மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 49 முருகபூபதி


தயசங்கரை, அபிதா வாரி அணைத்து உச்சிமோந்தாள். அவன், அவளது அணைப்பில் வெட்கப்பட்டு நெகிழ்ந்தான்.

 “ அன்ரி,  உன்னைப்பார்க்கவேண்டும் என்றாங்க… அபிதா, இவன் பெடியங்களோடு கிறவுண்டுக்கு கிரிக்கட் விளையாடப் போகவிருந்தவன்.  இழுத்துக்கொண்டு வந்திட்டன்.  படிக்கவைக்கிறதுக்கு ஆளை உட்கார வைக்கிறதுதான் கஷ்டம்.  “ எனச்சொல்லிக்கொண்டு வீட்டை ஒரு கணம் நோட்டம் விட்டாள் தமயந்தி.

 “ எல்லோரும் வெளியே போய்விட்டாங்க தமயந்தி.  போரிங்காக இருந்தது.  அதுதான் கூப்பிட்டேன்.  இருந்து சாப்பிட்டுத்தான் போகவேண்டும்.  உதயசங்கருக்கு என்ன வேணும்… ?   “  குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஐஸ்கிறீம் எடுத்துக்கொடுத்த அபிதா,   “ நீங்கள்…. உங்களுக்கும் தரட்டுமா..? “  என்று தமயந்தியைப்பார்த்துக்கேட்டாள்.









 “ வேண்டாம் அபிதா.  கொஞ்சம் தடிமன் குணம் இருக்கிறது.  ஏதும் சூடா தாங்க… “ என்றாள் தமயந்தி.

அபிதா, அவளுக்கும் தனக்கும் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்து அமர்ந்து,  சவூதியிலிருக்கும் தமயந்தியின் கணவனின் நிலைமை பற்றி கேட்டறிந்தாள்.

 கற்பகம் ரீச்சரும்  சுபாஷினியும், மஞ்சுளாவும்  போய்விட்டால், ஜீவிகாவும் கொழும்போடு காதலன் ஜெயசீலனுடன் சென்றுவிடலாம்.  அதன்பின்னர் தனக்கான போக்கிடம் என்ன…?

அபிதாவை வாட்டிக்கொண்டிருக்கும் இந்த கேள்விக்கணைதான் தமயந்தி – உதயசங்கருடனான  அவளது மீள் உறவு.

இது லண்டனிலிருக்கும் சண்முகநாதனின் மகளுடைய வீடு.  இதன் எதிர்காலம் அவளிடம்தான் தங்கியிருக்கிறது.  இந்த வீட்டை எப்படித்தான் பராமரித்தாலும், பூமரங்களையும் மரக்கறி செடிகளை  வளர்க்க  நாளும் பொழுதும் தண்ணீர் பாய்ச்சினாலும்,  இது எனக்குரிய நிரந்தர இருப்பிடமில்லை.

கண்ணுக்குத் தெரியாத வைரஸ் வந்து தொற்றி,  எல்லோரதும் அன்றாட வாழ்க்கை முறைமையையே மாற்றியிருக்கும்போது, மனப்போக்கும் மாறிக்கொண்டு வரலாம்.

மாறுவது குணம்,  மீறுவது இயல்பு, தேடுவது உறவு, வாடுவது நினைவு, காணுவது காட்சி, சூழுவது விதி.

“  வாழ்க்கையில் வெற்றிபெற்றால், அது பற்றிப்பேசத்தேவையில்லை. தோற்றுப்போனால், அது பற்றி பேசுவதற்கு இருக்கக்கூடாது.   “ என்று இறுதிப்போருக்கு முன்னர் பார்த்திபன் சொன்னது அபிதாவின் மனதில் அடிக்கடி நினைவுக்கு  வந்து வருத்தியது. தனிமையிலிருக்கும்போது, வீட்டிலும் வேலை இல்லையென்றால், பல யோசனைகள் வந்து அரிக்கின்றன.  அதுவே தமயந்தியுடனான உறவை மீட்டுருவாக்கத்திற்கான காரணம் என்பதை அபிதாவால் புரிந்துகொள்ள முடிந்தாலும், இதுவும் ஒருவகையில் சுயநலம்தானே..? என்றும் எண்ணினாள்.

வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் தமயந்தியின் மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.  அவனுடன் பேசி பொழுதை போக்கலாம். வெளியே கடைத்தெருப்பக்கம் அவனை அழைத்துச்செல்லலாம்.  அதற்கான முன்னேற்பாட்டுடன்தான் இந்த வரவேற்பினை அபிதா ஏற்பாடு செய்திருந்தாள்.

“  தமயந்தி… உங்களிடம் ஒரு முக்கியமான விடயம் பேசவேண்டும்.  அதுதான் அழைத்தேன். பேசலாமா…?  சங்கர் உனக்கு ரெலிவிஷனில் ஏதும் கார்ட்டூன் போட்டுவிடவா…?  “

 “  சுப்பர் சிங்கர் போடுங்க அன்ரி.  “ என்று அவன் சொன்னதும் இருவரும் உரத்துச்சிரித்தனர்.

“  சங்கருக்கு மியூசிக் விருப்பமா…?   “

அவன் தலையாட்டினான்.

அபிதா, சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அவனுக்காக ரிமோட் மூலம் இயக்கிவிட்டு, தமயந்தியை அழைத்துக்கொண்டு சமையல் கூடம் பக்கம் வந்தாள்.

“  இன்றைக்கு சமைக்கும் எண்ணமே இருக்கவில்லை தமயந்தி. நீங்கள்  இன்று மச்சம் சாப்பிடுவீங்கதானே… ?  “ 

 “வேண்டாம் அபிதா. கோயிலில் சதுர்த்தி.  ஏதும் இரண்டு கறிவைத்தால் போதும்.  நீங்கள் கோயிலுக்குப்போவதில்லையா…?   “

 “ எப்போது இறுதியாகப்போனேன் என்பதே ஞாபகத்தில் இல்லை.  என்றைக்கோ ஒருநாள் அவருடன் பிள்ளைக்கு சோறூட்டுவதற்காக வற்றாப்பளை அம்மனிட்ட போயிருக்கிறேன். அதுக்குப்பிறகு யுத்தம் தொடங்கிட்டுது.  எல்லாம் பழைய கதை தமயந்தி.  இன்றைக்கு உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்தத் தருணமும் இன்னும் சிறிது காலத்தில் பழைய கதையாகிவிடும்.  “   

“  அவரைப்பற்றி அதன்பிறகு வேறு ஏதும் செய்தி இல்லையா அபிதா…?   “

 “ இந்தக்கேள்வியும் பலதடவை என்னிடம் கேட்கப்பட்டுவிட்டது  தமயந்தி.  விடைதெரியாத வினாக்களின் பட்டியலில்தான் இதனையும் சேர்த்துக்கொள்ளலாம். மீண்டும் பதவிக்கு வந்திருப்பவர்களிடம் கேட்டாலும் பதில் இல்லை.                                         “    காணாமல் போனவர்களை மீட்டுத்தாருங்கள் “ என்று ஆயிரம் நாட்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டாலும் பதில் இல்லை. அதனை விடுங்கள் தமயந்தி,  கிடைக்காத பதிலைத் தேடி அலைவதை விடுத்து, அடுத்த வேலையை பார்க்கவேண்டியதுதான்.  இத்தனை நாட்கள் இந்த வீட்டில் மூன்று பெண்களுடன் இருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது. வெளியே போயிருக்கிறார்கள்.  எனக்குத்தான் எந்தக்காரணமும் இல்லை. புதிது புதிதாக காரணம் தேடவேண்டியிருக்கிறது.  நான் எங்கே செல்வேன். இந்த வீட்டைச்சுற்றி சுற்றி வந்து சுவருடன் பேசவேண்டியதுதான்.  அல்லது வெளியே வந்து நான் தண்ணீர் விட்டு பராமரிக்கும் பூமரங்கள், மரக்கறி செடிகளுடன் பேசவேண்டியதுதான். எனது மொழி அவற்றுக்குப்புரியாது. அவற்றின் மொழி எனக்குத் தெரியாது.  அதனால்தான் உங்களையும் சங்கரையும் அழைத்தேன். “  எனச்சொல்லிக்கொண்டு, விம்மிவெடித்து அழுதவாறு தமயந்தியின் கையைப்பற்றிக்கொண்டாள்.

தமயந்தி,  அபிதாவை அணைத்துக்கொண்டு முதுகை வருடினள். அவளுக்கும் அழுகை வந்துவிட்டது.

தொலைக்காட்சியில் சுப்பர்சிங்கரை ரசித்துக்கொண்டிருந்த உதயசங்கர், திரும்பிப்பார்த்தான்.

அபிதாவை அணைத்துக்கொண்டிருந்த தமயந்தி,   தொலைக்காட்சியை பார் - என்று கண்ணால் சைகை காண்பித்துவிட்டு, அபிதாவின் கண்களை துடைத்துவிட்டாள்.

“  அபிதா… அவர்கள் வருவார்கள்.  கவலைப்படவேண்டாம்.  எங்களைப்பாருங்கள். அவர் சவூதிக்குப்போய் இரண்டு வருடமாகிவிட்டது.  நேற்றும் பேசினார். வைபர் – வாட்ஸ்அப்பில் அடிக்கடி பேசுவோம். இவன்,  அப்பா எப்போது வருவார்… வருவார்…? என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அவர் பேசும்போது, இந்தா நீயே கேளு என்று போனைக்கொடுத்துவிடுவேன்.  என்ன செய்வது… பெண்கள் கண்ணீருக்காகவே பிறந்தவர்கள்.  வேறு வழியில்லை. எம்மை நாம்தான் தேற்றிக்கொள்ளவேண்டும்.  நீங்கள் ரி.வி. பார்ப்பதில்லையா…? புத்தகங்கள் படியுங்கள்…!  ஃபேஸ் புக் இல்லையா…? அவற்றில் மினக்கெடுங்க… பொழுது போய்விடும்.    “  என்றாள் தமயந்தி.

 எல்லோரும் சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் தமயந்தி. என்னிடம் ஃபேஸ் புக் இல்லை. ரி.வி. பார்ப்பேன்.  ஜீவிகாவிடமிருக்கும் புத்தகங்கள் படிப்பேன்.  இப்போது ஜீவிகாவின் பெரியப்பா வாங்கித்தந்த லெப்டொப் இருக்கிறது. அதில் ஏதாவது தட்டித் தட்டி எழுதுவேன்.   ஒரு நாளைக்கு உங்களுக்கு காண்பிக்கின்றேன்.  “

   “ அப்படியா… என்னதான் எழுதுறீங்க… காட்டுங்களேன் பார்க்கலாம்….  “  தமயந்தி ஆவலுடன் கேட்டாள்.

“  இப்போது வேண்டாம்.  இன்னும் எழுதி முடிக்கவில்லை. எழுதுவதற்கு மேலும் இருக்கிறது.  எழுதி முடித்ததும் உங்களிடம் காண்பிக்கின்றேன்.  “

“  உங்களுக்கு ஒரு விடயம் சொல்ல மறந்திட்டன் அபிதா.  என்னுடைய அண்ணன் அவுஸ்திரேலியாவில்தான் இருக்கிறார். அவரும் எழுதுவார்.  கதைகள் எழுதியிருக்கிறார்.  நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் அப்படி என்னதான் எழுதுறீங்க..? சொல்லுங்களேன்.   “

 “  நாட்குறிப்பு மாதிரித்தான்…  எனக்குத் தெரிந்த நடையில் எழுதுறன். ஸ்கூலில் தமிழ் – இலக்கியம் எனது விருப்பமான பாடங்கள். ரீச்சராக வந்திருக்கலாம்.  ஆனால், நடந்த போர் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது.  இப்போது பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறன்.  கறிக்கு உப்பு, புளி பார்க்கிறன்.  யார் யாருடையதோ உடுப்புகளை துவைத்து காயப்போட்டு,  வீட்டை துடைத்துக்கொண்டிருக்கிறன். விதிதான்…“ அபிதா, தலையில் அடித்துக்கொண்டு,  சமையலை கவனித்தாள்.

தமயந்தி, அவளை கருணையோடு  பார்த்தவாறு  மரக்கறி வெட்டிக்கொடுத்து, தேங்காயும் துருவித்தந்தாள்.

தமயந்தியின் மகனுக்கு,  அபிதா பிஸ்கட் எடுத்துக்கொடுத்தாள். அவன் தொடர்ந்தும் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தான். 

“ அன்ரி, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கும் கொரோனா வந்திட்டுது தெரியுமா..? பாவம். எனக்கு அவருடைய பாட்டுக்கள் மிகவும் விருப்பம் அன்ரி.  அவர் கெதியா சுகமாகவேணும் அன்ரி “  என்றான்.

அபிதா அவனது தலையை வருடிவிட்டாள்.  “   சங்கருக்கு பாட்டுப்பாடத் தெரியுமா… ஒரு பாட்டு பாடுங்களேன்.  கேட்போம்.  “ என்றாள்.

“ தம்பி, அன்ரிக்கு அழகே அழகு பாடிக்காட்டு.  அன்றைக்கு ஸ்கூல் விழாவிலும் பாடினான்.  அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவன்ர மாமாவுக்கும் மிகவும் பிடித்தமான பாட்டு. சைவம் படத்தில் உத்ரா உன்னிக்கிருஷ்ணன் பாடியது. கவிஞர் முத்துக்குமாரின் பாடல். அவரும் பாவம். குறைந்த வயதில் போய்விட்டார். ஆனால், அவரது பாடல் வரிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. “

  “  ஓம் தெரியும். கேள்விப்பட்டிருக்கிறன் தமயந்தி. தம்பியும் பாடுவானா… பிளீஸ் பாடுங்க சங்கர். கேட்போம் .  “ என்றாள் அபிதா.

உதயசங்கர் வெட்கத்துடன் சிரித்தான்.  பாடுவதற்கு தயங்கினான்.  வேணாம் அன்ரி.  பிறகு பாடுறன்.  “ என்றான்.

 “ அதென்ன பிறகு..? இப்போது பாடினால் என்னவாம். அன்ரிக்கு மனதில் கொஞ்சம் கவலை இருக்கு ராசா… அதுதான் உங்களையும் அம்மாவையும் கூப்பிட்டேன். பிளீஸ் பாடுங்களேன்.  “ என்று அபிதா கெஞ்சினாள்.

அவன் எழுந்து நின்று தொண்டையை செருமினான். அபிதா, ரிமோட்டினால் தொலைக்காட்சியை அணைத்தாள்.

உதயசங்கர் பாடத்தொடங்கினான்.

“  அழகே அழகே எதுவும் அழகே - அழகே அழகே எதுவும் அழகே- அன்பின் விழியில் எல்லாம் அழகே -  மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு ! -புன்னகை வீசிடும் கார்முகில் அழகு ! -  வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு ! -  உண்மை அதுதான் நீதான் அழகு -  குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா? -  நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ? -  கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு ! - கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

அழகே அழகே எதுவும் அழகே - அழகே அழகே எதுவும் அழகே- அன்பின் விழியில் எல்லாம் அழகே -  மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !  “

அவன் பாடிக்கொண்டிருக்கையில் அபிதா, கையில் தாளம்போட்டாள்.  கண்களும் மின்னத் தொடங்கியது.  அருகில் சென்று, அவன் பாடி முடித்ததும்,   “ எங்கள் சங்கரும் அழகு, அவன் குரலும் அழகு. “  எனச்சொல்லிக்கொண்டு,  தலையில் முத்தமிட்டாள்.

                  “  தமயந்தி, மகன் நன்றாகப்பாடுகிறான்.   நல்ல எதிர்காலம் இருக்கிறது.  பேச்சுப்போட்டியிலும் பரிசு எடுத்தானில்லையா..? பாட்டுப்போட்டிக்கும் அனுப்புங்க… பரிசு வாங்குவான்.  “ என்று அபிதா சொன்னதும், “  அதுதான் பார்த்தீங்களே..…கார்ட்டூன் போட்டுவிடவா..? எனக்கேட்டீங்க… என்ன சொன்னான் பார்த்தீங்கள்தானே…?  அவனுக்கு சுப்பர்சிங்கர்தான் விருப்பம். “   என்றாள் தமயந்தி.

சாப்பாட்டு மேசையிலிருந்த அபிதாவின் கைத்தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் ஜீவிகா.

 “ சொல்லுங்க… “ 

 “ வீட்டில்தானே இருக்கிறீங்க…? “

 “ ஓம் அம்மா… எப்போது வருவீங்க…. தமயந்தியும் அவவின்ர மகன் உதய சங்கரும் வந்திருக்கிறாங்க. பேசிக்கொண்டிருக்கிறன்… சொல்லுங்க…. “

 “ யார்… தமயந்தி….? அதுகிடக்கட்டும். முதலில் ரெலிவிஷனை போடுங்க.  எங்கட சீலன் பார்ட் டைம்மாக வேலை செய்யும் ரிவி செனலை போடுங்க…. குவிக்… குவிக்…. “ என்று மறுமுனையிலிருந்து ஜீவிகா உரத்துக்கத்தினாள்.

 “ ஏன்… என்ன..? என்ன…?  “

   “ கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, முதலில் ரீவியில் அந்த செனலை போட்டுப்பாருங்க… உங்களுக்கு ஒரு சேர்ப்பிரைஸ்  “

அபிதா, கைத்தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே, குறிப்பிட்ட செனலை ரிமோட்டினால் இயக்கினாள்.

“   வாருங்கள் சமைக்கலாம்…! அபிதா அறுசுவை… காணத்தவறாதீர்கள்… அபிதா அறுசுவை….  சமையல் கலை நிபுணர் அபிதாவின் கைப்பக்குவம்.  வாருங்கள் சமைக்கலாம்…. புத்தம் புதிய நிகழ்ச்சி !  அடுத்த வாரம்..!  காத்திருங்கள் “

தொலைக்காட்சியில் ஒரு பெண்ணின்  பின்னணிக்குரலுடன் தோன்றிய விளம்பரத்தில் அபிதா, காஞ்சிபுரம் சேலையுடன் அழகாக சில  கோணங்களில் காட்சியளிக்கிறாள்.

அபிதா வாய் பிளந்து பார்த்துக்கொண்டு சிலையாக நின்றாள்.

 “ அம்மா…அம்மா …  ரீவியில் அபிதா அன்ரி  “ என்று உதயசங்கர் உரத்துக்கத்திக்கொண்டு தாயிடம் ஓடிவந்தான்.

 “ எல்லாம் நீ இங்கே வந்த நேரமடா  “ என்றாள் அபிதா.  மறுமுனையில் ஜீவிகா சிரித்துக்கொண்டிருந்தாள்.

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 


No comments: