் உண்மையில் நமது சமூகங்களை ஒரு சில மாதங்களுக்குள் பெரிதும் பாதித்துள்ளது" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு செயற்திறமான தலையீட்டின் மூலம் கொவிட்-19 இன் சவாலை இலங்கைக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொவிட்-19 ஐ தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம். இராணுவம், சுகாதாரத்துறை மற்றும் தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகளை அக்குழு உள்ளடக்கியிருந்தது. இலங்கையில் கொவிட்-19 நோயிலிருந்து மீளும் வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90% அதிகமாக உள்ளது. எமது மிகப் பெரிய பலமாக இருந்த ‘தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தலை’ நாம் சார்ந்திருந்தமை எமது வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் கொவிட் நோய்த்தொற்றுக்கு ஆளான எந்வொருவரும் கண்டறியப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.   நன்றி தினகரன்   






20வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

சட்டத்தரணி இந்திக்க கால்லகே தாக்கல்

உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

20 ஆவது திருத்தத்தை வாக்கெடுப்பில்லாமல் நிறைவேற்ற முடியாதென்று சவால் விடுத்து சிறப்பு விண்ணப்பம் ஒன்றை நேற்று அவர் தாக்கல் செய்துள்ளார். ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்   







பூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை, கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யூ. ஜயசூரிய முன்னிலையில் இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டது.   

போதியளவான புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் தமது கடமையை உரிய முறையில் செய்யாமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.   

இது தொடர்பான விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணை நிறைவுக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் மீது எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையை  கோரியுள்ளதாகவும் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.  நன்றி தினகரன்   






வடக்கில் விளையாட்டுத் துறையை முன்னேற்ற தேவையான நடவடிக்கை

நிதி ஒதுக்கீடு உட்பட சகலதும் ஏற்பாடு - அமைச்சர் நாமல்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவும் வவுனியா, மன்னார், யாழ். மாவட்ட விளையாட்டு பாடசாலைகளை முன்னேற்றவும் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். இவற்றுக்கு தேவையான நிதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காணி தெரிவு செய்யப்பட்டு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அந்தக் காணிக்கு தனியார் உரிமையாளர் ஒருவர் உரிமை கொண்டாடும் நிலையில் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட விளையாட்டு மைதானம் 32 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இணைப்பு குழு அனுமதி பெறப்படவுள்ளதோடு 2021 இல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

மன்னார் எமில் நகர பொது விளையாட்டு மைதான பணி தொல்பொருள் பிரச்சினையால் தடைப்பட்டது. அந்தப்பிரச்சினை தற்போது தீர்ந்துள்ளது. விளையாடக் கூடிய நிலையில் மைதானம் உள்ளதால் அதனை பயன்படுத்த முடியும். எதிர்வரும் காலத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வடக்கிலுள்ள விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.தேவையான நிதி ஒதுக்கப்படும்.கடந்த காலத்தில் கிளிநொச்சியில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் அது பயன்பாடின்றி நாசமடைந்தது.அரசியல் நோக்கில் கட்டடங்கள் கட்டுவதால் பயனில்லை.தேவையான வசதிகளை நாம் வழங்குவோம். வவுனியா, மன்னார், யாழ் மாவட்டங்களில் விளையாட்டு பாடசாலைகளை முன்னேற்றவும் அவற்றுக்கு 200 ஓடுபாதை நிர்மாணிக்கவும் இருக்கிறோம்.130 மீற்றர் செயற்கை ஓடுபாதை அமைக்கவும் இருக்கிறோம்.

மன்னாரில் விளையாட்டு பாடசாலை கிடையாது. கல்வி அமைச்சு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்றார். லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம் நன்றி தினகரன்   







பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தலைவராக ஜீவன்

பெருந்தோட்டச் சேவையாளர் காங்கிரஸின் தலைவராக இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவனில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் நிர்வாக குழு கூட்டத்தின்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட சேவையாளர்கள் இன்று தோட்டங்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர்.

 இவர்களது வாழ்வு செழிப்பாக உயர வழிவகைகள் செய்து கொடுக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எதிர்காலத்தில் தோட்டச் சேவையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென இதன் போது ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். நடப்பு வருட நிர்வாக சபைக்கு புதிய நிர்வாக தெரிவுகளில் தலைவராக ஜீவன் தொண்டமான், பொதுச் செயலாளராக பொன்னையா சிவராஜா ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   நன்றி தினகரன்   








நீர்நிலைகளின் அபிவிருத்திக்கு உதவ நோர்வே தயார் நிலையில்

டக்ளஸிடம் நோர்வே தூதுவர் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொனார்லி எஸ்கெண்டல் நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவை மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது மேலும் தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் அங்கம் வகித்து சென்ற போது, நீர் வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் நீர் வேளாண்மையில் நோர்வே வெற்றிகரமாக செயற்பட்டு வருவதை தன்னால் அவதானிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 92 களப்பு நீர்நிலைகள் காணப்படுகின்ற நிலையில் நோர்வே அரசாங்கம் இவ் விடயத்தில் தன்னுடைய பொருளாதார மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதுடன் தமது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அமைச்சரின் இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நோர்வே தூதுவர், ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் சார் அபிவிருத்தி திட்டங்களுக்கு நோர்வே பெருமளவு நிதியை செலவிட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அமைச்சர் கேட்டுக் கொண்டதைப் போன்றுதொழில் நுட்ப உதவி உட்பட்ட உதவிகளை வழங்குவததோடு அனுபவங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாவும் தெரிவித்தார். மேலும், கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களிலும் நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்துடனும் இணைந்து செயற்பட நோர்வே அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நோர்வேயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடிப் படகுகளை உருவாக்குதல் மற்றும் மீன்களை பழுதடையாமல் பாதுகாத்து பதனிடுதல் மற்றும் களஞ்சிப்படுத்தல் செயற்பாடுகளை இலங்கையில் விருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குதவற்கும் நோர்வே ஆர்வமாக இருப்பதாகவும் தெரித்தார்.   நன்றி தினகரன்   







மலையக தொழிற்சங்க வரலாற்றில் சாதனையாளர் அமரர் அருள்சாமி

மலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடும் பெருமையோடும் வாழ்ந்த வரலாற்று சாதனையாளர் அமரர் அருள்சாமியின் 61வது பிறந்த தினம் நேற்று (21.09.2020) அனுஷ்டிக்கப்பட்டது.

1959ம் ஆண்டு தலவாக்கலையில் பிறந்த அவர், ஆரம்பக் கல்வியையும் - உயர் கல்வியையும் தலவாக்கலை புனித பெற்றிக் கல்லூரியில் பயின்றார். நீண்ட காலம் தொழிற்சங்க அனுபவமும் நிர்வாகத்திறனும் வாய்ந்தவர் அமரர் எஸ். அருள்சாமி.

மலையக தொழிற்சங்க வரலாறு பற்றி பேசும் போது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்டவர்களில் அமரர் அருள்சாமி முக்கியமானவர். அவர் இ.தொ.காவில் உதவி மாவட்ட பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக, தொழிலுறவு அதிகாரியாக, பிராந்திய இயக்குனராக, உபதலைவராக பல வருடங்கள் பணியாற்றியவர். அக்காலத்தில் தொழிற்சங்க பிணக்குகளையும் பிரச்சினைகளையும் அவர் கையாண்ட விதம் இ.தொ.காவுக்கு பெருமை சேர்த்ததாகவே விளங்கியது.

தனது 16வது வயதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து கொண்ட அவர், இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தொழிற்சங்க பிதாமகன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் தொழிற்சங்கப் பயணத்தை ஆரம்பித்தார். அரசியல், தொழிற்சங்கம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்த அமரர் அருள்சாமி 80களில் சர்வதேச மகாநாடுகளிலும் கலந்து கொண்டு பல்வேறு விடயங்களை சாதித்துக் காட்டினார்.

மிகவும் நிதானமிக்கவர் அவர். அமைதியான தோற்றமும் ஆழமான சிந்தனை உணர்வும் கொண்டவர். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கருத்துணர்ந்து எதனையுமே ஆக்கபூர்வமாகக் கையாள்வதில் சமர்த்தராகக் காணப்பட்டார். தொழிலாளர்களுக்கும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இயங்கியவர் அருள்சாமி.

தேசிய அரசியலில் பிரகாசித்த தலைவராக இருந்த அவர் பேச்சாளர், செயல்வீரர் என போற்றப்பட்டவர். மத்திய மாகாணசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராகவும் இருந்ததுடன் பல்வேறு சமூக அமைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

தமிழ்க் கல்வி அமைச்சராக மத்திய மாகாணத்தில் இருந்த பொழுது மலையக கல்வித்துறையில் பல்வேறுபட்ட அணுகுமுறைகளை கையாண்டு மலையகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து 3179 ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கு வழியமைத்தார். மலையக இலக்கியவாதிகளை கௌரவிக்கும் முகமாக இரு தடவை மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழாக்களை நடத்தி கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் களம் அமைத்துக் கொடுத்த பெருந்தகை அருள்சாமி.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் சபை தலைவராகவும் பணியாற்றிய அவர், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் கூட்டிணைப்பு பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மலையகத்தில் கலை கலாசாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளை மேம்படுத்த பல்வேறு ஆக்கபூர்மான வேலைத் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இ.தொ.கா. நடத்திய தொழிற்சங்க போராட்டங்களில் அவரது பங்களிப்பு பாரிய அளவில் பரிணமித்தது. அவரே பல போராட்டங்களை நெறிப்படுத்தியிருந்தார். அவரது பேச்சு தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதோடு ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்தது. சுமார் 50 ஆண்டு காலம் அமரர் தொண்டமானோடு பயணித்த அவர் இ.தொ.காவில் இருந்தவரை நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாக செயற்பட்டார். சாதுரியமாகவும் சாந்தமாகவும் எப்பொழுதும் காணப்பட்ட அவர், 59வது வயது வரை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களின் சமூக அரசியல் துறைகளில் மாற்றம் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அவரது வெற்றிடம் மலையக சமூகத்திற்கு மட்டுமின்றி, கிராமப்புற மக்களுக்கும் ஈடு செய்ய முடியாததாகும்.

அன்னாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல இடங்களில் நேற்று வழிபாடுகள் நடைபெற்றன. தேவதாஸ் சவரிமுத்து, ஊடக இணைப்பாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - நன்றி தினகரன்   







நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிரத போராட்டம்

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர விதிக்கப்பட்ட தடை உத்தரவைக் கண்டித்து சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு முன்பாக நேற்று காலை 09 மணி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலை 05 மணி வரை தொடர்ந்தது.

அத்துடன் காலை 10.48 மணிக்கு திலீபன் மௌனித்த நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

சாவகச்சேரி விசேட நிருபர்-  நன்றி தினகரன்   







வாய் மூல உத்தரவுகளையும் சுற்றறிக்கைகளாக கருதவும்

வாய் மூல உத்தரவுகளையும் சுற்றறிக்கைகளாக கருதவும்-President Gotabaya Badulla

- மீறும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- 14 நாட்களுக்குள் சட்டம் செயற்படுத்தப்படும்

மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படும் அனைத்து வாய்மொழி ரீதியிலான உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இவ் உத்தரவுகளை மீறுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் நேற்றுமுன்தினம் (25) ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

“அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரிகளை நான் பாதுகாப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரச நிறுவனங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன. ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதவிடத்து அவ் எழுத்து மூல வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறவும்.” ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

ஹல்துமுல்லை, பதுளை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேசங்களில் ஒன்றாகவும் வெலங்விட்ட, ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவின் பின்தங்கிய கிராமமாக உள்ளது. “ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வின் முதலாவது சந்திப்பு அப்புத்தளை, வெலங்விட்ட 100 ஏக்கர் கிராமத்தின் குமாரதென்ன வித்தியாலத்தில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி , பிரதேச மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

பாதைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் மக்கள் தமது பாரம்பரிய கிராமங்களை விட்டுச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

முன்னர் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் கல்விகற்ற குமாரதென்ன வித்தியாலயம் 16 மாணவர்களுடன் இன்று இருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் குறிப்பிட்டனர்.

100 ஏக்கர் கிராமத்திலிருந்து வெலங்விட்ட வரையான பாதையை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்தல், நீரூற்றுக்களை இனங்கண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இரண்டு மாதங்களுக்குள் மின்சாரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தொடர்பாடல் தடங்கள் காரணமாக மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களின் கவலைகளை ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். ஒரு சில வாரங்களுக்குள் தொடர்பாடல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தாலும் கலந்துரையாடலில் பங்குபற்றி கிராமவாசிகள் ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களின் காரணமாக தமது கிராமங்களில் வாழ்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

குமாரதென்ன வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு கூறிய ஜனாதிபதி , அப்பிரதேசத்தை சூழ உள்ள பிள்ளைகளுக்கு மீண்டும் பாடசாலைக்கு வருகை தந்து கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு அதகாரிகளுக்கு தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த பிரதேச மக்களின் இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

கிரவனாகம மற்றும் நிக்கபொத்த மகா வித்தியாலயங்கள் மற்றும் கொஸ்லந்த தேசிய பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் ஹாலி எல மலித்த மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அது தவிர வெள்ளவாய கம்பஹ மகாவித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் சொரகுனே மற்றும் ஜனானந்த வித்தியாலயங்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கும் அப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவரின் வேண்டுகொளுக்கு தமது அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி 07 கிராமங்களை இணைக்கக்கூடிய மொரகெட்டிய வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யவும் உத்தரவிட்டார்.

கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் 35 கிலோமீற்றர்களை கொண்ட பெரகல – வெள்ளவாய பகுதி, கெலிபனாவெல, ஹால்கன்ன வீதியின் வௌ்ளவாய வரையான பகுதி, 100 ஏக்கர் கக்குட்டு அராவ மத்திய வீதி, தெஹிலந்த – அளுத்வெலயை இணைக்கும் வீதி மற்றும் கிளை வீதிகளை துரிதமாக நிர்மாணித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகள் தொடர்பாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு உரிமம் மற்றும்  உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச விவசாயிகள் நாட்டின் அதிக மிளகு விளைச்சலுக்கு மற்றும் வளமான விவசாயத்திற்கு உரிமை கோருகின்றனர். அதில் பலர் சேதனப் பசளை பயன்படுத்தி மிளகு பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். முகங்கொடுத்து வருகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெல், கறுவா, கோப்பி உட்பட அனைத்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் விவசாயிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வனப் பாதுகாப்பு அளவைகளின் போது இடம்பெற்று இருக்கின்ற தவறுகளை தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கூடியிருந்த சிறு பிள்ளைகள் இருக்கக்கூடிய அனைவரினதும் பிரச்சினைகளுக்கு இயலுமான வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி , கலந்துரையாடலின் பின்னர் பிரதேசத்தின் பயிர் நிலங்கள் மற்றும் பல வீடுகளுக்கும் சென்று தகவல்களை கேட்டறிந்தார்.

பிரசேத்தின் மகா சங்கத்தினர், அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, திஸ்ஸ குட்டியாரச்சி, சாமர சம்பத் தசநாயக்க, ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஜனாதிபதியின் ,பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன் பிரதேச அரசியல் பிரதிநிதிகள், நிறுவனங்களி்ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  நன்றி தினகரன்   







சம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை

வீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் எனவும் இதனால் உடல் நிலை மிகப் பலவீனமாகியுள்ள தாக மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபையில் அறிவித்தார்.

அமைச்சர் காமினி லொக்குகேயின் பெயரை அந்த பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார அதனை வழிமொழிந்தார் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேற்படி நியமனம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது மக்கள் முறைப்பாட்டு தெரிவுக் குழுவின் முதலாவது அமர்வின் போதே இடம்பெற்றது.

மேற்படி அமர்வில் இராஜங்க அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகமகே, மற்றும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திலிப் வெதஆராச்சி, காதர் மஸ்தான், அசோக பிரியந்த, முஜிபுர் ரகுமான், குலசிங்கம் திலீபன்,நிபுன ரணவக்க, கீதா குமாரசிங்க, ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.   நன்றி தினகரன்   





இந்திய - இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி

இந்திய - இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி-Narendra Modi-Mahinda Rajapaksa Bilateral Virtual Summit-USD15 Million

அயல் நாடான இலங்கைக்கே இந்தியா முன்னுரிமை வழங்கும்

இந்திய இலங்கை பௌத்த உறவை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

 

 

 

இதன்போது, இந்தியா எப்போதும் தனது அயல் நாடுகளுடனான கொள்கையில் முதலில் இலங்கைக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்திய - இலங்கை பெளத்த உறைவை மேம்படுத்த 15 மில். டொலர் நிதி-Narendra Modi-Mahinda Rajapaksa Bilateral Virtual Summit-USD15 Million

பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது நாகரிகங்களுக்கு வழிகாட்டுகின்றன. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் சேவையில் இலங்கை பௌத்த யாத்திரிகர்களை வரவேற்க இந்தியா ஆவலுடனுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தர்.

இதன்போது பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு தனது வாழ்த்துக்களை நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி உங்கள் தலைமை மீதான நம்பிக்கையை காட்டுகிறது.இந்த வெற்றி இந்திய -இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு எப்போதும் அயல் நாடுகளுக்கு முதலிடம் என்ற எனது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் சாகர் கோட்பாட்டின் படி, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு தேவையான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உரையாடலின்போது, கடந்த மாதம் 03ஆம் திகதி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுப்படுத்த விரைவான உதவியை வழங்கியமைக்காக இந்தியாவிற்கு மஹிந்த ராஜபக்ஷ பாராட்டும் தெரிவித்தார்.







No comments: