அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 33 – எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு –


சரவண பிரபு ராமமூர்த்தி எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – தோற்கருவி  அமைப்பு உருளை வடிவத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி ஜிம்பளங்கு கொட்டு. பலா மரம், வேம்பு, வேங்கை அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மரம் வாங்கி வந்து ஆசாரிகளிடம் தந்து குடைந்து கொள்கிறார்கள். இக்கருவியை இசைப்பவர்களே இதை மேற்கொண்டு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துக்கொள்கிறார்கள். பிரம்பு அல்லது மூங்கில் வளையங்களில் தோலை ஒட்டி அந்த வட்டவடிவமான தோல்களில்  ஓட்டைகள் இடப்படுகிறது. எருமை மாட்டின் தோல் வாரைக் கொண்டு உடல் பகுதியுடன் சேர்த்துக் கட்டப்படுகிறது. தவிலைப் போல் நட்-போல்ட் இல்லாமல் பழைய முறையிலேயே வார்களைக் கொண்டு இத்தவில் கட்டப்படுகிறது. ஒரு ஜான் அளவு இடப்பக்கம், அதைவிட  1-2 இன்ச் அளவு கூடுதல் அளவில் மறுபுறம் உள்ளது. குச்சியைக் கொண்டு ஒருமுகமும் கைகளால் ஒரு முகமும் இசைக்கப்படுகிறது.   குறிப்பு ஜிம்பளங்கு மேளம், ஜிம்பளங்கு கொட்டு, ஜிம்பளா

கொட்டு, சிம்பளா கொட்டு, எருதுகட்டு மேளம், ஜல்லிகட்டு மேளம், சக்கிலியக்கொட்டு ஆகியவை இந்த இசைக்கருவியின் வேறு பெயர்கள். ஜிம்பளா ஜிம்பளா என்று ஓசை வருவதினால் இதற்கு ஜிம்பளா கொட்டு என்று பெயராம். இதை இசைப்பவர்கள் விளிம்பு நிலை அருந்ததியர் சமூகத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் (சில பகுதி), சிவகங்கை மாவட்டங்களில் இந்த மேளம் தான் மண்ணின் இசைக்கருவியாக மதிக்கப்படுகிறது. கமுதி, பெருநாழி, காத்தனேந்தல், சாயல்குடி, கொக்காடி(திரு தருமர், திரு நாகன்) , திம்மநாதபுரம் (பூச்சாரியம்மன் கோவில்), சிங்கம்பட்டி, ஆர் எஸ் மங்கலம், தொப்படைபட்டி ஆகிய ஊர்களில் இந்த மேளத்தை நாம் குறிப்பாக் ககாணலாம்.  இந்த மூன்று மாவட்டங்களில் எருதுகட்டு என்பது பிரபலம். வட மாடு என்றும் அழைக்கிறார்கள் (வடம் – கயிறு). மாசி களரி போன்ற திருவிழாக்களில் இடம்பெறும் போட்டி. இதற்கான கயிறை வைக்கோல் கொண்டு ஊர்க் கூடி திரிக்கிறார்கள். இது ஒரு சடங்கு. இந்த சடங்கிலும் ஜிம்பளங்கு மேளம் தான். ஒரு மைதானத்தில் ஒரு மாட்டை திரித்த கயிறுகொண்டு கட்டி விடுகிறார்கள். சல்லிக்கட்டை போன்று மாடு ஒடுவதில்லை. மாடு சுற்றி சுற்றி வரும் அல்லது ஒரே இடத்தில் நிற்கும். அதை அடக்க வேண்டும். அடக்கினால் வெற்றி இல்லையென்றால் மாடு வெற்றி என்று அறிவிக்கப்படும். 

இப்போட்டியில் மாட்டை உற்சாகப் படுத்தவும், போட்டியாளர்களை உற்சாகப் படுத்தவும் ஜிம்பளா மேளம் இசைக்கப்பட்டது. அதனால் இதற்கு எருதுகட்டு மேளம் என்கிற பெயர் உண்டாயிற்று என்கிறார் கமுதியை சேர்ந்த ஆசிரியர் திரு விஜய்ராம் அவர்கள். விலங்கு நல ஆர்வலர்கள் சும்மா இருப்பார்களா? ஜிம்பளா மேளம் மாட்டை மிரள


