படச் சுருளும் நானும் (அனுபவக்கதை) உஷா ஜவகர் (அவுஸ்திரேலியா)

 அது 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில் ஓர் நாள். அன்று ஒரு செவ்வாய்க்கிழமை!

 அப்போது நான் சாம்பியாவில் உள்ள சிங்கோலா (Chingola) என்ற சிறிய நகரில் என் அக்காவுடன் தங்கியிருந்தேன்.அங்குள்ள அக்கௌன்டன்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.அந்த நிறுவனத்தின் பெயர் மசூத் ரவூப் அண்ட் கம்பெனி (Masood Rauf and Co). ஒரு பாகிஸ்தானியர் தான் அந்த நிறுவன உரிமையாளர். சிங்கோலா ஒரு சிறிய நகர் ஆதலால் ஒரே ஒரு போட்டோ ஸ்டூடியோ தான் அங்கு இருந்தது.

 என் அக்கா சில புகைப்படங்களை எடுத்துவிட்டு அந்த பட சுருளை என்னிடம் தந்திருந்தார்.

 நான் என் அலுவலகத்தின் மதிய போசன இடைவேளையின் போது அந்த ஸ்டூடியோவுக்கு சென்றேன்.

 மிகவும் பருமனான ஒரு குஜராத்திப் பெண்மணி ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து,"வாட் யு வாண்ட்?"(What you want?) என அசட்டையாக வினவினார்.

 நான் பட சுருளை அவரிடம் கொடுத்து,"இதைப் பிரிண்ட் பண்ணித் தர முடியுமா?"எனப் பணிவுடன் ஆங்கிலத்தில் வினவினேன்.

 அவரோ உடனே என்னிடம்,"Yesterday giving today giving,Today giving no tomorrow giving”

 என்றார்.எனக்குத் தலையும் புரியவில்லை.வாலும் புரியவில்லை.

 

 பிறகு அங்கிருந்த முதலாளி ஓடி வந்து என்னிடம் விளக்கம் அளித்தார்.அவரது விளக்கம் இப்படித்தான் இருந்தது.

 "நீங்கள் திங்கட்கிழமை பட சுருளைக் கொண்டு வந்தீர்கள் என்றால் நாங்கள் லூசாகாவுக்கு(Lusaka) அதாவது தலைநகருக்கு அனுப்பி படங்களை பிரிண்ட் செய்து உங்களிடம் எங்களால் செவ்வாய்க்கிழமை தரமுடியும்.

 ஆனால் நீங்கள் செவ்வாய்க்கிழமை பட சுருளைக் கொண்டு வந்து தந்தீர்கள் என்றால் எங்களால் உடனே அதை லூசாகாவுக்கு அனுப்ப வசதி இல்லை.எங்களுக்கு புதன்கிழமை உங்களிடம் படங்களைத் தர முடியாது.

 இன்று செவ்வாய்க்கிழமை நீங்கள் வந்திருக்கிறீர்கள்!அதுதான் என் மனைவி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்." இப்படி அவர் கூறி முடித்தார்.

 அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நான் அலுவலகத்திற்கு திரும்பிவிட்டேன்.

 பின் அவரது விளக்கத்தை நான் என் அக்காவிடம் சொல்லி சிரித்ததை 33 வருடங்கள் கழிந்தாலும் இப்போதும் என்னால் மறக்க முடியாதிருக்கிறது!

 இப்போது உங்களுக்கும்"yesterday giving today giving. Today giving no tomorrow giving” இன்  அர்த்தம் விளங்கியிருக்கும் என நம்புகிறேன்

 

                                                                      


1 comment:

Anonymous said...

Very funny story. I liked it