வாசிப்பு அனுபவம்: இரகுமத்துல்லா எழுதிய டீக்கடை சிறுகதை முருகபூபதி ( மெல்பன் வாசகர் வட்டம் நேற்று நடத்திய மாதாந்த இணையவழி காணொளி நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )


 அண்மையில் நான் படித்த  பல சிறுகதைகளில்  எனக்கு பிடித்தமான  ஒரு கதையாகவும்  நண்பர் இரகுமத்துல்லாவின் டீக்கடை மனதில் தங்கிவிட்டது. இச்சிறுகதையின் தொடக்கமே அமர்க்களமாக இருந்தது.  விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளன், தான் வாங்கும் சம்பளத்திற்கு கேட்ட கேள்வி என்று ஒரு வரி வருகிறது. அதனைப்படித்தபோது வாய்விட்டுச்சிரித்தேன். ஆளுமைகளை பேட்டி காணும்  தொலைக்காட்சி, வானொலி பத்திரிகை நிருபர்கள் முதலில் சொல்லும் மில்லியன் டொலர் பெறுமதியான வார்த்தை இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா..? “  உங்களைப்பற்றிச் சொல்லுங்கள். அதிலிருந்து எனது கேள்விகளைக் கேட்கின்றேன்.  “    எனக்கும் இச்சிறுகதையின் தொடக்கம் அவ்வாறுதான் இருந்தது.   இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ.  டீக்கடைல பாஸ். அதே டீக்கடை பெஞ்சுலதான்.   இந்த வரிகளிலிருந்தே  நண்பர் இரகுமத்துல்லா தனது சிறுகதையை திரைப்படக்காட்சியாகவே நகர்த்திச்சென்றிருக்கும் உத்தியை வெகுவாக ரசித்தேன்.  தமிழகத்தில் சென்னைப்பட்டணம்,    பல இளைஞர்களுக்கும் கனவுகளின் தொழிற்சாலையாக நீண்ட காலமாக  மாறியிருப்பதை அறிவோம். வெளியூர்களிலிருந்து  நிறைய கனவுகளை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு வந்தவர்களில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதையும்,  மேலும் பலர் வெற்றியோடு நிலைத்து நின்றதையும் அவதானிக்கின்றோம். தியாகராஜ பாகவதர், சிவாஜி, எம். ஜி.ஆர், விஜயகாந்த் காலத்திலிருந்தே   இளைஞர்கள் சினிமாவினால் ஈர்க்கப்பட்டு கனவுத் தொழிற்சாலைகளை தேடி வந்துகொண்டே

இருக்கின்றனர். அவ்வாறு வந்த ஒரு இளைஞனும்,  கோடம்பாக்கத்தில் ஒரு குறுக்கு சந்தில் புறாக்கூண்டுபோன்ற அறைகள் இருக்கும் கட்டிடத்தில் தங்கியிருந்து கதை வசனம் எழுதுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியோ ஒரு திரைப்படத்தில் பங்கேற்று விருதும் வாங்கிவிடுகிறான். அவனைப்போன்று கனவுகளை சுமந்து வந்த பல இளவட்டங்களுக்கு   தாய்க்குத் தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் தோழனுக்கு தோழனாகவும் இருக்கும்  அந்தப்பகுதியில் சிறிய  டீக்கடை நடத்தும் காஜா பாய் அந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களான எமக்கும்  ஆதர்சமாக இருக்கிறார். வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப் பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும்.  மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான். 

ஒரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும்

வேறுவேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றிபெற்றுவிடுகின்றன. இந்த வரிகளின் சொந்தக்காரன் நான் அல்ல.  எனது முதல் நாவல் பறவைகள் பற்றி ஈழத்து எழுத்தாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் எழுதிய நயப்புரையின் ஒரு பகுதிதான் இது !  டீக்கடையை வாசித்ததும், இந்த வரிகள்தான் எனது நினைவுப்பொறியில் தட்டியது.  நண்பர் இரகுமத்துல்லாவின் டீக்கடையில் வரும் அந்த காஜா பாய் போன்று பலரும் எமது சமூகத்தில் வாழ்கிறார்கள். ஆனால், எத்தனைபேர் அவர்களை சமூகத்திற்கு இனம் காண்பித்து அடையாளப்படுத்துகிறார்கள். தேவைகளின் நிமித்தம் வாழத்தலைப்படும்போது, தேவைகளை மீறியும் வாழ்ந்து பார்க்க ஆசைப்படுவது மனித இயல்பு.  அந்த இயல்பையே கேள்விக்குட்படுத்துகிறார் எங்கேயும் படித்து  பட்டம் பெறாத அந்த சாதாரண விளிம்பு நிலை மனிதர்.  தேவைகள் பெருகப்பெருக பிரச்சினைகளும் அதிகரிக்கும். அவுஸ்திரேலியா ஆதிவாசிகளிடமிருந்து நாம் பாடம் படித்திருக்கலாம்.  இன்று உலகமயமாதலில் சிக்குண்டு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மோதிக்கொண்டு காணொளியில் முடங்கியிருந்து உலகை பார்க்கின்றோம்.  ஆதிவாசிகள் என்றும்போல், இயற்கையுடன் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.  அதே இயற்கை ,  உலகமயமாதலில் மூழ்கிவிட்ட மனிதர்களை எட்டத்தில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.  கையில் காசில்லாமல், கடனுக்கு டீ குடித்தவர்கள்,  காசு கிடைத்ததும் கடனை செட்டில் பண்ண வரும்போது, கூடுதலாகவே பணத்தை கொடுத்தாலும் அதனை வாங்க மறுக்கும் உயர்ந்த குணம்,  அந்த காஜா பாயின் சிறப்பியல்பு. “ எனக்கு என்ன சேரணுமோ, அதை மட்டும்தா. எனக்கு அது போதும். அன்பு மனசுல இருக்கட்டும். நல்லவனா இரு. சாராயம் குடிக்காதே. குடும்பத்தை காப்பாத்து. இந்தா, இந்தப்பசங்களுக்கு ஏதாச்சும் சான்ஸ் வாங்கித்தா. அவனுங்களுக்கு உன்னால முடியுற உதவியைச்செய். இந்த பாய்க்கு அது போதும்  “  அந்த காஜா பாய் போதிமரத்துப் புத்தனைப்போன்று உபதேசம் செய்து அனுப்புகிறார். கோடம் பாக்கத்தில்  அவர்  அன்றாடம் கண்ட காட்சிகளின் அனுபவத்திலிருந்துதான் அந்த வார்த்தைள் வருகின்றன. அவரது வாழ்க்கை அனுபவம்தான் அவரை இவ்வாறு பேசவைக்கிறது.  “  நல்லவனா இரு. சாராயம் குடிக்காதே. குடும்பத்தை காப்பாத்து”   நடிகன் நல்லவனாக இருக்கவேண்டும்.  மதுவுக்கு அடிமையாகிவிடலாகாது.  குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்றெல்லாம் அவர் ஏன் சொல்கிறார். முடிந்தால்,  அறந்தை நாராயணன் எழுதிய குடியால் சரிந்த கோபுரங்கள் நூலை தேடி எடுத்துப்படிக்கவும்.  கோடம்பாக்கம் பற்றி,  துணை நடிகர்கள் சங்கம் என்ற அமைப்பினை இயக்கிய இடதுசாரி சிந்தனையுள்ள பத்திரிகையாளர் எழுதிய நூல்.  மற்றவர்களின் சந்தோசத்தையே தனது சந்தோசமாக கருதி அமைதியடையும்  காஜா பாய் ஒரு முழுமையான பாத்திரம்.  அவர் தனது தேவைகளை பெருக்கிக்கொள்ள விரும்பவில்லை.  கதையில் ஓரிடம்  முக்கியமானது.  கடையை பெருக்கி, வேலைக்கும் ஆட்களை வைத்துக்கொண்டால், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் கடன் வைத்தால்,   “ கடனுக்கு சாப்பிடுற பயளுகள்தானே..?  “ என்று ஏளனப்படுத்திவிடுவார்களே, அவ்வாறு காயப்படுத்திவிட்டால் என்ன செய்வது..?  எனத் தயங்கும் இரக்க குணம் மிக்கவர் அந்த காஜா பாய். நண்பர் இரகுமத்துல்லாவின் டீக்கடை சிறுகதை பற்றி மேலும் சிலாகித்துப்பேசுவதற்கு வார்த்தைகளைத்  தேடினேன்.  அவ்வாறு தேடி எடுத்த  வார்த்தைகள் இவை:  வாழ்வின் யதார்த்தத்தில் அன்பின் பங்கு குறைந்துவருகிற சூழலில், மிகச்சாதாரண மனிதர்களிடம் இன்றும் மிஞ்சியிருக்கும் அன்பைப்பற்றி அக்கறையோடு சொல்லவேண்டியிருக்கிறது கலைஞனுக்கு. இந்த அன்பின் நிறைவு இயற்கையையும் உயிர்களையும் அழகுபடுத்துகிறது. மனிதர்களிடம் சேர்ந்திருக்கும் கொஞ்ச கொஞ்ச அன்பையும் வாழ்வின் குரூரம் சிதைத்துவிடும் என்ற பதற்றமும் நமக்குள் உருவாகிறது. உலக அளவில் வெள்ளம் எனப்பெருகிவரும் அவலம் இவர்களை அடித்துச்சென்றுவிடுமோ என்று ஏக்கமுண்டாகிறது. பிரச்சினைகளை தீர்க்க இயலாத அளவு சிக்கலாகிவிட்ட தற்காலச்சூழலில், குறைந்த அளவுக்கேனும் மனிதர்கள் அன்பாக இருப்பதன் மூலம்தான் வாழ்வை நிறைத்துக்கொள்ளமுடியும் அல்லது சகித்துக்கொள்ள முடியும்.  இந்த அர்த்தத்தில்தான் இன்றைய படைப்புகளுக்குள் கேட்கின்ற அன்பின் குரலை நாம் கொண்டாடவேண்டியிருக்கிறது. நம்காலத்துச் சமூகம் சிக்கலாகியிருப்பது மட்டுமல்ல, பெருமளவுக்குச் சீர்குலைந்து நன்மை. தீமை என்ற வரையறைகள் அழிந்து, மனித மதிப்புகளுக்கு அறவே மரியாதையற்றுப்போன நிலையும்   தோன்றியிருக்கிறது.  “  இப்படித்தான் இருக்கும் சமூகம், ஆனால், எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவருபவர்தான் படைப்பாளி.  அந்த வகையில்  ஒரு மனிதநேயம் மிக்க மனிதரை  காஜா பாயின் உருவத்தில் எமக்கு காண்பித்த நண்பர் இரகுமத்துல்லா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். letchumananm@gmail.com

 
No comments: