பேரிமத்தளம் மற்றும் சுத்தமத்தளம் – தோற்கருவி
அமைப்பு
பேரிமத்தளம் - மிருதங்கத்தை விட சற்று நீளமாக, சுத்த மத்தளத்தை விட சுற்றளவு குறைவாக உள்ளது பேரிமத்தளம். வைரம் பாய்ந்த பலாக்கட்டையால் செய்யப்பட்டு, ஆட்டுத்தோல் போர்த்தப்பட்டுள்ளது. ஓரடி நீளம் கொண்ட அரளிக்குச்சியால் ஒருமுகத்தில் மட்டுமே வாசிக்கப்படுகிறது.
சுத்தமத்தளம் – சுமார் 20கிலோ எடையுள்ளது தற்கால சுத்தமத்தளம்.(திருவாரூரில் இசைக்கப்படும் பழமையான சுத்தமத்தளம் சுமார் 60கிலோ எடையுள்ளது) கழுத்து/தோள்பட்டையில் மாட்டி இசைக்க வேண்டும். மிருதங்கம் போலவே இருக்கும் இது, அதைவிடப் பெரிதாகவும் நீளமாகவும் இருக்கிறது. தபேலாவைப் போல அகலமான வெட்டுத்தட்டுப் பகுதியையும், மிருதங்கத்தை விட அகலமான வலம்தலைப் பகுதியையும் கொண்டது. சுத்தமத்தளம் கேரளத்தில் தான் செய்யப்படுகிறது. பாலக்காடு அடுத்த பெருவம்பா தோல் இசை
க்கருவி தயாரிப்புக்கு பிரபலம். பலா மரத்தைக் குடைந்து அதன் இருபுறங்களிலும் தோல் கொண்டு வலந்தலையும் இடந்தலையும் செய்யப்பட்டு, தோல் வார்களைக் கொண்டு இழுத்து கட்டப்படுகிறது. தற்காலத்தில் மாடுகள் பெரிதாக மேய்ச்சலுக்குச் செல்வதில்லை என்பதால் அவைகளின் தோல்களில் மிகுந்த கொழுப்பு சேர்வதால் இவை இசைக்கு பொருந்துவதில்லை என்கிறார்கள் இதை தயாரிப்பவர்கள். கொழுப்பில்லாத தோல்கள் கிடைப்பதே அரிதாக இருக்கின்றது. கோவில் குளங்களில் கிடைக்கும் கருமை நிற கல்லை அரைத்து, சோற்றுடன் சேர்த்து, நடுவில் பூசப்படுகிறது. இதில் இருந்து தனி நாதம் பிறக்கின்றது. இத்தனை கடின உழைப்பைச் செலுத்தி உருவாக்கப்படுகிறது இக்கருவிகள். ‘சிவனார் வாத்தியம்’ என்று அழைக்கப்படும் இந்த சுத்தமத்தளம், பரதநாட்டிய மரபிலும் பயன்படுகிறது.
குறிப்பு
பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தண்ணுமையின் தொடர்நிலை கருவியாக மத்தளம் கருதப்படுகிறது. ஒரு சிலர் தண்ணுமையும் மத்தளமும் ஒன்று என்று கூறிவருகிறார்கள். இது தவறான கருத்து என்கிறார் தமிழிசை அறிஞர் வீ பா கா சுந்தரம். ”சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை தமருகம் தண்ணுமை தாவில் தடாரி” என்பது அடியார்க்கு நல்லார் உரை. மத்தளத்தை மிருதங்கம் என்றும் சிலர் அறியாமல் குழப்பி விடுகிறார்கள் என்கிறார். மிருதங்கம் முன்பு மண்ணால் செய்யப்பட்ட தோற்கருவி. மிருத் – மண்(மிருத்சங்கிரகணம் – மண் சேகரித்தல்). மத்தளமும் மிருதங்கமும் வேறு. மத்தளம்/எக்கமத்தளி ஆகிய சொல்லாடல் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் திருமுறைகளிலும் காணப்படுகிறது. “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத” என்பது ஆண்டாளின் அமுதத்தமிழ். நீண்ட உருளை வடிவ மரத்தை எடுத்து ஆதிமனிதன் வாய்பகுதிகளைக் குடைந்து தோலைக் கட்டினான். பிறகு இரு கைகளாலும் அடித்து மகிழ்ந்தான். பிற்காலத்தில் படிப்படியாக வளர்ந்தது நடுவில் இருந்து இரு பக்கங்களும் சரிந்து மத்தளம் ஆயிற்று.
மத்தளம், காளம் முதலிய இசைக்கருவிகளைக் கோயிலில் இசைக்கும் இசைக்கலைஞர்கள் உவச்சர் எனப்பட்டனர். சோழர் காலக் கல்வெட்டுகளில், உவச்சரைப் பற்றி நிறையக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. இவர்களின் இசைப்பணியைக் கல்வெட்டுகள் “உவச்சு, உவச்சுப்பணி” என்று குறிப்பிடுகின்றன. உவச்சர்களுக்குக் கோயில் சார்பாக நிலம் மானியமாகக் கொடுக்கப்பட்டது. இதை “உவச்ச விருத்தி”, “உவச்சுப்புறம்” ஆகிய கல்வெட்டுச் சொற்கள் சுட்டுகின்றன. தஞ்சையை அடுத்த தில்லைதானம் தானேசுவரர் கோயிலில் ”மத்தளம் எட்டும், கரடிகை ஒன்றும், கண்டை ஒன்றும், திமிலை ஒன்றும்” என்கிற கல்வெட்டு தொடர் காணப்படுகிறது.
நெடுங்களம் கோவிலின் உள் சுற்றின் தென்பகுதித் தரையில் கால்பட்டே தேய்ந்து போயிருக்கும் முதலாம் ஆதித்தரின் கல்வெட்டு, வீரதொங்கபுரத்து இறைவருக்குத் தோடன் காடன் வழங்கிய இசைக்கருவிகளையும் பரிகலங்களையும் அடையாளம் காட்டுகிறது. இரண்டு காளங்கள், ஒரு மத்தளம், மூக்கு மத்தளம் ஒன்று என இசைக்கருவிகளும், பரிகலம் இரண்டு, சட்டுவம் ஒன்று எனப் பாத்திரங்களும் இவரால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் அரிய செய்தி மூக்கு மத்தளம். தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்களில் மத்தளங்கள் முழக்கப்பட்டுள்ளன. ஆனால், மூக்கு மத்தளம் நெடுங்களம் கோயிலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டும் மூக்கு மத்தளம் பற்றிக் குறிப்பிடுவது சிறப்புக்குரியதாகும். திருக்குரக்குத்துறை கோயில் கல்வெட்டில் திருவாராதனையின்போது மத்தளம் அடிப்பவர் மூவர்,
கரடிகை(சிவ பூசையில் கரடி!!) என்ற தாளக் கருவி இசைப்பவர் ஒருவர்; கைத்தாளம், பாடகம், சேகண்டிகை ஆகியவற்றைத் தனித்தனியே ஒலிக்கும் மூவர் என இசைக் கலைஞர்கள் எழுவருக்கும் உரிய ஊதியம் அளிக்கவும் எக்காளம் என்னும் இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் இருவருக்கும் வருவாய் அளித்திடவும் வகை செய்ததை கல்வெட்டு விவரிக்கின்றது. திருவேள்விக்குடி கோவில் கல்வெட்டின் மூலம் அங்கு வழிபாடு நடக்கும் நேரங்களில் பறை ஒன்று, மத்தளம் நான்கு, சங்கு இரண்டு, காளம் இரண்டு, செகண்டிகை ஒன்று, தாளம் ஒன்று, கைம்மணி இரண்டு ஒலிக்கப்பெற்று வந்தன என்று அறிகின்றோம்.
மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயிலில் "மத்தளப் பெருமாள்" என்று பொறிக்கப்பட்ட தூண் சிற்பம் உள்ளது. இவர் இக்கோயில் இறைப்பணி செய்து புகழ் பெற்றவராக இருக்கவேண்டும். மதுரை கோவிலில் நந்தி தேவர் மத்தளம் இசைக்கும் சிற்பம் உள்ளது.
திருவரங்கத்தில் பெருவிழா கொடியேற்ற நாட்களில் நம்பெருமாள் முன்பு ஐந்துபடி நெல்லைக் கொட்டி, அதன்மேல் பேரிமத்தளத்தை வைத்து வழிபாடு நடத்தப்படும். உப்பு போடாமல், நிறைகட்டி வடிக்கப்பட்ட பொங்கல் சாதத்தால் நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். பின்னர், இக்கருவியை வாசிக்கும் கலைஞருக்கு காப்புக்கட்டி புதுத்துண்டால் தலைப்பாகை அணிவிக்கப்படும். இச் சடங்கு நிறைவுற்றதும் பயபக்தியோடு இக்கருவியை வாசிக்கத் தொடங்குவார் அக்கலைஞர் (தற்காலத்தில் வாசு/ரஞ்சித்குமார் ஆகியோர் இத்தொண்டை புரிகின்றனர்). விழாக் காலம் முழுதும் காலை, மாலை வேளைகளில் இந்த மத்தளம் வாசிக்கப்படும். அதன் பிறகு, மீண்டும் வழிபாடு நடத்தி பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். “இம்மத்தளத்தில் ஒலிக்கும் இசை அதிர்வூட்டும் பேரிசை என்பதால் பேரிமத்தளம் என்று பெயர் வந்தது’’ என்கிறார் ரங்கநாதர் கோயிலில் இக்கருவியை வாசிக்கும் வாசு.
தென் தமிழகத்திலும் கேரளத்தின் சில பகுதிகளிலும் பஞ்ச வாத்தியம் என்று ஒரு மரபு உண்டு. இது செண்டை மேள பஞ்ச வாத்தியத்தில் இருந்து வேறுபட்டது. இக்குழுவில் திமிலை, பேரிமத்தளம், சங்கு,சேமக்கலம் மற்றும் மணி ஆகிய ஐந்து கருவிகள் முழக்கப்படுகிறது. செண்டை மேள பஞ்ச வாத்தியம் போலவே ஆரவாரமும் துள்ளலும் மிக்கது.
சுத்தமத்தளம் நந்தி வாத்தியம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் கோவில்களில் நந்திதேவர் சுத்த மத்தளம் இசைக்கும் சிற்பங்களும்/ஓவியங்களும் ஏராளம் காணக்கிடைக்கின்றன. தமிழகத்தில் பண்டைக் காலத்தில் நட்டு மட்டு என்பது வழக்கிலிருந்தது. நட்டுவானார் மற்றும் முட்டுக்காரர் கோவில் விதிமுறைக்கு உட்பட்டு ஆடல் மரபுகளை நட்டுவானார்களும், சுத்த மத்தளத்தை முட்டுக்காரர்களும் இசைத்து வழிபாடு சடங்குகள் நடத்தி வந்தனர். இவர்கள் அல்லாமல் தேவமகளிர் ஆடல் நிகழ்த்தியும் வந்தனர். நட்டுவானர், முட்டுக்காரர் மற்றும் தேவமகளிர் பஞ்ச மூர்த்தி கவுத்துவம், நவ சந்தி கவுத்துவம் போன்ற ஆடல் வகைகளை நிகழ்த்தி வந்தனர். தேவமகளிர் முறை ஒழிக்கப்பட்ட பின்பு நட்டுவானர்களுக்கும் முட்டுக்கார்களுக்கும் கோவில்களில் வேலை இல்லாமல் போனது. முட்டுக்காரர்கள் மரபு மட்டும் ஒரு சில கோவில்களில் இருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு செல்ல ஆட்கள் இல்லை. திருக்குடந்தை ஆராவமுதன் கோவில் மற்றும் மன்னார்குடி ராசகோபாலர் கோவில்களில் முட்டுக்காரர்கள் இருந்தாலும் அவர்கள் தற்காலத்தில் மிருதங்கம் தான் இசைத்து வருகிறார்கள். மத்தளம் செய்பவர்கள் இல்லாத சூழலில் குடந்தை, மன்னார்குடி போன்ற கோவில்கள் மிருதங்கத்திற்கு மாறி இருக்கலாம்.
திருவாரூர் தியாகராசர் கோயிலில் பாரசைவர் மரபினர் சுத்தமத்தளம் வாசிக்கிறார்கள். தற்காலத்தில் சிவத்திரு சுமதி அம்மையார் என்பவர் திருவாரூர் கோவிலில் இசைத்து வருகிறார். இக்கோயிலின் பெருந்திருவிழாவில் சந்திரசேகரர் உற்சவத்தில் பிரகார உலா வரும் சுவாமி, ஈசானியத் திசையில் எழுந்தருளும்போது ‘பூதநிருத்தம்’ என்ற நிகழ்ச்சியின் பொழுதும், தினசரி திருவந்திக்காப்பு மற்றும் ஏனைய தீப ஆராதனை நிகழ்ச்சிகளிலும் சுத்தமத்தளம் வாசிக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் பெருந்திருவிழா காலத்தில் மட்டும் இக்கருவி இசைக்கப்படும். திருவாரூரில் வாசிக்கும் கலைஞரே இங்கும் வந்து வாசிப்பார். திருமதி சுமதி அம்மையார் கூறுகையில் “எங்கள் பரம்பரையினர் தியாகேசனுக்கு பஞ்சமுக வாத்தியம், சுத்தமத்தளம் வாசித்து சேவை செய்கின்றனர். தந்தை இறப்பிற்கு பின் ஆண் பிள்ளை இல்லாததால் இந்த சேவையை கடந்த இரண்டரை வருடங்களாக நான் செய்து வருகிறேன். கடந்த நூறு நாட்களாக கொரோனா தொற்றால் தியாகேசனுக்கு விழாக்கள் கோயில் உள்ளேயே நடந்தது. கிட்டத்தட்ட ஆறு முறை தியாகேசன் அஜபா நடனத்துடன் புறப்பட்டு யதாஸ்தானம் ஜுன் 24ந்தேதி சென்றார். இந்த ஆறுமுறையும் இந்த அறுபது கிலோ எடையுள்ள சுத்தமத்தளத்தை நானும் எனது மகளும் அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப வாசித்தோம். இதில் மற்றொரு சிறப்பு தியாகேசனுக்கு அந்த காலத்தில் சுத்தமத்தளம் மட்டும் தான் வாசித்து புறப்பாடு நடந்துள்ளது. அதே போன்று இந்த முறை எந்த வாத்தியமும் அவருக்கு வாசிக்க அனுமதி இல்லை என்பது சிறப்பு. பெண்களாகிய நானும் எனது மகளும் வாசிக்க, அவர் ஆரூரா தியாகேசா என்று விண்ணதிர கிளம்பி நாங்கள் வாசிக்க வாசிக்க அவர் ஆடியது நாங்கள் பெற்ற பாக்கியம். சுத்த மத்தளத்தை கழுத்தில் மாட்டியவுடன் தியாகேசன் வந்து அமர்ந்தது போல இருக்கும் எங்களுக்கு.”
திருக்கண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜ பெருமாள் கோவிலில் பெருவிழாவில் பெருமாள் பிரம்மாவாகவும் சிவனாகவும் காட்சித்தரும் நிகழ்வுகள் ஒரு நாளில் நடைபெறுகிறது. அப்படி வெள்ளை சாற்றி எனப்படும் விழாவில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் தியாகராஜரை போன்று அலங்காரம் செய்து வீதியுலா புறப்படும் வேளையில் சுத்தமத்தளம் இசைக்கப்படுகிறது. அன்று மட்டும் தவண்டை, பிரம்ம தாளம் ஆகியவையும் இசைக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெருந்திருவிழா காலத்தில் மாசிவீதிகளில் இக்கருவியை இசைப்பார்கள். மேலும், புட்டுக்கு மண்சுமத்தல் மற்றும் கழுவேற்று திருவிளையாடலின்போதும் இக்கருவி இசைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்காலத்தில் வழக்கொழிந்து விட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது, சுத்தமத்தளம் மூலம் தாண்டவ ஜதிகள் இசைக்கப்படும். ஆனி/மார்கழி பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் சுத்தமத்தளத்திற்கு பூசைகள் செய்து அது முழக்கப்படுகிறது. மிகப்பழமை வாய்ந்த இந்த இசைக்கருவி சில கோயில்களில் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. முறைப்படி இசைப்பவர்களும் அருகி வருகிறார்கள். தமிழர் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் கலந்த இந்த இசைக்கருவி கேரளாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. அம்மாநிலத்தின் பண்பாட்டுக் கலையான கதகளி ஆடுகையில் இசைக்கப்படும் பஞ்சவாத்தியத்தில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. வடமாநிலங்களில் ‘பக்குவாஜ்’ என்ற பெயரில் இக்கருவியை ஒத்த ஒரு இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழர்களின் பெருமைக்குரிய இந்த இசைக்கருவி வழக்கொழியும் நிலையில் இருக்கிறது. கவன மத்தளம், பலி மத்தளம் , சுத்து மத்தளம் என்று பல்வேறு மத்தள வகைகள் அண்மைக் காலம் வரை புழக்கத்தில் இருந்து தற்போது வழக்கொழிந்து விட்டன.
தமிழகத்தில் வட தமிழகத்திற்குரிய தெருக்கூத்துக்கலையில் மத்தளம் இசைக்கப்படுகிறது. இது சுத்த மத்தளத்தை ஒத்தும் மிருதங்கத்தில் இருந்து வேறுபட்டும் உள்ளது. மேற்கு தமிழகத்தின் கூத்து மரபிலும் மத்தளம் துணைக்கருவியாக இசைக்கப்படுகிறது. ஈழவள நாட்டில் குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசங்களில் நடைபெறும் தென்மோடிக் கூத்து மற்றும் வேறு சில கூத்து வடிவங்களில் மத்தளம் இசைக்கப்படுகிறது. இதுவும் சுத்த மத்தளத்தை ஒத்து இருக்கின்றது. அண்ணாவிமார் என்று அழைக்கப்படும் மக்கள் இந்த மத்தளத்தை இயக்குவதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.
புழக்கத்தில் உள்ள இடங்கள்:
பேரி மத்தளம்
· திருவரங்கம் அரங்கநாதர் கோயில்
சுத்த மத்தளம்
· திருவாரூர் தியாகராஜர் கோவில்
· சிதம்பரம் ஆடல்வல்லான் கோவில்
· திருச்செங்கோடு மாதொருபாகர் கோவில்
· திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவில்
பாடல்:
திருமுறை 11, காரைக்காலம்மையார்
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே
திவ்யபிரபந்தம், திருமங்கையாழ்வார்
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி
குழல்களும் கீதமு மாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பன ராகி எங்கும் உள்ளம் விட்டுஊண் மறந்தொழிந் தனரே –
திவ்யபிரபந்தம், தொண்டரடிப்பொடியாழ்வார்
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மா பள்ளி யெழுந்தரு ளாயே!
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே – திருப்புகழ்
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே - திருப்புகழ்
காணொளி:
சுத்த மத்தளம்
https://www.youtube.com/watch?v=2rfL--tKY7s
https://www.youtube.com/watch?v=EmGaEqCpBb0
https://www.youtube.com/watch?v=CVkcNaKY6KE
https://www.youtube.com/watch?v=W2WMIhOcGes
https://www.youtube.com/watch?v=us8o9SXAhHk
youtube.com/watch?v=ZMtPzBBTwok
பேரி மத்தளம்
இலங்கை:
https://www.youtube.com/watch?v=-Fq-dZ7Yz3M
https://www.youtube.com/watch?v=bb5s6EyzZaw
https://www.youtube.com/watch?v=aRp83xMhpbo
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1. தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2, முனைவர் வீ.ப.கா சுந்தரம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. சிவத்திரு சுமதி அம்மையார், திருவாரூர் தியாகேசர் ஆலய இசைக்கலைஞர்
3. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
No comments:
Post a Comment