எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -04 பத்துவயதில் பாட்டிக்கு ஒரு கடிதம் !! ஆசான்களின் ஆசியுடன் வளர்ந்த ஆக்க இலக்கியம் !! - முருகபூபதி

நான் பிறந்து வளர்ந்த இலங்கையில்  2020 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் முடிந்திருக்கும் வேளையில், எனது தொடரின் 04 ஆவது அங்கம் இங்கே பதிவாகின்றது.

இலங்கையில் பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த அரசியல்வாதிகளில் பலருக்கு சோதிடத்தில் நம்பிக்கை அதிகம். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதியையும் சோதிடரிடம் சென்று கணித்துவிடுவார்கள்.

அடிக்கடி தாங்கள் பிறந்த ராசி – நட்சத்திரத்திற்கு ஏதும்சிக்கல் வந்துவிட்டால், ஆலயங்கள் சென்று விசேட பூசைகள் நடத்தி பரிகாரமும் செய்துகொள்வார்கள்.

இலங்கையில் பல பெளத்த அரசியல் தலைவர்கள் அடிக்கடி  கடல் கடந்து திருப்பதிக்குச்  சென்று வரும் காட்சிகளையும்  பார்த்திருப்பீர்கள். பௌத்த பிக்குகளை அழைத்து பிரித் ஓதி மணிக்கட்டில் மந்திரித்த நூலும் கட்டிக்கொள்வார்கள்.  ஆனால்,  நீண்ட நாட்களுக்கு  அதனுடன் வாழ்வதனால், அதில் கண்ணுக்குத் தெரியாத  வைரஸ்கள் படிந்திருப்பதும் அவர்களுக்குத் தெரியாது.

அவர்களே வைரஸ் காவிகளாகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தேசத்தில்  தீவிர இந்து மதநம்பிக்கைகள் கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்திருக்கும் எனக்கும், பிறந்த நாள், நட்சத்திரம் பார்த்து சோதிடமும் கணித்தார்கள். இன்றும் அந்த சோதிடக்குறிப்பு புத்தகம்  அம்மாவின் நினவாக என்வசம் இருக்கிறது.

குடும்பத்தில் நான் மூத்த ஆண்வாரிசு என்பதனால் எனது அம்மா, அடிக்கடி வீட்டுக்கு வரும் சோதிடர்களிடம் எனது சாதகம் காண்பித்து பலன் கேட்பார்கள். இந்தப்பழக்கத்தை நான் மூன்று குழந்தைகளுக்குத்  தந்தையாகி அவர்கள் வளர்ந்ததன் பின்னரும், தொடர்ந்தார்கள். என்வாழ்வில் விதி அடிக்கடி  விளையாடியதனால்தான் அவ்வாறு தான் நடந்துகொண்டதாகவும் சொன்னார்கள்.  “ இனி நான் அதனுடன் விளையாடிப்பார்க்கின்றேன்  “ என்று அவர்களுக்கு தேறுதலும் சொல்லியிருந்தேன்.

 அம்மாவின் அந்தப்பழக்கத்திற்கு என்னால் முற்றுப்புள்ளி இடமுடிந்தது அவர்களின் மறைவிற்குப்பின்னர்தான்.

அம்மா சாத்திரக்காரர்களிடம் எனது சோதிடக்குறிப்பினை காண்பித்து பலன் கேட்கும்போது, அருகிலிருந்து வேடிக்கை பார்த்திருக்கின்றேன். துடுக்குத்தனமாக கேள்விகள் கேட்டு சினமூட்டியுமிருக்கின்றேன்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள்  பிறந்தவுடன் அவர்களின் எதிர்காலம் குறித்த கனவுகள் நிறைய வரும்.  வரும் சோதிடர்களும், உங்கள் பிள்ளை இப்படி வருவான்… அப்படி வருவான் என்று புளுகித்தள்ளிவிட்டு  கறக்கவேண்டியதை கறந்துகொண்டும் போய்விடுவார்கள்.

யாரோ ஒரு சோதிடர்,  “ உங்கள் மகன் டாக்டராக வருவான். அவனை விஞ்ஞானம் படிக்கவையுங்கள்  “ எனச்சொல்லிவிட்டார்.  எனது தலைவிதியை அவ்வாறு அவர் குறிப்பிலும் எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டார்.

ஆனால், பெற்றோரும் அந்த சோதிடரும் எதிர்பார்த்தவாறு நான் மருத்துவம் படிக்கவில்லை.  நான்  சிறிய வயதிலிருந்தே கதைகேட்டு வளர்ந்தவன்.                                                                

எனது குரு எனது பாட்டி தையலம்மாதான். அவர்கள்தான் எனது ஆதர்சம்! அம்மாவின் அம்மா. இந்தப்பாட்டி பற்றி சொல்லித்தீரமுடியாத பக்கங்கள் பலவுண்டு.

பாட்டி அடிக்கடி அம்மாவுடன் வாக்குவாதப்பட்டு கோபித்துக்கொண்டு ஆலய தரிசனங்களுக்கு சென்றுவிடுவார். அவர் செல்லும் ஸ்தலங்கள் இலங்கையில் பாடல் பெற்ற திருத்தலங்கள். அத்துடன் பாட்டி முருக பக்தை. அடிக்கடி கதிர்காமம் சென்று மொட்டை அடித்து காவடியும் ஆடிவிட்டுத்தான் வருவார்கள்.

முன்பொரு காலத்தில் திஸ்ஸமகராமையிலிருந்து கட்டுச்சோற்றுடன் பாதயாத்திரையாக கதிர்காமம் சென்று வந்த தகவல்களையும் எனக்கு கதைகதையாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு தடவை பாட்டி கதிர்காமத்திலிருந்து எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாட்டிக்கு எழுதத்தெரியாது. எழுத்துக்கூட்டித்தான் வாசிப்பார்கள். ஆனால், கைதேர்ந்த பாட்டி வைத்தியம் தெரிந்தவர்கள்.

 கதிர்காமத்தில்  தெய்வானை அம்மன் கோயில் பூசகரிடம் சொல்லி எழுதப்பட்ட கடிதம் அது. கொப்பித்தாளில் அரைப்பக்கம்தான் இருக்கும். எனது பெயருக்கு வந்தது.  எங்கள் வீட்டுக்கு வரும் தபால் சேவகர் மணியடித்து முருங்கா பதி என்றார். அவர் சிங்களவர். முருகபூபதி அவர் நாவில் முருங்காபதியாகிவிட்டது. அவரும் பாட்டியைப்போன்று தமிழை எழுத்துக்கூட்டித்தான் வாசித்தார்.

அக்காலப்பகுதியில் எங்கள் வீட்டில் ஒருபகுதியில்  இளம் தம்பதியர் வாடகைக்கு குடியிருந்தனர். எங்கள் பாடசாலைக்கு ஆசிரியராக மாற்றம் பெற்றுவந்த அவரது பெயர் இராமலிங்கம். வடபுலத்தில் வேலணையைச்சேர்ந்தவர். அவருடை மனைவியை நாம் மாமி என்றுதான் அழைப்போம். அவர்களுக்கு அப்போது பிள்ளைப்பாக்கியம் இல்லை. அதனால் என்னையும் எனது சகோதரங்களையும் தங்கள் பிள்ளைகளாக நேசித்தார்கள்.

மாமி ஏதும் தின்பண்டங்கள் செய்தாலும் எமக்கும் தந்துதான் சாப்பிடுவார். நான் மாமிக்கு, கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிவந்து கொடுப்பது முதல்,  கடைக்குச்சென்று அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கிவருவது வரையில்  பணிவிடைகளும் செய்வேன்.

பாட்டியின் கடிதம் வந்ததும், முதலில் மாமிக்குத்தான் வாசித்துக்காண்பித்தேன்.  “   நன்றாக படிக்கவேண்டும். குழப்படி செய்யக்கூடாது.   “ என்று வழக்கமான புத்திமதிகளுடன் அச்சிறிய கடிதம் எழுதப்பட்டிருந்தது.

 “ மாமி… நான் பாட்டிக்கு கடிதம் எழுதப்போகிறேன்  “ என்றேன்.

 “ உனக்கு எழுதமுடியுமா..?  “

 “ ஓம்…. எழுதமுடியும்  “


எனது பாடசாலைக்கொப்பியில் நடுப்பக்கத்தை கிழித்தெடுத்து எழுதினேன். எழுதியதை மாமிக்கு வாசித்துக்காண்பித்தேன்.  உடனே  அவர்கள் சொன்ன வார்த்தை:   “ கெட்டிக்காரன்…. பெரிய எழுத்தாளனாகத்தான் வரப்போகிறாய்  “ மாமியே கடித உறையும் முத்திரையும் வாங்கித்தந்தார். 

நான் பெரிசோ… சிறிசோ….. தெரியாது…! இறுதியில் அந்த மாமி சொன்ன சாத்திரம்தான் பலித்தது. இந்த வரிகளை பார்ப்பதற்கு அம்மா, பாட்டி, மாமி , முகம் மறந்துபோன அந்த சோதிடர் இல்லை.

நீர்கொழும்பில் இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, 1954 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று விவேகானந்த வித்தியாலயமாக தோன்றிபோது எனது மூன்று வயதில் மேலும் 31 மாணவர்களுடன் அங்கே சேர்க்கப்பட்டேன். எனது பாடசாலை சேர்விலக்கம் ஒன்று.  எனது ஆசான்கள் பண்டிதர் க. மயில்வாகனன், பெரியரீச்சர் என நாம் அழைக்கும் திருமதி திருச்செல்வம்,  மற்றும்  ஆசிரியை திலகமணி,   அவர்களைத் தொடர்ந்து வந்த சுப்பிரமணியம் தம்பதியர், உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர், அல்ஃபிரட் நிக்கலஸ் ஆகியோரெல்லாம் என்னைப்பொறுத்தமட்டில் சிறந்த கதை சொல்லிகள்.

இங்கு நான் குறிப்பிடும் சுப்பிரமணியம் ஆசிரியரதும் அவரது துணைவியார்  ஆசிரியை சிவஞானசுந்தரியினதும் புதல்விதான், கனடாவில் வதியும் எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி.

பெரியரீச்சர், பாடசாலைக்கு முன்பாக வளர்ந்திருந்த பெரிய அரசமரத்தின் நிழலில் ஒரு ஆசனத்தில் அமர்ந்தவாறு சிறுவர் கதைகள் சொல்லித்தந்தவர்.  திலகமணி ரீச்சரும் அவ்வாறே சிறுவர்கதைகளுக்கு நாடக வடிவம் தந்து எம்மைப்பழக்குவார். பின்னாளில் இலங்கை வானொலியில் புகழ்பெற்ற நாடகக் கலைஞராக திலகா தில்லைநாதன் என்ற பெயரில் அறிமுகமானவரும் இவர்தான்.

உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர், பின்னாளில் சிறந்த வில்லுப்பாட்டுக்கலைஞராக அறியப்பட்டவர்.  எமக்கு இராமயண – மகாபாரதக்கதைகளை சொல்லித்தந்தவர். ஆசிரியர் அல்ஃபிரட் நிக்கலஸ் எங்கள் ஊரின் முன்னக்கரை பிரதேசத்தில் கிறிஸ்தவ நாடகங்கள் பலவற்றை நெறியாள்கை செய்தவர். அத்துடன் ஒப்பனைக்கலைஞர்.

எமக்கு செவ்விந்தியர் நடனம் பழக்கியவர்.

“  சினா முனா கொமரியம்மன்…. ஓ கமன கமுசுவெலா… “   இந்தப்பாடலை அர்த்தமே தெரியாமல் மீண்டும் மீண்டும்  இராகத்துடன் சொல்லி ஆடியிருக்கின்றோம். 

பண்டிதர் க. மயில்வாகனம் என்னையும் ஒருகரகாட்டக்காரனாக்கியவர். இது பற்றி எனது சொல்லத்தவறிய கதைகள் நூலிலும் எழுதியுள்ளேன்.


சுப்பிரமணியம் ஆசிரியரும் அவரது மனைவி சுந்தரி ரீச்சரும் நான் அங்கே ஆறாம் வகுப்பிலிருக்கும் வரையில் பாடம் எடுத்தவர்கள்.  தமிழ்ப்பாடத்தையும் சரித்திரம், பூமிசாஸ்திரம், குடியியல் முதலான பாடங்களையும்   தொடக்கத்தில் இவர்களிடம்தான் முறையாக கற்றேன். நான் யாழ்ப்பாணம் புறப்பட்டபோது இந்த ஆசிரியர்கள் அனைவரதும் பாதம் பணிந்து வணங்கிவிட்டுத்தான் சென்றேன். இதற்கெல்லாம் ஒரு நேரடிச்சாட்சியாக  இன்றும் இருப்பவர் எனது மாமா மகன் முருகானந்தன். தற்போது தமிழ்நாடு கோயம்புத்தூரில் இருக்கிறார்.  இதற்கு முதல் வெளியான அங்கம் 03 இல் இடம்பெற்ற மச்சாள் தேவசேனாவின் தம்பி.

 “ உன்னாலே அவன் கெட்டான். அவனாலே நீ கெட்டாய் “  என்பது  எங்களிருவரதும் குழப்படிகளை பொறுக்கமுடியாத அத்தை ( முருகானந்தனின் அம்மா )  உதிர்க்கும் பொன்னான வார்த்தைகள்!

இவ்வாறு கதைசொல்லிகள், கலைஞர்களை ஆசான்களாகப்பெற்றிருந்த என்னை,   எனக்கும் தங்களுக்கும் தெரியாமலேயே செதுக்கியவர்கள்  அவர்களாகத்தான் இருக்கும் என்று இன்றும் நம்புகின்றேன்.

புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரிக்குச் சென்றபோது எமது வகுப்பில் சரித்திர பாட ஆசிரியை திருமதி பாலசிங்கம். அவர் கற்பித்த சரித்திர பாட நூல் எனக்கு கதைப்புத்தகமாகத்தான் காட்சியளித்தது.  அதனால்,  பரீட்சையில் எனக்கு நூறு புள்ளிகள் கிடைத்தன. ஏனைய மாணவர்களை மனதில்இருத்திய அந்த ஆசிரியை என்னை அருகே அழைத்து,   “   மற்றமாணவர்களை கவனத்தில் கொண்டு  உனக்கு 99 புள்ளிகள்தான் தருவேன்.  “ என்றார்.

நான் விரும்பிப்படித்த பாடம் சரித்திரம். ஆனால், பெற்றோரின் விருப்பம் வேறாக இருந்தது.

 “ உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்தமான பாடங்களை படிக்கவிடுங்கள். அதுவே நீங்கள் அவர்களுக் செய்யும் பேருதவி  “ என்று எனது சொந்த அனுபவத்தில் இக்கால பெற்றோர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன். உங்கள் எதிர்பார்ப்புகள், கனவுகளை அவர்களிடத்தில் திணித்து, அவர்களை சிரமப்படுத்தாதீர்கள். எனது கனவு அந்த  இளம் வயதில் கருகியதை நினைத்தால் இன்றும் வருத்தம்தான். பிற்காலத்தில் சரித்திர ஆய்வுகளிலும் இலக்கிய வரலாறுகளிலும் நான்  ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு அந்த இளம்பருவத்தில் கருகிப்போன ஆர்வமாகத்தான் இருக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றம் பெற்று நீர்கொழும்பு அல்ஹிலால்  மகா வித்தியாலயத்திற்கு வந்தபோது தமிழ்ப்பாட ஆசிரியர் சுபியான் அவர்கள்தான் எமக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர்.

பிரதி வெள்ளிக்கிழமைதோறும் அவர் தமிழ்ப்பாடம் எடுக்கும்போது,  ஒரு கட்டளையை மறக்காமல் விடுப்பார்.

வாரவிடுமுறையில் ( ஞாயிறன்று ) வெளியாகும் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றைப்படித்து, அதில், ழகர , லகர, ளகர,  ரகர, னகர, ணகர, நகர சொற்கள் வரும் செய்திகளிலிருந்து  பத்துப்பத்து வரிகள் எழுதிக்கொண்டு வரல்வேண்டும்.

அவ்வாறுதான் ஆசிரியர் சுபியான் அவர்கள் எமக்கு பத்திரிகை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டினார்.

எனது ஆசான்களை நான் மறப்பதேயில்லை. இலக்கியவாதியாக  பத்திரிகையாளனாக மாறியபின்னர், அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில்,  அவர்களையெல்லாம் தேடிச்சென்று பார்த்து அவர்கள் கால் பணிந்து ஆசீர்வாதம் பெற்றுவருவதும் எனது வழக்கமாக இருந்தது.

1975 இல்   எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் பிரதியுடன் பண்டிதர் மயில்வாகனன் அவர்களை அவரது சித்தங்கேணி, வேல்வாசம் இல்லம் தேடிச்சென்று கொடுத்து வணங்கியபோது, தனது மனைவியாரை அழைத்து,   “ இவன் எப்படியோ வரவேண்டும் என்று இவனைப்பெற்றவர்களும் நானும் விரும்பினோம். ஆனால், இவன் இப்போது வேறு ஒரு கோலத்தில் வந்து நிற்கிறான்.  “ எனச்சொல்லிவிட்டு,    “  விதியே உனது வாழ்வை எழுதிச்செல்லட்டும்  “ என்று ஆசிர்வதித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டிதர் மயில்வாகனன் அவர்களது நூற்றாண்டு விழா பாரிஸ் மாநகரில் நடந்தபோது அதிலும் கலந்துகொண்டு அவருடைய ஆத்மாவுக்கு நன்றி தெரிவித்தேன். எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலையும் அவருக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்.

எனது பாட்டி சொன்ன கதைகள்   நூலை எமது அருமைப்பாட்டிக்கும்,  சந்திப்பு நேர்காணல் தொகுப்பு நூலை அம்மாவுக்கும், இலக்கிய மடல் கட்டுரை நூலை அப்பாவுக்கும், கடித இலக்கியங்கள் இடம்பெற்ற   கடிதங்கள் நூலை எனது ஆசிரியை திருமதி திருச்செல்வம் ஆசிரியைக்கும் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

பறவைகள் நாவலுக்கு சாகித்திய விருது கிடைத்தபோது, அந்த விருதுடன் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் கம்மல்துறை என்ற முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஊரில் வாழ்ந்த சுபியான் ஆசிரியரிடம் சென்று விருதைக்காண்பித்து ஆசிர்வாதம் பெற்றேன். அவர் தனது துணைவியாரையும்  பிள்ளைகளையும் அழைத்து,  “   இதோ… பாருங்கள். 1965 ஆம் ஆண்டில் என்னிடம் தமிழ் கற்ற மாணவன், இத்தனை  வருடங்களுக்குப்பின்னரும் என்னை மறக்காமல், அவுஸ்திரேலியாவிலிருந்து தேடிவந்து ஆசிபெறுகிறான். இந்த பண்பாட்டுக்கோலத்தை எம்மவர்களும் பின்பற்றவேண்டும்  “ என்றார்.

திருமதி திருச்செல்வம் ஆசிரியை அவர்களை 2007 இல் கனடா வரையில் தேடிச்சென்று ஆசிகள் பெற்றேன். இன்றும் நீர்கொழும்பில் எண்பத்தியைந்து வயது கடந்து வாழ்ந்து வரும் ஆசிரியை திலகமணி அவர்களை இலங்கை செல்லும்போதெல்லாம் பார்த்து ஆசிபெற்றுவருகின்றேன்.

எனது ஆசான்கள் பற்றியெல்லாம், 2015 ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட நெய்தல் ( நீர்கொழும்பு வாழ்வும் வளமும் ) நூலிலும் எழுதியுள்ளேன்.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு தகவலையும் சொல்லவேண்டும்.

பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் இரண்டு  புதல்வர்கள், 1984 காலப்பகுதியில் வடபகுதியில் ஆயுதப்படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது,  சித்தங்கேணியில் கைதாகி தென்னிலங்கை பூசா இராணுவமுகாமிற்கு கொண்டுவரப்பட்டு  தடுத்துவைக்கப்பட்டனர்.

அவர்களை விடுவிப்பதற்காக என்னிடம் ஆலோசனை பெறுவதற்கு பண்டிதர் அவர்கள் வந்தபோது, நான் வீரகேசரி ஆசிரியர் பீடத்திலிருந்தேன்.

எனக்கிருந்த தொடர்புகளினால், அவரை  பாதுகாப்பாக பூசா முகாமுக்கு மகன்மாரைப்பார்ப்பதற்கு  அனுப்பிவைத்தேன்.

 “ நீ  பத்திரிகையாளனாக இருந்தமையால்தான் உன்னைத்தேடி வந்தேன்.  நாம் ஏதோ நினைத்தோம்…. எங்கள் விருப்பத்திற்கு மாறாக  பத்திரிகையாளனாக வந்தாய்.  நன்றாக இருக்கவேண்டும்  “ என்று என்னை வாழ்த்தினார்.  எனினும் அன்றிருந்த நெருக்கடிகளினால், அந்த மகன்மார் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் விடுதலையும் தாமதமானது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தபின்னர் அனைத்து அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பில் விடுதலையானார்கள். அப்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன். 

எங்கிருந்தாலும் எனக்கு தமிழ் கற்பித்த ஆசான்களை நான் மறப்பதில்லை.  எனது எழுத்துலக வாழ்வின்  ரிஷிமூலம் பாட்டியும் ஆசான்களும்தான்.

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments: