முகநூலை சகிக்காத முகவரியின் குரல் ! கொரோனா வழங்கிய புதிய நட்பு வட்டம் !! கலை இலக்கியவாதி கோபாலன் பத்மநாபன் முருகபூபதி

 

ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலமாக எழுத்துலகில் பயணித்துவருகின்றேன். 1970 முதல்   இதழ்களில் இலக்கியப்பிரதிகளும் பத்திரிகைகளில் செய்திகளும் எழுதத் தொடங்கியிருக்கும் எனக்கு, எனது எழுத்துக்களினால் கிடைத்த நண்பர்கள் வட்டம் மிகப்பெரியது.

 

இலங்கையில் நான் வாழ்ந்த காலத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்திலும்  படிப்படியாக அந்த நண்பர்கள் வட்டத்தின் சுற்றளவு பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.

 

அதனால், உலகில் எந்த மூலையிலிருந்தும் என்னை  நன்கு தெரிந்த, எனது எழுத்துக்களின் மூலம் தெரிந்துகொண்டவர்கள், ஒரு காலகட்டத்தில் கடிதம்மூலமும் தொலைபேசி ஊடாகவும் தொடர்புகொண்டு உரையாடி உறவை பேணுவார்கள். 

 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒவ்வொருவரதும் மேன்மைகளை இனம்கண்டு உறவாடுவதனால்,  இந்த நட்புவட்டத்தினருடன் எனக்கு விக்கினங்கள் தோன்றுவதுமில்லை. சகிக்கமுடியாத விக்கினங்கள் வரும் பட்சத்தில் நானாகவே ஒதுங்கிவிடுவதும் ஒதுக்கிவிடுவதும் நேர்ந்திருக்கிறது.

 

முகநூல் கலாசாரம் வந்தபின்னர், என்னிடம் பலருக்கும் தோன்றியிருக்கும் எதிர்பார்ப்பு விசித்திரமானது. 

அவர்கள் முன்வைக்கும் பிரதானமான கேள்வி:   “ ஏன் உங்களிடம் முகநூல் இல்லை…? வாருங்கள்…. வந்து முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்… அதனால் நீங்கள் நிறைய சாதிக்கலாம்தானே..?  “

 

அவ்வாறு வரும் வேண்டுகோள்களுக்கு,  “மன்னிக்கவும். எனக்கிருக்கும் முகவரியே போதும்.  “ எனச்சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவேன்.

 

முன்னர்  இந்த முகநூல் இல்லாமல் வாழ்ந்தவர்கள்தானே..?!  இந்த முகநூல் அறிமுகமானதன் பின்னர், அதனை தவறாகப்பிரயோகித்தவர்களினால்  நேர்ந்திருக்கும் அவலங்கள் பற்றி  தெரிந்திருக்கின்றேன். பல நீண்ட கால நண்பர்களை இந்த முகநூல் பிரித்திருக்கிறது.  பல குடும்பங்களின்   உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 

பல திருமணங்கள் தடைப்பட்டுள்ளன.   சில நாடுகளில் இந்த முகநூலினால் கொலைகளும் நிகழ்ந்துள்ளன. தாக்குதல் சம்பவங்களுக்கும் குறைவில்லை.

 

அணுவைக்கண்டு பிடித்த விஞ்ஞானி, அணுவாயுத யுத்தத்தின் பேரழிவுகண்டு, ஏன் அதனை கண்டுபிடித்தேன் என்று வருந்தினாராம்.

 

2000  ஆம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகையில் ஒரு கேள்வி – பதில் பகுதியில் நான் படித்த விடயத்தை இன்றளவும் மறக்கமுடியவில்லை. 

ஒரு வாசகர்  “  21 ஆம் நூற்றாண்டில்  எத்தகைய கொள்ளை நோய் உலகெங்கும் பரவும்…?  “ என்று கேட்டிருந்தார்.

 

 அதற்குப்பதில்: “   மனச்சோர்வு  “ 

 

முகநூல் பாவனையினால் மனச்சோர்வும்,  கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தொற்றினால் இலட்சக்கணக்கானோரின் உயிரிழப்பு – அதனாலும் வந்துள்ளது  மனச்சோர்வு !

 

பின்னாளில் உலகெங்கும் நிகழ்ந்த மாற்றங்களிலிருந்து, குறிப்பிட்ட பதிலில் பொதிந்திருந்த தீர்க்கதரிசனம் துலக்கமாகியது.

 

நான் சம்பந்தப்பட்ட அமைப்புகள் சிலவற்றில், இந்த முகநூலினால் வந்த விபரீதம் பற்றி சொல்வதற்கு நிறையவுண்டு.  சிரமப்பட்டு அன்பர்களை இணைத்து அமைப்புகளை உருவாக்கி  வளர்ப்போம்.   வருபவர்கள் தத்தமது வித்துவங்களை முகநூலில் எழுதி மற்றவர்களுக்கு மனக்காயங்களை ஏற்படுத்திவிட்டு அகன்றுவிடுவார்கள்.  பிறகு பஞ்சாயத்திற்கு என்னிடம் வருவார்கள்.

 

நான் யார் பக்கத்திற்கு பேசுவது என்று தலையை பிய்த்துக்கொள்ளநேரிடும்.

 

இதுபற்றி பக்கம் பக்கமாக என்னால் எழுதமுடியும்.

 

இந்தப்பின்னணிகளுடன்,  என்னிடம் முகநூல் பாவனை இல்லாமலேயே என்னையும்  எனது எழுத்துக்களையும் வாழ்வையும் பணிகளையும் தெரிந்துகொண்டவர்கள் பற்றி அவ்வப்போது எழுதலாம் எனக்கருதி இந்த பதிவை வாசகர்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

 

கடந்த ( ஓகஸ்ட் ) 20 ஆம் திகதி அவுஸ்திரேலியா நேரம் இரவு 8.30 மணிக்கு எழுத்தாளர் முருகபூபதியுடன்  கதைப்பமா என்ற  இணைய வழி காணொளி நிகழ்ச்சியை நியூசிலாந்திலிருந்து ஒலிக்கும்  தமது நம் தமிழ் வானொலிக்காக  ஊடகவியலாளர் நண்பர் சத்தார் அவர்கள்  தொடர்புகொண்டு நீண்ட நேரம் கலந்துரையாடினார். சுமார் இரண்டு மணிநேரம் இந்த நேர்காணல் நீடித்தது.  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததாகவும் அறிந்துகொண்டேன் !

 

இந்த இணையவழி காணொளி உரையாடல்கள் கொரொனாவால் தோன்றியிருக்கும் மனச்சோர்வுக்கு மருந்தாகியிருக்கிறது என்பது பொதுவான உண்மை. ஆனால், இந்த வசதி வாய்ப்புகள் இல்லாத கோடானகோடி மக்களும் இந்த வைரஸின் அச்சுறுத்தலுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை!

 

இணையவழி காணொளியூடாக உலகெங்கும் வாழ்பவர்களுடன் முகம் பார்த்து பேசமுடிகிறது.  எந்த நாட்டிற்கும் கடவுச்சீட்டும் விசாவும்  இல்லாமல், கட்டணம் இன்றி செல்ல முடிகிறது. விமானம் ஏறாமல், சுங்கத்திணைக்களத்தை கடக்காமல் போகமுடிகிறது. கருத்துக்களை பகிர முடிகிறது.

 

என்னுடன் நண்பர் சத்தார் உரையாடும்போது,  “  ஏன் நீங்கள் முகநூல் கணக்கு வைத்திருக்கவில்லை..?  “ என்ற கேள்வியை பிரதானமாக்கியவாறே கலந்துரையாடலை தொடக்கியிருந்தார்.

 

நிகழ்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் உலகின் பலபாகங்களிலுமிருந்தும் பலர்  என்னிடம் கேட்ட கேள்விகளையும்  எழுதிய கருத்துக்களையும் நண்பர் சத்தார் உடனுக்குடன் பதிவிட்டு சொல்லிக்கொண்டிருந்தார்.

 

நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.  சிலர் எனது மின்னஞ்சல் கேட்டு அறிந்து தொடர்புகொண்டனர்.

 

அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த திரைப்பட, தொலைக்காட்சி நாடகக் கலைஞர்.  இவர் என்னிடம் முகநூல் இல்லாமலேயே இணையவழியில் தமது முகநூல் ஊடாக என்னைப்பார்த்திருப்பதுதான் நகை முரண்!

 

அவர்பற்றிய அறிமுகத்தையும் , அவர் சம்பந்தப்பட்ட படங்களையும் இங்கு பதிவுசெய்கின்றேன். அவரது பெயர்:

 கோபாலன் பத்மநாபன். இவரை நீங்கள் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பார்த்திருக்கலாம்.

 

இலங்கையில் தமிழ்த்திரைப்பட வளர்ச்சி, அந்தத் துறை எதிர்நோக்கிய சவால்கள் பற்றியெல்லாம் இவர் வினவியிருந்தார். அதற்கான விளக்கங்களை தெரிவித்த பின்னர்தான், அவர் எனது மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டார்.

 

கலைஞர் கோபாலன் பத்மநாபன்  தமிழ் நாட்டில் , சென்னை - மகாபலிபுரம் பழைய சாலையில் கேளம்பாக்கம் அருகில் தையூரில் வசிக்கிறார்.

 

ஓய்வு பெற்ற இயந்திரவியல்  நிபுணர், டாடா  ஹிட்டாச்சியில் உயர் பதவியில் இருந்தவர்.  இரண்டு பல்கலைக்கழகங்களில் இயந்திரவியல் மற்றும் ஓட்டோமொபைல்  பொறியியல் துறை  பேராசிரியராக பணியாற்றியவர்.   தற்போது பொறியியல், ஆலோசகர்!  

 

தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துவருபவர்.

 

தெறி, தானா  சேர்ந்த கூட்டம், அதே கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, 2.0.  முதலான  படங்களில் நடித்திருப்பவர்.  அத்துடன் பல மொழிகளிலும் பாடும் ஆற்றல் மிக்கவர். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதையும் வெவ்வேறு கலாச்சார நடைமுறைகளைப் புரிந்துகொள்வதையும் விரும்புகின்றவர். இவரது  முக்கிய ஆர்வம்  ஈழத்து தமிழ் மற்றும் சிங்கள திரைப்படப் பாடல்கள்! 

 

இவர்  ஸ்மூலில் 19300 பாடல்கள் பாடி பதிவு செய்துள்ளார்.    தமிழ், சிங்களம், இந்தி, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஒரு சில பெங்காளி , தெலுங்கு பாடல்களுக்கு இந்தியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அனைத்து நண்பர்களின் ஆதரவின் காரணமாக இது  சாத்தியமானது எனச்சொல்கிறார்.  

 

கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  இலங்கையில் இந்தி மற்றும் சிங்கள பாடல்களுக்கும், இந்தோனேசியாவிலிருந்து இந்தி மற்றும் இந்தோனேசிய பாடல்களுக்கும் தனக்கு  நல்ல ஆதரவு உள்ளது என்றார்.

 

அவர் பற்றி மேலும் கேட்டறிந்ததில் பெற்ற தகவல்கள் பின்வருமாறு:  

 

 “ நான் 29 தமிழ் சீரியல் காட்சிகளில் நடித்துள்ளேன், இரண்டு தமிழ் விளம்பரங்கள் ( ஜீ  டிவி & பெஸ்ட் மணி கோல்டு),  இரண்டு வணிக விளம்பரங்கள், ஆறு தமிழ் படங்கள், அதில் தெறி, அதே கண்கள், தானா சேர்ந்த கூட்டம், தீரன் அதிகாரம் ஒன்று,  (எந்திரன்) 2.0 – ஆகிய ஐந்து  படங்கள் வெளியாகிவிட்டன.

 

 நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மூலில் பாடுகிறேன்.  ஸ்முல் கூட்டு          ( டூயட்)பாடலில் 19300 க்கும் மேற்பட்ட பாடல்களை நான் பதிவு செய்துள்ளேன், அவற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் மற்றும் 25 வீதத்திற்கு மேற்பட்டவை சிங்கள பாடல்கள்.  நான் சிங்களத்தை நன்றாகப் படிக்கவில்லை, எழுதவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்றாலும், கூகிள்  மொழிபெயர்ப்பால் பாடல் வரிகளுக்கு மொழிபெயர்த்து மற்றும் பயிற்சிக்காக யூடியூப்பைக் கேட்டு, ஸ்மூலின் உதவியுடன் பாடுகிறேன், 

 

 ஒரு நடிகராக, சிங்களத்திலும் தேவைப்பட்டால் திரைப்படங்கள் மற்றும் விளம்பர ஊடகங்களுக்கும் நான் நடிக்கவும் பாடவும் தயார்.  “

 

இவ்வாறு ஆற்றல்கள் பல கொண்டிருக்கும் கோபாலன் பத்மநாபன் அவர்கள்,  என்னிடம் முகநூல் இல்லாமலேயே இணைந்துகொண்ட புதிய நண்பர்.

 

இவருடைய  நடிப்பின் இணைப்புகளை இந்த இணைப்பில் காணலாம் :-https://drive.google.com/folderview?id=1e5zVZEVegGckFbs0095gyjP3-jbEPMko

 

  இவருடைய  ஸ்மூல் சேனலை இந்த இணைப்பில் காண்க:-

 https://www.smule.com/gopalanpadmana1

 

இவ்வாறு எனக்கு புதிய நண்பர்களை பெற்றுத்தந்திருக்கும் நியூசிலாந்தில் வதியும் ஊடக நண்பர் சத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றி.

 

குறிப்பிட்ட  நியூசிலந்து  நம் தமிழ்  இணையவழி நிகழ்ச்சியின் ஊடாக எனது மின்னஞ்சல் முகவரி அறிந்து தொடர்புகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி !

---0---

letchumananm@gmail.com

 

 


2 comments:

Unknown said...

அன்புள்ள திரு முருகபூபதி ஐயா அவர்களே!

நேற்றைய உங்கள் மின்னஞ்சல் கட்டுரையும், இன்று நீங்கள் அனுப்பிய தமிழ் முரசு பத்திரிகை பதிவையும் எனது கல்லூரிக்கால நண்பர்கள்
(77 பேர்) உள்ள "கைபேசி பகிரி"
( வாட்ஸப்) குழுமத்தில் பகிர்ந்த்தேன்.

எங்கள் குழுமத்தில் உங்கள் பூர்வீக சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 10 பேர் இருக்கிறார்கள். நானும் நெல்லையில் 13/14 வருடங்கள் பாளயங்கோட்டை என். ஜி. ஓ காலனியில் வசித்தவன் (1980 - 1993).

உங்கள் கட்டுரையை வாசித்த அனைவரும் பாராட்டினார்கள். நண்பர்கள் அனைவரின் சார்பில் எனது அருமை நண்பர் திரு செல்வகுமார் (நெல்ல - பாளையங்கோட்டை அவர் சொந்த ஊர்) அவர்கள் எனக்கு ஒரு வாழ்த்து மடல் , அதனுள் உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியும் , அதனை அவரே வாசித்து ஒலிப்பதிவாகவும் அனுப்பியிருக்கிறார்.

அதனை உங்கள் கவனத்திற்காக இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன்!

*****************
கோபாலன்..... நீ
கொண்ட முயற்சியில்
சற்றும் தளராத
விக்ரமனின் சகோதரன்...

அயராத முயற்சி....
துவளாத தொடர்ந்த உழைப்பு...
தொடர்பு கொள்வோருடன்
கனிவான பேச்சு...
இவைதான்
அடித்தளம் - உன்
இன்றைய வெற்றிக்கு..

விமர்சனங்கள்
உனை
உன் பாதை விட்டு
விலகச் செய்ததில்லை..
மாறாய்
உன்னைச் செவ்வனே
செதுக்கி சிறப்பினை நல்கியுள்ளது...

மேலும் நீ புதிய உச்சங்களை தொட
உளமார்ந்த வாழ்த்துகள்..

நண்பர்கள் யாம்
தவறவிட்ட
நற் பணியை
தன் தலை மேற்கொண்டு
உன் சாதனைகளை
நானிலம் அறிய
*"நம் தமிழ்"* இணையதள நிகழ்ச்சி வாயிலாக வழங்கிட்ட
அன்பர் லெட்சுமணன்
முருகபூபதிக்கு
நண்பர்கள் சார்பாக
நன்றிகள் பல...

******************

மீண்டும் உங்களுக்கு என் நன்றிகள் பல!

அன்பு வணக்கத்துடன்...

கோபாலன் பத்மநாபன்.

Anonymous said...

அன்புள்ள திரு முருகபூபதி ஐயா அவர்களே!

நேற்றைய உங்கள் மின்னஞ்சல் கட்டுரையும், இன்று நீங்கள் அனுப்பிய தமிழ் முரசு பத்திரிகை பதிவையும் எனது கல்லூரிக்கால நண்பர்கள்
(77 பேர்) உள்ள "கைபேசி பகிரி"
( வாட்ஸப்) குழுமத்தில் பகிர்ந்த்தேன்.

எங்கள் குழுமத்தில் உங்கள் பூர்வீக சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 10 பேர் இருக்கிறார்கள். நானும் நெல்லையில் 13/14 வருடங்கள் பாளயங்கோட்டை என். ஜி. ஓ காலனியில் வசித்தவன் (1980 - 1993).

உங்கள் கட்டுரையை வாசித்த அனைவரும் பாராட்டினார்கள். நண்பர்கள் அனைவரின் சார்பில் எனது அருமை நண்பர் திரு செல்வகுமார் (நெல்ல - பாளையங்கோட்டை அவர் சொந்த ஊர்) அவர்கள் எனக்கு ஒரு வாழ்த்து மடல் , அதனுள் உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியும் , அதனை அவரே வாசித்து ஒலிப்பதிவாகவும் அனுப்பியிருக்கிறார்.

அதனை உங்கள் கவனத்திற்காக இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளேன்!

*****************
கோபாலன்..... நீ
கொண்ட முயற்சியில்
சற்றும் தளராத
விக்ரமனின் சகோதரன்...

அயராத முயற்சி....
துவளாத தொடர்ந்த உழைப்பு...
தொடர்பு கொள்வோருடன்
கனிவான பேச்சு...
இவைதான்
அடித்தளம் - உன்
இன்றைய வெற்றிக்கு..

விமர்சனங்கள்
உனை
உன் பாதை விட்டு
விலகச் செய்ததில்லை..
மாறாய்
உன்னைச் செவ்வனே
செதுக்கி சிறப்பினை நல்கியுள்ளது...

மேலும் நீ புதிய உச்சங்களை தொட
உளமார்ந்த வாழ்த்துகள்..

நண்பர்கள் யாம்
தவறவிட்ட
நற் பணியை
தன் தலை மேற்கொண்டு
உன் சாதனைகளை
நானிலம் அறிய
*"நம் தமிழ்"* இணையதள நிகழ்ச்சி வாயிலாக வழங்கிட்ட
அன்பர் லெட்சுமணன்
முருகபூபதிக்கு
நண்பர்கள் சார்பாக
நன்றிகள் பல...

******************

மீண்டும் உங்களுக்கு என் நன்றிகள் பல!

அன்பு வணக்கத்துடன்...

கோபாலன் பத்மநாபன்.