வைக்கின்றது என்று புகார் சொல்ல, எருதுக்கட்டு நிகழ்சிகளில் ஜிம்பளா மேளத்தின் பயன்பாட்டுக்கு வேட்டு வைத்து விட்டார்கள். சடங்கு, மரபுகளில் இருந்து ஒரு கலை நீக்கப்படும் பொழுது அது மெல்ல அழிகின்றது. இம்மேளம் வழக்கொழிய இதுவும் ஒரு காரணி.  ஜிம்பளா மேளம் தனியாக இசைக்கப்படுவதில்லை. ஒரு குழுவில் குறைந்தது 8 பேர் இருக்கிறார்கள். குழுக்களை சுதை என்று அழைக்கிறார்கள். 4-10 மேளம், கட்டைகுழல், கிடிகிட்டி, ஒரு ஜால்ரா மற்றும் ஒரு ஒற்றை முரசு(ஒத்த முரசு) ஆகியவை இடம்பெறும். கிடிகிட்டியையும் இவர்களே செய்துகொள்கிறார்கள். ஒரு மண் கலயத்தில் மாட்டின் நெற்றி பகுதி தோலைப் போர்த்தி வார்க்கொண்டு கட்டி கிடுகிட்டி செய்யப்படுகிறது. இந்த கிடுகிட்டி இசைப்பவர் தான் இந்த சுதையின்(குழு) தலைவராக இருக்கிறார். ஒத்த முரசு என்பது உருளை வடிவ கருவி. ஒரு முகத்தில் கொட்டப்படுவது. இக்கருவி தற்பொழுது மெல்ல இக்கலையில் இருந்து வழக்கொழிந்து வருகின்றது.   ஜிம்பளா மேளத்தின் அடுத்த முக்கிய கருவி கட்டைகுழல். தோதுவத்தி என்னும் மரத்தில் இருந்து கலைஞர்களே செய்துகொள்கிறார்கள். 6 துளைகள் இருக்கும். வெங்கல அனசு, பனை ஒலை சீவாளி ஆகியவை இதில் பொருத்தப்படும். இந்த அனைத்து கருவிகளும் சேர்த்து தான் ஒரு எருதுகட்டு மேளக்குழு. இந்த இசைவடிவத்தின் சிறப்பு என்னவென்றால் நாயனக்காரரை தவிர மற்ற அனைவரும் ஆடிக்கொண்டே இசைப்பார்கள். அவர்களின் கால்களில் வெங்கல சலங்கை கட்டிக்கொள்கிறார்கள். வட மாடு அல்லது எருதுக்கட்டில் நடுவில் இருக்கும் மாட்டை வீர்கள் விரட்டுவது போல் சக கலைஞர் ஒருவரை, மற்ற இசைக்கலைஞர்கள் விரட்ட அவர் மாடு போல ஒடி, முட்டி, கால்களை பின்னால் உதைத்து செய்கைகள் செய்ய உற்சாகமாக

இருக்கின்றது இந்த கலை வடிவம். இதன் அடி வகைகள் ஒன்றாம் அடி, பெருசு அடி, சாமி அடி, மாடுமுட்டு அடி என்று நீள்கிறது. சாலடி என்பது சுடலைமாடன் சாமி சாம கொடையில் அடிக்கப்படும் அடி.  பொங்கல், காவடியாட்டம், அக்கினிச்சட்டி, பால்குடம், கரகம் அழைப்பு, புரவி எடுப்பு, சாமி அழைப்பு, கோவில் சாமி ஊர்வலம், அழகர் திரியாட்டம், அழகர் தண்ணீர் பீச்சுதல், முளைப்பாரி, பெரிய திருமண ஊர்வலம் ஆகியவற்றிலும் ஜிம்பளா மேளம் தான் இப்பகுதிகளில் முக்கிய கலை வடிவம். பரமக்குடியில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வன்று இரவு காக்காத் தோப்பு மண்டகப்படியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அழகர் வேடமிட்டு ஆடுவார்கள். அப்பொழுது ஆறு முழுவதும் எங்கு பார்த்தாலும் "ஜிம்பளாங் ஜிம்பளாங்" என்ற சத்தம் தான் கேட்கும். அத்தனை ஜிம்பளங்கு மேளக்கார்கள் ஒன்றாக இசைப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.   வெள்ளை சட்டை, தலைப்பாகை, மடித்த வேட்டி என்பவை ஆட்டத்திற்கான் உடை முறைகள். ஆட்டத்தில் ஒருவர் "கோழி அடிச்சி வச்சேன்டா கூரையில சொருகி வச்சேன்டா குளிச்சிட்டு வரும் முன்னே கோமாளி களவாண்டு தின்னுட்டான்டா" அடிடா "ஜிம்பளாங் ஜிம்பளாங் ஜிம்பளாங் ஜிம்பளாக்" இப்படி பாடி இசைப்பார்கள். ஒவ்வொரு முறையும் சிறிய இடைவெளி கூட இல்லாமல் அடுத்தடுத்து பாடல்களை இசைக்க துவங்கி விடுகிறார்கள்.  இறப்பு சடங்குகளிலும் ஜிம்பளா தான் இசைக்கப்படுகிறது. இறப்பை இப்பகுதிகளில் துஷ்டி என்று அழைக்கிறார்கள். கோவில்களில் சுத்தபத்தமாக இசைக்கும் கலைஞர்கள் துஷ்டி வீடு என்றால் சிறிது சரக்கை உள்ளே தள்ளி விடுகிறார்கள். இவர்கள் ஓய்வின்றி பல மணி நேரம் இசைக்க வேண்டியுள்ளது. ஆகவே இது அத்தியாவசிய ஒன்றாகி விடுகிறது. கலைகள் ஏன் அழிகின்றன என்று வரலாற்று ஆய்வாளர் திரு அ.கா.பெருமாள் அவர்கள் கூறும் முக்கிய காரணிகளில் கலைஞர்களின் குடிப்பழக்கமும் ஒன்று.  அருகிவரும் இந்த கலையை பெருநாழி ,கொக்காடி, காத்தனேந்தல் ஆகிய ஊர்களைச் சேர்ந்த கலைஞர்கள் இன்றும் விடாது இசைத்து வருகின்றனர். இக்குழுக்களில் இளைஞர்கள் யாரும் இல்லை. பெரும்பாலும் முதியவர்களும் 50ஐ கடந்தவர்களும் தான். இப்படியே

விட்டால் இன்னும் சில 10 வருடங்களில் காணாமல் போய்விடும். இக்கலைக்குரிய அங்கீகாரம், மக்களின் ஆதரவு, கலையை கற்க ஆர்வமுள்ள இளைய சமூகம், அரசு உதவி, சுற்றுலாத்துறை உதவி, வெளி மாவட்ட மக்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தல் ஆகியவை அழிவின் விளிம்பில் இருக்கும் இக்கலையை இன்னும் சிறிது வருடங்களுக்கு உயிர்ப்புடன் வைக்கும்.  ஒற்றை முரசு(ஒத்த முரசு) ஒற்றை முரசு(ஒத்த முரசு) உருளை வடிவக்கருவி. என்ன தோல் என்று தெரியவில்லை. பம்பை அளவு நீளம் இல்லாமல் அதைவிட குறைந்து இருக்கின்றது. ஜிம்பளா மேளத்தின் துணைக்கருவியாக பயன்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் தென் தமிழ்நாட்டின் உருமி மேளக் குழுவிலும் இக்கருவி இசைக்கப்படுகிறது. இப்பகுதி கொடை விழாக்களில் உருமி, கட்டைக்குழல், ஒரு பெரிய அளவிலான மேளம் இவற்றுடன் ஒற்றை முரசு(ஒத்த முரசு) இசைக்கப்படும். ஒற்றை முரசு(ஒத்த முரசு) ஒரு முகத்தில் மட்டும் குச்சியைக்கொண்டு இசைக்கப்படும்.   காணொளி: ஜிம்பளா மேளம்: https://www.youtube.com/watch?v=XWMHCDPV4S8 https://www.youtube.com/watch?v=JqIy2lTuQ2I

https://www.youtube.com/watch?v=idRzoPC8j8U https://www.youtube.com/watch?v=TLqxCHPUJ58&t=127s https://www.youtube.com/watch?v=qw8InbdGOt4 https://www.youtube.com/watch?v=iEfGVG5ZCPQ&t=67s https://www.youtube.com/watch?v=7Pr77Bn50lE https://www.youtube.com/watch?v=xe1DdgwnWPQ  ஒற்றை முரசு(ஒத்த முரசு): https://www.youtube.com/watch?v=9qqLI5UefH8&feature=youtu.be https://youtu.be/2yACn4XjZmo https://www.youtube.com/watch?v=GTULxEBv7vM  -சரவண பிரபு ராமமூர்த்தி நன்றி: 1. திரு

விநோத்குமார், மென்பொறியாளர், திம்மநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் 2. திரு உருத்திரபாலன், இசை ஆய்வாளர், மதுரை 3. திரு விஜய்ராம், ஆசிரியர், பெருநாழி, கமுதி, (https://www.youtube.com/channel/UCGcnqe7IWTFIY_pV8oqhS7Q)

 



No comments: