சிறுகதை - நினைவுப் பதிவு - எண்பத்து மூன்று ஜூலை ! - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில்நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும்.


குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக்கொண்டிருந்தது. பதினொரு மணியளவில் பரீட்சை மண்டபத்தில் இருக்கவேண்டிய  அமைதிக்கு மாறாக, ஒருவித இனம்புரியாத சலசலப்பை உணரக்கூடியதாகவிருந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களது முகங்கள் இறுகியிருந்தன.

மண்டபத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களும் நிமிர்ந்து இடப்பக்கமும், வலப்பக்கமும் வெளியே பார்வையை எறியத் தொடங்கிவிட்டார்கள். இச்சையின்றி இயங்கிய என்கண்களும் வெளியே நோக்க... ! எங்கும் புகைமண்டலமாகத் தெரிந்தது.

 

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு சில இடங்களில் அசுர வேகத்தில் மேலெழுந்து விரிந்து கொண்டிருந்தது. குபீர் குபீரெனப் பல நிறங்களில் நெருப்புக் கலந்த புகை மண்டலம் கறுப்பாகி மேலெழுந்து வானிலே கலந்து கொண்டிருந்தது. ஏதோ தீவிபத்தாக இருக்கும் என்று முதலில் எண்ணினேன். ஆனால், அது வெறும் சாதாரண தீவிபத்து அல்ல, ஏதோ விபரீதம் நடக்கிறது என்று எனது உள்மனம் உறுத்தியது.

 

1977 ஆவணி அமளி எனது நினைவுக்கு வந்து நெஞ்சை உருக்கியது. பகீரென்று ஏற்பட்ட பய உணர்வு அடிவயிற்றில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியதைப் போலத் தீயாய்ச் சுட்டு, உடலெங்கும் வலியாய்ப் பரவியது. விரல்கள் நடுங்கினபேனாவுக்கும் விரல்களுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிடிப்பில் விரிசல் ஏற்பட்டது. எழுத்துக்கள் உருமாறி, அளவிலும் பெரிதாகிவரிகளும் தடுமாறி ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டிய ஒவ்வொரு வரியிலும் இரண்டு, மூன்று சொற்களே எழுதுப்பட்டு, ஒருபக்கத்தில் எழுதக்கூடிய விடயம் ஐந்து பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்க... ஒருவாறு மதியம்12.00 மணியாயிற்று. பரீட்சை மேற்பார்வையாளர்கள் விடைத்தாள்களை விரைந்தோடிச் சேகரித்தார்கள். சிலரிடமிருந்து விடைத்தாள்களைப் பெற்றுக்கோண்டபோது அவை தவறிக் கீழேவிழுந்தன. பொறுக்கியெடுத்து அடுக்கி வைத்தார்கள். ஒவ்வொரு செயலும், ஒவ்வோர் அசைவும் வழமைக்கு மாறாக இருந்தது. அவர்களின் முகங்களில் தெரிந்த கலவரத்தையும், செயல்களில் இருந்த பதற்றத்தையும் பார்த்து காரணம் தெரியாமலே என் சிந்தை கலங்கியது. அப்போது தலைமை மேற்பார்வையாளர் விடுத்த அறிவிப்பு நிலைமையை உணர்த்தியது.

"இன்றுடன் உங்கள் பரீட்சை இடைநிறுத்தப்படுகிறது. கலவரம் தொடங்கிவிட்டது. அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பரீட்சை எப்போது தொடங்கும் என்பது பின்னர் உங்களுக்கு அறியத்தரப்படும்." அவர் ஒரு சிங்களவர். ஆங்கிலத்தில் கூறினார். நிசப்தமாக இருந்த மண்டபத்தில் சத்தம் எழுந்தது.

 

"நான் நினைச்ச நான்....."

 

"எனக்குத் தெரியும் என்னவோ..நடக்கப்போகுதெண்டு..."

 

"காலையில நான் வரேக்குள்ள  மருதானையில இரண்டு கடை எரிஞ்சு கிடந்தது...அப்பவே நான் நினைச்சன்..."

 

"எப்படாப்பா மிச்சப்பாடம் நடக்கும்...?

 

"மிச்சப்பாடமா..? மண்ணாங்கட்டி....உயிரோட போய்ச் சேருவமா எண்டு தெரியாமல் கிடக்கு....அதுக்குள்ள...மிச்சப்பாடமும்..சொச்சப்பாடமும்..!"

 

"எந்தப்பக்கத்தால போறது?"

 

"நடந்து போவமா?"

 

"டாக்சியில  போறதுதான் நல்லது.."

 

"டாக்சியிலயா..டாக்சிய  மறிப்பாங்கள்....எழுபத்தேழுல  எங்கட மாமாவுக்கு அப்பிடித்தான் நடந்தது. இழுத்தெடுத்து உயிரோட கொழுத்தினவங்கள்"

 

"டாக்சிக்காரனே குத்திப்போடுவான்"

 

பலரும் இப்படிப் பலவிதமாகக் கதைத்துக்கொண்டிருக்க, என்னையறியாமலே நான் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். கொள்ளுப்பிட்டியிலிருந்து நடையாய் நடந்து சென்றேன். கொழும்பு பொது வைத்தியசாலைக்கருகாமையில் வரும்போது வீதியிலே பல கார்கள் எரிந்துகொண்டிருந்தன. உடைந்த தளபாடங்கள், நொருங்கிய கண்ணாடிகள், சேதமாக்கப்பட்ட பொருட்கள் தெருக்கள் எல்லாம் சிதறுண்டு, பரவிக்கிடந்தன. ஆங்காங்கே தொட்டம் தொட்டமாக இரத்தத் துளிகள் தென்பட்டன.

ஆம்! 1956 ஆம் ஆண்டுமுதல் கொழும்பு வீதிகளுக்குத் தமிழனின் குருதியினால் குடமுழுக்கு நடைபெறுவது ஒரு சடங்காகிவிட்டது! நான் தெமட்டகொடைக்குப் போக வேண்டும். அங்குதான் நான் தங்கியிருந்தேன். அங்கு செல்லும் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. தெருவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாதச் செயல்களைப் பொறுத்து, ஆபத்து இல்லாத வழி அதுதான் என்று அப்போது என் மனதில் தோன்றியபடி, என் கால்கள் இயங்கின எனது முகத்திலே தாடி வேறு. பரீட்சைக்கு ஆயத்தம் செய்தபோது வழிக்காமல் விட்டதால் கருகருவென்று அடர்ந்து வளந்துவிட்ட இரண்டு மாதப் பயிர்! ஆனால் தாடியினால் எனக்கு ஓர் அனுகூலமும் இருந்தது. குழந்தைப் பருவத்தில் காதுகுத்திய அடையாளம், துளையும் தூராமல் இன்னும் எனக்கு இருக்கிறது. அதனைத் தாடி ஓரளவு மறைத்திருந்தது. காது ஓட்டையைப் பார்த்துதான் கழுத்தை அறுப்பார்களாம். முன்னர் நான் கேள்விப்பட்ட அந்தத் தகவல் அந்தநேரத்திலா எனது நினைவுக்கு வரவேண்டும்? புஞ்சிபொறல்லை சந்திக்கு வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து சனசந்தடி மிகுந்த மருதானை வீதியூடாகத் தெமட்டகொடை நோக்கி நடந்தேன். தடால் புடால் என்று பயங்கரச் சத்தம் எல்லாப்பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தொடர்மாடி வீடுகளில் இருந்து பொருட்களைத் தெருவிலே வீசிக்கொண்டிருந்தார்கள். வீதிகளில் அவற்றைச் சிலர் தீயிட்டுக் கொழுத்திக்கொண்டிருந்தார்கள். தொடர்மாடி வீடுகளில் இருத்து கிரீச்சிடும் அவலக்குரல்கள் காதில் நுழைந்து நெஞ்சைப் பிழந்துகொண்டிருந்தன.

"அன்ன துவனவா....யண்ட...கப்பண்ட (அதோ ஓடுறாங்கள் போ வெட்டு)

பறதெமலோ... அபே ரட்ட..... ஐயோ...கபண்ட எப்பா..கபண்ட எப்பா...ஐயோ... (பறத் தமிழன்....எங்கள் நாடு....ஐயோ....வெட்டாதீங்க...வெட்டாதீங்க..ஐயோ!)

கஹண்டெப்பா...கபண்டெப்பா...ஐயோ.."

(அடிக்காதீங்க....வெட்டாதீங்க.....)

ஆவேசக் கோசங்களும், அவலக் கூக்குரல்களும் கலந்து தெருவெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது.

திடீரென்று ஓர் அமைதி! தூரத்தில் ஜீப் வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. கைகளிலே கத்திகள், தடிகளுடன் நின்றவர்கள் ஜீப்பைக் கண்டதும் ஓடிவிடுவார்கள் என்றெண்ணிக் கவலை சிறிதளவு குறைந்தது. ஆனால் அவர்கள் வீதியிலிருந்து சற்று விலகி நின்றார்கள். வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப்பில் ஆயுதம் தரித்த காவலர்கள் இருந்தார்கள். கும்பல் நின்றிருந்த இடத்தை அண்மித்ததும் ஜீப் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. எனக்குள் ஒரு தென்பு வந்தது. " ! பொலீஸ் வந்துவிட்டது. இனிப்பயமில்லை" என்று மனம் சொன்னது. வேகத்தைக்  குறைத்த ஜீப், கூட்டம் நின்ற இடத்தைத் தாண்டியதும், மீண்டும் வேகமாகத் தன்பாட்டில் சென்றுகொண்டிருந்தது. "என்ன இது? காடையர்கள் "வேலை" யை ஒழுங்காகச் செய்கிறார்களா என்று கண்காணித்துச் செல்வதற்காகவா அந்த ஜீப் வந்தது?" எனது பயம் இருமடங்காகியது. நடையின் வேகத்தைக் கூட்டினாலும் சந்தேகப்படுவார்கள். சாதாரணமாக (?) நடந்தேன். புஞ்சிபொரல்லைச் சந்தியிலிருந்து மருதானைப் பக்கம் இரண்டு நிமிடங்கள் நடந்திருப்பேன். பல குரல்களின் மரண ஓலம் ஒரு காருக்குள் இருந்து பலமாகக் கேட்டது. அந்தக் காரைச் சுற்றி நின்று சிலர் தங்களின் கையில் கிடைத்த ஆயுதங்களால் காரைப் பலமாகத் தாக்கிக்கொண்டிருந்தார்கள். காரின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. உயிருக்கும் மன்றாடும் ஆண் குரல், பெண்குரல், குழந்தைகளின் குரல் எல்லாம் ஒன்றாகக் கேட்டுக்கொண்டிருந்தன.

 

காருக்கு மேலே, பெட்டிகளும், பொட்டலங்களும் ஒழுங்கில்லாமல் கட்டிவைக்கப்பட்டிருந்தன. தங்கள் இருப்பிடத்தில் அபாயம் என்று எங்கோ தப்பியோட வந்த குடும்பமாக இருக்க வேண்டும். எங்கிருந்தோ ஓடிவந்த காடையன் ஒருவன் காரின்மேல் பெற்றோலை ஊற்றினான். எங்கிருந்து நெருப்பு வந்தது என்று தெரியவில்லை. குபீர் என்று பற்றிப் பிடித்த நெருப்பு காரை முற்றாக மறைத்தது. உள்ளே ஓலமிட்டுக்கொண்டிருந்தவர்கள் உடைந்த கண்ணாடிகளினூடாகவும், கதவுகளைத் திறந்து தள்ளிக்கொண்டும் குற்றுயிரும் குறையுயிருமாக வெளியே பாய்ந்து விழுந்தார்கள். விழுந்தவர் ஒருவர், நிலத்தில் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தபோது காடையன் ஒருவனின் கத்தி அவரது கழுத்தில் இறங்கியது. காரினுள்ளே இன்னும் யாரோ இருந்திருக்க வேண்டும். கையிலே குழந்தையுடன் வெளியே பாய்ந்து இறங்கிய அந்தப் பெண் காரை நோக்கிக் கத்திய தோரணை அப்படி உணர்த்தியது. கனத்த தடியொன்று அவளின் தலையில் விழுந்தது. தாயும் குழந்தையும் தார் வீதியிலே சரிந்தார்கள். ஒரேயொருமுறை குழந்தையின் அலறல் உரத்துக் கேட்டது. உடல் வலியினாலா.. அல்லது உயிர் போய்விட்டதாலா.....விழுந்த குழந்தையிடமிருந்து எந்தச் சத்தமும் பின்னர் கேட்கவே இல்லை. கார் முற்றாக எரிந்துகொண்டிருந்தது.

 

பற தெமலு அப்பிட்ட எப்பா....தோச வடே......அப்பிட்ட எப்பா....மேக்க அபே ரட்ட....ஜயவேவா....

 

 (பறத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம். தோசை, வடை எங்களுக்கு வேண்டாம். இது எங்கள் நாடு...)

 

வானைப் பிழக்கும் கோசத்துடன் காடையர் கும்பலொன்று வீதியில் பவனியாய்ச் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கும்பலில் ஐம்பது பேருக்கு மேல் இருந்திருப்பார்கள். கத்திகள், வாள்கள், பொல்லுகள்இரும்புத் தடிகள் சகிதம் அவர்கள் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு கணம்..ஒரேயொரு கணம்தான் திடீரென ஒருபொறி என் தலையில் தட்டியது. ஊர்வலத்தில் ஒருவனாக நானும் சேர்ந்துகொண்டேன். அந்தநேரத்தில் வீதியில் நடந்துசெல்ல அதுதான் பாதுகாப்பான வழி என்று எனக்குப் பட்டது. கூட்டத்தினர் வீதியில் வந்த கார்களை  நிறுத்தினார்கள். சிலகார்களைப் போகவிட்டார்கள். சிலவற்றை அடித்து நொருக்கினார்கள். சிலர் உள்ளேயிருந்தவர்களை வெளியே இழுத்து உதைத்தார்கள், சிலர் அடித்தார்கள், சிலர் வெட்டினார்கள். சிலர் கற்களை எறிந்தார்கள், கடைகளை உடைத்தார்கள். சில கடைகளுக்குத் தீவைத்தர்கள். இப்படியே ஓட்டமும் நடையுமாக அந்தக் கும்பல் நகர்ந்துகொண்டிருந்தது.

 

அப்போது, குறுக்கு வீதியொன்றிலிருந்து இரத்தக் காயங்களுடன் ஒருத்தர் வீதிக்கு ஓடி வந்துகொண்டிருந்தார்ஆஸ்பத்திரிக்குப் போகும் அவசரம் தெரிந்தது. துண்டிக்கப்பட்ட ஒருகை தொங்கிக்கொண்டிருக்க, மறுகையால் அதைத் தாங்கிப் பிடித்தபடி ஓடிவந்த அவர் இந்த வீதிக்கு வரும்போதுதானா, இந்தக் காடையை கூட்டமும் இங்கு வரவேண்டும்? அவரை எனக்குத் தெரியும் அவர் ஒரு புட்டுக்கடை முதலாளி. கூட்டத்தைக்கண்டு அவர் சற்றுத் தயங்க, கூட்டத்தில் இருந்த சிலர், "ங்கா...அன்ன..அபே மொதலாளி...அல்லண்ட...அல்லண்ட... " (அதோ, நம்ம முதலாளி! பிடிங்க! பிடிங்க! ) என்று அவரைத் துரத்த...அவர் திரும்பி ஓட எத்தனிக்கும்போது...வீதியிலே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும்...அவரைத் தடுத்து பிடித்துத் தள்ளிக் கீழே விழுத்தினான். பக்கத்தில் கிடந்த மரத்தடியொன்றை எடுத்து ஓங்கி அவரது தலையில்.....”ஐயோ....!” ஒரேயொருமுறை அவர் கத்தினார். எனக்குப் பயங்கர நடுக்கத்துடன் நெஞ்சு பதைத்தது. அவர்களில் யாராவது என்னை இனங்கண்டுகொண்டால்...இனம் காணத்தேவையுமில்ல.... சந்தேகித்தாலே போதும். அந்தக் கணத்தை நினைக்க இப்போதும் உள்ளம் நடுங்குகிறது

 

கூட்டம் நகர்ந்தது. கூடவே நானும் தொடர்ந்தேன். இருபக்கங்களிலும் எரிந்துகொண்டிருந்த வீடுகளிலிருந்தும், கடைகளில் இருந்தும் கொழுந்துவிட்டெழுந்த நெருப்பு, தான் விழுங்கி ஏப்பமிட்ட  இன்னோரன்ன பொருட்களின் எச்சமாக திரணை திரணையான செம்மஞ்சளும், கரும்பச்சையும் கலந்த புகையாகமேலெழுந்து வானில் கலந்தது. தெமட்டகொட வீதி வந்ததும் கும்பலுடன் கூடச் செல்வதுபோலச் சென்று, விலகாது செல்வது போல விலகி, தெமட்டகொட வீதியில் திரும்பி இருப்பிடம் நோக்கி விரைந்தேன். எப்படி வீடுபோய்ச் சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியாது. தெமட்டகொடயில் நான் தங்கியிருந்தது குணரத்ன என்ற ஒரு சிங்களவரின் வீட்டில். என்னைக் கண்டதும் குணரத்ன ஓடிவந்து குசலம் விசாரித்தார். அவரது முகத்தில் மகிழ்ச்சி கலந்த ஒரு நிம்மதி படர்ந்தது.

 

அங்கு என்னுடன் எனது அறை நண்பராக இன்னொருவரும் தங்கியிருக்கிறார். என்னிலும் பத்து வயது கூடிய அவர் ஒர் ஆசிரியர். அவரை மாஸ்டர் என்றுதான் அழைப்பேன். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. அவரின் வரவை எதிர்பார்த்துக் கவலையோடு காத்திருந்தேன். குணரத்னவும் கலவரப்பட்டான். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனது கவலை பதற்றமாகி அதிகரித்துக்கொண்டிருந்தது.

 

நேரம் பிற்பகல் நான்கு மணியிருக்கும். திடீரென்று மிகவும் வேகமாக ஓடி வீட்டுக்குள் வந்த மாஸ்டர் எங்கள் அறைக்குள் புகுந்து கட்டிலில் தடால் என்று விழுந்து கால்களை விரித்து. மல்லாந்து படுத்தார். உடல் மிகவும் வியர்த்திருந்தது, உடைகள் தாறுமாறாக அழுக்குப் படிந்திருந்தன. அவரால் பேசக்கூட முடியவில்லை. அரைக்கண் திறந்தபடி என்னைப்பார்த்து நாத்தழுதழுக்க ஏதோ சொல்ல முயன்றார். அவரால்முடியவில்லை. அவரது உதடுகள் துடித்தன. அவருக்கு என்னவோ நடந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவரைத் தண்ணீர் குடிக்க வைத்து, அமைதிப் படுத்தினேன்.

அதற்குள் குணரட்னவும், அவரின் மனைவியும் அறைக் கதவருகில் வந்துநின்றார்கள்.

 

மாஸ்டர் நண்பகல் பன்னிரண்டு மணிக்கே பாடசாலையை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது அவரைக் கண்ட கும்பல் ஒன்று, அவர் தமிழர் என்பதை அறிந்ததும் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது. இன்னும் சில தமிழர்களுக்கும் இது நடந்திருக்கிறது. எல்லோரையும் அச்சுறுத்தித் தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் அந்தக் கும்பலில் இருந்தவர்கள்பின்னர் மாடுவெட்டும் ஓர் இடத்திற்குக் கொண்டு சென்று அங்கிருந்த தகரக் கொட்டகையின் உள்ளே எல்லோரையும் தள்ளிவிட்டு அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். எல்லோரையும் அங்குவைத்துக் கொல்லப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

 

அடைக்கப்பட்டவர்கள், யாரும் யாருடனும் பேசமுடியாதளவுப் பயத்தில் நடுங்கிக்கொண்டு இந்திருக்கிறார்கள். கொட்டகையின் உள்ளே மாடு வெட்டும் கத்திகளும், மரக்குற்றிகளும், மற்றும் இரத்தக் கறை படிந்த சாக்குகளும் கிடந்திருக்கின்றன. அவற்றைக் கண்டதும் எல்லோரும் மிகவும் பயந்துபோய் இருந்திருக்கிறார்கள். கொட்டகைக்கு வெளியே பலர் சத்தம் போட்டுக் கதைத்துக்கொண்டும், சிலர் அடிக்கடி கொட்டகைக்குள் வந்து எட்டிப் பார்த்து மிரட்டும் சைகைகளைக்காட்டி அச்சுறுத்திக் கொண்டுமிருந்திருக்கிறார்கள். இப்படியே மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மாஸ்டரும், மற்றவர்களும் மரணத்தை எதிர் நோக்கும் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

 

அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்திருக்கிறார்கள். மாஸ்டரை இரண்டு பேர் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த வேறொருவன் மாஸ்டரின் கையைப்பிடித்து அவரைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி மாஸ்டரை அப்பால் இழுத்துக்கொண்டு சென்று...நீ வாத்தியார்தானே என்று கேட்டுவிட்டு, ஓடு...இங்கே நிற்காதே ஓடு ? என்று விரட்டி விட்டிருக்கிறான்இந்த விபரங்களைத் திக்கித் திக்கி மாஸ்டர் கூறினார். தான் பாடசாலைக்குச் செல்லும்போது அவனைத் தான் பலதடவைகள் கண்டிருக்கிறாராம் என்றும் மாஸ்டர் சொன்னர். அதைச் சொல்லும்போது அவர் அழுதேவிட்டார்.

 

அவன் தன்னை ஓடச் சொன்னதும் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்ததாம் அங்கிருந்து மிகவும் அவதானத்துடன் நடந்து வந்திருக்கிறார்அப்போது தன்னை யாரோ பின்தொடர்வதுபோல உணர்ந்தாராம். திரும்பிப் பார்த்தால் தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டேதிரும்பியும் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்திருக்கிறார்.

 

வீடு வந்தும் அவரது பயம் போகவில்லை. நடுங்கிக் கொண்டிருந்தார். அறையும் மலசல கூடமுமாக ஐந்து நிமிடங்களுக்கொரு தடவை அலைந்துகொண்டிருந்தார். இடையில் நான் குளியலறைக்குச் சென்று திரும்பி வரும்போது. அவர் அறையில் இல்லை. கன நேரமாகக் காணவில்லை. மலசலகூடத்திலும் இல்லை. வீட்டுக்காரரிடம் கேட்டேன். ஆளைக் காணவேயில்லை. மாஸ்டர் இந்தநேரத்தில் எங்கே போயிருப்பார்? கூப்பிட்டுப் பார்த்தேன் ஆள் இல்லவே இல்லை.  குணரத்ன  மாஸ்டரைத்தேடி வீதிப்பக்கம் போனார். சிறிது நேரத்தில் மாஸ்டர் மெல்லிய சத்தத்தில் என்னைக் கூப்பிடுவது கேட்டது. எங்கேயிருந்து....? ..கட்டிலுக்குக் கீழேயிருந்துதான் வந்தது அந்த அனுங்கும் குரல்.  நான் குனிந்து பார்த்தேன்......

என்ன மாஸ்டர் இது? இங்க பூந்திற்று இருக்கிறீங்க. வெளிய வாங்கநான் அழைத்தேன்.

 

"அவனுகள் போய்ற்றானுகளா?" அவர் கேட்டார்.

 

" ஆர்" ஆரைக் கேக்குறீங்க? இங்க ஒருத்தரும் வரல்லயே!"

 

மாஸ்டர் மெல்ல வெளியே வந்தார். ஆளை மதிக்கவே முடியவில்லை. கொழும்பில் இளைஞர்கள் தங்கும் அறைகளில் உள்ள கட்டில்களின் கீழ்ப் பகுதி எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அவ்வளவு தூசுகளும், ஒட்டடையும் அவரை முற்றாக மூடியிருந்தன. நடந்ததை அவர் சொல்லக் கேட்டபோது, அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!

 

பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் நல்லவன். எங்களோடும் அவ்வப்போது கதைப்பவன். அந்தப் பழக்கதோசத்திலுள்ள பரிவினால், அவன் அன்று காலையில் இருந்தே நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோமா என்று அக்கறையோடு குணரத்னவிடம் விசாரித்துக்கொண்டிருந்திருக்கிறான். நாங்கள் வந்து சேர்ந்தபிறகும் சுவருக்குமேலால் எட்டிப்பார்த்து அவன் கேட்க, அதற்கு குணரத்ன, வீட்டிலிருந்தபடியே  "கட்டி அவில்லா...கட்டி  அவில்லா..." என்று உரத்துச் சொன்னார். அது எனக்கும் கேட்டது. அப்போது நான் குளியலறைக்குச் சென்றுகொண்டிருந்தேன். மரண பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த மாஸ்டருக்கு  "கட்டி அவில்லா...கட்டி அவில்லா.." என்று சொன்னது   " கட்டிலுக்குக் கீழ ஒழிக்கும்படி தமிழில் சொன்னதுபோலக் கேட்டிருக்கிறது! அவர்கள் தமிழில் பேசமாட்டார்கள், அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதெல்லாம் மாஸ்டருக்கு அப்போது தோன்றவில்லை அவ்வளவுதூரம் அவரைப் பயம் ஆட்கொண்டிருந்திருக்கிறது.

 

நாடுமுழுவதும் இனக்கலவரம் பரவிவிட்டதை வானொலி மூலம் அறிந்தபோது இனி நமது உயிர் நம்கையில் இல்லை என்ற எண்ணம் இதயத்தில் எழுந்து தொண்டையில் இறங்கியது. வீட்டோடு சாப்பாடும் என்பதால் எங்களுக்கு வெளியே செல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. குணரத்ன அடிக்கடி வெளியே சென்று வந்தார். ஒவ்வொருதடவையும் வெளியே நடக்கும் விபரீதங்களைத் திரைப்படம் பார்த்தவர் கதைசொல்வதுபோல விபரித்துக் கொண்டிருந்தார். பயமும் கவலையும் கலந்து எங்களைச் சூழ்ந்தது. எங்களது நிலைமையை உணர்ந்துகொண்டதனாலோ

 என்னவோ, வீட்டுக்காரர் குணரத்னவும் அவரது மனைவியும், நோயாளிகளைப் பராமரிக்கும் தாதிகள்போல எங்களோடு நடந்துகொண்டார்கள்அது மகிழ்ச்சியைக் தருவதற்குப் பதிலாக, உள்ளத்தின் பலத்தை இன்னும் தளர்த்துவது போன்ற உணர்வைத்தான் கொடுத்தது.

 

இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்தன. 25 ஆம்திகதி இரவு குணரட்ன திடீரென எங்களைக் கூப்பிட்டுக்கொண்டே  எங்கள் அறைக்கு விரைந்தோடி வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டிக்கொண்டு வந்தார்.  “தன்னவாத...குட்டிமணி...மரில்லா...குட்டிமணி..மரில்லா...!”

சிறையில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்ட செய்தியைச் சிரித்துக்கொண்டே சொன்னார். வெட்கப்பட்டுச் சொல்ல வேண்டிய அந்தச் செயலை வீரச் சாதனையாகப் புகழ்ந்து  விபரித்தார். எங்களுக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியதுபோல இருந்தது. ஆத்திரம் ஒரு புறம், வேதனை மறுபுறம், இரண்டையும் மீறிய பயம் இன்னொரு புறம். இப்படியாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தோம்

 

மாஸ்டரின் முகத்தில் மரணக் களை தெரிந்தது. எனது முகமும் அப்படித்தான் இருந்திருக்கும். இப்படியாக அன்று  இரவு முழுவதும் இருவரும் கலக்கத்தின் உச்சியில் இருந்தோம்

 

மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக வீட்டுக்காரர் குணரத்ன எங்கள் அறைக்கு மிகவும் கவலையோடும், சிந்தனையோடும்  வந்தார். நான்கு பேரை வெட்டிச் சந்தியிலே போட்டிருக்கிறதாம் என்று சொன்னார். அவர் சந்தி என்று சொன்னது எங்களது வீட்டு ஒழுங்கை தெமட்டகொட வீதியில் போய் ஏறும் இடம். வீட்டிலிருந்து ஐம்பது மீற்றர் அளவு தூரத்தில் இருக்கிறது. அந்த நால்வரும் அடுத்த ஒழுங்கையில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்களாம். அதையும் அவரே சொன்னார். சில வேளை எங்களையும் தேடி வரலாமாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இங்கே தமிழர்கள் இருப்பது தெரியாமல் இல்லை. அதனால் எங்களை அறையில்ல்லாமல் குசினிக்குள் போய் இருக்கும்படி சொன்னார். இதை அவர் சொன்னதும் உடலின் தசையெல்லாம் நடுநடுங்கியது. இரத்தமே உறைந்துவிட்டதுபோல இருந்தது. மாஸ்டரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பிணத்தின் முகம்கூடக் கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். அப்படியிருந்தது.

"பயவெண்ட எப்பா....மெஹெ கவுருத் எண்ட...பஹமம பலாகண்னவா... (பயப்பட வேண்டாம் இங்கே யாரும் வர முடியாது. நான் பார்த்துக்கொள்வேன்) என்று அவர் சொன்னர். ஆனால், எனக்குத் தெரியும், சிங்களக் காடையர்கள் கும்பலாக வந்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்று. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தோம்.

 

அன்று பகல் 12.45 க்கு இலங்கை வானொலி செய்தியில் சொன்னார்கள், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியும், சரஸ்வதி மண்டபமும் அகதிமுகாம்களாக ஆக்கப்பட்டுள்ளன என்று. எனக்கு எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவர அனுபவம் உண்டு. அப்போதும் அங்கே அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாமில் அடைக்கலம் அடைந்துதான் ஊருக்குச் சென்றேன். எனவே எப்படியாவது அங்கே போய்விட வேண்டுமென்று தீர்மானித்தேன். சிங்களவனின் வீட்டில் முடங்கிக் கிடந்து வீணே செத்துத் தொலைவதைவிட, உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் சாவது பெரிதென்று எனக்குப் பட்டது. மாஸ்டரிடம் சொன்னேன். அவருக்கு அந்த வீட்டைவிட்டு வெளியேற விருப்பமில்லை. அதுபற்றிச் சொல்லும்போதே அவர் பதறினார். குணரத்ன எப்படியும் காபாற்றுவார் என்று அவர் நம்பினார்.

 

நான் என் எண்ணத்தைக் குணரத்னவிடம் சொன்னேன். அவரும்

கவலையோடு சொன்னார். ஐந்தாறுபேர் வந்தால் தன்னால் சமாளிக்க முடியும் பத்துப் பதினைந்து பேர் வந்தால் என்ன செய்வது என்று தயங்கித் தயங்கித் தயங்கிக் கூறினார். அதைத்தான் நானும் சொன்னேன். "முதலில் சிலர் வந்து அவர்களை நீங்கள் சமாளித்து அனுப்பினால், அதன்பிறகு அவர்கள் மீண்டும் பலரைச் சேர்த்துக்கொண்டு பெருங்கூட்டமாக வந்தால், என்ன செய்வீர்கள்? எனவே நாங்கள் போகிறோம்" என்றேன். அப்போது மாஸ்டர், தான் எங்கேயும் போகவில்லை என்றும் அந்த வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் சொன்னார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்தார். பின்னர் நான் மட்டும் போவதென்று தீர்மானித்தோம். அன்றிரவுமட்டும் தங்கிவிட்டு என்னை மறுநாள் காலையில் போகும்படி குணரத்ன கூறினார்.

வீட்டில் எலி ஓடும் சத்தம் எப்போதும் கேட்பதுதான். இப்போது அந்தச் சத்தமும் எங்களுக்குக் கிலியைக் கொடுத்தது. வீட்டுக்காரி பாத்திரம் கழுவினாலும் எங்களை வெட்ட வருபவர்கள் கத்தி தீட்டுவதுபோல கேட்டது.

அன்றிரவு குணரத்னவும் மனைவியும் வெகு நேரம்வரை விழித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது பேச்சுக்குரல் நள்ளிரவு கடந்தும் வெகுநேரம்வரை கேட்டுக்கொண்டேயிருந்தது. எங்களுக்கும் நித்திரை வரவில்லை. மாஸ்டரும் நானும் பெரிதாக எதுவும் பேசிக்கேட்டுக்கொள்ளவில்லை. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை.

இரவு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு உயிரும் உடலும் பிரிவதும் சேர்வதும் போன்ற வேதனையாக இருந்தது. அம்மாவிம் முகம் என் கண்ணெதிரே வந்தது. தாங்கொணாத் துக்கம் தொண்டையை அடைத்தது. இன்னும் ஒரு முகம்.... ஏழு வருடக் காதல்....எனக்கு என்னவும் நடந்தால் அவளின் இதயம் தாங்கிக்கொள்ளுமா என்பதை நினைத்து ப்பார்க்கவே முடியாமல் முடியாமல் நெஞ்சு கனத்தது. ஊரிலிருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரது முகமும் மனக்கண்ணில் ஓடி வந்து வந்து மறைந்தது. உலகிலேயே மிகவும் கொடுமையானது எதுவென்றால் மரணம் நிகழப்போகின்றது என்று நடுங்கிக்கொண்டிருப்பதுதான். அந்த மரணபயம் காலைவரை எங்களை வாட்டி வதைத்தது.

 

காலையில் எங்கெங்கோவெல்லாம் தேடியலைந்து பத்து இடியப்பத்தை வாங்கிவந்த குணரத்ன அவனது மனைவி வைத்த சொதியோடு அவரே எங்கள் அறைகுக் கொண்டுவந்து எங்களுக்குத் தந்தார். அதைச் சாப்பிட்டு முடித்து வீட்டின் முன்புறம் வரும்போது, அவரது எட்டுவயது நிரம்பிய ஒரே மகன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டோம். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது, அன்று காலை வீட்டிலே யாருக்குமே சாப்பாடு இல்லையென்பதும், கடைகள் எதுவும் திறக்கவில்லை என்பதும், எப்படியோ கிடைத்த பத்து இடியப்பங்களையும் எங்களுக்குத் தந்திருக்கிறார்கள் என்பதும். அதை

என்னால் தாங்க முடியவில்லை. அவரது குழந்தைக்குக் கூடக்கொடுக்காமல்....”ஏன், இப்படி செய்தீங்க..”  என்று நெகிழ்ந்து கேட்டேன். அவர் என் முதுகைத் தடவிக்கொடுத்துக் கண்களால் பேசினார். மனித நேயத்தின் உணர்வை அவரின்

 கண்களில் கண்டேன்.

 

என்னோடு வரும்படி மாஸ்டரிடம் மீண்டும் கேட்டுப் பார்த்தேன். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்தார். தான் ஒருவர் மட்டுமென்றால் அங்கே பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் என்ற எண்ணம் மாஸ்டரின் அடிமனதில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. அதற்குப் பிறகும் அவரை வற்புறுத்த விரும்பவில்லை.  நான் மட்டும் போவதென்று வெளிக்கிட்டேன்.

எனக்குத் துணையாகத் தனது மனைவியின் சகோதரியான, சாமிலி வருவாள் என்றும் அவளோடு என்னைப் பஸ்ஸில் போகும்படியும் குணரத்ன கூறினார். அவளோடு என்னை அனுப்பினால் அவள் எனக்குத் துணையாக இருப்பாள். உதவியாக இருக்கும் என்றார். எனக்கும் அது நல்லதாகப் பட்டது.

 

குணரத்ன சாமிலியைக் கூப்பிட்டார். அவளையும் என்னையும் வைத்துச் சொன்னார். " நீங்கள் இரண்டுபேரும் இங்கேயிருந்து போகும்போது கணவன் மனைவிபோலப் போகவேணும், கையைப் பிடிச்சுக் கொண்டுதான் நடக்க வேணும்" என்று சொன்னார். "சாமிலி, ராஜா அதிகம் கதைக்காதமாதிரி நீ அவரோட கதைக்கவேணும் நான் இரவு சொன்னதுபோல கவனமாகப் போகவேணும்" என்று சாமிலியைப் பார்த்துச் சொன்னார். என்னிடம், " ராஜா! பயப்படவேண்டாம். சாமிலி கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க சாமிலியோட கதைக்கிறது யாருக்கும் கேட்டால், உங்களைத் தமிழன் என்று கண்டு பிடிச்சிருவாங்க. பிறகு பிரச்சினைதான்." என்று அறிவுறுத்தினார்.

சாமிலி ரத்மலானையில் வேலை செய்கிறாள். அவள் காலையில் வேலைக்குச் செல்லும்போது என்னோடு பம்பலப்பிட்டி வரை கூடவே வந்து அங்கே கவனமாக நான் இறங்கும்வரை பார்த்துக்கொள்ளும்படி இரவே அவளிடம் குணரத்ன சொல்லியிருக்கிறார்.

தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டதைக் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே குணரத்னதான், தனது பிள்ளைக்குக் கூடச் சாப்பாடு இல்லாதபோதும் தமிழர்களான எங்களுக்குச் சாப்பாடுதேடித் தந்தவர். தனது திருமணமாகாத மைத்துனியை, மனைவியின் தங்கையை அந்தக் கலவர நேரத்தில் ஒரு தமிழனைக்காப்பாற்றுவதற்காக, கணவன் மனைவியைப்போல கையைப்பிடித்து அழைத்துச் செல் என்று அறிவுறுத்தியவரும் அதே குணரத்னதான்.

மனிதநேயம் அவர்களிடம் இருக்கிறது. அரசியல் அதை நமக்கு

மறைக்கிறது, அவர்களையும் தடுக்கிறது.

 

விடைபெறும்போது, குணரத்னவின் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஓரத்தில், இருப்போமா விழுவோமா என்ற நிலையில் கண்ணீர்த் துளிகள் தத்ளிப்பதைக் கண்டேன். தாங்க முடியாத மன நெகிழ்வோடு சாமிலியுடன் விட்டைவிட்டு வெளியேறினேன்.

பஸ்தரிப்பில் நிற்கும்போது நெஞ்சு படபடத்தது. சாமிலியுடன் சிரித்துப் பேசுவதுபோல நடித்துக் கொண்டிருந்தேன். குணரத்ன அப்படித்தான் சொல்லியிருந்தார். பஸ்ஸில் ஏறி இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தோம். பஸ் போய்க்கொண்டிருந்தது. எனக்கென்னவோ எனக்குப் பின்னுள்ள இருக்கையில் இருப்பவன் கத்தியால் என்னக் குத்துவதற்கு முனைவதுபோல ஓர் உணர்வு. திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. மருதானை.....டாலி வீதி.....கொம்பனித்தெரு.....யுனியன் பிளேஸ்.....நகர மண்டபம்......பம்பலப்பிட்டி சந்தி.......மனதில் சிறிது சிறிதாகத் தென்பு வந்தது. நமது உயிர் இனி நம்மிடந்தான் என்ற  நம்பிக்கை துளிர்த்தது. நான் கடந்து வந்த வீதிகளின் இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் இன்னும் புகைந்து கொண்டிருந்தன. வீதிகளில் எரிந்துபோன கார்கள், பொருட்கள், தமிழன் சிந்திய இரத்தக் கறைகள்....இன்னும் கிடந்தன. எரிந்துகிடந்த வீடுகளைப் பார்த்தபோது. “அட, கொழும்பில் தமிழர்களுக்கு இவ்வளவு வீடுகள் சொந்தமாக இருந்திருக்கின்றனவே!” எண்ணி வியந்தேன்.

நெஞ்சின் மத்தியில் கனத்த வலியொன்று வந்து போனது.

 

காலி வீதியில் பம்பலப்பிட்டி தொடர்மாடிகளுக்கு முன்னால் பஸ் போகும்போது, எழுந்து மணியடித்தேன். அவளைப்பார்த்து ஒரு நன்றிப்பார்வை. "கிஹில்லா என்னங்" (போயிற்று வாறேன்) என்று அனுங்கிய குரலில் நான் சொல்ல, அவளும் எழுந்தாள். என்னோடு பஸ்ஸில் இருந்து இறங்கினாள். எனக்கு ஏன்,  எதுக்கு என்றெல்லாம் கேட்பதற்கு அவகாசம் இருக்கவில்லை. தானும் என்னோடு அகதி முகாம் வரை வருவதாகக் கூறி நடந்தாள். தேவையில்லை எனக்குப் பழகிய இடந்தான் நான் போகிறேன் என்றேன். அவள் கேட்கவில்லை. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிவரை வந்து, அங்கே நான் உள்ளே செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னிடம் இருந்து விடைபெற்றாள்குணரத்ன அப்படி அவளுக்குச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

 

பத்து நாட்கள் அகதிமுகாமில். பின்னர் படையினரின் பாதுகாப்புடன் தாயகம் நோக்கிப் புகைவண்டிப் பயணம்!

 

---------   ---------   ------

 


No comments: