மொடாமத்தளம்/மண்மேளம் – தோற்கருவி
ஆதிமனிதன் மண்பானையை இசைக்கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றான். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பல பாத்திரங்கள் காலப்போக்கில் இசைக்கருவிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றன. தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், அளப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படும் பானைகள் பாண்டங்கள் முதலியவை தோலினால் மூடப்பட்ட பொழுது தோற்கருவிகளாக மாறின. தபலா, டக்கா முதலிய கருவிகள் இவ்விதம் உண்டாயின என்று கூறுவர் (பி. சைதன்ய தேவ்). இசைக் கச்சேரிகளில் பயன்படத்தப்படும் கடம் மண் குடம் என்பது நாம் அறிந்த ஒன்று. பண்டைத் தமிழர்கள் மண் குடத்தின் வாய்ப்பகுதியைத் தோலால் மூடி குடமுழா செய்துள்ளார்கள். இவ்வாறான ஒரு மண் இசைக்கருவி தான் மொடாமத்தளம்.
அமைப்பு
குயவர்கள் களிமண்ணையும், செம்மண்ணையும் தூளாக்கி சலித்து, தண்ணீர் விட்டு மிதித்து சில நாட்கள் புளிக்க வைத்து மாரியம்மனை வணங்கி மண்ணெடுத்து பானை உருவம் செய்கிறார்கள். பானையின் இருபுறமும் வாய் பகுதிகள் திறந்து இருக்கும். 10-30கிலோ கணம் உள்ளது பழைய மத்தளம். இப்பொழுது 7 கிலோ. மத்தளத்தின் இடது பக்கவாய் சுமார் 1 ஜான், வலது பக்கம் இதைவிட 1-2 இன்ச் அதிகமாக இருக்கும். வலது பக்கம் வலந்தரம், மத்திய சுதி, ஒலி அதிகமாக வரும். இடது பக்கம் உச்ச சுதி சத்தம் குறைவாக இருக்கும். மத்தளத்தை மாட்டுத்தோல் அல்லது எருமைத்தோல் கொண்டு இருக்கி கட்ட வேண்டும்.
வயதான, நாட்டு இன மாடுகளின் தோலே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. மாட்டுத்தோலை நன்கு காயவைத்து, பின்பு தண்ணீரில் ஊற வைத்து, எருமைமாட்டின் மோர்க் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த தோலிலிலேயே வார்களும் செய்யப்படுகின்றன. 32 துளைகள் தோலில் பொறித்து பிறகு மண் பானையில் சேர்த்து கட்டப்படுகிறது. பானைகளை செய்யும் குயவர்கள் வெகு சிலரே எஞ்சியுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு அடுத்த திங்களுர், காஞ்சிகோவில் மற்றும் காங்கேயம் அடுத்த சம்பந்தம்பாளையம் ஆகிய இடங்களில் இவர்கள் வசிக்கிறார்கள்.உடையார் என்று அழைக்கப்படுகிறார்கள். மண்மேளத்தின் ஒருபக்கம் புரசங்குச்சி அல்லது பாலைக்குச்சியால் இசைக்கப்படும், மறு பக்கம் கைகளால் வாசிக்கப்படும். ஒரு காலத்தில் திங்களூர் அடுத்த கருக்குப்பாளையத்தில் 400 குடும்பங்கள் இக்கருவியை செய்து வந்தார்கள். பிறகு 30 ஆக சுருங்கி இப்பொழுது ஒருவர் மட்டுமே இக்கிராமத்தில் இதை செய்கிறார். அவருக்கு பிறகு இப்பகுதியில் இக்கருவியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறி தான். இக்கருவி ஆனது மூன்று நான்கு அளவுகளில் பயன்பாட்டில் உள்ளது. மிகப்பெரிய அளவில் உள்ளது, அதைவிட சற்று சிறியது, அதைவிட சிறியது மிகச் சிறியது என்று பல்வேறு அளவுகளில் இசைக்கப்படுகிறது இருளர் பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மண்மத்தளம் நடுத்தர அளவு உடையதாக இருக்கின்றன
குறிப்பு
மொடாமத்தளம், மண்மேளம், குண்டுமேளம், பானை மத்தளம், மொடா, தொந்தி மத்தளம் ஆகியவை இதன் வேறு பெயர்கள். கொங்கு தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத கருவி மொடாமத்தளம். இந்த பகுதி அருந்ததியர் சமூகத்தின் அடையாளக் கருவியாக திகழ்கிறது. வட/தென் தமிழகத்தில் இக்கருவியை நாம் பெரும்பாலும் காண முடியாது. 30-34 தாளங்களை வாசிக்கலாம். ஒருபக்கம் வாத்தியச் சுதியும், மறுபக்கம் மந்தாரச்சுதியும் கேட்கும். பெரும்பாலும் மொடா மத்தளம் வாசிப்பவர்கள் ஆட்டம் ஆடிக்கொண்டே வாசிக்கின்றார்கள். ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் மொடா மத்தளம் பிரபலம். சென்னிமலை வட்டாரத்தில் உள்ள கிராமப்புற மக்கள் பழனி முருகன் அல்லது சென்னிமலை முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்து வரும் போது, மொடா மத்தளத்தை வாசித்துக் கொண்டு வருகின்றார்கள். ஒரு காவடி கூட்டத்தில் இரண்டு மொடா மத்தளம், அரைசட்டி, உருட்டி ஆகியவற்றை வாசித்துக்கொண்டு செல்கின்றனர். காவடிக்காரர்கள் காவடியாட்டம் ஆடும் பொழுது மொடா மத்தளம் வாசிப்பவர்கள் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டு வருகின்றனர். கொங்கு பகுதியில் நடைபெறும் அனைத்து அம்மன் கோவில்களில் விழாக்களிலும் மொடாமத்தளம் இசைக்கப்படும். பூவோடு எடுத்தல் எனப்படும் சடங்கில் மொடாமத்தளம் தான் தலைமை இசைக்கருவி. மொடாமத்தளத்திற்கு பல்வேறு அடி வகைகள் உள்ளன. திருவிழாவில் சாமி இறங்கியவர்கள் எனக்கு இந்த அடி வேண்டும் என்று கேட்பார்களாம். இக்கலைஞர்களும் அதற்கு தக்கவாறு இசைப்பார்களாம். இம்மக்களின் இந்த இசை கடவுளையும் ஆட வைப்பது என்றால் அது மிகையல்ல.
மொடாமத்தளம் இசைக்கப்படும் அடுத்த முக்கிய கொங்கு கலை வடிவம் பெருஞ்சலங்கையாட்டம். இது உள்ளி விழவு எனப்படும் சங்க தமிழ் கலை வடிவம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் வசிக்கும் திரு காளியப்பன் மாறன் மற்றும் திரு கருப்பசாமி அவர்கள் பெருஞ்சலங்கையாட்ட பயிற்றுனர்கள் மற்றும் மண்மேளக் கலைஞர்கள். மன்மேளம், கொம்பு, தாசா, கொட்டுத்தவில் ஆகியவை இக்கலை வடிவத்தின் இசைக்கருவிகள். சில கோவில்களில் திமிரி நாயணமும் உண்டு. ஆதிக்க சாதியினரால் ஆடப்படும் பெருஞ்சலங்கையாட்டம் கொங்கு பகுதியில் பிரபலம். பெருஞ்சலங்கையாட்த்திற்கான இசைக்கருவிகளை ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை அருந்ததியின மக்கள் தான் இசைக்கிறார்கள். 34 ஆட்ட வகைகளை அடக்கியது பெருஞ்சலங்கையாட்டம். ஒன்னான் அடி, இரண்டான் அடி, முன்னான் அடி, வீச்சாட்ட அடி, நாட்டுமை அடி, நட்டுவச் சொல் அடி என்று நீள்கிறது இந்த பட்டியல். கோவில் சார்ந்த கலையாக இருந்த இது தற்பொழுது சாதி மாநாடுகள், அரசியல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள் ஆகிய இடங்களிலும் ஆடப்படுகிறது.
கடவுமத்தாட்டம் என்கிற கலை வடிவத்தில் குண்டுமேளம் தான் தலையாயது. இவ்வாட்டத்தில் குண்டுமேளம், பறை, திடும்பு, நாயணம், கொம்பு, மொரக்காஸ் ஆகியவை இசைக்கப்படும். இசைப்பவர்களே சலங்கை கட்டி ஆடவும் செய்கிறார்கள். கடினமான ஆட்டம் ஆனால் உற்சாகமூட்டுவது. ஈரோடு மாவட்டம் கரட்டான்காடுபூத்தூரில் கடவுமத்தாட்டம் ஆடும் குழு உள்ளது. திருமணம், திருவிழா, மரணம் ஆகிய இடங்களில் இசைக்கிறார்கள். இதே வடிவத்தில் ஆடப்படும் மற்றொரு கலை வடிவம் ஆதிமேளம். ஆதி மக்களின் ஆட்ட வகை. மேட்டுர் ஓமலூர் அடுத்த மேச்சரியில் ஒரு ஆதிமேளக்குழு உள்ளது. குண்டுமேளம், தப்பட்டை, தாசா, உருமி, திமிரி நாயணம் ஆகியவை இதில் இசைக்கப்படும்.
உடுமலையை சேர்ந்த திரு சக்தி ராவணன், பறை பயிற்றுனர் அவர்கள் மொடாமத்தளத்தைப் பற்றியும் அதை இசைப்பவர்கள் பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார். தற்காலத்தில் இரும்பில் கூட இம்மத்தளம் செய்யப்படுகிறது. மொடாமத்தளம் செய்யும் குயவர்கள் கூட மொடாமத்தள கலைஞர்களை ஒரு காலத்தில் தங்கள் வீட்டுக்குள் அனுமதித்ததில்லை என்கிறார். சாதிய இறுக்கங்கள் கடினமாக இருக்கும் கொங்கு நாட்டில் இசைக்கலைஞர்களின் நிலை இன்னும் மோசமாக தான் உள்ளது. ஆதிக்க சாதியினர் சலங்கையாட்டம் ஆடி விட்டு கோவிலுக்குள் சென்று திருநீறு பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இசைக்கலைஞர்கள் கோவிலுக்கு வெளியே தான் நிற்க வேண்டும். பூசாரி வந்து திருநீற்றை மத்தளத்தின் மேல் போட்டுச் செல்லும் வழக்கம் இன்னும் பல இடங்களில் இருக்கின்றது. 60-70 வயது முதிர்ந்த இசைக்கலைஞர்களை ஆதிக்க சாதியை சேர்ந்த சிறுவன் கூட பெயர் சொல்லியும் ஒருமையிலும் அழைக்கும் பழக்கமும் உள்ளது. இவையெல்லாம் நகர்ப்புறங்களில் சற்று மாறி இருந்தாலும் உட்புற கிராமங்களில் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலை எல்லாம் மாற வேண்டும். கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும்.
சுமார் 50 குடும்பங்கள் ஈரோடு தோட்டாணி காலனியில் மொடாமத்தளம் இசைக்கிறார்கள். கொங்கு பிரதேசத்தில் மட்டுமல்லாமல் தர்மபுரி மாவட்டத்தில் சில இடங்களிலும் மண் மத்தளம் என்கிற பெயரில் இந்த கருவி பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. தற்காலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இக்கருவி தர்மபுரி மாவட்டத்தில் காணக்கிடைக்கிறது. சில இடங்களில் இரண்டு முகங்களும் கைகளாலேயே அடிக்கிறார்கள். சில இடங்களில் ஒரு முகத்தில் குச்சியைக் கொண்டும் ஒரு முகத்தில் கையைக் கொண்டும இசைக்கிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பறை இசைக்கு பெரும்பாலும் துணைக் கருவியாக மண் மத்தளம் மற்றும் உருமி ஆகியவை இசைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் வாழும் குறும்பர் பழங்குடிகள் மொடாமத்தளத்தை மண் மகுடம் என்று அழைக்கிறார்கள்.
இருளர் பழங்குடி மக்கள் மண்மேளத்தை பொறை என்று அழைக்கிறார்கள். சமதள பகுதிகளிலிருந்து மண் பகுதியை வாங்கிச் சென்று தோல் போர்த்தி இக்கருவிகள் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். இருளர்கள் தங்கள் பழங்குடி நடனத்தில் பீனாட்சி ஆகியவற்றை சேர்த்து பாரம்பரிய நடனம் ஆடுகிறார்கள்.இவர்கள் பெரும்பாலும் கைகளினாலயே இசைக்கிறார்கள். கேரள பழங்குடிகளும் இதை இசைக்கிறார்கள். பறா என்று அழைக்கிறார்கள். பொறைக்கலைஞர் ராஜேந்திரன் அவர்கள் கூறுகையில் – “எத்து பேரு ராஜேந்திர ஆகேகண்டி.கீழூரு. இதுக்குந்தே செய்யற பானைய கீழிருந்து வாங்கிட்டு வருவோம். வந்து மான்தோல பதம் பண்ணி காயவெத்து கட்டிவெக்கோம். ஆட்டுத் தோலுலயும் வெறையாட்டு தோலுலயும் கட்டிக்குவோம். இப்போ அப்படியில்லை மாட்டுத் தோலவெச்சு கட்டிக்கறோம். குச்சியெல்லாம் இல்லெ கழுத்துல கட்டி தொங்க போட்டுக்குவோம். வயித்துல நிக்கும். ஒரட்டாங்கை பக்கமா நெஞ்சோட சேத்து இறுக்கி அப்படியே ரெண்டு பக்கமும் அடிப்போம். சோத்தாங்கை பக்கம்தான் பலமா ஓங்கி அடிக்கமுடியும். ஒரட்டாங்கைபக்கம் அப்படி பலமா அடிக்க முடியாது.சுதி சேக்கறதுக்காக குப்பைகளைப் போட்டு சூடு செஞ்சு அடிச்சு பாப்போம். சுதி சேரலைன்னா மறுபடியும் கொஞ்சம் சூடு செய்வோம். இப்படி நல்லா சுதி ஏறறவரைக்கும் சூடு செஞ்சு அடிப்போம். ஒரு முறை சூடு செஞ்சாலெ அது பாட்டுக்கு கும்கும்க்கு கும் கும்க்குன்னு எசச்சு கெடக்கும். ஒரு நாள் முழுக்க வெரப்பா இருக்கும், பிரச்சனையிருக்காது.”
அரைச்சட்டி
மண்மேளத்தின் துணைக்கருவி அரைச்சட்டி. இதுவும் மண்ணாலான கருவிதான். பெரிய மண் சட்டியில் மாட்டுத்தோல் வார்த்து செய்யப்படுவது. தாசா, அரிக்கிச்சட்டி, அழிக்கிச்சட்டி என பல பெயர்கள் உண்டு. மண்மேளத்தின் இசையை சொட்டையின்றி வெளிப்படச் செய்வது இதுதான். தோளில் மாட்டிக்கொண்டு நெஞ்சோடு அணைத்து, அரளிக்குச்சியால் அடிக்கிறார்கள். தண்டோரா போடவும் இக்கருவி பயன்பட்டுள்ளது.
உருட்டி
இதுவும் மண்ணாலான கருவி. மண்மேளத்தின் துணைக்கருவி. கழுத்தில் மாட்டியபடி வாசிப்பார்கள். திடுமம், துடும்பு, கிடுமுட்டி எல்லாம் இதுவே. குழம்புச்சட்டி வடிவிலான மண்பாண்டத்தில் ஆட்டுத்தோலைக் கட்டி உருவாக்கப்படுகிறது. மண்மேளம் மற்றும் அரைச்சட்டியின் இசையை ஒன்றிணைக்கும் கருவி இது.
மண்மேளத்தோடு இவ்விரு இசைக்கருவிகளும் சேர்த்தே இசைக்கப்படுகிறது. தொன்மை அடையாளங்களான அரைச்சட்டியும் உருட்டியும் மெல்ல வழக்கொழிந்து விட்டது. எளிதில் உடையும் தன்மையுடைய இவ்விருக்கருவிகளுக்கு ஆதரவு இல்லை. உலோகம்/ஃபைருக்கு பெரும்பாலும் கலைஞர்கள் மாறிவிட்டார்கள்.
காணொளி:
https://www.youtube.com/watch?v=mBk627mX1Mk
https://www.youtube.com/watch?v=nqCnpbjyUVs
https://www.youtube.com/watch?v=KQWj03gSOM0&t=8s
https://www.youtube.com/watch?v=mBk627mX1Mk
பூவோடு:
https://www.youtube.com/watch?v=3emDbIK_VFo
https://www.youtube.com/watch?v=UaFwDW8qBFE
https://www.youtube.com/watch?v=BhUn1Kxb0No
https://www.youtube.com/watch?v=g1q4CFGNaKk
https://www.youtube.com/watch?v=G-ATA_JTJok
சலங்கையாட்டம்:
https://www.youtube.com/watch?v=BwKTAShoj4s
https://www.youtube.com/watch?v=KbacOujNl2g&t=8s
https://www.youtube.com/watch?v=6iOOZZijBSo
https://www.youtube.com/watch?v=zDIFUsqFPs0
https://www.youtube.com/watch?v=aLsIwTcXss8
https://www.youtube.com/watch?v=X9wcPgvV5ec
இருளர்:
https://www.youtube.com/watch?v=mh_dxIoGbMQ
https://www.youtube.com/watch?v=eu6-H-HzBLE
https://www.youtube.com/watch?v=2xwxsvjnbVY&t=56s
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
2. திரு மணிகண்டன்,பறை பயிற்றுனர், ஈரோடு
3. திரு சக்தி ராவணன், பறை பயிற்றுனர், நிமிர்வு கலையகம், உடுமலை
4. திரு லட்ச்சுமனசாமி ஒடியன் ரங்கசாமி அவர்கள், எழுத்தாளர்.
1 comment:
வணக்கம் நான் சுரேஷ் வைத்தியநாதன் கடம் இசைக் கலைஞர் சென்னையில் வசித்து கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இசைப் பணியாற்றி வருகிறேன்.
உங்கள் சமூக தளம் மூலமாக அழிந்துவரும் தமிழர் இசைக்கருவிகள் என்ற தலைப்பில் மண்ணால் செய்யப்பட்ட பலவகை இசைக் கருவிகளைப் பற்றிய விவரங்கள் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் ஆதங்கமும் அடையப் பெற்றேன் ஆச்சரியத்துக்கு காரணம் நான் இதுவரை அவற்றை அறியாமல் இருந்தது .ஆனந்தத்திற்கு காரணம் மண்ணால் செய்யப்படும் இசைக்கருவியை இசைத்து வரும் நான் அதற்கு உடன் பிறப்பாய் இத்துணை இசைக்கருவிகள் இன்றும் இருந்து வருகின்றன என்பதை அறிந்ததனால். ஆதங்கம் - இத்தகைய இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் கலைவாணர்கள் இன்றளவும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து பலவேறு இன்னல்களுக்கும் மனச்சோர்வுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பதை அறியும் பொழுது. உங்கள் சமூக தளம் மூலமாக நான் ஒரு விண்ணப்பம் வைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டுள்ள, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அனைத்து அழியும் நிலையில் உள்ள இசைக்கருவிகளை உலகுக்கு காட்டுவதற்கு அந்த இசைக் கலைஞர்களுக்கு ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு நல்வாழ்வு கிடைப்பதற்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்ய நான் ஆவலாக உள்ளேன் அதன் முதற்படியாக அவருடன் ஒன்றாக இணைந்து என்னுடைய கடம் வாத்திய இசைத்து இசையின் மேன்மையையும் சமுதாய நல்லிணக்கத்தையும் ஒருங்கே உலகுக்கு காட்ட மிகுந்த ஆவலாக உள்ளேன்
https://www.youtube.com/c/ghatamsureshvaidyanathan
Post a Comment