பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 14 - எங்கள் தங்கம் - சுந்தரதாஸ்



தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் மூவரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள். அந்த படம் தான் எங்கள் தங்கம் , இந்தப் படத்தை கருணாநிதியின் குடும்ப நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்தது.

லாரி ஓட்டுநரான தங்கம் தன் பார்வையற்ற தங்கை சுமதிக்காகவே வாழ்கிறார். ஓர் இரவு தன் பழைய நண்பன் மூர்த்தியை சந்திக்கும் தங்கம் அவனை தன் இல்லத்தில் தங்கும்படி கூறுகிறார். தங்கம் பணிக்கு சென்று விடவே, மது வெறிக்கு ஆளான மூர்த்தி சுமதியை வல்லுறவிற்கு உட்படுத்தி விடுகிறார். விஷயமறிந்த தங்கம் மூர்த்தியை தேடுகிறார். அப்போதுதான் அவன் ஒரு கொள்ளைக் கூட்டத்துடன் தொடர்புடையவன் என்றும் தெரியவருகிறது. மூர்த்தி சுமதியை இணைக்க தங்கம் பல இன்னல்களை அனுபவிக்கிறான்.

இதுதான் எங்கள் தங்கம் படத்தின் கதை. படத்தின் கதையை கலைஞர் கருணாநிதி எழுதி இருந்தார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராகவும் தமிழக அரசின் சேமிப்பு திட்ட தலைவராகவும் விளங்கிய எம்ஜிஆரை இந்தப்படத்தில் நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள். படத்தின் ஆரம்பத்தில் உண்மையான எம்ஜிஆர் ஒரு காட்சியில் தோன்றுகிறார் அவருடன் தங்கம் கதாபாத்திரத்தில் வரும் எம்ஜிஆர் உரையாடுகிறார் இந்தக் காட்சி ரசிகர்களை பரவசப்படுத்தியது.


படத்தில் ஒரு காட்சியில் மொட்டை அடித்து குடுமி வைத்து கதாகாலட்சேபம் நடத்தும் சாத்திரிகளாக எம்ஜிஆர் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் நான் செத்துப் பிழைத்தவன்டா என்ற பாடலில் நடித்து ரசிகர்களின் கரகோஷம் பெற்றுக்கொண்டார். எம் கி ஆர் குண்டுமணி புத்தூர் நடராஜன் இருவருடனும் அவர் போடும் சண்டைக்காட்சி தூள் கிளப்பியது. படத்தில் அசோகன் மனோகர் இருவரும் வில்லன்களாக வருகிறார்கள். அசோகன் தன்னை ஒரு ஸ்டயில் நடிகராக இப்படத்திலும் காட்டிக் கொண்டார். சோ வினுடைய நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது. அவருடன் மனோரமா தேங்காய் சீனிவாசன் இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.

மூர்த்தியாக ஏ வி எம் ராஜனும் சுமதியாக புஷ்பலதாவும் நடித்தார்கள் கதாநாயகியாக வரும் ஜெயலலிதாவிற்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புகள் குறைவு ஆனால் புஷ்பலதா நிறைவாக செய்திருந்தார்.

படத்தின் வெற்றிக்கு வாலியின் பாடல்களும் எம்எஸ் விஸ்வநாதனின் இசையும் பெரிதும் உதவின. தங்கப் பதக்கத்தின் மேலே, நான் செத்துப் பிழைத்தவன் டா, நான் அளவோடு ரசிப்பவன் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறன் படத்தின் வசனங்களை எழுதியிருந்தார். வசனங்களில் திமுகவின் பிரசாரத்தையும் ஆங்காங்கே தூவியிருந்தார் ஆனாலும் வசனங்கள் கருத்துடனே அமைந்தது படத்தின் ஒளிப்பதிவை மாருதிராவ் கையாண்டிருந்தார். கிருஷ்ணன் பஞ்சு இருவரும் படத்தை இயக்கினார்கள் .

எங்கள் தங்கம் படம் உருவாகும் போதே எம்ஜிஆர் கருணாநிதி இருவரிடையே பனிப்பூ பனிப்போர் உருவாக்கி இருந்ததை அவதானிக்க முடிந்ததாக அப்படத்தில் நடித்த சோ குறிப்பிட்டிருந்தார் ஆனாலும் எங்கள் தங்கம் ஒரு வெற்றிப்படம் தான்



No comments: