கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 27

 வெட்ட வெட்ட தழைத்த வாழையாக வாழ்வோம் !  வலிசுமந்த எங்கள் எஸ்தி, கனடாவில்  வழங்கிய விருதும் வீரவியட்நாம் பெண்ணின் சந்திப்பும் !!

நான் குழந்தைகளுக்காக கவிதைகளும் பாடல்களும் எழுதியிருப்பதை அறிவீர்கள்.  அவை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.

குழந்தைகளுக்காக எழுதும்போது, நாம் எமது வயது முதிர்ச்சியை ஒரு புறம் வைத்துவிட்டு, குழந்தைகளின் பருவத்திற்கே சென்று சிந்தித்து எழுதல் வேண்டும்.

அதற்கு குழந்தை உளவியலும் தெரிந்திருத்தல்வேண்டும்.  மகாகவி பாரதி ஓடிவிளையாடு பாப்பாவும் எழுதினார்.  மனதிலுறுதி வேண்டும் என்று அனைவருக்கும் பொதுவாகவும் பாடியவர்.


குழந்தை பிறந்து தவழ்ந்து, நடைபழகும்போது இடறிவிழுவது இயல்பு. நடைப்பயிற்சியில் குழந்தை விழுந்துவிடும் என்பதற்காக எந்தவொரு தாயும் தகப்பனும் அதனை நடக்கவிடாமல் தடுப்பதில்லை. 

தவழும் பருவத்திலிருந்து குழந்தை எழுந்து நிற்க முயற்சிக்கும்போது, எவருமே அருகில் ஓடிச்சென்று,  “ ஐயோ குழந்தை விழப்போகிறதே…”  என்று தூக்கி அணைக்கமுன்வருவதுமில்லை.



இடறி இடறி விழுந்துதான் ஒரு குழந்தை எழுந்து நின்று நடைபழகும். 

 “  அம்பி… என்ன எல்லோருக்கும் தெரிந்த விடயத்தை சொல்கிறாரே..?!  “என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.  ஆனால், அந்த விடயத்தில் ஒரு பெரிய வாழ்க்கை தத்துவம் இருக்கிறது.

மனிதர்கள் அனைவருமே குழந்தையாக இருந்து வளர்ந்தவர்கள்தான்.

அவ்வாறு வளரும்போது வாழ்க்கைப்பாதையில் எத்தனையோ காரணங்களுக்காக இடறிவிழுந்துவிடுவார்கள். தாமாக விழுவதும் மற்றவர்களினால் தள்ளிவிழுத்தப்படுவதும்  நிகழ்ந்துகொண்டிருக்கும்.

யானைக்கும் கூட அடிசறுக்கும் என்பார்கள்.  எழுச்சியும் வீழ்ச்சியும் எவருக்கும் நேரலாம். அரசனாயிருந்தால் என்ன ஆண்டியாகவிருந்தாலென்ன வாழ்க்கைப்பாதையில் தவறிவிழுவதும் தள்ளப்பட்டு விழுவதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும்.



அதற்காக எவருமே கீழே விழுந்த நிலையில் இருப்பதில்லை. எழுந்துவிடுவார்கள். எழுந்து தங்கள் கடமைகளை தொடருவார்கள்.

இதனைத்தான் மகாகவி பாரதி மனதிலுறுதி வேண்டும் என்று உலகப்பொது மறையாக சொல்லிவிட்டுப்போய்விட்டார் என்றுதான் கருதுகின்றேன்.






ஏன் இந்த பீடிகைகளுடன் இந்த அங்கத்தினை தொடங்குகிறேன்..? என நீங்கள் யோசிக்கவும் கூடும்..!

இலங்கையில் நான் கொழும்பில் பணியாற்றிய அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பு, அங்கே நடக்கும் தமிழ் விழாக்களில் இடம்பெறும் கவியரங்களில் பங்கேற்பது வழக்கம். அச்சமயங்களில் நான் சந்தித்த ஒருவர்தான் எஸ்.  திருச்செல்வம் என்ற பத்திரிகையாளர். இவர் தினகரன் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

நாடளுமன்ற செய்தியாளராகவும் பணியாற்றினார்.  அதனால், சமூகத்தில் பலதரப்பட்டவர்களுடனும் நெருக்கமான உறவை பேணி 

வந்தவர்.


            


கலை, இலக்கிய பிரக்ஞையும் கொண்டவர்.   நான் ஏறிய மேடைகளில் பங்கேற்ற நாவற்குழியூர் நடராஜன், சு.வேலுப்பிள்ளை, இ. முருகையன், சில்லையூர் செல்வராசன் மற்றும் இலங்கை வானொலியில் நான் நிகழ்ச்சிகள் நடத்தியபோது என்னோடு இணைந்திருந்த தியாகராஜா உட்பட பலருடனும் நல்லுறவு பேணிவந்தவர்.

திருச்செல்வம்,  தினகரன் வாரமஞ்சரியில் வாரம்தோறும் எழுதி வந்த எஸ்தி பக்கம் கலை, இலக்கிய வாசகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் எழுத்தாளர்களின் கவனிப்பையும் பெற்றிருந்ததையும் நன்கறிவேன்.

இவர் கொழும்பில் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்  என்ற அமைப்பையும் தொடங்கி 1983 கலவரம் நடந்த காலம் வரையில் வெகு சிறப்பாக இயக்கிவந்தவர்.






கலைஞர்கள், இலக்கியவாதிகளை, பத்திரிகையாளர்களை பாராட்டி கௌரவிப்பதுடன் நில்லாமல், ஆழிக்குமரன் ஆனந்தனது சாதனைகளை விதந்து பாராட்டியும் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தியவர். அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் எனது மற்றும் ஒரு நண்பர் தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன்.

இவர் இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தலைவராகவும் சட்டக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகவுமிருந்தவர்.  கலவர காலத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் நெற்றியில் திருநீற்றுப்பூச்சுடன் நடமாடியவர்.

1981 ஆம் ஆண்டு நான் பாப்புவா நியூகினிக்கு சென்றிருந்தாலும் இடையில் 1982 டிசம்பர் மாதம் வந்து திரும்பியிருக்கின்றேன்.  1983 கலவரம் நடந்தபோது நான் இலங்கையில் இல்லை.

அங்கே நடந்த வன்முறைச்சம்பவங்கள் பற்றி ஊடகங்கள் மூலமாக அறிந்து மிகுந்த மனக்கலக்கம் கொண்டிருந்தேன். நான் நடமாடிய வெள்ளவத்தை பிரதேசத்தில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்த தமிழர்கள்  அணிந்திருந்த ஆடைகளுடன் அகதியாக வெளியேறிய செய்திகளைக்கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியிருந்தேன்.

நாளும் பொழுதும்,  “ விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ  “  என்று எனக்குள் புலம்பிக்கொண்டிருந்தேன்.

ஆனால், பதில் ஏதும் கிடைத்திலன். ..!

1983 கலவரம் தென்னிலங்கையிலிருந்து பல கலை, இலக்கிய, பத்திரிகையாளர்களையும் சமூகப்பணியாளர்களையும் வடக்கு நோக்கி இடம்பெயரச்செய்தபோது நண்பர் திருச்செல்வமும் குடும்பத்தினருடன் சென்றுவிட்டார் என்பதை அறிந்தேன்.

வெட்ட வெட்ட தழைக்கும் வாழைமரம் என்பார்களே..! அதுபோன்று எம்மவர்களும் தொடர்ந்து தொடர்ந்து கலவரங்களினால் துரத்தப்பட்டபோதும், இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் சென்று தங்கள் வாழ்வை தக்கவைத்துக்கொண்டார்கள்.

நண்பர் திருச்செல்வம் யாழ்ப்பாணத்திற்கு தமது குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்து சென்றார்.  அவரது மனைவி ஆசிரியை. ஏக புதல்வன் அகிலன், நான் ஒருகாலத்தில் கல்வி கற்ற யாழ். பரியோவான் கல்லூரியில் படித்தவர். அத்துடன் அந்தக்கல்லூரியின் கிரிக்கட் அணியின் கப்டனாகவும் விளங்கிய விளையாட்டு வீரர்.

திருச்செல்வம் உள்ளார்ந்த ஊடக ஆற்றல் மிக்கவர்.  யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்தும் தினகரன் வாரமஞ்சரிக்கு வாராந்தம் தனது பத்தி எழுத்துக்களை எழுதியவாறே,  ஈழமுரசு, மற்றும் முரசொலி பத்திரிகைகளுக்கும் ஆசிரியரானவர்.

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் அறிமுகமானதையடுத்து,  இலங்கையில் அமைதிகாக்க வந்த இந்தியப்படையின் பிரசன்னத்தால்  அங்கே நடந்தவற்றை இங்கே நான் விபரிக்கவேண்டியதில்லை.

அந்தப்படையுடன் இணைந்திருந்த ஒரு தமிழ் ஆயுதக்குழுவினால், எமது நண்பர் திருச்செல்வத்தின் ஏகபுதல்வன் அகிலன் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட செய்தி எனது செவிகளுக்கு எட்டி நிலைகுலைந்துபோனேன்.

தென்னிலங்கையில் சிங்கள தீவிரவாதிகளிடமிருந்து தப்பிச்சென்று சொந்த மண்ணில் வாழ்ந்தவருக்கு தமிழ் தீவிரவாதிகளினாலும் ஆபத்தா… ? விதியே நீ… என்னதான் செய்துகொண்டிருக்கிறாய்…?

எம்மவரை வீழ்த்திக்கொண்டே இருக்கிறாயே…?!  அவர்களை என்ன செய்ய நினைக்கிறாய்…? அவர்கள் பட்ட கஷ்டம் போதாதா..? ஏன் இவ்வாறு சோதித்துக்கொண்டே இருக்கிறாய்…? 

காலம் ஓடியது. நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தேன். நண்பர் திருச்செல்வம் கனடாவுக்கு தமது மனைவியுடன் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

தங்கள் செல்வனை தாய்மண்ணில் இழந்துவிட்டு பரதேசிகளாக பறந்துவிட்ட அந்த தம்பதியரை மனதிற்குள் நாளும் பொழுதும் நினைத்து வருந்தினேன். எனது குடும்பத்தினருடன், திருச்செல்வத்துடன் எனக்கிருந்த நீண்ட கால உறவு பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன்.

அவர் எழுத்தாளர். எங்கிருந்தாலும் எழுதுவார் இயங்குவார் என்ற நம்பிக்கை மாத்திரமே  என்னிடம் இருந்தது. அத்துடன் அவர் சுறுசுறுப்பாக இயங்கும் ஆற்றலும் மிக்கவர். ஆங்கிலப்புலமையும் கொண்டவர்.

நான் எதிர்பார்த்தவாறே இழப்பையும் வலியையும் சுமந்துகொண்டே எழுந்து நிற்கிறார் என்பதை அவர் கனடாவிலிருந்து வெளியிடத் தொடங்கிய தமிழர் தகவல் இதழ்கள் அடையாளப்படுத்தின.

என்னை அவர் தொடர்புகொண்டு, அவ்விதழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். எங்கிருந்தாலும் என்னையும் மறக்காமல் எனது ஆக்கங்களுக்கு தமது தமிழர் தகவலில் களம் வழங்கினார்.

இனிச்சொல்லுங்கள், கீழே விதி தள்ளிவிழுத்தினாலும் எழுந்து நிற்பதைத்தான் மதி செய்யும். இதனைத்தான் விதியை மதியால் வெல்லுதல் என்பார்கள். குழந்தை இடறி விழுதல் விதி. எழுந்து நிற்றல் மதி.

1998 ஆம் ஆண்டில், பெப்ரவரி மாதம் தமது தமிழர் தகவல் இதழின் ஏழாவது ஆண்டுவிழாவை கனடாவில் ஏற்பாடு செய்துவிட்டு என்னையும் அழைத்தார். ஈழத்தின் பதிப்புத்துறை முன்னோடி  அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை ஞாபகார்த்த விருது வழங்கி என்னை பாராட்டுவதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது.

சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவரைச்சந்தித்தேன். அந்த விழாவை மறக்கமுடியாது. அங்குதான் வியட்நாம் போரின்போது நேபாம் எரிகுண்டு வீச்சுக்கு இலக்காகி, உயிர்தப்பிய குழந்தை கிம்புக்கை  வளர்ந்த யுவதியாக நேரில் கண்டேன்.

அந்த போர்க்கொடுமையை காண்பித்த ஆவணப்படமும் பார்த்துள்ளேன். உலகத்தின் கவனத்தை ஈர்த்த நெஞ்சுருக்கிய அக்காட்சியை கண்ட அமெரிக்க மக்களின் அழுத்தங்களினால், அந்த யுத்தம் தொடரவில்லை.

அவ்வாறு ஒரு நெடிய யுத்தத்தினையே நிறுத்தச்செய்துவிட்ட அந்தக்குழந்தை குமரியாக வளர்ந்து அந்த மேடையில் என்னருகே நின்றபோது மெய்சிலிர்த்துப்போனேன்.

தனது ஏக புதல்வனை தாயகத்தில் இழந்துவிட்டு வந்துள்ள திருச்செல்வம் தம்பதியர்,   பிள்ளையை பறிகொடுத்து பத்தாண்டுகள் கூட பூர்த்தியாகாத காலத்தில் என்னையும் இன்னும் சிலரையும் அழைத்து பாராட்டி கௌரவித்ததோடு அல்லாமல், வியட்நாம்போரினால் வலி சுமந்த அந்தப்பெண்ணையும் அழைத்து கௌரவித்த பாங்கு எனது மனதிற்குள் பெருவியப்பினை ஏற்படுத்தியது.

ஈடுசெய்யமுடியாத இழப்பின் துயரத்தை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு,  இன்முகத்துடன் எம்மை வரவேற்று உபசரித்து விழா எடுத்த அவரைப்பார்த்தபோது  மகாகவி பாரதியின், “  வீழ்வேன் என நினைத்தாயோ…  “ என்ற வரிதான் நினைவுக்கு வந்தது.

அந்த விழா, கனடா ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் சபா பீடத்தில் நடைபெற்றது. அச்சமயத்தில் நான் எழுதிவைத்திருந்த உலகளாவிய தமிழர் என்ற கட்டுரைகளை தானே நூலுருவாக்கித்தருவதாக திருச்செல்வம் கேட்டுப்பெற்றார்.

அவர் தமது மகனின் பெயரில் தொடக்கியிருந்த அகிலன் அசோஷியேற்ஸ் பதிப்பகத்தினால் 1999 ஆம் ஆண்டு மேமாதம் வெளியிட்டார். அந்த மாதத்தில்தான் திரு. – றஞ்சி தம்பதியர் தமது புதல்வனை பறிகொடுத்த தினமும் வருகிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம்  சிட்னி வாழ் அன்பர்கள் நடத்திய எனது அகவை 90 விழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் நண்பர் திருச்செல்வம் கனடா விழா பற்றி நினைவூட்டியிருக்கிறார்.

எஸ்தி என்றும் திரு எனவும் எம்மால் அழைக்கப்படும் அவர் தமது ஊடகத்துறை பணியிலும் அரைநூற்றாண்டை நிறைவு செய்துவிட்டு, தொடர்ந்தும் இந்தத் துறையில் செயலூக்கமுடன் உழைத்துவருகிறார்.

அவரது தளராத தன்னம்பிக்கை, விடா முயற்சி, சென்றவிடமெங்கும் அவர் மேற்கொள்ளும் தமிழ்ப்பணி என்பன ஏனையோருக்கு முன்மாதிரியானது.

தென்னிலங்கை 1983 இல் அவரையும் மனைவி மகனையும் வடக்கிற்கு கலைத்தது.  தாய்மண்,  ஆறுஆண்டுகளுக்குள் (1989 இல் ) அவரையும் அவரது மனைவி றஞ்சியையும் ஏகபுதல்வனை பறித்துக்கொண்டு கனடாவுக்கு கலைத்தது. விதி இவ்வாறு அவரை துரத்திக்கொண்டே இருந்தது.

எனினும் அவர் வீழ்ந்துவிடவில்லை.  எழுந்து நின்றார். எனது இந்த சொல்லாத கதைகளின் ஊடாக அவர் பற்றிய கதையையும் சொல்லிக்கொண்டு நகர்கின்றேன்.

ஒவ்வொருவர் வாழ்விலும் விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா..?

அதனால்தான் மகாகவி பாரதியும் விதியின் விளையாட்டுக்கு இலக்காகிய பாண்டவர்கள் பற்றியும் பாஞ்சாலி சபதம் எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டார்.

 

( தொடரும் ) 

 

 

 

 

 

 

 



No comments: