உலகச் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தயார்

அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிராகரிப்பு

ஆப்கானின் ஒரே பெண் அமைதி பேச்சுவார்த்தையாளர் மீது சூடு

லிபியாவில் அகதிப் படகு மூழ்கி 45 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: போர் எச்சரிக்கை

இராணுவ கலகம்: மாலி ஜனாதிபதி இராஜினாமா


காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல் மற்றும் தீயை பரவச் செய்யும் பலூன்களை அனுப்பியதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் நேற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் கடந்த சனிக்கிழமை மாலை மோதல்கள் வெடித்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

“டஜன் கணக்கான பலஸ்தீன கலகக்காரர்கள் பாதுகாப்பு வேலியை நோக்கி டயர்களை எரித்தும், வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகளை வீசியதோடு எல்லை வேலியை அணுக முயன்றனர்” என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இராணுவ வளாகம் ஒன்று மற்றும் நிலத்தடி கட்டுமானங்கள் இதன்போது இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நேற்றுக் காலை வீசப்பட்ட இரு ரொக்கெட் குண்டுகள் இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 






ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தயார்

ரஷ்யா கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை உற்பத்தியை ஆரம்பித்து சில மணிநேரத்துக்குள் தடுப்பு மருந்துகளின் முதற்தொகுதி தயாராகிவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்தது. கமலெயா ஆய்வு நிலையம் அதனை உருவாக்கியுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்து இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ரஷ்யா ஏற்கனவே கூறியிருந்தது.

பொதுவாக எந்தவொரு தடுப்பு மருந்துக்கும் ஒப்புதலைப் பெறும் முன்னர், அது இறுதிக்கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அத்தகைய சோதனைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் இறுதிக்கட்டச் சோதனைகள் நிறைவடையும் முன்னரே தடுப்பு மருந்து தயாரிப்புக்கு ரஷ்யா ஒப்புதலை வழங்கியுள்ளது. அதனால் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து முழுமையாக மறுஆய்வு செய்வது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிராகரிப்பு

ஈரான் மீதான சர்வதேச ஆயுதத் தடையை நீடிப்பது குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்காவுக்கு டொமினிக்கன் குடியரசு மாத்திரமே ஆதரவு தெரிவித்திருப்பதோடு தேவைப்படும் ஒன்பது ஆதரவு வாக்குகளை நெருங்கவும் இல்லை.

இதில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உட்பட 15 அங்குத்துவ நாடுகளில் பதினொரு உறுப்பு நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன. ரஷ்யா மற்றும் சீனா இதற்கு எதிராக வாக்களித்தன.

ஈரான் மீதான 13 ஆண்டுகள் நீடிக்கும் ஆயுதத் தடை வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி காலாவதியாகவுள்ளது. ஆறு உலக வல்லரசு நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு ஈரான் செய்து கொண்ட அணு சக்தி உடன்படிக்கையின் படியே இந்த காலவதி காலம் நிர்ணயிக்கப்பட்டது.

“உலக அமைதியை மற்றும் பாதுகாப்பை காக்கும் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்பு சபை தவறிவிட்டதை மன்னிக்க முடியாது” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

“தன்னிச்சை செயற்பாட்டுக்கு ஆதரவு இல்லை என்பதும் தோல்வி அடையும் என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது” என்று ஐ.நாவுக்கான சீன தூதுவர் சாங் ஜுன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா பொருளாதார தடைகள் அனைத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த தகவலை ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதர் கெல்லி கிராப்ட் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 






ஆப்கானின் ஒரே பெண் அமைதி பேச்சுவார்த்தையாளர் மீது சூடு

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் ஆப்கானின் ஒரே பெண் உறுப்பினரான பெளசியா கூபி, காபுலுக்கு அருகில் துப்பக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

தலைநகருக்கு அருகில் பர்வான் மாகாணத்தில் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் கடந்த வெள்ளிக்கிழமை 45 வயது கூபி மற்றும் அவரது சகோதரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கூபி, தலிபான்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது கையிலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதாகவும் ஆபத்து இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலுடன் தமக்கு தொடர்பு இல்லை என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டிலும் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து கூபி உயிர் தப்பியிருந்தார்.   நன்றி தினகரன் 






லிபியாவில் அகதிப் படகு மூழ்கி 45 பேர் உயிரிழப்பு

லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான கப்பல் விபத்து இதுவாகும். ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் எஞ்சின் வெடித்து இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் மற்றும் ஐ.நாவின் சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இதற்கென தனியான தேடுதல் மற்றும் மீட்பு பொறிமுறை இல்லாவிட்டால் மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.

லிபியாவில் ஆட்சியிலிருந்த முஅம்மர் கடாபி 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய நாடாக லிபியா உள்ளது.   நன்றி தினகரன் 






காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: போர் எச்சரிக்கை

தெற்கு இஸ்ரேல் மீது பலஸ்தீனர்கள் ரொக்ெகட் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் குண்டு வீசியுள்ளன.  

எல்லையில் இருந்து இஸ்ரேலை நோக்கி தீ பரவச் செய்யும் பலூன்களை பறக்கவிடுவதை நிறுத்தத் தவறினால் ‘போர்’ அச்சுறுத்தல் ஒன்று பற்றி ஹாமாஸ் மீது இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  

காசாவில் இருந்து கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல் மற்றும் தீப்பந்தம் கட்டப்பட்ட பலூன்கள் பறக்கவிடுவது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதனை தணிப்பதற்கு எகிப்து பாதுகாப்பு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.  

இதன்போது ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் காசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி உடன் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.  

2008 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மூன்று போர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






இராணுவ கலகம்: மாலி ஜனாதிபதி இராஜினாமா

மாலி ஜனாதிபதி இப்ராஹிம் பெளபக்கர் கெஸ்டா படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து தமது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.  

அரசு மற்றும் பாராளுமன்றத்தையும் கலைப்பதாக தொலைக்காட்சியில் உரையாற்றிய கெஸ்டா தெரிவித்தார். “அதிகாரத்தில் நீடிப்பதன் மூலம் இரத்தம் சிந்துவதை விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். 

தலைநகர் பமகோவுக்கு அருகில் உள்ள இராணுவா முகாம் ஒன்றுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெளபு சிசோ அழைத்துச் செல்லப்பட்டு சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிராந்திய சக்திகள் மற்றும் பிரான்ஸில் இருந்து கண்டனங்கள் வெளியாகியுள்ளன.  

“ஆயுதப் படைகளில் குறிப்பிட்ட குழு ஒன்று தமது தலையீட்டின் மூலம் இதனை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், எனக்கு வேறு தேர்வு இருக்கிறதா?” என்று கெஸ்டா கேள்வி எழுப்பினார்.  

முன்னதாக கலகத்தில் ஈடுபட்ட படையினர் ஜனாதிபதிக்கு ஆதரவான இராணுவ பிரிவை கைப்பற்றினர். ஜிஹாதிக்களுடன் தொடர்ந்து போராடி வரும் இராணுவத்தினரின் ஒரு பகுதியினருக்கு சம்பளம் தொடர்பில் பிரச்சினை இருப்பதோடு ஜனாதிபதி மீது பரவலாக அதிருப்தி இருந்து வருகிறது.  

2018இல் தேர்தலில் தமது இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்ற கெஸ்டா தொடர்பில் ஊழல், பொருளாதாரத்தின் தவறான முகாமை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி இருந்து வருகிறது.  

இதனையொட்டி மாலியில் அண்மைய வாரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் சீர்திருத்தங்களை கொண்டுவர பழைமைவாத இமாம் முஹமது டிக்கோ தலைமையிலான புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஒன்று அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


No comments: