மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் – பேச்சுப்போட்டி 2020 பரமபுத்திரன்



 அவுத்திரேலியாவில் வாழும் மவுண்ட்றூயிட் பிரதேச தமிழ்  பிள்ளைகளுக்கு தமிழ்  கற்க வழிகாட்டும் கல்வி நிலையம் தனது முப்பதாவது பேச்சுப்போட்டியை 15/08/2020 அன்று மவுண்ட்றுயிட்  சமூகப் பொது  மண்டபத்தில் நடாத்தி முடித்துள்ளது. மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகிய போட்டிகள் மாலை ஆறு மணிவரை   நீடித்தது. இன்றைய :கொறோனா’ தடுப்பு நடைமுறைகளையும்  நடைமுறைப்படுத்தி, போட்டிகளை நேரடியாகவும், இணைய வழியாகவும் பார்க்கக்கூடிய வகையில் திட்டமிட்டு  நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இனிப்  போட்டிகள் தொடர்பாக அவதானிப்போம்.


நிர்வாகத் தலைவர் திரு. தேவராசா கில்பேட் அவர்களின் தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இன்றைய சூழலில் எங்கள் பிள்ளைகளின் பேச்சுப்போட்டியை நிகழ்த்தி, அவர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்வதே எமது நோக்கம் என்று மிகவும் சுருக்கமாக கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அடுத்து அதிபர் திரு. பாலசுப்பிரமணியம் முரளீதரன் அவர்கள் மண்டபத்தில்  கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கூறி எமது கல்வி நிலையத்தின்  முப்பதாவது பேச்சுப்போட்டி என்பதை தெரிவித்து  நடுவர்களை அறிமுகம் செய்து விட்டு மேடையிலிருந்து அகன்றார்.

 



 


மழலையர் முதல் ஆண்டு 10 வரையான மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கு பற்றினர். நிர்வாகத்தினரும், அதிபர் ஆசிரியர்களினதும் பெற்றோர்களின் ஒப்புதலுடனான  தீர்மானத்துக்கு அமைய ஒரு நேரம் ஒரு வகுப்பு மட்டுமே மண்டபத்தினுள்  அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை  ஏனையோர் நிகழ்வினைப் பார்வையிட இணையவழி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடானது இங்குள்ளவர்கள் மட்டுமன்றி பேச்சுப்போட்டியில்  பேசும் பிள்ளைகளின் உலகளாவிய மட்டத்தில் வாழும் உறவினர்களும் பார்த்து மகிழ சந்தர்ப்பம் வழங்கியது. பிள்ளைகளின் பேசு திறனை வளர்ப்பதற்கான ஒரு கற்பித்தல் நுட்பமாக பேச்சுத்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுக்கான மாணவர்களின் பேச்சுக்கள்  யாவும் அந்தந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களால் எழுதப்பட்டு, பெற்றோரின் உதவியுடன் ஆசிரியர்கள் இணைந்து பிள்ளைகளைப்  பயிற்றுவித்திருந்தனர். நிர்வாகத்தினரும், கல்விக்குழு உறுப்பினர்களும் இணைந்து  போட்டிகளுக்கான ஒழுங்கமைப்புகளை செய்திருந்தனர். பெற்றோர்கள் நேரம் தவறாது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குப்  பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். ஆசிரியர்கள்  மாணவர்களை ஒழுங்குபடுத்தி உரிய நேரத்தில் போட்டிகளில் பங்கு பற்றச்செய்தனர். இதனால் பேச்சுப்  போட்டிகள் தங்குதடையின்றி  இடைவிடாது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

 

மாணவர்கள் அவர்களின் வகுப்பு அடிப்படையில்  பல்வேறு தலைப்புகளில்  தங்கள் பேச்சுத்திறனை வெளிக்காட்டினர். அவர்களின் பேச்சுத் தலைப்புகள் மரம், தமிழ், நலமுடன் வாழ்வோம், முயற்சியே வெற்றி தரும், கல்வியின் சிறப்பு, தன்னம்பிக்கை, பல்திறன் தன்மையை வெளிக்கொணர்வோமாக, பிழையறத் தமிழை தெளிவுற  மொழிவோம், காட்டுத்தீ, பெண் சமத்துவம், உறவுகளே ஒளியூட்டும் தீபங்கள் என அமைந்திருந்தன. சிறப்பாகப் பேசிய மாணவர்களை  மதிப்பிட தமிழ் ஆர்வலர்கள் திரு. கே. ஜி. பாஸ்கரன், திருமதி. சோனா பிரின்ஸ், திரு. கனகசபாபதி குமணன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். மதிப்பீட்டாளர்கள் பேச்சுப்போட்டி தொடர்பான தங்கள் மதிப்பீடுகளையும் கூறியிருந்தனர். திரு.கே. ஜி. பாஸ்கரன் அவர்கள் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்குபற்றுவதையும், நல்ல கருத்துகள் அடங்கிய பேச்சுகள் தயாரிக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். அதேவேளை மாணவர்கள் விருப்புடன் உற்சாகமாக மேடையேறிப்  பேசும் திறனைப் பாராட்டினார். மேலும் திருமதி சோனா பிரின்ஸ் அவர்கள் மாணவர்கள் சிறந்த உச்சரிப்புதிறனை  வெளிக்காட்டுகின்றனர். மேடையில் நன்கு பேசுகின்றனர். இருப்பினும் சில மாணவர்களின் பேசும் வேகம் அதிகமாக உள்ளது. ஆசிரியர்கள் அவர்களின் பேசும் வேகத்தை கட்டுப்படுத்திப் பேசப்  பயிற்றுவித்தால் இன்னும் சிறப்பாகப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

 


 

தொடர்ந்து கருத்துக் கூறினார் திரு. கனகசபாபதி குமணன் அவர்கள். இவர் இந்தப் பாடசாலையின் முன்னை நாள் அதிபர், தலைவர். எனவே பேச்சின் சிறப்பிலும் தனது மகிழ்ச்சியையே வெளிக்காட்டினார்.  தாங்கள் பல இன்னல்களை தாங்கி வளர்த்த பாடசாலை இன்று சிறப்பாக மாணவர்களை பயிற்றுவிக்கின்றது என்று பெருமைகொண்டார்.  தாம் செய்த முயற்சி வீண்போகவில்லை என்பதையும்  இன்றைய பேச்சுப்போட்டி உணர்த்துவதாகக் கூறினார். இவரை எப்போதும் மவுண்ட்றூயிட் பாடசாலை பெருமைப் படுத் துவது வழக்கம். காரணம் அவர் தொண்டு செய்த பாடசாலை என்பதுதான். சுயலாப நோக்கமின்றி எதிர்காலப்  பிள்ளைகளுக்காக இவர்கள் செய்த தொண்டுகள் போற்றுதற்குரியதே.   


நிறைவாக நிர்வாக செயலர் திரு. ராஜாராம் சரவணக்குமார் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார். மவுண்ட்றூயிட் கல்வி நிலைய தலைவர், நிர்வாகத்தினர், கல்விக்குழுவினர், அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புத்தான் நிகழ்வினை கட்டியமைக்க உதவியது என்று குறிப்பிட்டார். மேலும் அவரேதான் உள்நுழைவோருக்கான ‘கொறோனா’ பரிசோதனையும் மேற்கொண்டார். நிகழ்வினை இணைய வழியில் இணைப்பதற்கு திரு. கு. முரளிதரன் அவர்கள் செயற்பட்டார். புள்ளிகளை பதிவுசெய்து ஒழுங்கமைப்பதில் உப அதிபர் திரு. கொலின்தேவராசா சதீஸ்கரன் மற்றும் உப செயலர் திரு. கந்தையா சுதாகரன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். வழமை போல தேசிகன் அலங்கார உரிமையாளர் அருளாளன் அவர்கள் பேச்சு மண்டபத்தினை மாணவர்களுக்காக அலங்கரித்து வழங்கியிருந்தார். மவுண்ட்றூயிட் கல்விச் சமூகம் ஒன்றாக இணைந்து மாணவர்களின் பேச்சுத் திறமையை வெளிக்காட்டும் நிகழ்வினை, இன்றைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு  நிகழ்த்தி முடித்தமை சிறப்பு என்று கூறலாம். 

 



No comments: