51 நாட்கள் வைத்தியசாலையில் இருந்த SPB இன்று காலமானார்

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது 74ஆவது வயதில் இன்று (25) சிகிச்சை பலனின்றி காலமானதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

பின்னர் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைஅறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த 51 நாட்களாக வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக, இயக்குநர் வெங்கட் பிரபு  ட்வீற்றரில் பதிவிட்டுள்ளார்.

அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், கடந்த 1946ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர். அவர் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்   



No comments: