ஏந்தலுனக் கென்றும்பிரி வில்லை எங்கள் இதயமதில் இசையாய்நீ என்றும் வாழ்வாய்!.

     பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


அற்புதமாய் இசைவானில் தடம்ப தித்து

    ஆட்சிசெய்து அருஞ்சாதனை படைத்து யர்ந்து

பொற்புடனே புகழ்விரித்த பாலசுப்ர மணியா!

    போற்றியுனை ஏத்தினோர்கள் விழிநீர் சிந்த

கற்பனையிலுங் காண்பரிய கலைஞவுன் பிரிவால்    

    கலையுலகம் பெருமிழப்பாய் கண்ணீர் சொரிய  

சிற்சபையில் சேந்தனவன் தினமும் உன்றன்

    தேன்மதுர இசைகேட்க அழைத்த தேனோ?


தேன்றமிழின் இனிமையெல்லாம் தெவிட்டிடா தென்றெம்

    சிந்தைதனில் மலர்ந்தினிக்கச் செய்த தீரா!

வேந்தனென இசையுலகில் ஆண்டாண் டாக

    விருந்துவைத்த பெற்றியெல்லாம் பேசப் போமோ?

சேந்தனுன்றன் மதுரகானம் தினமும் மாந்தத்

    திருவடியிற் சேர்த்தனனோ? சாந்தி யுற்றாய்!

ஏந்தலுனக் கென்றும்பிரி வில்லை எங்கள்

     இதயமதில் இசையாய்நீ என்றும் வாழ்வாய்!.

 

No comments: