அடியாத மாடு - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

’அடியாத மாடு படியாது’ என்று ஊர் வழக்கில் கூறுவார்கள். அன்று கற்றுக் கொடுப்பவர் தனது மாணவரின் தப்புகளைத் திருத்தும் போது அடிப்பது வழக்கம். அப்படி அடிப்பது முறை என்று கருதிய காலம் ஒன்று இருந்தது. இன்று போல பிள்ளைகளை அடிக்கக் கூடாது; அடிப்பது அவர்களின் மனோ வளர்ச்சியைப் பாதிக்கும் என யாரும் அன்று கருத வில்லை. அல்லது அன்று அடி வாங்கிப் படித்தவர்கள் யாரும் அடி பட்டதால் மனத்தாங்கல் ஏற்பட்டுப் பின் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களின் வாழ்க்கையை அது பாதித்து விட்டதாகவும் யாரும் கூறவில்லை.இவ்வாறு திண்ணைப்பள்ளிக் கூடத்திலே அடி வாங்கிப் படித்தவர் தான் டாக்டர். உ.வே.சாமிநாதய்யர். பிற்காலத்திலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மேதை அவர். இவர் தனது சுயசரிதையில் தான் ஆரம்பகாலத்தில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் கற்றதை விளக்குகிறார்.

அதிகாலையில் எழுந்து திண்ணைப்பள்ளிக் கூடம் போக வேண்டுமாம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன். இருட்டாக வேறு இருக்கும்; அச் சமயத்தில் ஆசிரியருக்கு யார் வந்தனரெனத் தெரியாது. இப்போது மாதிரி என்ன மின்சார விளக்குகளா அந்தக் காலத்தில்? ஆசிரியர் சிறிது செருமுவார் - தான் இருப்பதை அறிவிக்க. அப்போது மாணவர் தனது பெயரைக் கூறுவார். ஓரிரு மாணவர்கள் வந்து சேர்ந்ததும் அடுத்து வரும் மாணாக்கருக்குக் கையை நீட்டச் சொல்லி ஆசிரியர் பிரம்பால் தடவுவார்.

பிரம்பாலே முதலில் கையில் தடவிய ஆசிரியர் அடுத்து வரும் மாணவருக்கு சிறிது உரமாக அடிப்பார். இவ்வாறு ஒவ்வொரு மாணவருக்கும் படிப்படியாக அடியின் வேகம் கூடும். கடசியாக வருபவருக்கு நல்ல அடி கிடைக்கும். ஏன் இப்படி அடிக்கிறார் என எண்ணுகிறீர்கள்? மாணவர் யாவரும் விடியற்காலை கருக்கல் பொழுதாக இருக்கும் பொழுதே திண்ணைப்பள்ளிக் கூடத்துக்கு வந்து விட வேண்டும். இது தான் படிக்கும் மாணவருக்கு இருக்க வேண்டிய பண்பு எனக் கருதப்பட்ட காலம் அது!


இதே போல் தான் இசை, வாத்தியம் போன்ற நுண்கலைகலையும் கற்றுக் கொண்ட மாணவர்கள் தம் ஆசிரியர்களிடம் அடியும் உதையும் பெற்றுத்தான் கலையைக் கற்றார்கள். நாதஸ்வரச் சக்கரவர்த்தி என யாவராலும் போற்றப்பட்டவர் நாதஸ்வர வித்துவான் ரீ. என். ராஜரட்ணம் பிள்ளை. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த வித்துவானாகப் போற்றப்பட்ட இந்த மேதையும் உ.வே. சாமிநாதய்யர் காலத்திலேயே வாழ்ந்தவர். இந்த இசைமேதையில் வாழ்விலிருந்து:-

நடேசபிள்ளையின் ( இவர் ரீ.என். ராஜரட்ணம் பிள்ளையின் மாமா ) நாதஸ்வர இசையை அள்ளிப் பருக பெருங் கூட்டம். நடேசபிள்ளையின் வாசிப்பு தேனாக ஊற்றெடுத்துப் பாய்கிறது. ஷண்முகப்பிரியா நாதப் பிரவாஹமாக பெருகுகிறது. கூட்டம் உன்மத்த போதையில் கிறங்கிக் கிடக்கிறது. நடேசபிள்ளையின் அருகில் 16 வயதுச் சிறுவன். அவரது ஸ்வீகார புத்திரனும் கூட. அவன் தான் அவருக்கு இரண்டாவது நாதஸ்வரம். இப்போது பிள்ளைவாள் சற்றே ஓய்வு கொள்ள, அந்தப் பையனின் வாசிப்புத் தொடர்கிறது.

அவர் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வருகிறார். ஷண்முகப்பிரியாவின் சஞ்சாரத்துக்கு இடையே ஒரு சின்ன அபசுரம். நடேசபிள்ளையின் கண்களிலே தீப்பொறி பறக்கிறது. நாதஸ்வரத்தை இடது கைக்கு மாற்றி விட்டு, வலது கையால் பையனைப் பளீர் பளீர் என நன்கு அறைந்து விடுகிறார். தொடர்ந்து சாராமாரியான வசவுகள். பையன் அவ்வளவு அடியையும் திட்டையும் வாங்கிக் கொண்டு பொறுமையாகத் திரும்ப வாசிக்கிறான். இம்முறை வாசிப்பு சுத்தமாக இருக்கிறது. இவ்வாறு கற்றுக் கொண்டவர் தான் பிற்காலத்திலே யாவராலும் போற்றப்பட்ட நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ரி.என். ராஜரட்ணம் பிள்ளை அவர்கள்.

இதே ராஜரட்ணம் பிள்ளை ஆரம்ப காலத்திலே ஒரு வாய்ப்பாட்டு வித்துவானாக வர ஆசைப்பட்டாராம், திருக்கோடிக்காவல் கிருஷ்ணஐயரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டார் ராஜரட்ணம். பிற்காலத்தில் தனக்கேற்பட்ட அனுபவத்தை தனக்கே உரித்தான பாணியில் தன் நண்பர்களிடம் இவ்வாறு விபரித்தார் ராஜரட்ணம். ‘ ஒரு நாளைக்குப் பாருங்கோ, பாடும் போது ஒரு ஸ்வரம் மொட்டயாய் போச்சிது. அய்யர் என்ன பண்ணாங்க தெரியுமா? கையில் இருந்த பிடில் வில்லால் மூக்கில ஒரு குத்து குத்தினாரு; ரத்தம் பீச்சி அடிச்சிது. அண்ணிலருந்து இன்னிக்கி வரைக்கும் நம்மகிட்ட ஒரு மொட்ட ஸ்வரம் பேசாது தெரியுமோ’ என ராஜரட்ணம் பிள்ளை பெருமையுடன் கூறுகிறார்.

பிற்காலத்திலே தமிழ் தாத்தா எனப் போற்றப்பட்ட ஊ.வே. சாமிநாதய்யரும் 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த இசைமேதை எனப் போற்றப்பட்ட திருவாவடுதுறை ராஜரட்ணம் பிள்ளையும் தாம் சிறுவயதில் பட்ட அடியும் உதையும் தமது வருங்கால வளர்ச்சிக்கு இட்ட உரமாகவல்லவா கருதுகிறார்கள்!

அடியும் உதயும் திட்டும் அவரவர் பார்க்கும் பார்வையில் தான் நன்மையையோ தீமையையோ அளிக்கிறது.

ஆனால், உ.வே. சாமிநாதய்யரும் ரீ. என். ராஜரட்ணம் பிள்ளையும் அடி உதை வாங்கித் தான் மேதை ஆனார்கள் என்றெண்ணி நீங்கள் சிறுவர்கள் யாரிலும் கை வைத்து விடாதைங்கோ. அப்புறம் நீங்கள் Child Abuse வழக்கில் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்ள நேரும். ஜாக்கிரதை!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ..... அன்று ஒலிபரப்பானது )

 

No comments: