நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் நீலாம்பிகை கந்தப்பு


 

பொதுவாக துறைசார் பாடநூல்கள் தவிர்ந்தவை இலக்கிய நூல்களாகவோ ஆய்வு நூல்களாகவோ அமையும் .

 

              இலக்கியம் மனித மெல்லியல்புகளின் வெளிப்பாடு .  இதயத்துடன் தொடர்புபட்டது.  ஆய்வு அறிவின் தொழிற்பாடு . மூளையுடன் தொடர்புபட்டது .   கோபம் ,   குரோதம் போன்ற தீய இதய வெளிப்பாடுகள் மூளையை மழுங்கடையச் செய்வதால் வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெறும்.   

 

அதுபோல் அறிவு,    தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்போது இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படுவோம் .அதனால்தான்போலும்   ஆரம்பத்தில் சிற்றிலக்கியம் படைப்பவர்கள் அறிவு முதிர்ச்சி ஏற்பட விமர்சனம் ,மதிப்பீடு போன்ற ஆய்வுகளில்  ஈடுபடுவர்.

 

சிற்றிலக்கியம் அகம் சார்ந்தது .   ஆய்வு புறம் சார்ந்தது .  வெளிதேடல்களுடன் தொடர்புபட்டது .   மு .வரதராசன் கரித்துண்டு ,  கள்ளோ காவியமோ போன்ற பல சிற்றிலக்கியங்களை ஆரம்பத்தில் வெளியிட்டாலும் ,  மொழி நூல் ,  மொழி வரலாறு ,   தமிழ் இலக்கிய வரலாறு போன்ற ஒப்பற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டபின் எந்த சிற்றிலக்கியமும் படைக்கவில்லை .  

 

ஆனால்,  முருகபூபதி அவர்கள் சிற்றிலக்கியப் பரப்பிற்குள் செயற்பட்டுக்கொண்டே மிகச்சிறந்த ஆய்வு நூலையும் வரவாக்கியுள்ளார் .   ஆய்வு என்பது அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவ வேண்டும் .    அவ்வகையில்    அவர் எழுதியிருக்கும்                    இலங்கையில் பாரதி எனும் நூல் சிறந்த ஆய்வு நூலாகும் .

 


இந்த ஆய்வினை அவர் முதலில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகையிலும், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும்  தமிழ்முரசு இணைய இதழிலும்  நாற்பது வாரங்கள்  தொடராக  எழுதினார்.

 

பாரதி  தொடர்பாக இலங்கையிலிருந்து வெளிவந்த சிற்றேடுகள்  அனைத்தும் ஆக்கங்களை வெளியிட்டன.


 

இலங்கையில் பலரின் கூட்டு முயற்சியுடன் வெளிவந்த மறுமலர்ச்சி ,  பூரணி,   அலை ,  தாயகம் போன்ற பல சிற்றேடுகள் குறுகிய காலப்பகுதியில் தமது ஆயுளை முடித்துக்கொண்டன.

 

இதற்குக் காரணம் எழுத்தாளனின் அவனுக்கே உரிய எழுத்தோர்மம் .  அல்லது அவனது ஆணவம்.   இப்பண்பு தனித்துவமானது.

 

எனினும்  10,  20,   40   ஆண்டுகளைக் கடந்தும்  ஜீவநதி , ஞானம்,  மல்லிகை  முதலான    தனிமனித வெளியீடுகள்  தொடர்ந்தும்  வெளிவந்தன .   மல்லிகை அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டது.   ஏனைய இரு இதழ்களும் தொடர்ந்து வெளிவருகின்றன.

 

இதற்கும் ஓர்மமே காரணம் . இவ்விதம் இலங்கையில் பாரதி எனும் இந்நூலில் மிக விரிவாக முன்வைக்கப்பட்டுள்ள சிற்றேடுகளின் வரலாறு தனிமுயற்சியே பயனளிக்கும் கூட்டு முயற்சி தோல்வியடையும் என்பதை எழுத்துத்துறையில் இதழ் வெளியீட்டில் ஈடுபடும் இளம்தலைமுறையினருக்கு அறியவைக்கின்றது.

 

ஆரம்பத்தில் இலங்கையில் பாரதியின்  புகழ் பரப்பியவர்கள் விபுலானந்த அடிகள் ,  ப .ஜீவானந்தம் ,   வ.ராமசாமி என்போராவர் .   மயில்வாகனன் எனும் இயற்பெயர் கொண்ட  சுவாமி விபுலானந்தர்,  ஆரம்பத்தில் இராமகிருஸ்ண இயக்கத்தில் இணைந்திருந்தார்.

 

அதன் பொறுப்பிலிருந்த பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்புவரை தமிழ்ப் பாடத்தில் பாரதி பாடல்களைச் சேர்த்திருந்தார் .   1932 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி கற்கை வட்டம்    எனும் அமைப்பை நிறுவியவர்.


 

அப்பல்கலைக்கழக வெளியீடுகளிலும் ஆங்கிலத்தில் பாரதி தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு பாரதி புகழ் பரப்பினார்.

 

கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் உருவாக்கப் பாடுபட்ட  ஜீவானந்தம் அவர்கள்,  அக் கட்சி  அங்கு தடை செய்யப்பட்டபோது,  இலங்கை வந்து  இங்கு  தலைமறைவாக வாழ்க்கையை மேற்கொண்டார் .

 

அக்காலகட்டத்தில் பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும் இலங்கையில் இலக்கிய மேடைகளில் முழங்கியவர்.  மறுமலர்ச்சிச் சிந்தனைகளை பாரதியின் பாடல்கள் மூலமே பரப்பியவர் .அவரின் ஆளுமையால் கவரப்பட்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக் தனது பெயரை டொமினிக்ஜீவா என மாற்றிக்கொண்டார் .

 

பாரதியின் நண்பரான ராமசாமி மணிக்கொடி இலக்கிய இதழின்                  வரவுக்கு காரணமாக இருந்தவர் .   வீரகேசரி நாளிதழின் ஆசிரியராக ஆரம்ப காலங்களில் பணியாற்றி பாரதியின் கருத்துக்களை அதனூடாகப் பரப்பியவர்.

 

கொழும்பில் 

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் 

முடித்தவர்.   .அவர் எழுதிய மகாகவி பாரதியார் எனும் நூல் 1944  இல் முதற்பதிப்பைக்கண்டது .  பின்னர்  பல பதிப்புக்கள் வெளியாகின.

 

1920   களில் இலங்கைக்கு வந்த கோதண்டராம 

அய்யர் நடேசையர் புடவை வியாபாரி வேடத்தில் மலையக மக்கள்

 மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

 

 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.   1956  ஆம் ஆண்டில் பரவலாக நாடெங்கும் இவ்வமைப்பால் பாரதி விழா கொண்டாடப்பட்டது.  

 

82-83  காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நூற்றாண்டு விழாவையும் இவ்வமைப்பு நடத்தியது .   இவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து பாரதியியல் ஆய்வாளர்களான தொ .மு .சி . ரகுநாதன் ,  பேராசிரியர் ராமகிருஷ்ணன் ,   எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

 

 தொ .மு .சி ரகுநாதன்,   கங்கையும் காவிரியும் ,  பாரதியும் ஷெல்லியும்    ,பாஞ்சாலி சபதம்:  உறைபொருளும் மறைபொருளும் ,  பாரதி :  காலமும்கருத்தும் ,  பாரதியும் புரட்சி இயக்கமும் போன்ற பல நூல்களை எழுதியவர்.

 

பேராசிரியர் ராமகிருஷ்ணன் பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

 சிங்களக் கவிஞரான ரத்ன நாணயக்கார,    பாரதியை  தனக்கு அறிய வைத்ததே பேராசிரியர் ராமகிருஷ்ணனே எனக்கூறியுள்ளார்.

 

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அடிநிலை மக்களுக்காக எழுதியவர் .      பாரதியின் சிந்தனைகளால் காலம்தோறும் பெண் , காலந்தோறும் பெண்மை ,  யாதுமாகி நின்றாய் ,  இந்திய சமுதாய  வரலாற்றில் பெண்மை   முதலான பல நூல்களை எழுதியவர் .   பாரதியின் வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் பாஞ்சாலிசபதம் பாடிய பாரதி எனும் நூலையும் வரவாக்கினார் .

 

இம்மூவரும்   இலங்கை வந்த சமயத்தில்  நாடு பூராகவும் சென்று   ஆய்வரங்குகள் ,  கருத்தரங்குகள் ,  எழுத்தாளர் ஒன்றுகூடல்கள் எனப்பல நிகழ்வுகளில்  பங்கேற்றனர்.

 

இவ்வளவு தகவல்களும் முருகபூபதியின்  இலங்கையில் பாரதி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இந்நூலில் ஒரு பக்கக் கருத்துக்கள் மட்டும் எடுத்துக்காட்டப்படவில்லை.   பல சந்தர்ப்பங்களில் ஒரு விடயம் தொடர்பான சாதமான ,   பாதகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு,  தர்க்கரீதியான சிந்தனைக்கு வழிசமைக்கின்றது.

 

பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பல சுவாமி என முதலில் அ .ந .கந்தசாமியும் ந .சோமகாந்தனும் இணைந்து  1963  இல்  இலங்கை வடபுலத்தில்   வியாபாரிமூலையில் விழா எடுத்துள்ளனர்.  

 

பேராசிரியர் கைலாசபதி ,  பேராசிரியர் சிவத்தம்பி , பிரேம்ஜி ஞானசுந்தரன் , ஞானக்குமாரன் , ஞானம் இதழின் ஆசிரியர் தி .ஞானசேகரன் , ச . அம்பிகைபாகன் போன்றோர் பாரதியின் ஞானகுரு அருளம்பலம் சுவாமியே என ஏற்றுள்ளனர் .

எனினும் செங்கை ஆழியான் தனது பேரன் ஆறுமுக சுவாமியே பாரதியின் ஞானகுரு என 2004 ஆம் ஆண்டில் வெளியிட்ட .கருத்துக்களும் இந் நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.  

 

அதேபோல்,   தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை  வ .வே .சு  ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதே , இலங்கையில் பாரதி எனும்  இந்நூலை வாசிக்கும்வரை இம்மதிப்பீட்டுக் கட்டுரையாளரின் அறிவு.

 

தனது பிரசுரமான எழுத்தையே திருடி போட்டிகளுக்கு அனுப்பும் சூழ்நிலையில்,   தான் வாசித்த ஒரு பொது உண்மையான 1905 இல் பாரதி எழுதிய சக்கரவர்த்தினி எனும் சிறுகதையே முதல் சிறுகதை என்பதை  197  ஆவது ஞானம் இதழில் செங்கதிரோன் த. 

 கோபாலகிருஷ்ணன் முன்வைத்ததை எடுத்துக்காட்டும் பண்பு 

எழுத்து நாகரீகத்தைக் காட்டுகின்றது.

 

பாரதிதாசன் சிந்து  இசைக்கு பாரதியே தந்தை எனக் குறிப்பிட்டதை 

மறுத்து புலோலியூர் மு .கணபதிப்பிள்ளையவர்கள் 

சிந்து மிகப்பழமையான இசை எனத் தேவாரங்களை எடுத்துக்காட்டியதுடன் பாரதி சிந்து இசைக்கு உயிரூட்டியவர் 

என்பதை ஏற்றுள்ளார்.

 

இந்த அரிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

 

 

பாரதி தொடர்பாக ஆய்வாளர்களின் பொதுவான  கருத்துக்களுக்கு 

மாற்றுக் கருத்துக்களை முன் வைத்த புலவர் இராசாமணி,  

  செ .கணேசலிங்கன்,   டாக்டர்  ந .  தெய்வசுந்தரம் 

போன்றோரும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளனர்.

 

மேலும் தமிழினி மெல்லச்சாகும் எனப் பாரதியாரே கூறியுள்ளதாக 

எடுத்துக்காட்டுபவர்களுக்கு,    தமிழ்த்தாய் எனும் கவிதையில் 

பாரதியார் எழுதியிருக்கும்

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் 

புவிமிசையோங்கும் 

என்றந்தப்பேதை உரைத்தான் -         ஆ

இந்த வசையெனக் கெய்திடலாமோ 

எனும் வரிகள் பதிலாகின்றன.

 

பாரதியார் எழுதி அச்சு வாகனமேறிய  முதற் கவிதை விவேகபாநு 

இதழில் வெளியான தனிமையிரக்கம்  ஆகும் ,    எனினும் அவர் எட்டயபுரம்   மன்னனிடம் கல்விக்கு உதவிகேட்டுப் பாடிய கவிதையே 

பாரதியார் பாடிய முதற்கவிதையாகும் .

 

இவ்விதம் பாரதி தொடர்பாக பலதர்க்க ரீதியான கருத்துக்களை 

இந்நூல் முன்வைக்கின்றது .

 

இந்நூலில் ஆறுமுகநாவலர்,   

தனிநாயகம் அடிகளார் ஆகியோரைத் தமக்குத் தெரியாது               என்று கூறிய தமிழக பிரபலங்களைச் சுட்டிக் காட்டியதுடன் தொ .மு .சி .ரகுநாதனின் எழுத்துக்கு எதிர்வினையாற்றிய 

சில்லையூர் செல்வராசனின் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையில் பாரதி புகழ் கூறிய முதலாவது அறிஞராக விபுலாநந்த அடிகள் அடிகள் என அறியப்பட்டாலும்,   அவருடைய காலத்திலேயே புலோலியில் பண்டிதை பத்மாவதி அம்மாள் பாரதி கவிநயம் எனும் நூலை எழுதியது தொடர்பாக  அந்தனி ஜீவா வீரகேசரி ஆண்டுமலரில் எழுதிய விடயமும்   இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது .

 

இவ்விதம் பாரதி தொடர்பாக நாம் இதுவரை அறியாத , அல்லது தவறாக அறிந்துகொண்ட பல விடயங்களுக்கும்  இந்நூல் தீர்வைத் தருகின்றது .

 

பாரதியின் கவிதை உரைநடைக்கு அப்பால்  இசையமைப்பாளர் எம் . பி . ஸ்ரீநிவாசன் பாரதீய சங்கீதத்தில் 3000  மாணவர்களை ஒரே சமயத்தில் பெங்களூரில் தனது இசைப் பின்னணியில் பாடவைத்தார் .

 

 இவரின் பாரதீய சங்கீதத்தில் கார்த்திகா கணேசரின் தயாரிப்பில்  அரங்காற்றுகை   இலங்கையில் இடம்பெற்றது.   தமிழ்நாட்டில் சிலோன் விஜயேந்திரனின் பாரதி வரலாற்று நாடகம் எனும் நூல் வெளியிடப்பட்டது.  அதே காலப்பகுதியில்,  இலங்கையில்  சுபைர் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி எனும் நாடகம் அந்தனி ஜீவாவினால் இயக்கப்பட்டு  மேடையேற்றப்பட்டது .   இலங்கை வானொலியில் வ .இராசையா,  சிறுவர் மலர் நிகழ்ச்சியினூடாக சிறுவர்களை  கவிதை உரைநடை , பேச்சு நாடகம் முதலியவற்றில் ஈடுபடுத்தி பாரதி புகழ் பரப்பினார் .

 

இந்தியாவிற்கு வெளியே  ருஷ்யரான வித்தாலி ஃபூர்னிகா ,  சிங்களவர்களான கே .ஜி .அமரதாச , ரத்ன நாணயக்கார ஆகியோர்  பாரதி புகழ் பரப்பியவர்கள் முதலன தகவல்கள்  பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது .

 

யாழ் நகரில் 1908 ஆம் ஆண்டு,  பாரதி பாஷா வித்தியாலயம் ஆரம்பம்,  அதன்பின்னர்  மலையகத்தில் பசறை , தலவாக்கலை ஆகிய இடங்களிலும் பாரதி 

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.  90 களில் அவுஸ்ரேலியா 

மெல்பன் நகரிலும் பாரதி பள்ளி  அமைக்கப்பட்டு  இன்றுவரை தொடர்கின்றது. 

 

இவ்வாறு பல தகவல்களை நாம்,   இலங்கையில் பாரதி ஆய்வு நூலின் வாயிலாக அறிந்துகொள்கின்றோம்.

 

இந்நூலில் 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையில்  வெளியான தமிழ்

 பத்திரிகைகள் ,  இலக்கிய இதழ்கள் பற்றிய முழு விபரங்களையும்  

அறியலாம் .

 

பாரதியின் பிறப்பு ,  நண்பர்கள்,  அவரது  வாழ்க்கை 

இறப்புவரை கொடுக்கப்பட்டுள்ளது.    என் 

கணவர் எனும் தலைப்பில் செல்லம்மாள் பாரதி

அவர்கள் திருச்சி வானொலியில் ஆற்றியவுரையையும் இந்நூலில் வாசிக்கலாம்.

 

 இந்நூலில் பல இடங்களில் பாரதியின்  கவிதையின் மூலம் 

அவரின் தீர்க்கதரிசனத்தை உணரலாம். 

 

 இளம் எழுத்தாளர்கள் எழுத்துத்துறை தொடர்பான பல முன் அனுபவங்களை  அறிய உதவும் இந்நூல்,   எழுத்துத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு ,   தமிழ் இலக்கிய ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு,  தமிழ் இலக்கியம் கற்பிக்கும்

     ஆசிரியர்களுக்கு வாசிப்பை பொழுதுபோக்காகக் கொண்டவர்களுக்கு மிகப்பயன் உள்ளதாகும்.   

 

நூலகங்களில் மட்டுமல்ல  தமிழ் இலக்கிய ஆய்வுகுறித்து  வாசிக்கவிரும்புபவர்களின்  இல்லங்களிலும் இருக்கவேண்டிய   பயனுள்ள நூலாகும்.

 

---0--- 

Kanthappu.neelambigai@gmail.com

 

 No comments: