பாலுவே உன்னிசையை நிறுத்துவிட்ட தேனையா !



கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


   

   ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது


   பாலுவே நீயும் பாட  வருவாயா 
   தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
   நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே  !

  மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
  மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
  காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
  கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது    !

  சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று
  இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்
  வந்தமைந்த உன்னிசையால் வாரியே வழங்கினையே
  பாலுவே உன்னிசையை  நிறுத்துவிட்ட  தேனையா    !

  பாலுநீ பாடவேண்டும் பலபேரும் கேட்கவேண்டும்
  வாழவைக்கும் இசைவழங்க வரவேண்டும் எனநினைத்தோம்
  ஆழநிறை காதலுடன் பார்த்திருந்தோம் பாலுவே
  அழவிட்டு போனதேனோ அலமந்து நிற்கின்றோம்  ! 

  உன்னிசையைக் கேட்பதற்கு உலகமே காத்திருக்க
  உன்பிரிவைக் கேட்டவுடன் உணர்விழந்தே நிற்கின்றோம்
  மண்ணகத்தில் இசைகொடுக்க வந்துநின்றாய் வரமாக
  எண்ணமெலாம் உன்நினைப்பே நிறைந்திருக்கே பாலுவையா  !

  பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே
  பாடல்தர விரைவாக வந்திடுவாய் எனநினைத்தோம்
  ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கும்
  ஆடலின்றி பாடலின்றி ஐயாநீ போனதேனோ  !

  கற்பனையும் அழுகிறது கவிதைகளும் அழுகிறது
  காந்தக் குரலோனோ காலனுனைக் கவர்ந்தானே
  கலையுலகம் அழுகிறது கலைஞரெலாம் கதறுகிறார்
  கண்ணீரை உந்தனுக்கு காணிக்கை ஆக்குகிறோம்  !

  அரங்கமெலாம் வெறுமையாய் ஆகிருக்கு பாலுவே
  அரங்கதிரும் உந்தனிசை அடங்கியதே பாலுவே
  அழவைக்கப் பாடினாய் ஆடிவைக்கப் பாடினாய்
  அனைவருமே ஆடிநிற்க அழவிட்டு போனதேனோ  !

 



No comments: