எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -05 காற்று வாங்கப்போனேன், ஒரு வேலை வாங்கி வந்தேன் ! எழுத்துக்கு கிடைத்த முதல் சன்மானம் இருபது ரூபா ! முருகபூபதி

பாடசாலைப்படிப்பு முடிந்துவிட்டால், அதன்பிறகு வேலை தேடும் படலம்தானே…? தேடினேன்…. தேடினேன்…! சிபாரிசுக் கடிதங்களுக்காக எனது அப்பா, சில அரசியல்வாதிகளிடமும் அழைத்துச்சென்றார்.

அப்பா, தனியார் துறையில் ஒரு கம்பனியில் விநியோக விற்பனைப் பிரதிநிதியாகவிருந்தவர். மலையக பிரதேசங்களுக்கு அடிக்கடி செல்பவர்.

தெரணியகலையின் நாடாளுமன்ற உறுப்பிராக இருந்த தனபாலவீரசேகரவிடமும் ஒரு தடவை அழைத்துச்சென்று கடிதம் வாங்கித்தந்தார்.


அந்த எம்.பி.  முதலில் சமசமாஜக்கட்சியின் தெகியோவிற்ற நாடாளுமன்ற உறுப்பினராகி, பின்னர் கட்சி தாவி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்  இணைந்து,  தெரணியகலை தொகுதியின்  நாடாளுமன்ற  பிரதிநிதியானவர்.

அவரையும் அவரை எமக்கு அறிமுகப்படுத்தியவருமான தெரணியகலை  பிரதேச வீரகேசரிThe Times of Ceylon – Daily Mirror ஆகிய பத்திரிகைகளின் நிருபருமான செல்லையா என்ற உறவினரையும் சந்திப்பதற்கு சென்றிருந்தபோதுதான் 1971 ஏப்ரில் கிளர்ச்சி சந்தேகத்தின்பேரில் தெரணியகலை பஸ் நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கினேன்.

பின்னர், செல்லையாவின் உறவினர்களினால் காப்பாற்றப்பட்டேன். இதுபற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் உயிர்ப்பிச்சை என்ற தலைப்பில் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

நீர்கொழும்பு பிரதேச அரசியல்வாதிகளிடமும் சிபாரிசு கடிதங்களுக்கு அலைந்திருக்கின்றேன்.  இறுதியில் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஒன்று மாத்திரம் நடந்தது.

நான் சிரிக்கின்றேன் என்ற சிறுகதையைத்தான் என்னால் எழுதமுடிந்தது. வேலைதேடி அலையும் ஒரு இளைஞனின் கதை அது. பின்னர் மித்திரன் பத்திரிகையில்  அக்கதை வெளியானது.

வேலைதேடிக்கொண்டிருந்த 1971 ஆண்டு நடுப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையை தினமும் படிப்பேன். எமது தாய்மாமனார்  சுப்பையா அவர்கள்.  நீர்கொழும்பு கடற்கரை வீதியில் பலசரக்கு மற்றும் அரிசிக்கடை நடத்திக்கொண்டிருந்தார். அவருக்கு பாலா என்றும் பெயர்.  அதனால், அவரது கடையை ஊர்மக்கள் பாலா கடை என்றுதான் அழைப்பார்கள்.

கூப்பனுக்கு அரிசி விநியோகித்த  காலம் அது.  அவருடைய மகன் முருகானந்தன்தான் எனது பால்யகால சிநேகிதன். இருவரும் அந்தக்கடையில் வேலை செய்வோம். மாமா வீட்டுக்கு பத்திரிகை விநியோகிப்பவர் தினமும் வீரகேசரியை வாசலில் விட்டெறிந்துவிட்டுப்போவார்.

ஒருநாள் அதில் வீரகேசரிக்கு நீர்கொழும்பு நிருபர் தேவை என்ற சிறிய விளம்பரம் வந்திருந்தது.  அதனைப்பார்த்துவிட்டு ஒரு விண்ணப்பம் எழுதி தபாலில் அனுப்பினேன்.  பல நாட்களாக பதிலே இல்லை. ஆனால், அந்த விளம்பரம் தொடர்ந்தும்  வெளிவந்தவண்ணமிருந்தது.

அதன் இணை ஆசிரியராக அச்சமயம் இருந்தவர் கந்தசாமி  சிவப்பிரகாசம். அவருடைய மனைவி திருமதி சிவப்பிரகாசம் நீர்கொழும்பில் எமது விஜயரத்தினம் பாடசாலையில் முன்னர் ஆசிரியராக பணியாற்றியவர். தினமும் அவர் கொழும்பிலிருந்து கடமைக்கு வந்து சென்றவர்.

ஆனால், நான் அவரிடம் படிக்கவில்லை. அவர் அங்கே கடமையாற்றிய காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.

எனது மாமா மகள் தேவசேனாவின் ஆசிரியை. அந்தப்  பாடசாலை மலர்களிலும் அந்த ஆசிரியையின் படம் பார்த்துள்ளேன்.

சிவப்பிரகாசம் அவர்களுக்கு நன்கு தெரிந்த ஊர்பிரமுகர் கந்தசாமி,  எங்கள் பாடசாலையின் ஸ்தாபகர் ( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர். அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து நீர்கொழும்பிலேயே நிரந்தரமானவர். கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தில் பதவியிலிருந்தார்.

  1954 ஆம் ஆண்டு அந்தப்பாடசாலையில் வித்தியாரம்பம் செய்வித்து,  என்னை இணைக்கும்போது நான் அவரது மடியிலும் அமர்ந்திருக்கின்றேன். அவரிடம் எனது வீரகேசரி நிருபர் வேலை விண்ணப்பம் பற்றிச்சொன்னேன்.


உடனே அவர் எனக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதித்தந்தார். அச்சமயம் அந்த வட்டாரத்தின் மாநகர சபை உறுப்பினர் ஜெயம் விஜயரத்தினம் அவர்களிடமிருந்தும், நாடாளு மன்ற உறுப்பினர் டென்ஸில் பெர்ணான்டோவிடமிருந்தும் நற்சான்றிதழ்களும் பெற்றுத்தந்து,  சிவப்பிரகாசம் அவர்களின் வெள்ளவத்தை வீட்டு முகவரியும் தந்து அனுப்பிவைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை  மதியம் வெள்ளவத்தைக்கு வீரகேசரி இணை ஆசிரியரின் வீடு தேடிச்சென்றேன்.   அவர் உறங்கிக்கொண்டிருப்பதாக திருமதி சிவப்பிரகாசம் சொன்னார்.

அதுவரையில் காத்திராமல், காலிவீதிக்கு வந்து வெள்ளவத்தை விஜயலக்‌ஷ்மி புத்தகசாலை சென்றேன். அதனை நடத்தியவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன். அங்குதான் அவரது நாவல்களை வாங்கி வாசித்திருக்கின்றேன்.  மற்றும் ஒரு புத்தகக்கடையும் அக்காலப்பகுதியில் வெள்ளவத்தையில்  இயங்கியது. அதன்பெயர் ரகுநாதன் பதிப்பகம். எழுத்தாளர் சொக்கனின் கடல் கதைத் தொகுதியையும் அந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  அதன் வெளியீட்டுவிழா கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபையில் நடந்தபோதுதான் முன்வரிசையில் அமர்ந்திருந்த அக்கா கதைத் தொகுதியை  எழுதிய எழுத்தாளர்  முத்துலிங்கத்தை பார்த்தேன். ஆனால், அறிமுகம் இல்லாதமையினால் பேசவில்லை.

அவர்தான் இன்று தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனிப்பு பெற்றுள்ள,  என்னையும் பெரிதும் கவர்ந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

சரி… மீண்டும் இதற்கு முன்னர் எழுதப்பட்ட பந்திக்கு வருகின்றேன். (  எனது தொடரில், இவ்வாறு  Flash Back காட்சிகள்  தொடர்ந்து வரலாம் )  

சிவப்பிரகாசம் அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்றேன்.  அவருடைய பகல் தூக்கத்தை ஏதாவது கனவு வந்து குழப்பிவிடல் வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்திக்கொண்டுதான் சென்றேன். அவர் பகலில் எவ்வளவு நேரம்தான் தூங்கப்போகிறார்…?

அவரது வீட்டருகில் கடற்கரை இருக்கிறது. காற்று வாங்கப்போகலாம் என அங்கும் சென்றேன்.   

கலங்கரை விளக்கம் படத்திற்காக சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காக பாடிய காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

இந்தக்  காற்று வாங்கவந்தவிடத்தில்  எனக்கு வேலையும் கிடைத்தால் நல்லது.  கடல்காற்றை சுவாசித்துக்கொண்டு மீண்டும் அவரது வீட்டுக்குத் திரும்பினேன்.

நல்லவேளை சிவப்பிரகாசம் துயில் எழுந்து, மாலை நேரத்தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அவர் முன்னால் சென்று பவ்வியமாக நின்று அன்பர் கந்தசாமி தந்துவிட்டிருந்த கடிதத்தை காண்பித்தேன்.

எனது விண்ணப்பத்தை ஏற்கனவே வீரகேசரி முகவரிக்கு அனுப்பியதாகவும் சொன்னேன்.  அதன்பிரதியையும் அவருக்கு காண்பித்தேன்.

வாங்கிக்கொண்டார்.    “ முன்னர் ஏதும் கட்டுரைகள்,  செய்திகள் எழுதிப்பழக்கமுண்டா …?   “ எனக்கேட்டார்.   “பாடசாலை பழைய மாணவர் மன்றத்தில் சென்ற கூட்ட அறிக்கை எழுதிப்பழக்கமுண்டு -   பாடசாலையில் தமிழ்ப்பாடத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். உங்களது  பத்திரிகையில் எனக்கு பிரதேச நிருபர் வேலை கிடைக்குமா…?  “  எனக்கேட்டேன்.

 “ உமக்கு கடிதம் வரும்  “  என்றார்.   



அவருடைய முகத்தில் புன்னகையைத்தேடினேன்.  இல்லை.  அகத்தின் அழகை முகத்தில் தேடலாம் என்பார்கள்.  ஆனால், எனது பத்திரிகை உலக வாழ்வின் முதல் அத்தியாயம் தொடங்கியபோது, அந்த வாக்கும் பொய்த்துப்போனது.

காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்,  என்பது போன்று, அன்று அவரைச்சந்தித்து அருகிலிருந்து கடற்காற்றையும் சுவாசித்துவிட்டு வந்த எனக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவே திகழ்ந்தார்.

எனது வாழ்க்கை வேறு ஒரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

அந்த ஆண்டு எமது விஜயரத்தினம் பாடசாலையில் எமது பழைய மாணவர் மன்றம் நடத்திய முதலாவது நாமகள் விழா பற்றிய செய்திதான் நான் வீரகேசரிக்கு எழுதி அனுப்பிய முதல் எழுத்து!

அந்த நாமகளின் கருணையால் வித்தியாரம்பம் செய்விக்கப்பட்டு, அதே பாடசாலையின் நாமகள் விழா செய்தியுடன் எனது பத்திரிகை எழுத்துப்பணி தொடங்கியது.   நான்கு தசாப்தங்களை கடந்து அரைநூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது!

தற்போது 90 ஆவது அகவையை அடைந்துள்ள வீரகேசரி என்ற பெருவிருட்சத்தின்  விதையூன்றப்பட்ட நாள் இம்மாதம் 06 ஆம் திகதி.


1930 ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஒரு புதன் கிழமையன்று கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்த ஒரு அச்சகத்திலிருந்து எட்டுப் பக்கங்களுடன் வெளிவரத்தொடங்கியதுதான் ஒன்பது  தசாப்தங்களையும் கடந்து  இன்றும் வாழும்  வீரகேசரி.

பெரி. சுப்பிரமணியம் செட்டியாரால்  தொடங்கப்பட்ட வீரகேசரியில் எச். நெல்லையா  ஆரம்பகால ஆசிரியராகவும் பின்னர் பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.ரா, மற்றும் கே.பி.ஹரன் ஆகியோரும் ஆசிரியர்களாக பணியாற்றினர்.

மக்கள் இடம்பெயர்வதுபோன்று கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி காலப்போக்கில் கொழும்பு - 14 இல் கிராண்ட் பாஸ் வீதியிலிருந்த 185 ஆம் இலக்க கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்து  வெளிவரத்தொடங்கியது.

புதுமைப்பித்தனும் இங்கே பணியாற்ற வருவதற்கு தயாராகத்தான் இருந்தாராம். பின்னர், அவர் சினிமாவுக்கு கதை, வசனம் எழுதச்சென்றமையால் வரமுடியவில்லை.

அங்கே ஆசிரியர்களாகவும், துணை ஆசிரியர்களாகவுமிருந்த பலர் சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் வரலாறு, இலக்கிய விமர்சனம் , கவிதை, நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அங்குதான் ஒரு காலகட்டத்தில் பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம்,  அ.ந. கந்தசாமி, எஸ்.எம். கோபாலரத்தினம், ஸ்ரெனிஸ்லஸ் என்ற அன்டன் பாலசிங்கம்,  காசிநாதன், பெரி. சுந்தரலிங்கம் , சில்லையூர் செல்வராஜன், கே. கணேஷ், டீ.பி. எஸ். ஜெயராஜ்,  தில்லைநாதன் முதலான பல ஆளுமைகள் பணியாற்றியிருக்கிறார்கள்.

நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக 1972 இல் இணையும் போது,  க. சிவப்பிரகாசம் – ரஜனி என்ற பெயரில் பல மர்ம – துப்பறியும் நாவல்களை எழுதிக்குவித்திருக்கும் கே.வி. எஸ். வாஸ் ஆகியோர் இணை ஆசிரியர்களாகவும்  டேவிட் ராஜூ செய்தி ஆசிரியராகவும், நடராஜாவும் எஸ். எம். கார்மேகமும் துணை செய்தி ஆசிரியர்களாகவும், திருமதி அன்னலட்சுமி இராஜதுரை மித்திரன் வார இதழின் ஆசிரியராகவும் கே. நித்தியானந்தன் மித்திரனுக்கும் பொன். ராஜகோபால் வீரகேசரி வாரவெளியீட்டுக்கும் பொறுப்பாசிரியர்களாகவும் இருந்தனர்.  து. சிவப்பிரகாசம் விநியோக – விளம்பர முகாமையாளர்.  எஸ். பாலச்சந்திரன்  ஆக்கத்துறை மேலாளர் – ( Administrative Officer )

எஸ். எம். கார்மேகம் அக்காலப்பகுதியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் செயலாளராகவும் இயங்கியவர். வீரகேசரி பிரசுரம் வெளியிட்ட முதல் நாவல்  கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை வெளியீட்டு விழாவும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மகா நாடும் அட்டனில் நடந்தபோது,  அமைச்சர் செல்லையா குமாரசூரியர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் பாலதண்டாயுதம் , ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஸீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அந்த விழாவுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குதான்  என்.எஸ். எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், மல்லிகை சி. குமார், திருச்செந்தூரன், இர. சிவலிங்கம் முதலான இலக்கிய ஆளுமைகளை  சந்தித்தேன்.

அந்த ஆண்டுமுதல்  நான் எழுதிய செய்திகள் வீரகேசரியில்  வெளிவரத்தொடங்கின. சிறுகதைகள் மல்லிகை, பூரணி, புதுயுகம், மாணிக்கம், கதம்பம், மித்திரன் முதலான இதழ்களில் வெளிவரத் தொடங்கின.

எனினும் , வீரகேசரி வாரவெளியீட்டில் எனது சிறுகதைகள் வெளிவரவில்லை.  அதற்காக நான் 1985 ஆம் ஆண்டு வரையில் காத்திருக்கநேர்ந்தது.

இடையில் 1975  ஆம் ஆண்டு எனது முதல் கதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் வெளிவந்து, அதற்கு சாகித்திய விருதும் கிடைத்தபின்னர், வீரகேசரி முன்பக்கத்தில் அன்றைய ஜனாதிபதி வில்லியம்கொப்பல்லாவவிடம்  சாகித்திய பரிசு பெறும் படம் செய்தியுடன் வெளிவந்த பின்னரும் கூட எனது சிறுகதைகளை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால் ஏனோ ஏற்கவில்லை.

அதற்கு எனது ஆரம்பகால கதைகளில் நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்களின் பேச்சு மொழிவழக்கு தூக்கலாக இருந்ததும் காரணமாக இருக்கலாம் என நம்பினேன்.

அந்தத் தொகுதியில் இடம்பெற்ற நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன என்ற சிறுகதையை முதலில் அவரிடம்தான் கொடுத்தேன். பல மாதங்கள் கடந்தும் வெளிவரவில்லை. பின்னர் மல்லிகைக்கு அனுப்பினேன். மல்லிகை ஜீவா தாமதிக்காமல் வெளியிட்டார்.

அச்சிறுகதையை நாடகமாகவும் எழுதினேன்.  அதனை இலங்கை வானொலியில் சங்கநாதம் இளைஞர்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்துக்கொண்டிருந்த நண்பர் வி. என். மதியழகன் ஒலிபரப்பினார்.

நீர்கொழும்பிலிருந்த எனது நண்பர்களை அந்த நாடகத்திற்காக இலங்கை வானொலி கலையகத்திற்கு அழைத்துச்சென்றேன்.  எனக்கு 20 ரூபா சன்மானம் கிடைத்தது. அதுவே எனது எழுத்துக்கு கிடைத்த முதலாவது சன்மானம். அந்தப்பணத்தை பல நாட்கள் செலவிடாமல் வைத்திருந்தேன்.

அதன்பின்னர்தான் வீரகேசரிக்கு எழுதிய செய்திகளுக்காக சொற்ப சன்மானங்கள் கிடைத்தன.

அங்கே  பிரதேச நிருபர்கள் அனுப்பும் செய்திகளுக்கான சன்மானங்களை கணிக்கும் பணியிலிருந்தவர்  செல்வி நிர்மலா மேனன்.  அந்த கணிப்பு பற்றி சொன்னால் உங்களுக்கு சிரிப்பும் வரலாம்.

அவர் தினமும்  வீரகேசரி – மித்திரன் பத்திரிகை வெளியானதும் – அடிமட்டம் ஒன்றை வைத்து செய்திகளின் நீளத்தை அளந்து குறித்துக்கொண்டு, நிருபர்கள் எத்தனை  அடி நீளம்  -  அங்குலத்திற்கு எழுதியுள்ளார்கள்  என அளந்துபார்த்து,  அதற்குரிய சன்மானத்தை ஒரு பேரேட்டில் எழுதிவைத்திருப்பார். மாதம் முடிந்ததும் அதற்கான வவுச்சர்களை எழுதி வீரகேசரியின் கணக்காளர் பிரிவுக்கு அனுப்புவார்.

அங்கிருந்து குறிப்பிட்ட பிரதேச நிருபர்களுக்கு காசோலைகள் தபாலில் செல்லும்.  வெளியூர் நிருபர்கள் அவசர செய்திகளை தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தால், அதற்காக செலவிட்ட பணத்தை கோரும்பட்சத்தில்,  அதற்கும் வவுச்சர் எழுதி பின்னர் சன்மானத்துடன் இணைத்துவிடுவார்கள்.

அதனால், வெளியூர் நிருபர்கள் எத்தனை அடி நீளத்திற்கு செய்தி எழுதியிருந்தாலும், பத்திரிகையில் அவை எத்தனை அடி நீளத்திற்கு வருகிறதோ, அதன் அடிப்படையில்தான் சன்மானம் வழங்கப்படும்.

யாழ். நிருபர் செல்லத்துரைதான் இதுவிடயத்தில் நூற்றுக்கணக்கான அடி நீளத்தில் செய்திகளை எழுதி சாதனைகள் புரிந்து சன்மானம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

ஒரு காலகட்டத்தில் எங்கள் தேசத்தில் தமிழ்ப்பத்திரிகை நிருபர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்பதை இன்றைய  தமிழ்ப்பத்திரிகை நிருபர்கள் தெரிந்திருக்கவேண்டும்.

    இந்த இலட்சணத்தில்,   “ எழுத்தாளன் இந்நாட்டின் முதுகெலும்பு  “ என்று கல்யாணப்பரிசு திரைப்படத்திற்காக நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலுவுக்கு வசனம் எழுதிக்கொடுத்திருப்பார் இயக்குநர் ஶ்ரீதர்!

அவ்வாறு 1972 இல் வீரகேசரியில் பிரதேச நிருபராகவும் எழுத்துலகில் காலடி எடுத்துவைத்த நான், இலக்கியப்பிரதிகளும் எழுதிக்கொண்டு, 1977 இல் அங்கே ஒப்பு நோக்காளராகவும், பின்னர் துணை ஆசிரியராகவும் பணியாற்றிவிட்டு 1987 ஜனவரி 31 ஆம் திகதி விடைபெற்றேன்.

எனினும் வீரகேசரியுடனான தொடர்புகளை இற்றைவரையில் பேணிக்கொண்டிருக்கின்றேன்.  அந்தச்  சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்.

கே.வி. எஸ். வாஸ் ( ரஜனி ) க. சிவப்பிரகாசம், பொது முகாமையாளர்  எஸ். பாலச்சந்திரன்,  டேவிட் ராஜூ, நடராஜா, கார்மேகம்,  அன்டன் பாலசிங்கம், அஸ்வர், சனூன், பால விவேகானந்தா, சுபாஷ் சந்திரபோஸ், தில்லைநாதன், பொன். ராஜகோபால், சொலமன் ராஜ், கனக. அரசரட்ணம், தியாகராஜா, கமலா தம்பிராஜா, வி.ஆர். வரதராஜா, சேதுபதி, ஓவியர்கள்  மெராயஸ், சந்திரா, விளம்பர இலாகா கந்தசாமி,  ஜோன் ரெஜீஸ், திக்கவயல் தருமகுலசிங்கம் உட்பட பலர் மறைந்துவிட்டனர்.

எனினும் அவர்கள் எனது மனதிலும் என்வசம் இருக்கும் படங்களிலும்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் என்னை வீரகேசரியில் 1972 இல் இணைத்த க. சிவப்பிரகாசம், மற்றும் கனக. அரசரட்ணம், கமலா தம்பிராஜா,  வர்ணகுலசிங்கம்,  மூர்த்தி,  விநியோக – விளம்பரப்பிரிவு முகாமையாளர் து. சிவப்பிரகாசம் ,  டீ.பி. எஸ். ஜெயராஜ்  ஆகியோரை 2007 இறுதியில்  கனடாவில் சந்தித்தேன்.

இவர்கள் பற்றிய பசுமையான நினைவுகளை தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்.

இனிவரும் அங்கங்களில் சோ. ராமேஸ்வரன்,  சிவநேசச் செல்வன், மயில் தவராஜா,  வீரகத்தி தனபாலசிங்கம், அன்டன் எட்வேர்ட் அன்னலட்சுமி இராஜதுரை,  பற்றீஷியா ஆரோக்கிய நாதர்,  சட்டம் படித்துவிட்டு வந்து வீரகேசரியில் இணைந்துகொண்ட பாலச்சந்திரன், ரங்கன் தேவராஜன்,                    இ. தம்பையா , ஶ்ரீகாந்தலிங்கம்,   மற்றும்  எஸ். எட்வேர்ட், திருமதி உதயா தம்பையா,  சூரியகுமாரன், ஜி. நேசன்,  எஸ். என். தனரத்தினம் , எஸ். என். பிள்ளை,  நித்தியானந்தன், ஆர். திவ்வியராஜன், நெவில் அந்தனி, செல்வராஜா, மற்றும் ஒளிப்பதிவுக்லைஞர்கள் ரொட்றிக்கோ, ஜோய் ஜெயக்குமார், சுரேந்திரன், விநியோகப்பிரிவிலிருந்த மாத்தளை செல்வா என்ற விக்கிரமசிங்கா, விளம்பரப்பிரிவு  கந்தசாமி, வர்ணகுலசிங்கம்,  நந்தினி சுரேந்திரன், வசுந்தரா பகீரதன்,  கீதா அந்தோனிப்பிள்ளை, நிலாம், பகீரதன்  என்னுடன் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆசிரிய பீடத்திற்கு வந்தவர்கள் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களுடன் எழுதுவேன்.

எனது குடும்பத்தையடுத்து நான் ஆழமாக நேசித்தது வீரகேசரி குடும்பத்தினரைத்தான்.  

இலங்கை செல்லும் சமயங்களில் வீரகேசரிக்கும் அதன் நிருவாகத்திற்குட்பட்டுள்ள தினக்குரல் பத்திரிகை அலுவலகத்திற்கும் செல்வதும்  எனது பயணத்தில் முக்கிய கடமையாகும்.

தமிழக எழுத்தாளர்கள்  விந்தன்,  கவியரசு கண்ணதாசன்,  ஜெயகாந்தன், சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் முதலானோர் பத்திரிகைகளுக்கு அச்சுக்கோர்த்தும் – முதலில் ஒப்புநோக்காளர்களாகவும் பின்னர் ஆசிரியர்களாகவும் இலக்கிவாதிகளாகவும் வளர்ந்தவர்கள்.

மகாகவி பாரதியும் பத்திரிகையாளர்தான்.  இவர்கள் அனைவரும் எனக்கும் முன்னோடி என்பதும் மனதிற்கு நிறைவானது.

1972 இல்  எனது முதல் எழுத்துக்கு கிடைத்த இருபது ரூபா சன்மானத்தை மறக்கத்தான் முடியுமா..?

கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதை இருட்டாகிவிடும்… !

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



No comments: