கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 32

தமிழை மறந்த எங்கள் தமிழரும் – தமிழை நேசித்த அமெரிக்கரும் !  கடந்த அங்கங்களில்  எனது பாப்புவாநியுகினி வாழ்க்கை பற்றி குறிப்பிட்டபோது, அங்கு வெளியிடப்பட்ட Lingering Memories கவிதை நூல் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா..? 

அங்கிருந்தபோது முதலில் ஆங்கிலத்தில் பத்து கவிதைகளை எழுதியிருந்தேன். அவற்றைத் தொகுத்து, சிறிய நூலாக வெளியிட்டபோது, அதனை வெளியிட்டு வைத்த எனது மதிப்பிற்குரிய பாப்புவாநியுகினி  ஆளுநர் Sir  Serei Eri                          ( Governor General of PNG: 18 January 1990 to 01 October 1991 ) திடீரென காலமானார். 

அவரது மறைவு எனக்கு பேரதிர்ச்சி. அவரது மறைவின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தொடர்ந்து


மேலும் முப்பது கவிதைகளை எழுதலானேன். அவற்றையும் தொகுத்து   Lingering Memories நூலின் இரண்டாவது பாகத்தை வெளியிட்டபோது,  குறிப்பிட்ட ஆளுநருக்கே அந்த நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன்.  அந்த நாட்டை விட்டு நான் வெளியேறவேண்டிய காலமும் வந்தது.  அப்போது மனதிலே  ஒருவகையான ஈடாட்டம் புகுந்தது.  எனது நண்பர் இரசிகமணி கனகசெந்திநாதனால்  ஒரு செய்தித் தகவலாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவத்தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன் அவர்களும் ஒரு காலத்தில் எமது தாயகத்தை விட்டு விடைபெறும்போது எத்தகைய உணர்வுகளுக்கு ஆளாகியிருந்திருப்பார் என்பதுதான் அந்த ஈடாட்டம். நாம் மிகவும் ஆழ்ந்து நேசிக்கின்ற இடத்திலிருந்து  விடைபெறவேண்டி வரும் சூழ்நிலை வரும்போது தோன்றும் மனவலியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.  அந்த வலி உங்களுக்கும் விதிவசத்தால் நேர்ந்திருக்கவும் கூடும். வலியை உணரலாம். ஆனால், எழுத்தில் வடிக்க இயலாது. எனக்கும் அதுதான் நேர்ந்தது.  அப்படியாயின்  நான் நேரில் பார்த்தே அறியாத டாக்டர் கிறீனுக்கு எவ்வாறு இருந்திருக்கும்..? பாப்புவாநியுகினியில் எல்லா கடற்கரைக்கு நான் உலாவச்சென்று எனது மனதை ஆற்றுப்படுத்துவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்றபோது  எனது  மனதில் நிழலாடிய இரண்டு காட்சிகள்  இப்போது நினைவுக்கு வருகிறது. இரண்டுமே நேரில் கண்ட காட்சிகள்தான். பாப்புவாநியுகினியை விட்டு நான் விடைபெறும் தருணத்தில் எனது மனநிலை எப்படி இருந்தது என்பதையும் அந்த ஈடாட்டத்தையும் பற்றி நான் எல்லா கடற்கரையில் என்ற தலைப்பில் எழுதிய நெடுங்கவிதையை எனது அம்பி கவிதைகள் நூலின் 186 ஆம் பக்கத்திலிருந்து 189 ஆம் பக்கம் வரையில் பாருங்கள். அதிலிருந்து சில வரிகளை கடந்த அங்கங்களிலும் எழுதியிருக்கின்றேன்.  


அதில், கடற்கரையின் இயற்கை எழில் காட்சியையும்  கட்டுமரத்திலே சவள் வலித்து உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் உழைப்பாளிகளையும் சித்திரித்திருப்பேன். அத்துடன் காற்று வாங்க வந்த ஒரு தமிழ்த்தாயும் அவளது குழந்தையும் பேசும் ஆங்கிலத்தைப்பற்றியும் சொல்லியிருப்பேன்.   இப்போது நினைவுக்கு வந்திருக்கும் நான் அமெரிக்காவில் நேரில் பார்த்த காட்சியை சொல்கின்றேன்.  அமெரிக்காவில்  மசாசூசெற் மாநிலத்தில்  வூஸ்டரில் இருக்கும் பொது நூலகத்தில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் பற்றி உங்களிடத்தில்  இச்சந்தர்ப்பத்தில் சொல்லத்தான் வேண்டும். மசாசூசெற் எனச்சொன்னவுடன் உங்களில் பலருக்கு ஒரு முக்கிய செய்தி நினைவுக்கு வரும் எனவும் நம்புகின்றேன்.  

1979 ஆம் ஆண்டு  இந்த மாநிலத்தின் சட்டமன்றத்தில்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதற்குக்காரணம், அதற்கு முன்னர் 1978 ஆம் ஆண்டு பதவியிலிருந்த ஐக்கிய


தேசியக்கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தனா நடைமுறைக்கு கொண்டு வந்த  புதிய அரசியலமைப்புத்தான்.  அதனை வைத்துக்கொண்டு,  கடந்த 42 வருடகாலமாக 13 – 19 – 20 என பல்வேறு திருத்தங்களை வைத்து சித்துவிளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. யாருக்கு அதிகாரம் தேவை..?  என்பதே அந்த சித்துவிளையாட்டின் தாற்பரியம். மசாசூசெற் மாநிலத்தீர்மானம் பற்றி  உலகில் இன்றும் யாராவது ஒரு தமிழ் ஆர்வலர் பேசிக்கொண்டுதானிருக்கிறார்.  ஐக்கிய நாடுகள் சபையிலும் ஒலிக்கிறது.  ஆனால்,  அகத்திய முனிவர் பற்றி எழுதப்பட்ட ஓலைச்சுவடி அதே மாநிலத்தில் வூட்சர் பொது நூலகத்தில் இருக்கிறது என்பது பற்றி யாராவது பேசுகிறார்களா..? தெரிந்திருந்தால்தானே பேசுவார்கள்.  இன்று எந்த மொழி, எந்த இனம் மூத்தது..?  என்று இலங்கை நாடாளுமன்றில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  அதனால்,  2004 ஆம் ஆண்டில்  மெல்பனில் வெளியான உதயம் இருமொழி பத்திரிகையில் நான் எழுதிய ஆங்கிலக்கட்டுரையை இங்கே மீள் பதிவுசெய்கின்றேன். 

இந்தப்பத்திரிகை 1997 ஆம் ஆண்டு முதல் வெளிவந்திருப்பதாக அறிகின்றேன்.  அதற்கு நான் சூட்டிய தலைப்பு: Agastia  Moonivar’’s Guna Paadal Preserved in American Library  அதனை நான்  ஆங்கிலத்தில்  எழுதியதன் காரணம்,  உதயம் பத்திரிகையை சிங்கள வாசகர்களும், அதில் வெளிவரும் ஆங்கில விடயதானங்களுக்காக படிக்கிறார்கள் என்பதையும் அறிந்திருந்தமையால்தான்.   1997 ஆம் ஆண்டு  உதயம் பத்திரிகையினால் மெல்பனில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் நானும்  எனது நண்பர்கள்  எஸ்.பொ., ஆசி. கந்தராஜா,  மற்றும் காசி நாதர் உட்பட பலர் கலந்துகொண்டோம். அத்துடன் சிட்னியில் நடந்த உதயம் கருத்தரங்கிற்கும் நான் தலைமை தாங்கியிருக்கின்றேன். பின்னர் எனது பவளவிழா காலத்தில் மெல்பனில் நடந்த உதயம் விழாவில் எனக்கு விருதும் வழங்கி பாராட்டியுள்ளார்கள். அதனால் எனது புலம்பெயர் வாழ்வில் உதயம் பத்திரிகை பற்றியும் நான் அவசியம் குறிப்பிடத்தான் வேண்டும்.  இனி, உதயம் இதழில் வெளியான அக்கட்டுரையை வாசித்துப்பாருங்கள். 


While searching for Medical Books in Tamil written by Scientific Tamil Pioneer Dr. Samuel Fisk Green, one library I visited was Worcester Public Library, MA. There, Ms Nancy E Gaudette, the Librarian of Worcester Collection gave me a copy of Agastia  Moonivar’’s Guna Paadal Preserved in Public Library. It was in Tamil and engraved on palmyra leaves. On the outside was a label which read, Guna Paadal (Symptomatology) by Agastiar. On the inside was an interesting note by Dr. Green in his own hand writing: ‘ To : மகா கனம் பொருந்திய Dr. Ino Green. From: Samuel F Green alias பச்சையப்பன்.  On pages 1 and 2 of the leaves, there was this script: “The author of this book was Agastia Moony or Rishe ( Yogee) a celebrated hermit or learned devotees who flourished in India many hundred years ago. He has written many books on religion, medicine, philosophy and some other sciences. He is thought to have travelled to various countries and even to Europe (Greece, Italy) in search of knowledge. In corroboration of this idea, he has written of himself that he resided in the country of the Franks, eighteen years. He has in one of his works written about the necessity of a Saviour for man kind and it appears fom his writings that he had obtained some knowledge of Christ. This book on symptomatology is also one of his productions. In

Tamil this is named Goona Paadal.  Though it is called symptomatology yet various medicines and their compositions with the diseases to which they should be administered are described in this book. Hundred and forty – eight verses are only found in this copy “  I found it very difficult to read but after spending about half a day, I managed write down one verse, which reads as follows: 

எண்பது  வாதந் தன்னை          இருவகை வகிர்ந்து காணில்  நண்பனே அரைக்கு மேலே             நாற்பது வாத மாகும்  பண்புசே ரரைக்குக் கீழே           பயிற்றுநான் காகும் வாதம் வண்டுசேர். குழலி னாளே             வாகடத் தியல்பு தானே. It is interesting to note that Dr Green used the pure Tamil phrase மகா கனம் பொருந்திய  Dr. Ino Green to address his doctor friend and referred to himself as Samuel F Green alias பச்சையப்பன்.  டாக்டர் கிறீன் அவர்கள் தனது பெயரையே பச்சையப்பன் என்றும் எழுதினார். தனது நண்பரை மகா கனம் பொருந்திய என்று அழகு தமிழிலே அணைத்தார்.  இது இவ்விதமிருக்க,  பாப்புவா நியூகினி எல்லா கடற்கரையில் நான் கண்ட அந்த தமிழ்த் தாயும் குழந்தையும் ஆங்கிலத்தில் பேசுகிறார்களே… என்று மனம் அழுதது. அடடா… அடடா…!  மெல்லத் தமிழினி சாகும் என்று அந்த பேதை உரைத்தபோது எங்கள் மகா கவிக்கு எப்படி இருந்திருக்கும்  என்று யோசித்துப்பார்த்தேன். எண்ணி எண்ணிப்பார்க்கின்றேன். எனக்கு எதுவும் புரியவில்லை. ( தொடரும் )      No comments: