சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க பொலிஸார் கைது
ஹைட்ரஜன் விமானங்களை உருவாக்க ஏர்பஸ் திட்டம்
பெண்கள், சிறுவர்களை கொன்ற கெமரூன் படையினருக்கு சிறை
கொவிட்-19: ஸ்பெயின் தலைநகரில் மீண்டும் பகுதி அளவு முடக்க நிலை
2024இல் நிலவுக்கு திரும்ப நாசா திட்டம்
கொவிட்–19: அமெரிக்காவில் 200,000ஐ தொட்ட உயிரிழப்பு
அரபு லீக் பொறுப்பை பலஸ்தீனம் நிராகரிப்பு
ஒக்டோபர் நான்கில் உம்றா யாத்திரை மீண்டும் ஆரம்பம்
ஐ.நா பொதுக் கூட்டத்திலும் சீனா – அமெரிக்கா முறுகல்
காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பேச்சு
கறுப்பின பெண் கொலை விவகாரம்: அமெரிக்காவில் மீண்டும் வன்முறை
சீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க பொலிஸார் கைது
சீனாவுக்காக உளவு செயற்பாட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகர பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திபெத்தில் பிறந்த பைமட்ஜி அங்வங் என்ற அந்த அதிகாரி நியூயோர்க் பகுதியில் திபெத் பிரஜைகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவரது சேவைக்காக சீன நிர்வாகம் அவருக்கு பல்லாயிரம் டொலர்களை செலுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.பொலிஸ் திணைக்கள சமூக விவகாரங்கள் பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற வாய்ப்பு உள்ளது.
1912 தொடக்கம் 1950 வரை ஒரு சுயாட்சிபெற்ற பகுதியாக இருந்த திபெத்தை 1951 இல் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா 1959 தொடக்கம் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் வாழ்ந்து வருகிறார். நன்றி தினகரன்
ஹைட்ரஜன் விமானங்களை உருவாக்க ஏர்பஸ் திட்டம்
கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாமல் ஹைட்ரஜன் வாயுவைக் கொண்டு இயங்கும் புதிய விமானங்கள் பற்றி ஏர்பஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
2035ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத அத்தகைய வர்த்தக விமானத்தைச் சேவையில் இணைப்பது ஏர்பஸ்ஸின் திட்டமாகும். வழக்கமான விமானங்களைப் போலன்றி திரவநிலையில் சேமிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்திப் புதிய விமான இயந்திரம் இயங்கும்.
ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மூலம் ரொக்கெட்டுகள் செலுத்தப்பட்டு வருவதால் விமானப் பயணத்தில் அது சாத்தியமாகும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் பாதுகாப்பானது அல்ல என்ற கவலைகளை அந்த நிறுவனம் நிராகரித்தது. புதிய எரிசக்தி உட்கட்டமைப்பில் பெரிய அளவிலான முதலீட்டுக்கு ஏர்பஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் வாயு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலம் தயாரிக்கப்படுகிறது. மின்பகுப்பு முறையைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து அது பிரித்தெடுக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி அதற்கு ஆகும் செலவு மிக அதிகமாக உள்ளது. நன்றி தினகரன்
பெண்கள், சிறுவர்களை கொன்ற கெமரூன் படையினருக்கு சிறை
2015 ஆம் ஆண்டில் இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டு நான்கு கெமரூன் படை வீரர்கள் மீது தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை இடம்பெறும் வீடியோ ஒன்று 2018 ஆம் ஆண்டு இணையத்தில் பரவியது. இதில் அந்தப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கண்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர்.
இது ஒரு போலிச் செய்தி என்று அரசு ஆரம்பத்தில் நிராகரித்தபோதும் பின்னர் இது தொடர்பில் ஏழு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். வடக்கு கெமரூன் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அந்தப் பெண்கள் பொக்கோ ஹராம் குழுவுடன் தொடர்புபட்டவர்கள் என்று படையினர் குற்றம்சாட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதில் பெண்ணின் பின்புறமாக சுமந்து இருந்த குழந்தை ஒன்றும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகிறது. இவர்கள் கண்கள் கட்டப்பட்டு வீதி நெடுகிலும் அழைத்துச் செல்லப்பட்ட பின் 22 தடவைகள் துப்பக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இருவர் விடுவிக்கப்பட்டதோடு இதனை வீடியோ எடுத்த வீரருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
கொவிட்-19: ஸ்பெயின் தலைநகரில் மீண்டும் பகுதி அளவு முடக்க நிலை
அமெரிக்காவில் 200,000ஐ நெருங்கும் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்ததால் ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ‘வீட்டில் தங்கி இருக்க’ உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் தற்போது உலகில் வேகமாக பரவி வரும் நாடாக உள்ள இந்தியாவில் தாஜ்மஹால் மற்றும் சில பாடசாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான நாடாக இந்தியா உள்ளது.
இந்நிலையில் மெட்ரிட்டில் நேற்று ஆரம்பமான புதிய கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளன. குறைந்த வருவாய் மற்றும் அதிக மக்கள் செறிவுகொண்ட பகுதிகளே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வேலை, மருத்துவம் அல்லது குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது போன்ற அவசிய தேவைகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பூங்காக்கள் அனைத்தும் மூடப்படும். கடைகள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் 50 வீதம் வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மெட்ரிட் முழுவதும் ஆறு பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக கடந்த ஞாயிறன்று சில பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஸ்பெயினின் குறித்த பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அந்த நடவடிக்கை அவசியம் என்று ஸ்பெயின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக 31 மில்லியனை நெருங்குவதோடு 958,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
6.8 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்களுடன் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் உயிரிழப்பு 200,000ஐ நெருங்கியுள்ளது. இந்த பெருந்தொற்று அமெரிக்க பொருளாதாரத்தை அதிகம் பாதித்திருப்பதோடு மில்லியன் கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
எனினும் வரும் ஒக்டோபர் மாதத்தில் தடுப்பு மருந்து தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியபோதும் அவரது கருத்து நாட்டின் முன்னணி சுகாதார நிபுணர்களின் கருத்துக்கு முரணாக உள்ளது.
நியூஸிலந்தின் ஒக்லந்து நகரில் கொவிட்–19 நோய்ப் பரவல் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. வியாழக்கிழமை முதல் ஒக்லந்தில் நோய்ப்பரவலுக்கான எச்சரிக்கை நிலை 2ஆகக் குறைக்கப்படும்.
நாட்டின் மற்ற இடங்களில் நேற்று நள்ளிரவிலிருந்து எச்சரிக்கை நிலை 1ஆகக் குறைக்கப்பட்டதாக நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்தார். நன்றி தினகரன்
2024இல் நிலவுக்கு திரும்ப நாசா திட்டம்
Wednesday, September 23, 2020 - 6:00am
2024ஆம் ஆண்டில் மீண்டும் நிலவுக்குத் திரும்பும் 28 பில்லியன் டொலர் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஓர் ஆண் மற்றும் பெண்ணை நிலவுக்கு அனுப்பவுள்ளது. 1972 ஆம் ஆண்டுக்குப் பின் நிலவில் மனிதன் கால் பதிக்கும் முதல் நிகழ்வாக இது அமையவுள்ளது.
எனினும் நிலவுக்குச் செல்வதற்கான அமைப்பை நிர்மாணிப்பதற்கு கொங்கிரஸ் 3.2 பில்லியன் டொலர் நிதியை விடுவிப்பதைப் பொறுத்தே இந்த திட்டத்தின் கால எல்லையை நிர்ணயிக்க முடியுமாகஅமையும்.இதில் அப்பலோ போன்ற ஓரியோன் என்ற விண்கலத்தில் எஸ்.எல்.எஸ் என்ற சக்திவாய்ந்த ரொக்கெட் மூலமே விண்வெளி வீரர்கள் பயணிக்கவுள்ளனர்.
நிலவில் நீண்ட ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்புகளுடன் மனிதர்களுக்கான முகாம் ஒன்றை இந்த தசாப்தத்தின் இறுதியில் நிலவில் உருவாக்குவாதற்கு நாசா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
கொவிட்–19: அமெரிக்காவில் 200,000ஐ தொட்ட உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200,000ஐ தாண்டி இருப்பதாக ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் வேறு எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையி்ல் வடக்கு டகோடா மற்றும் உத்தாஹ் உட்பட பல மாநிலங்களில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை 200,000ஐ தொட்டுள்ளது.
இந்த புதிய உயிரிழப்பு எண்ணிக்கை பயங்கர விடயம் என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வைரஸை சீனா மட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று சாடினார்.
எனினும் வைரஸ் தொற்றுக்கு எதிரான தமது செயற்பாடுகளை பாதுகாத்து பேசிய டிரம்ப், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் இரண்டு, இரண்டரை அல்லது மூன்று மில்லியன் பேர் இறந்திருக்கக் கூடும் என்றார்.
எனினும் டிரம்பின் நிர்வாகம் நோய்ப்பரவலைக் கையாளத் தவறியதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நன்றி தினகரன்
அரபு லீக் பொறுப்பை பலஸ்தீனம் நிராகரிப்பு
அரபு உடன்படிக்கையை அவமதித்து இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தியதைக் கண்டித்து அரபு லீக் கூட்டங்களின் தற்போதைய தலைமை பொறுப்பில் இருந்து பலஸ்தீனம் விலகிக்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியது துரோகச் செயலாகக் கருதும் பலஸ்தீனம், அது பலஸ்தீன சுதந்திர நாட்டை உருவாக்குவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறது.
இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியதற்கு அரபு லீக் மூலம் கண்டனம் வெளியிடும் பலஸ்தீனத்தின் முயற்சி இம்மாத ஆரம்பத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு அரபு லீக் கூட்டங்களுக்கு தலைமை பொறுப்பு பலஸ்தீனத்திற்கு கிடைத்துள்ளது. எனினும் அந்தப் பொறுப்பு தமக்குத் தேவையில்லை என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிக்கி தெரிவித்தார்.
“லீக் கெளன்சிலின் தற்போதைய அமர்வின் தலைமை பொறுப்பை கைவிட பலஸ்தீனம் தீர்மானித்துள்ளது. (இஸ்ரேலுடன்) இராஜதந்திர உறவை ஏற்படுத்த அரபிகள் அவசரம் காட்டும்போது அதன் தலைமை கெளரவமாக இருக்காது” என்று மாலிக்கி தெரிவித்தார். நன்றி தினகரன்
ஒக்டோபர் நான்கில் உம்றா யாத்திரை மீண்டும் ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏழு மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட உம்றா யாத்திரைக்கு வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி தொடக்கம் படிப்படியாக அனுமதி அளிக்கப்படும் என்று சவூதி அரேபிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்லாமிய புனிதத் தலங்களில் கொரோனா தொற்று பரவும் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் உம்றா யாத்திரை இடைநிறுத்தப்பட்டதோடு உலகெங்கும் இருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடும் ஆண்டின் ஹஜ் கடமையும் மட்டுப்படுத்தப்பட்டதாக இடம்பெற்றது.
இந்நிலையில் முதல் கட்டமாக வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து உம்றா வழிபாட்டில் ஈடுபட ஒரு நாளைக்கு சவூதி அரேபியாவுக்குள் இருக்கும் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் 6,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உம்றாவில் பங்கேற்போர் எண்ணிக்கை நாளுக்கு 20,000 ஆக அதிகரிக்கப்பட்டு வரும் நவம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் சவூதிக்கு வெளியில் உள்ள யாத்திரிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவுள்ளது. உலகில் மில்லியன் கணக்கான முஸ்லிம்களை ஈர்க்கும் உம்றா யாத்திரை ஆண்டின் எந்த நேரத்திலும் ஈடுபட முடியுமான வழிபாடாகும்.
இந்தப் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் விலகும்போது முழுமையான வழக்கமான அளவில் யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 330,000க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 4,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நன்றி தினகரன்
ஐ.நா பொதுக் கூட்டத்திலும் சீனா – அமெரிக்கா முறுகல்
கொரோனா வைரஸ் தொற்றை சீனா பரப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் குற்றம்சாட்டியது சீன மற்றும் அமெரிக்க முறுகலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் பெருந்தொற்றுக்கு சீனா பொறுப்புக் கூற வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
எனினும் எந்த நாட்டுடனும் பனிப்போர் ஒன்றில் ஈடுபட தமது நாடு எதிர்பார்க்கவில்லை என்று சீன ஜனாதிபதி சி ஜின்பின் தனது உரையில் குறிப்பிட்டார். பல விவகாரங்கள் தொடர்பில் உலகின் இரு வல்லரசு நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வீடியோ மாநாடு வழியாக நடைபெறும் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னர் பதிவு செய்யப்பட்ட உரைகளையே வழங்கியுள்ளனர்.
சீனா தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் இதன்போது டிரம்ப் சாடினார். நன்றி தினகரன்
காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பேச்சு
இந்திய-சீன எல்லையில் பதற்றம் தணிக்க இருதரப்பு இராணுவ அதிகாரிகள் சந்திப்பு
ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். ‘ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு 1994 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தால் வழிநடத்தப்பட்டு சகலரதும் கூட்டு நடவடிக்கைகள் மாத்திரமே உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி என்பதை இத்தினம் உணர்த்தி நிற்கிறது.
இந்தியா_ சீனா இடையே இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் 13 மணி நேரம் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் இருந்து சீனா முற்றிலுமாக தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய_ சீனா எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, ெமாஸ்கோவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 5 அம்சத் திட்டங்கள் இருதரப்பிலும் கையெழுத்தானது. இவற்றை இருதரப்பிலும் முறையாக கையாள்வது தொடர்பாக இராணுவ மற்றும் இராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவுக்கு உட்பட்ட மோல்டா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இந்திய_ சீன இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 13மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா தரப்பில் 14வது படை தலைமை லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், லெப்டினன்ட் ஜெனரல் பிஜிகே மேனன், வெளிவிவகாரத்துறை இணை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டார்.
இவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்கள். இதையடுத்து இருதரப்பிலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் பாங்கோங் தி சோ, சுசூல், கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
முதலில் மே மாதத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் பல்வேறு இடங்களில் சீனப் படைகள்தான் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்ததால், அவர்கள்தான் முதலில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இதைத் தொடர்ந்து இந்தியாவும் இதனைப் பின்பற்றும் என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனா தனது படைகளை வாபஸ் பெறாவிட்டால், அந்த இடத்தில் இந்தியாவும் தனது படைகளை வாபஸ் பெறாது. நீண்ட நாட்களுக்கு தனது படைகளை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் போதிய சமரசம் எட்டப்படவில்லை. தொடர்ந்து சீனா எல்லையில் தனது படைகளை வலுப்படுத்தி வருவதாகவும் இது இந்தியாவுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்திய தரப்பு செய்திகள் கூறுகின்றன.
எல்லைப் பதற்றம் தொடர்பாக சீனாவுடன் 13 மணிநேரமாக இரவிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் முறையாக இந்திய இராணுவ குழுவுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரியும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா-_சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ெமாஸ்கோவில் இந்திய_ சீனா வெளியுறவு அமைச்சர்கள் 5 அம்ச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்தே சீனாவின் பகுதியான மால்டோவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீண்டும் இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இராணுவ தளபதிகள் நிலையிலான இந்தப் பேச்சுவார்த்தை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணியை தாண்டி 13 மணி நேரமாக நீடித்தது. நன்றி தினகரன்
கறுப்பின பெண் கொலை விவகாரம்: அமெரிக்காவில் மீண்டும் வன்முறை
அமெரிக்காவில் கறுப்பினப் பெண்ணான ப்ரோன்னா டெய்லர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் எந்த பொலிஸ் அதிகாரி மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படாததை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாத்தில் இரு பொலிஸார் சுடப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை ஊழியரான 26 வயது டெய்லரின் வீட்டில் கடந்த மார்ச் 13 ஆம் திகதி தேடுதல் மேற்கொண்ட மூன்று வெள்ளையின பொலிஸார் அவரை பல தடவைகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இது தொடர்பில் லுவிஸ்வில்லே நகர நடுவர் மன்றம் ஒன்று ஒரு பொலிஸார் மீது பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
எனினும் அடுத்து இரு பொலிஸாரின் செயற்பாடுகளும் நியாயப்படுத்தப்பட்டதாக சட்டமா அதிபர் தெரித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன் போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் வீட்டை சோதனையிட வந்த பொலிஸார் ஆயுதமேந்திய தமது காதலருக்கு முன்னாலே டெய்லரை சுட்டுக் கொன்றுள்ளனர். அமெரிக்காவில் நிராயுதபாணியாக இருக்கும் கறுப்பினத்தவர்கள் பொலிஸாரால் கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கடந்த புதன்கிழமை கண்டகி மாநிலத்தின் மிகப்பெரிய நகரான லுவிஸ்வில்லேவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் இரு பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டதாக நகர பொலிஸ் தலைவர் ரொபர்ட் ஸ்கோர்டர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதும் அதனை மீறி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நன்றி தினகரன்
No comments:
Post a Comment