வாசிக்கும் ஆர்வம் எனது பாடசாலைப்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இலக்கியப்பிரவேசம் செய்தபின்னர், அந்த ஆர்வம் பன்மடங்காக அதிகரித்து எமது வீட்டிலேயே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாறிக்கொண்டோம். 1972 இன் தொடக்கத்தில் வெளியான மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழில் வளர்மதி நூலகம் என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருந்தேன். அதனை எழுதுவதற்கு முன்னர், 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியினால், இரவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்திருந்தது. என்னைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாட முடியாத நிலை.
அதனால் வீட்டிலிருந்து புத்தகம் படிப்பதற்கும் நேரம் தாராளமாக கிடைத்தது. தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில், சைக்கிளை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் ஊர் சுற்றிய பருவம். அயல் ஊர்களான கட்டுநாயக்கா, சீதுவ கொச்சிக்கடை, வென்னப்புவ முதலான பிரதேசங்களுக்கும் சென்று தமிழ், சிங்கள, ஆங்கில, இந்தி, மலையாளப் படங்களை பார்த்த காலம். 1971 ஏப்ரிலுடன் அந்த சுற்றுலாவும் முடிவுக்கு வந்தது. எங்கள் ஊர் பொலிஸ் நிலையத்திற்கு பின்னாளிருந்த பற்றைக்காணியில், பிடித்துக்கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் சுடப்பட்டு எரித்து சாம்பராக்கப்பட்ட திடுக்கிடும் செய்திகளும் ஊரில் கசியத்தொடங்கியது.
களனி நதியில் இளைஞர்கள், யுவதிகளில் சடலங்கள் மிதந்தன. கதிர்காமத்தில் மக்கள் விடுதலை
முன்னணியில் அங்கம் வகித்த செல்வி பிரேமாவதி மனம்பேரி என்ற அழகுராணிப்போட்டியில் பரிசுகள் வென்றிருந்த யுவதியும் மானபங்கப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட பதறவைக்கும் செய்திகளும் வெளியாகியிருந்தன. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஒரு பெண்மணியின் ஆட்சிக்காலத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைபற்றி பேசுவதற்கும் நாதியற்ற காலத்தை நாம் கடந்துகொண்டிருந்தோம். சரியாக ஒரு வருடம் கழித்து, 1972 ஏப்ரில் மாதமே நான் கதிர்காமம் சென்று மனம்பேரியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தேட முற்பட்டேன்.
கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு பஸ்ஸில் செல்லவேண்டும். வீட்டிலே தடுத்தார்கள். “ எனக்கு ஒரு வேலை வாய்ப்பு சரிவரும்போல இருக்கிறது. அது சரிவரவேண்டும். அதற்காக கதிர்காமம் சென்று அங்கப்பிரதிஷ்ட்டை செய்யப்போகிறேன். “ என்று பெற்றவர்களிடம் ஒரு பொய் சொன்னேன். நான் பிறந்த சமயத்தில் கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்திவைத்திருந்தமையால், அங்குதான் எனக்கு மொட்டை அடித்திருப்பதாக வீட்டில் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ஏதாவது ஒரு ஆலயத்தில் மொட்டை அடிப்பது வழக்கம். அந்த பண்பாட்டை வெளிநாடு வந்த பின்னரும் தொடர்ந்திருப்பதற்கு பெரியவர்களின் வளர்ப்பு அவ்வாறு இருந்ததுதான் காரணம். எனது மூத்த மகளுக்கு நயினா தீவில் 1981 இலும், இளைய மகளுக்கு 1983 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி அம்மன் கோயிலிலும், எனது மகனுக்கு 1990 இல் தமிழ் நாடு திருப்பதியிலும் மொட்டை அடித்திருக்கின்றேன்.
1971 இல் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன. அதில் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒன்று. எனவே அவர்களின் போராட்டம் மூவினத்தையும் சேர்ந்த இளைய சமுதாயத்திற்குத்தான் என்பதும் புரிந்தது. அதனால், அவ்வியக்கத்தின் மீது எனக்கு ஆர்வம் வந்தாலும், அதன் ஐந்து வகுப்புகள் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்த மல்லிகை ஜீவா, அன்றைய அரசுக்கு விசுவாசமாக இருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்தமையினால், நீர்கொழும்பில் எம்மை அவர் சந்தித்த அக்காலப்பகுதியில் அவ்வியக்கம் பற்றி எதிர்மறையான கருத்துக்களை சொல்லியிருந்தார். மனதில் குழப்பம் தோன்றியது.
நான் ஏதோ கதிர்காம கந்தனில்தான் பக்திகொண்டு செல்ல விரும்புகிறேன் என நம்பிக்கொண்டு அங்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி தந்தார்கள். அவ்வாறு செல்வதற்கு கொழும்பிலிருக்கும் எமது சித்தப்பா முறையான உறவினரின் எனது வயதை ஒத்த எனது ஒன்றுவிட்ட தம்பியான சோமநாதனையும் , மாமா மகன் குகானந்தனையும் என்னுடன் துணைக்கு அனுப்பிவைத்தார்கள். அந்தத் தம்பி சோமநாதன், நான் அவுஸ்திரேலியா வந்து சில வருடங்களில் புற்றுநோயினால் இறந்துவிட்டான். மச்சான் குகானந்தன்
தற்போது வெளிநாடு ஒன்றில் வசிக்கின்றான். அன்று எமக்கு கதிர்காமத்திற்கான இ.போ. ச. பஸ் மாலையில்தான் இருந்தது.
பகல்பொழுதை கொழும்பில் செலவிடவேண்டியிருந்தது. மச்சான் குகானந்தனையும் அழைத்துக்கொண்டு, அவனை சித்தப்பா வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இருந்த ஆட்டுப்பட்டித் தெருவில் அமைந்திருந்த இளம்பிறை அச்சகத்திற்கு வந்தேன். அதனை நடத்திக்கொண்டிருந்தவர் இளம்பிறை என்ற மாத இதழின் ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான். அவரது அரசு வெளியீட்டகமும் அங்குதான் இயங்கியது.
அரசு வெளியீட்டகம்தான் இரசிகமணி கனகசெந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி, ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய மத்தாப்பு தொகுதி, மு. தளையசிங்கத்தின் புதுயுகம் பிறக்கிறது, எஸ். அகஸ்தியரின் ‘ நீ ‘ என்ற உணர்வூற்று உருவகச்சித்திரம் முதலானவற்றையும் பதிப்பித்து வெளியிட்டது. இந்த நூல்களை எமது வளர்மதி நூலகத்திற்காக முன்னர் அங்கே சென்று பணம் கொடுத்து வாங்கியுமிருக்கின்றேன். அங்குதான் எழுத்தாளர் எஸ்.பொ. இருக்கிறார் என்பதை அறிந்து அவரை தேடிச்சென்ற சந்தர்ப்பங்களில் அவரை பார்க்கமுடியாமல் ஏமாற்றத்துடனும் திரும்பியிருக்கின்றேன்.
அவரது தீ நாவல் வெளிவந்து படித்திருந்தேன். ஆனால், தீயை தீயிட்டு கொளுத்தவேண்டும் என்று வடக்கிலிருந்து எழுத்தாளர் நாவேந்தன் குரல் எழுப்பிய செய்தியையும் அறிந்திருந்தேன். எஸ்.பொ. வுடன் வ. அ. இராசரட்ணம், எஃப். எக். சி. நடராசா, எம். ஏ. ரஹ்மான் ஆகிய எழுத்தாளர்களும் கொழும்பு சாகிரா கல்லூரியில் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டிலிருந்து வெளியேறிய செய்திகளையும் அறிந்திருந்தமையால், எஸ்.பொ. வை பார்க்கவேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக மனதில் இருந்தது. கதிர்காமத்திற்கு தரிசனம் செல்லுமுன்னர் கிடைத்த நேர அவகாசத்தில் அன்று மதியம் எஸ்.பொ.வை பார்ப்பதற்காக இளம்பிறை அச்சகத்திற்கு சென்றேன். ரஹ்மானிடம், எஸ்.பொ.வை பார்க்கவேண்டும் என்றேன்.
அவர், அச்சகத்தின் ஒரு மூலையில் காகிதக்கட்டுக்களின் மீது அமர்ந்து தலைகுனிந்தவாறு பீடி புகைத்துக்கொண்டிருந்தவாறு இருந்தவரை காண்பித்து அவர்தான் எஸ்.பொ. என்றார். நான் திகைத்துப்போனேன். அவர் அணிந்திருந்த வேட்டியும் கசங்கியிருந்தது. மேற்சட்டை இன்றி பெனியன் அணிந்திருந்தார். அவர் அப்போதும் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். நான் அவர் முன்னால், தரையில் அமர்ந்தேன்.
அணிந்திருந்த கண்ணாடியை தாழ்த்தி என்னை ஏறிட்டுப்பார்த்தார். எனது பெயரைச்சொல்லி
அறிமுகப்படுத்தினேன். நீர்கொழும்பு எனச்சொன்னதும் 1960 களில் அங்கிருக்கும் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் மூன்று நாட்கள் நடந்த தமிழ் விழாவுக்கு தாம் வந்திருந்த செய்தியை சொன்னார். அவருடன் கனகசெந்தி நாதன், மஹாகவி உருத்திரமூர்த்தி, வி. கந்தவனம், ஏ.ரி. பொன்னுத்துரை, ரஹ்மான் ஆகியோரும் வந்திருக்கின்றனர். அச்சமயம் எனக்கு பதினொரு வயது. கட்டை காற்சட்டை சேர்ட்டுடன் சென்று, அந்த விழாவில் மேடையேறிய ஏ.ரி. பொன்னுத்துரையின் ஒரு நாடகத்தை பார்த்திருந்தது மாத்திரம்தான் நினைவில் தங்கியிருந்தது. ஈழத்தின் இலக்கிய ஆளுமைகள் அவ்விழாவுக்கு வந்திருந்து நான் அவர்களின் பேச்சைக்கேட்டிருந்தாலும் எதுவும் புரியாத வயது என்று எஸ்.பொ.விடம் சொன்னேன். “ எதுவும் புரியாத குழந்தைப்பருவம்தான் சேமமானது. கவலைகள் இருக்காது. “ என்று எஸ்.பொ. அன்று சொன்னதையும் அவ்வாறு சொன்னபோது அவர் சிரித்த சிரிப்பையும் மறக்கவே முடியாது.
அதுமட்டுமல்ல, பிற்காலத்தில் அவர் சொன்ன பல சுவாரசியமான செய்திகளையும், சிரிப்பூட்டும் அங்கதச்சுவைகொண்ட கதைகளையும் மறக்கவே முடியாது. அவரை அக்காலப்பகுதியிலேயே எஸ்.பொ. மாஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். அச்சமயம் அவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்திலும், அதன்பின்னர் ரொரிங்டனில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் பணியாற்றினார். “ என்ன மாஸ்டர் பீடி குடிக்கிறீர்கள்..? “ எனக்கேட்டேன். “ கேரள இலக்கியவாதி தகழி சிவசங்கரன் பிள்ளையை தெரியுமா..? “ எனக்கேட்டார். “ ஓம் தெரியும்.
அவருடைய செம்மீன் நாவல் படித்திருக்கின்றேன்..” என்றேன். “ அவரும் பீடிதான் குடிக்கிறார். “ என்றார். பிற்காலத்தில் கஞ்சா புகைத்த எழுத்தாளர்களையும் எனது வாழ்நாளில் சந்தித்திருக்கின்றேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனும் மல்லிகை ஆசிரியருடனும் அவருக்கிருந்த முரண்பாடுகள் பற்றி ஆராயும் எண்ணத்துடன் மேலும் உரையாடலைத் தொடர்ந்தேன். “ நீர் இப்போதுதான் எழுத வந்திருக்கிறீர். போகப்போகத் தெரிந்து கொள்வீர். தற்போது உமக்கு எந்தக்குழப்பமும் வேண்டாம். நிறைய வாசிக்கப்பாரும். அதுதான் இப்போது உமக்குத் தேவை “ என்று அறிவுரை பகன்றார்.
அதுதான் எஸ்.பொ. வுடனான முதல் சந்திப்பு. அதன்பின்னர்தான் விவேகானந்தா வித்தியாலயத்தில் அதே ஆண்டு நடந்த பூரணி முதல் இதழ் வெளியீட்டு விழாவில் அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவரது வாயில் சிகரட் இருந்தது. பாடசாலைக்கு வெளியில் நின்று புகைத்தார். அவுஸ்திரேலியாவில் அவரை சந்தித்தபோது அவருக்கு சிகரட் வாங்கிக்கொடுத்த காலமும் வந்தது. அவர் குறித்து நனவிடை தோய்ந்து எழுதிய நீண்ட தொடரை அவரது மறைவின் பின்னர் எழுதியிருக்கின்றேன். எதிர்மறையான விடயங்களும் எம்மிருவருக்கும் மத்தியில் நிகழ்ந்துள்ளன.
அவருடனான அந்த 1972 ஆம் ஆண்டு ஏப்ரில் மாத சந்திப்பையடுத்து, எனது உறவினர்கள் இருவருடனும் அன்றைய தினம் மாலை புறக்கோட்டையிலிருந்து புறப்பட்டு நடு இரவு கதிர்காமம் வந்து சேர்ந்தோம். இராமகிருஷ்ண மடத்தில் தங்கியிருந்து விட்டு, மறுநாள் காலை எழுந்து மாணிக்க கங்கையில் நீராடியபின்னர், ஈரவேட்டியுடன் கதிர்காமத்தலத்தின் தரையில் அங்கப்பிரதிஷ்டை செய்தேன். அன்றுதான் எனது வாழ்நாளில் முதலும் இறுதியுமாக அவ்வாறு பிரார்த்தனை செய்திருக்கின்றேன்.
உண்மையிலேயே அது எனக்கு வேலை கிடைக்கப்போகிறது என்பதற்கான பிரார்த்தனை அல்ல. அந்த புனித தலத்தில் கதற கதற பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்து புதைத்தப்பட்ட பிரேமாவதி மனம்பேரி என்ற யுவதிக்கு அத்தகைய கொடுமையை செய்த கயவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டனை தரப்படவேண்டும் என்பதற்காகவே அந்த 21 வயதில் அப்படி ஒரு உடலை வருத்திய பிரார்த்தனையை மேற்கொண்டேன்.
அத்தலத்தின் தரையிலிருந்த கற்களும் முட்களும் எனது உடலை பதம் பார்த்தன. நெஞ்சுப்பகுதி தோல் உரிந்து எரிந்தது. வெறும் வயிற்றில் உடலை பிரட்டியதால் சத்தியும் வந்தது. அவ்வேளையில் அந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. இவ்வேளையில், மனம்பேரி பற்றி நான் முன்னர் எழுதிய ஆக்கத்தை இங்கே மீள் பதிவுசெய்கின்றேன்.
அதற்கான காரணத்தை இந்தப்பதிவின் இறுதியில் சொல்கின்றேன். -------- 1949 ஆம் ஆண்டில் ஒரு அழகி பிறந்தாள் அவள் பெயர் பிரேமாவதி மனம்பேரி. பத்துப்பேர் கொண்ட அவளது குடும்பத்தில் அவள் மூத்த பெண். இன்றும் உலகெங்கும் அழகிப்போட்டிகள் நடக்கின்றன. அதே சமயம் பெண்ணியவாதிகள் இந்தப்போட்டிகளை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள். உலக அழகிகளுக்கும் புகழ் மங்குவதில்லை. அப்படியாயின் ஒரு கிராமத்து அழகியின் புகழ் அக்கிராமத்தில் எப்படி இருந்திருக்கும்...? பிரேமாவதி மனம்பேரி அழகியாக இருந்து உலகம் அறியப்பட்டவள் அல்ல. கொடூரமான வல்லுறவினால் நிர்வாணமாக்கப்பட்டு நடுவீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதனால் அறியப்பட்டவள்.
இலங்கையில் கோணேஸ்வரி, கிருஷாந்தி உட்பட பல பெண்கள் ஆயுதப்படையினரால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதற்கான வரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாற்றின் முதல் அத்தியாயத்தில் இருப்பவள் கதிர்காமம் பிரேமாவதி மனம்பேரி. அவள் க.பொ.த. சாதாரண தரம் வரையில் பயின்றாள். பின்னர் பௌத்த தஹம் பாடசாலையில் குழந்தைகளுக்கு பௌத்த தர்மம் போதிக்கும் ஆசிரியையாக பணியாற்றினாள். தனது 20 வயதில் கதிர்காமத்தில் 1969 ஏப்ரில் மாதம் நடந்த புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களில் நடந்த அழகுராணி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசு பெற்றாள்.
அவளது கட்டுக்குலையாத அழகினால் சிநேகிதிகளின் தூண்டுதலுடன் 1970 இலும் போட்டிக்கு வந்தாள். இம்முறை அவள் முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டாள். ஊரில் அவள்தான் பேரழகி என்ற பிம்பம் சரியாக ஒரு வருடத்தில் அதே ஏப்ரில் மாதம் இல்லாது ஒழிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியில் இணைபவர்கள் ஐந்து வகுப்புகளில் பயில வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இறுதி வகுப்புதான் ஆயுதப்பயிற்சி. அனைத்து விடுதலை இயக்கங்களும் சாதாரண துவக்குகளை வைத்துக்கொண்டு ஆரம்பமான அமைப்புகள்தான். அரச ஆயுதப்படைகளிடம் இருக்கும் ஆயுதங்களை கைப்பற்றுவதும் அவற்றின் போர்த்தந்திரங்களில் ஒன்று. மனம்பேரியும் ம.வி.முன்னணியில் இணைந்தாள். இயக்கத்திற்கு சீருடைகள் தைத்துக்கொடுத்தாள்.
அவள் இலங்கையில் ஏற்ற தாழ்வற்ற ஒரு சமதர்ம ஆட்சி மலரும் என்றே நம்பியிருந்தாள். அவளது அழகிற்கு எங்காவது பெரிய இடத்தில் மணம் முடித்துப்போயிருக்கலாம். கதிர்காமத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய ஒரு சிங்கள இளைஞனும் அவள் அழகில் மயங்கி விரும்பினான். அந்தக்காதலை அவள் ஏற்கவில்லை. ஆனால், அவள் ஏற்றதும் நம்பியதும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கத்தைத்தான்.
மக்கள் விடுதலை முன்னணி 1971 ஏப்ரில் மாதம் 5 ஆம் திகதி தென்னிலங்கையிலிருக்கும் பொலிஸ் நிலையங்களை ஒரே சமயத்தில் தாக்குவதற்கு திட்டம் தீட்டியது. கதிர்காமம் பொலிஸ் நிலையமும் தாக்கப்பட்டது. பொலிசாரால் அந்த கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்வது முடியாது என்பதை அறிந்த அன்றைய ஸ்ரீமாவின் அரசு இராணுவத்தை கிளர்ச்சி தொடங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பியது.
கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு பத்து நாட்களில் பின்னரே அங்கு இராணுவமுகம் அமைக்கப்பட்டது. லெப்டினன் விஜேசூரியா அங்கு தலைமை ஏற்றதும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. லெப்டினன் விஜேசூரியா கதிர்காமத்தில் அந்த இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தவர்களையெல்லாம் தேடத் தொடங்கியபொழுது எப்படியோ மனம்பேரியின் பெயரும் கிடைத்திருக்கிறது.
அவ்வேளையில் கதிர்காமத்திலிருந்த போராளிகள் காடுகளுக்குள் பின்வாங்கினர். ஆனால், மனம்பேரி ஒரு பெண் என்பதால் அவளை கைவிட்டுச்சென்றனர். ஆனால், அவளை கைவிடாமல், கைதுசெய்த விஜசூரியா தனது கைவரிசையை அவளிடம் காண்பித்தான். அவள் சித்திரவதை செய்யப்பட்டாள். அவளும் அவளுடன் பிடிபட்ட மேலும் சில பெண்களும் வல்லுறவுக்குள்ளாகினர்.
விஜேசூரியா மட்டுமல்ல மேலும் சில இரணுவத்தினரும் அவளை சூறையாடினர். தொடர்ச்சியான சித்திரவதைக்குப்பின்னர் அவள் கதிர்காமம் வீதியில் நிர்வாணமாக துப்பாக்கி முனையில் இழுத்துச்செல்லப்பட்டாள். (இந்தக்காட்சியை எழுதும் நானோ இதனைப்படிக்கும் வாசகர்களோ கதிர்காமத்தில் நடந்த அந்தக்கொடுமையை நேரில் பார்த்திருக்கமாட்டோம்.
ஆனால் 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சேகர் கபூர் இயக்கிய சம்பள் பள்ளத்தாக்கு பூலான் தேவி பற்றிய திரைப்படம் பண்டிட் குவின் படத்தை பாருங்கள். அதில் நடிகை சீமா பிஸ்வாஸ், பூலான் தேவியாக எப்படி நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டு பொதுமக்களின் முன்னிலையில் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள் என்பதை தெரிந்துகொள்வீர்கள்.) சார்ஜன்ட் அமரதாஸ ரத்நாயக்கா என்பவன் கைகளை தூக்கியபடி சோர்ந்து நின்ற மனம்பேரியை சுட்டான். அவள் தரையில் விழுந்து தண்ணீர் கேட்டாள். அவளுக்கு எலடின் என்ற ஊர்வாசி தண்ணீர் கொடுக்கச்சென்றபொழுது இராணுவத்தால் தடுக்கப்பட்டார். அவள் இனி பிழைக்கமாட்டாள் என நினைத்துக்கொண்டு விஜேசூரியாவும் ரத்நாயக்காவும் முகாமுக்கு திரும்பினர். அவளைச்சுடத்தெரிந்தவர்களுக்கு அவள் உடலை புதைக்கமாத்திரம் ஊர்வாசிகள் தேவைப்பட்டனர். ஆனல் , அவள் குற்றுயிராகவே தண்ணீர் கேட்டு துடித்தாள். இராணுவம் அகன்றதும் எலடின் அவளுக்கு தண்ணீர் கொடுத்தார். தனது காதணிகளை கழற்றி தனது தங்கையிடம் கொடுக்கச்சொன்னாள். அவ்வேளையில் அவளுக்கு அவள் குடும்பத்தின் மீதே பிரியம் இருந்தது. அவளும் மற்றவர்களுடன் காடுகளுக்குள் மறைந்து தலைமறைவாகியிருந்தால் சில வேளை தப்பியிருக்கவும் முடியும். சில வேளை எதிர்காலத்தில் கதிர்காமம் பிரதேசத்தில் அரசியல் வாதியாகி பின்னாளில் பாராளுமன்ற மும் சென்றிருப்பாள். குற்றுயிராக இருந்த மனம்பேரியை மற்றும் ஒருவன் விஜேசூரியாவின் உத்தரவின் பேரில் சுட்டுத்தள்ளினான். கதிர்காமம் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் வணங்கும் புனித பூமி. மனம்பேரியின் உடலை அந்த மண்ணில் புதைப்பதற்கு இராணுவத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களும் இந்த மூவினத்தையும் சேர்ந்தவர்கள்தான் என அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். எலடின் என்ற சிங்களவர், காதர் என்ற இஸ்லாமியர், பெருமாள் என்ற தமிழர். இன்றும் முள்ளிவாய்க்கால் போர்க்குற்றம் பற்றி உலகெங்கும் பேசப்படுகிறது. ஆனால் 1971 இல் நடந்த இராணுவ பொலிஸ் தரப்பு குற்றங்கள் பேசப்படவில்லை. நதிகளில் மிதந்து கடலில் சங்கமித்த சடலங்கள் குறித்து குரல் எழுப்பப்படவில்லை. பொலிஸ் நிலையங்களுக்கு பின்னால் எரிக்கப்பட்டவர்களின் கதைகள் மூடிமறைக்கப்பட்டன இறுதியில் அந்த விசாரணையில் விஜேசூரியாவும் சார்ஜன்ட் அமரதாசவும் தண்டிக்கப்பட்டனர். சிறையிலிருந்தபொழுது விஜேசூரியா சுகவீனமுற்று இறந்தான். சார்ஜன்ட் அமரதாச தண்டனைக்காலம் முடிவுற்று வெளியே வந்தபின்னர் 1988 இல் ம.வி.முன்னணியினர் அவனைச் சுட்டுக்கொன்று பழி தீர்த்துக்கொண்டனர். மனம்பேரியின் கதையை கங்கை மகள் என்ற பெயரில் எழுதியிருக்கின்றேன். மாணிக்க கங்கை பேசுமாப்போன்று எழுதப்பட்ட கதை. அவளின் நினைவாக அவள் கொல்லப்பட்டு சரியாக 31 வருடங்கள் கழிந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தினக்குரல் பத்திரிகையில் கங்கை மகள் வெளியானது. அதே மாதம் அவுஸ்திரேலியா உதயம் இதழிலும் அச்சிறுகதை வெளியிடப்பட்டது. 2005 இல் வெளியான எனது மற்றும் ஒரு கதைத்தொகுதிக்கு கங்கைமகள் என்றே பெயரிட்டேன். அதற்கு ஏற்ற ஓவியத்தை எனக்கு வரைந்து தந்தவர் தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் மணியன் செல்வன். ஆனால் - அவருக்கு பிரேமாவதி மனம்பேரி பற்றி எதுவும் தெரியாது. மகாபாரத காவியத்தில் வரும் பாஞ்சாலியின் துகிலை பலபேர் பார்த்திருக்க துச்சாதனன் உரிந்தபொழுது கிருஷ்ணபரமாத்மா அவள் மானம் காத்தார். கதிர்காமத்தில் பிரேமாவதி மனம்பேரியின் துகிலை அந்த துஷ்டன் விஜேசூரிய உரியும்பொழுது கதிர்காமக்கந்தன் நிஷ்டையில் இருந்தார். ஒன்று காவியம். மற்றது வரலாறு. கதிர்காமத்தில் மாணிக்க கங்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த கங்கை நதியோரத்தில் பிறந்த கங்கை மகள் பிரேமாவதி மனம்பேரி இன்றும் நினைவுகளில் ஓடிக்கொண்டே இருக்கிறாள். நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ஒரு கொலைக்குற்றவாளி எம்.பி. ஆக தெரிவாகி சத்தியப்பிரமாணம் செய்கிறார். தென்மராட்சியில் அப்பாவிப்பொது மக்களை சுட்டுக்கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு இராணுவ சிப்பாய்க்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதியின் பிணம் தின்னும் சாத்திரங்கள் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. ( தொடரும் )
No comments:
Post a Comment