தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து
ரிஷாட்டுக்கு எதிரான விசாரணை நிறைவு
அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்
எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்
9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்...
சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய
தேசியப் பட்டியல் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
அரசியல் பழிவாங்கல்; ரணில் விக்ரமசிங்கவுக்கு செப். 04, 07 இல் அழைப்பு
மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித பழிவாங்கல் ஆணைக்குழுவில்
அரசாங்கத்திற்கு நட்டம்; ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை
ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
அங்கஜன் இராமநாதனின் நியமனம் SLFPக்கு கிடைத்த பெரும் கௌரவம்
தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து
- வீட்டுக்கு பலத்த சேதம் உடைமைகள் எரிந்து நாசம்
- நாசகார வேலையா? விசாரணை தொடர்கிறது
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை - வேவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30அளவில் ஏற்பட்ட இத் தீ அனர்த்தத்தில் வீட்டின் கூரை உட்பட வீட்டின் பெறுமதிவாய்ந்த உடைமைகள் பல முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆறுமுகன் தொண்டமானின் புதல்வனான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.
இத் திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டண் இல்லத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹற்றன் சுழற்சி நிருபர் நன்றி தினகரன்
ரிஷாட்டுக்கு எதிரான விசாரணை நிறைவு
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது, ஆதரவாளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து செல்ல அரச நிதியை பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.
விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ்களை பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்
அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு இணை அமைச்சரவை பேச்சாளர்களாக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்
➡️ பௌத்தத்திற்கு முன்னுரிமை; எந்தவொரு பிரஜைக்கும் மத சுதந்திரம்➡️ அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்➡️ 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்➡️ ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு➡️ அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி➡️ மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை
எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
(புகைப்படங்கள்: சுலோச்சன கமகே)
கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம் போன்ற அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக ஆகியோர் வரவேற்றனர்.
பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை வருமாறு,
வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதன் நட்பு அணிகளுக்கும் பெற்றுத் தந்த நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
சர்வஜன வாக்குப் பலம் நாம் அனைவரும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். எனவே இந்த தேர்தலில் தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்திய அனைத்து இலங்கை வாக்காளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு மக்கள் மதிப்பளித்து வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளாக பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்கிறோம். மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கு அப்போதுதான் முடியுமாக இருக்கும்.
எமது பாரம்பரிய மரபுரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கும் கிராமிய கலைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் தாம் விரும்பும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கல்வியை பெற்றுக்கொள்வதற்கும் அவர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கு உதவுவதற்கும் அரசாங்கம் மேற்காண்டு வரும் செலவுகள் எதிர்காலத்திற்காக செய்யப்படும் முதலீடாகும். புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் ஊடாக நாம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
ஆயுர்வேத மருத்துவத்தையும் சுதேச வைத்தியத் துறையையும் முன்னேற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
தத்தமது துறைகளில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுமாறு அனைத்து அமைச்சர்களிடமும் இராஜாங்க அமைச்சர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் எமது அடிப்படை இலக்குகளாகும்.
தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும். மூடப்பட்டுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளின் காரணமாக அவர்கள் அதிக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன். முறைகேடுகளை ஒழித்து உயர் தரங்களுடன் கூடிய தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்போம். ‘Ceylon Tea’ வர்த்தக சின்னத்திற்கு உள்ள அங்கீகாரத்தை பலப்படுத்துவோம்.
மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதி பயிர் உற்பத்தியை நாம் ஊக்குவிப்போம். விவசாய உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதன் ஊடாக விவசாயிகளுக்கு ஸ்திரமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கும்போது நகர மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மனித வள அபிவிருத்தியை நாம் முன்னுரிமைக்குரியதாக இனங்கண்டு இருப்பதால் அமைச்சுக்களை ஒதுக்கும்போது கல்வித்துறையை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதில் வேறுபட்ட பொறுப்புகளுக்காக நான்கு இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளோம். முன்பள்ளிப் பாடசலைகள், கல்வி மறுசீரமைப்பு, திறன் விருத்தி, அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளுக்கான கல்வி ஆகிய துறைகளுக்கு தனியான இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவற்றில் உள்ள முக்கியத்துவத்தின் காரணமாகவே ஆகும்.
பெறுமதி சேர்ப்பதற்காக புதிய தொழிநுட்ப பாவனைக்கும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஆக்கத்திறன்வாய்ந்த வகையில் புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிவதற்கும் வர்த்தகர்களுக்கு உதவுவதற்கும் குறித்த அமைச்சுக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டு மக்களில் 1/3 பகுதியினர் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் ஆகியவற்றை ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். நாம் இந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக சம்பிரதாய முறைமைகளை விஞ்சிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அணுகுமுறைகளின் தேவை உள்ளது. விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் மீன்பிடி, கடற்றொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளை நேரடியாக இலக்காகக் கொண்டு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இதற்குத் தேவையான உரிய கவனத்தை வழங்குவதற்கே ஆகும்.
நச்சுத்தன்மையற்ற உணவை உற்பத்திசெய்யும் நோக்குடன் அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையின் விவசாயத் துறையை முழுமையாக சேதன பசளைப் பாவனைக்கு மாற்றும் வகையில் உள்நாட்டில் சேதன பசளை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
நன்னீர் மீன்வளர்ப்பு கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும் புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவது எமது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்...
இன்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கைப் பிரகடன உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ தேனீர் உபசரிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகளுடன், ஜனாதிபதி அளவளாவினார். நன்றி தினகரன்
சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய
புதிய பாராளுமன்றத்தில் உயர் பதவிகள்;
குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 09 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். நேற்றைய தினம் நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் அத்துடன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
ஒன்பதாவது பாராளுமன்றம் நேற்றுக் காலை 9. 30 மணிக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தலைமையில் கூடியது.
அதனையடுத்து ஜனாதிபதியின் செய்தியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சபையில் அறிவித்ததுடன் அதனைத் தொடர்ந்து 9ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான பெயர்களை முன்மொழியுமாறு சபையில் கேட்டுக்கொண்டார்.
அதற்கிணங்க சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் பதவிக்கு பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிந்தார். மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை வழி மொழியுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கோரியபோது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார அதனை வழிமொழிந்தார்.
சபாநாயகர் பதவிக்கு வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாததால் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் அறிவித்தார்.
அதனையடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் எழுந்து சென்று அவரை அழைத்து வந்து சபையின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் சபாநாயகருக்கு கட்சிகளின் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை சிறு உரைகள் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.
வாழ்த்துக்களுக்கு பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிரதி சபாநாயகராக ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு கோரியதையடுத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்ட எம்.பியான ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை முன்மொழிந்தார்.
அதனை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வழிமொழிந்தார். வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு சபாநாயகர் கோரியதையடுத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அங்கஜன் இராமநாதனின் பெயரை அப்பதவிக்காக முன்மொழிந்ததுடன் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அதனை வழிமொழிந்தார்.
வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் - நன்றி தினகரன்
தேசியப் பட்டியல் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை நியமிப்பதில் தாமதம் ஏற்படுமென அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்
அரசியல் பழிவாங்கல்; ரணில் விக்ரமசிங்கவுக்கு செப். 04, 07 இல் அழைப்பு
- ஹக்கீம், பொன்சேகா, சம்பந்தனுக்கு செப். 09 அல்லது 11 இல் ஆஜராக அழைப்பு
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம், 7ஆம் திகதிகளில், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர், வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஊப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் மற்றும் குழு செயலாளர் ஆனந்த விஜேபால ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி அல்லது, 11ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நன்றி தினகரன்
மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித பழிவாங்கல் ஆணைக்குழுவில்
முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (21) முன்னிலையாகியுள்ளனர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். நன்றி தினகரன்
அரசாங்கத்திற்கு நட்டம்; ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கும் மற்றும் அவ்வருடத்தின் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மோதறை மீன்பிடி துறைமுகத்தை, தனியார் நிறுவனமொன்றுக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு விடுவதற்காக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் சபையை ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்போதைய மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக 05 குற்றச்சாட்டுகளின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனையோராக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நில் ரவீந்திர முனசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
- சுவிஸ் சென்ற நிஷாந்த சில்வாவை கைது செய்ய பிடியாணை
சாட்சியங்களை உருவாக்கி நீதிமன்றத்தை திசை திருப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (20), கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இவர்களை முன்னிலைப்படுத்தியபோது, இவ்விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக பல நபர்களை பயன்படுத்தி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் ஷானி அபேசேகர மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டதோடு, அவருடன் இணைந்து போலியான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண மெண்டிஸ் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, CIDயின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவையும், இவ்வழக்கின் சந்தேகநபராக பெயரிட்டு, அவரை கைது செய்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, சுவிஸ்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் நன்றி தினகரன்
அங்கஜன் இராமநாதனின் நியமனம் SLFPக்கு கிடைத்த பெரும் கௌரவம்
தயாசிறி ஜயசேகர சபையில் புகழாரம்
யாழ். மாவட்டத்திலிருந்து முதன் முறையாக லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவாகி குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பிரதிக் குழுக்களின் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களே நீங்கள் அந்த ஆசனத்தில் வீற்றிருக்கும் போது பேசக் கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
முதல் தடவையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தல் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவானமை எனக்கு பெருமிதமளிக்க கூடிய விடயமாகும்.
அது நாட்டுக்கும் பாரிய பாக்கியமாகும். தேசியக் கட்சியொன்றிலிருந்து போட்டியிட்டு வடக்கிலும் கிழக்கிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் நன்றிகளை கூறிக் கொள்கின்றேன். அத்துடன் பிரதித் தவிசாளராக நீங்கள் நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment