கற்பகம் ரீச்சர் மகிழ்ச்சியான செய்தியுடன் வந்தாள்.
“ சில விடயங்கள் எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக நிறைவேறும். ஆனால், சிலவற்றுக்கு கடுமையான பிரயத்தனங்கள் மேற்கொண்டாலும் சாத்தியமாகாது. என்னுடைய இடமாற்ற உத்தரவும் அப்படிப்பட்டதுதான். ஓய்வூதியத்திற்கு தயராகியிருந்த வேளையில், ஊரோடு மாற்றம் கிடைக்கவிருக்கிறது. “ கற்பகம் கோயிலிலிருந்து கொண்டு வந்த விபூதி பிரசாதத்தை நீட்டியவாறு சொல்லிக்கொண்டிருந்தாள்.
இறுதியாக விபூதி இருந்த வெற்றிலையை அபிதாவிடம் நீட்டி, “ இந்தா பூசிக்கோ… அப்படியே அதை சுவாமிபடத்துக்கு முன்பாக வைத்துவிடு “எனச்சொல்லிக்கொண்டு “அப்பாடா… “ என அமர்ந்து கால்களை நீட்டி உளைவெடுத்தாள்.
“ காலை பிடித்துவிடவேண்டுமா ரீச்சர்..? “ அபிதா அருகில்வந்தாள்.
“ வேண்டாம். முடிந்தால் ஒரு தேநீர் தா…? “ எனச்சொல்லிவிட்டு முன்னால் அமர்ந்திருந்த மஞ்சுளாவின் தாய் சிவகாமசுந்தரியை பார்த்து, “ எப்படி இருக்கிறீங்க… நீங்கள் எந்த ஸ்கூல்…? “ எனக்கேட்ட கற்பகம், குஷனில் சாய்ந்து அமர்ந்தாள்.
கண்டியிலிருக்கும் சர்வதேசப்பாடசாலையைப்பற்றி மஞ்சுவின் தாய் விபரித்தாள்.
இரண்டு ரீச்சர்மாரும் இனியென்ன பேசுவார்கள் என்பதை தெரிந்துகொண்ட அபிதா, வீட்டு வேலைகளில் மூழ்கினாள்.
கவனம் வேலையிலிருந்தாலும் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு டிக்கட்டாக கழன்றுகொண்டிருக்கும்போது, ஒருகட்டத்தில் ஜீவிகா, தனக்கும் டிக்கட் கிழித்துவிடுவாளோ…? என்ற யோசனையும் அபிதாவுக்கு வந்தது.
கடந்த சிலநாட்களாக அவளுக்கு, அவளது எதிர்காலம் பற்றிய பயமும் யோசனையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
எது நடந்தாலும் விதிப்படிதானே நடக்கும். நிகும்பலையூருக்கு வருவேன் என்று என்றைக்காவது தீர்மானித்திருந்தேனா..? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வன்னியிலிருந்து இந்த ஊருக்குத்துரத்தப்பட்டிருக்கிறேன். அடுத்து எங்கே…?
வந்தவிடத்தில் சந்தித்திருக்கும் பெண்கள் எவரையுமே முன்னர் தெரியாது. அனைத்தும் புதுமுகங்களாக இருந்து, தற்போது பழைய முகங்களாக மாறிவிட்டன.
சந்தித்த ஒவ்வொரு பெண்களும் சுமந்துகொண்டிருக்கும் வலிகளும் அனுபவங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. அனைவரதும் வாழ்வில் விதி விளையாடித்தான் இருக்கிறது. மாறுபட்ட கோலத்தில் விளையாடித்தள்ளியிருக்கிறது.
பெண்களுக்கு மாத்திரம் ஏன் இப்படி நடக்கின்றன…?
காவிய காலத்திலிருந்து இக்காலம் வரையில் பெண்களிடத்தில்தான் விதிக்குப்பிரியம் அதிகமோ..? விளையாடிப்பார்ப்பதற்கு அந்த விதிக்கு பெண்கள்தான் கிடைத்தார்களா..?
சீதை, பாஞ்சாலி, குந்தி, சகுந்தலை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, கண்ணகி, மாதவி…. ஏன் அவர்களிடத்திலெல்லாம் விதி கோரமாக விளையாடியது. அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்…?
காட்டுக்குச்செல்லுமாறு இராமனுக்குத்தானே உத்தரவு வந்தது. அவன் ஏன் சீதையையும் உடன் இழுத்துச்சென்று இராவணனிடம் பறிகொடுத்தான்…?
அந்தப்புரத்தில் தன் தோழிகளுடன் பொழுதை கழித்த பாஞ்சாலியின் சேலையில் துச்சாதனனுக்கு ஏன் மோகம் வந்தது. அவள் அண்ணி என்பதை மறந்து துகிலுறிந்தானே…? அவளது துகிலை சபையிலே அவிழ்த்துப்பார்க்கும் அவலத்திற்கு தள்ளப்பட்ட துரியோதனனின் தாய் காந்தாரியும் ஒரு பெண்தானே. அவன் மனைவி பானுமதியும் ஒரு பெண்தானே…?
குந்தி எதற்காக ஊர் உலகம் தெரியாமல் ஒரு குழந்தைக்கு தாயாகி அதனை நதியில் விட்டுவிட்டு, இறுதிவரையில் அழுதுகொண்டேயிருந்தாள்…? சூரியபகவானுக்கு அவள்மீது வந்தது காதலா… காமமா..? தாய்க்கு மகனில்லாமல், தம்பிமாருக்கு அண்ணனாக இல்லாமல், அவளது மூத்த பிள்ளை குருஷேத்திர போர்க்களத்தில் மடியும் வரையில் வாடி மறைந்தான்.
சத்தியவானின் உயிரை மீட்பதற்காக எமனுடன் எதற்காக சாவித்திரி போராடினாள்.
விசுவாமித்திரருக்கு சபிக்கும் உரிமையை யார்வழங்கியது..? அரிச்சந்திரனை கட்டிய பாவத்திற்காக தமயந்தி பட்ட கஷ்டம் எத்தனை..? நளனுக்கு வேறு வேலையில்லாமலா சூதாடச்சென்றான். தமயந்தியை இழந்தான். அந்த ஆண்களுக்கெல்லாம் பணயம் வைப்பதற்கு பெண்டாட்டிமார்தான் கிடைத்தார்களா..?
வாணிபத்திற்குப்போனால், வாணிபத்தையல்லவா கோவலன் பார்த்திருக்கவேண்டும். வீட்டில் அழகான மனைவியிருக்க ஆடல் அழகி மாதவிமீது கோவலனுக்கு அப்படி என்ன மோகம்…? தாரம் இருந்தால், மற்றப்பெண்கள் தாயகத்தானே அவனுக்கு தென்பட்டிருக்கவேண்டும் ! குழந்தையாக இருந்தாலும் கிழவியாக இருந்தாலும் அது பெண் என்றால் அம்மா என்று அழைப்பதுதானே தமிழர் பண்பாடு.!
இறுதியில் அந்தப்பாவம் அவனோடு நின்று, அவன் தலையை கொய்தாலும், கண்ணகி எதற்காக விதவைக்கோலம் பூண்டு மதுரையை எரிக்கவேண்டும்…?
இந்திரவிழாவில் மாதவிக்கு ஏன் அவ்வாறு நேர்ந்தது…?
மொத்தத்தில் இந்தப்பெண்களைப் படைத்தவர்களும் அவர்களுக்கு சாபம்போட்டவர்களும் ஆண்களாத்தான் இருக்கிறார்கள் ! அவர்களின் சகிப்பித்தன்மையை மேன்மைப்படுத்துகிறோம் என்று அவர்களின் கதைகளை எழுதியவர்களும் ஆண்களாகத்தானே இருக்கிறார்கள்.
கேள்விக்குறிகளுடன் பெண்களும் ஆச்சரியக்குறிகளுடன் ஆண்களும் வாழும் பிரபஞ்சத்தில் எழுதப்பட்ட காவியங்களையெல்லாம் அபிதா மனதிற்குள் நினைத்து அழுந்திக்கொண்டிருந்தாள்.
சொந்தத்தில் ஒருவனை மணம் முடித்து வெளிநாடு வரையில் சென்று ஏமாற்றப்பட்டு, திரும்பி வந்து ஆசிரியப்பணியிலிருக்கும் கற்பகம் ரீச்சர், வளர்ந்த மகள் இருக்கத்தக்கதாக, கணவனையும் விட்டுவிட்டு யாரோ ஒருவனை நம்பிச்சென்று, அரசனை நம்பி புருஷனைக்கைவிட்டவளாக மாறி, தனிமரமாகியிருக்கும் சிவகாமசுந்தரி, இறுதிக்காலத்திலாவது பாவ சங்கீர்த்தனம் செய்வதற்கு மகளைத் தேடி வந்திருக்கிறாள்.
வேலைக்குச்சென்றவிடத்தில் ஒருவனில் காதல்வயப்பட்டு அவனது உணர்ச்சிக்கு தீணி கொடுத்து ஏமாந்து, வயிற்றில் உருவான கருவையும் கலைத்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகரத்தாயராகியிருக்கும் சுபாஷினி, புதுவாழ்வுக்கு செல்லப்போகிறாள்.
தாய்க்கு நடந்ததை நினைத்து நினைத்து, திருமண வாழ்க்கையே வெறுத்து ஆண்கள் என்றால், நெருப்பாகிவிடும் மஞ்சுளா இனி என்ன செய்யப்போகிறாள்…?
இவர்களில் மிகவும் புத்திசாலியாக அறிவுஜீவியாக உள்நாட்டு உலக நாடுகளின் அரசியல் பேசும் ஜீவிகா, திருமணச்சடங்கில்லாமலேயே துணைதேடி இணைந்து வாழும் வாழ்க்கைக்கு தயாராகிவிட்டாளே…?
இத்தனை விசித்திரமான பாத்திரங்களுக்கும் மத்தியில் எனது வகிபாகம் என்ன…?
ஒவ்வொருவராக கழன்று சென்றபின்னர், ஜீவிகா, புதிய ஆட்களை இந்த வீட்டில் குடியிருக்கவைத்து வாடகை வசூலிப்பாளா..? அவர்களுக்காகவும் கழுவித்துடைத்துக்கொண்டிருக்கப்போகின்றேனா…?
கேள்விக்கணைகள் அபிதாவை துளைத்துக்கொண்டிருந்தன.
சிவகாமசுந்தரி , கற்பத்துடன் பேசிவிட்டு எழுந்தாள்.
“ நாங்களும் இனி புறப்படத்தயாராகவேண்டும். வேனுக்கு சொல்லவேண்டும். “ எனச்சொல்லிக்கொண்டு, கைத்தொலைபேசியை எடுத்தாள்.
“ என்னம்மா… இன்றைக்கே புறப்படப்போறீங்களா…? “ அபிதா கேட்டாள்.
“ ஓம்… எலக்ஷன் முடிஞ்சுது. இனி ஸ்கூலும் தொடங்கிவிடும். மஞ்சுவையும் கூட்டிக்கொண்டுதான் போகவிருக்கிறன். அவளையும் ட்ரான்ஸ்ஃபர் எடுத்துக்கொண்டு கண்டிக்கே வரச்சொல்லியுமிருக்கிறன். அவள் இங்கே வேலைசெய்யும் பேங்கின், பிராண்ஞ் அங்கேயும் இருக்கிறது. எஞ்சியிருக்கும் காலத்திலாவது பிள்ளையோடு இருக்க விரும்புறன். “
சிவகாமசுந்தரி மஞ்சுவின் அறைக்குள் சென்று பேக்கில் உடைகளை மடித்து வைக்கத்தொடங்கியிருந்தாள். நிகும்பலையூருக்கு வரும்போது அவளை அழைத்துவந்த வாகனத்தின் சாரதியுடன் பேசுவது அபிதாவுக்கு கேட்டது.
கற்பகம் ரீச்சர் தொலைக்காட்சியை இயக்கி தேர்தல் முடிவு செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ தகப்பன்மார் மகன்மார், சம்பந்திமார் எல்லாம் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு போகிறார்கள். அத்தோடு ஆசிரியரும் மாணவரும் செல்கிறார்கள் “ என்றாள்.
“ யார் யார் ரீச்சர்…? “
“ மகிந்த ராஜபக்ஷவும் அவரது மகன் நாமலும். ஆசிரியர் – மாணவர் யார் தெரியுமா..? விக்னேஸ்வரனும் சுமந்திரனும். இந்த நான்கு பெயர்களும்தான் பிரபல்யமானது. எங்கட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் திரும்பவும் அறிக்கை போர் தொடங்கிவிட்டது. சூத்தையாம்… குருவிச்சையாம்…. ஆகா…. உவங்கள் தங்கட அரசியலுக்கை இயற்கையின் கோலங்களையும் விடாங்கள். ஒரு பெண்ணுக்காவது சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் நியமன அங்கத்தவர் பதவியாவது கொடுத்திருக்கலாம். கொடுக்கமாட்டாங்கள். சும்மா தேசியம் தேசியம் என்று பீத்திக்கொண்டிருப்பாங்கள். அவர் ஒருத்தர் - தமிழர் மட்டக்களப்பில் சிறைக்குள்ளிருந்து போட்டியிட்டு வென்றிருக்கிறார். இன்னும் ஒரு பிரதேத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிங்கள கைதி ஒருவர் வென்றிருக்கிறார். மற்றும் ஒருவர் அடிக்கடி மாமியார் வீட்டுக்குள்ளே போவதும் வருபவருமாக இருப்பவர்… அத்துடன் திரைப்பட நடிகர் இந்த ஊர் இருக்கும் மாவட்டத்திலிருந்து தெரிவாகியிருக்கிறார். இந்த அதிசயங்கள் எல்லாம் எங்கட நாட்டில்தான் நடக்கிறது. “
கற்பகம், கால்களை நீட்டி நிமிர்த்தியவாறு, கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
தனது அறையிலிருந்து உடைகளுக்கு அயர்ன் போட்டுக்கொண்டிருந்த சுபாஷினி இடைக்கிடை வந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளை பார்த்தாள்.
“ சுபா, கவனம், அயர்ன் பண்ணிக்கொண்டிருக்கிறீங்க… சுவிட்சை ஓஃப் பண்ணிப்போட்டு வாங்களேன். பிறகு டேஞ்சர். “ அபிதா எச்சரித்துவிட்டு, “ ரீச்சருக்கும் அரசியல் நன்றாகத் தெரியுது… நல்லவேளை இவர்களுக்கு வசதியாக யுத்தம் முடிந்தது. தலைவர் இருந்திருந்தால், உந்த காகிதத் தலைவர்கள் எவரும் எங்கட வடக்கிற்கோ, வன்னிக்கோ போயிருக்கமாட்டீனம். தெற்கிலேயே குந்தியிருந்திருப்பினம். நானும் இங்கே வந்திருக்கமாட்டேன். ரீச்சருக்கு இன்னும் ஒரு விஷயம் தெரியுமா..? இம்முறை நாடாளுமன்றத்திற்கு எட்டு சிங்களப்பெண்கள் செல்கிறார்கள். அத்தோடு மேலும் இரண்டு சிங்களப்பெண்கள் தேசியப்பட்டியலில் தெரிவாகிப்போகிறார்கள். ஆனால், பாருங்க… ஒரு தமிழ்ப்பெண்ணோ, முஸ்லிம் பெண்ணோ இல்லை. உந்த லட்சணத்திலிருக்கிறது – உலகில் முதல் பெண்பிரதமரைக்கண்டிருக்கும் எங்கள் நாடு. தமிழ் – முஸ்லிம் தலைவர்கள் நினைத்திருந்தால் பெண் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது உருவாக்கியிருக்கலாம். “ என்றாள் அபிதா.
“ உங்களுக்கு யார் இதெல்லாம் சொன்னது…? “ சுபாஷினி கேட்டாள்.
“ காலையில் ஜீவிகா வேலைக்குப்போகும்போதே சொல்லிவிட்டு போயிட்டாங்க. நானும் காலை செய்தியில் பார்த்தேன். இராமன் ஆண்டாலென்ன…. இராவணன் ஆண்டாலென்ன…. எல்லாம் ஒன்றுதான் “ எனச்சொல்லிவிட்டு எஞ்சியிருந்த சமையல் வேலையில் அபிதா மூழ்கினாள்.
அந்த இராமனும் பெண்ணுக்கு நல்லது செய்யவில்லை. இராவணனும் நன்மை செய்யவில்லை. ஒருவன் காட்டுக்கு இழுத்து அலைக்கழித்து இறுதியில் தீக்குளிக்கவைத்தான். மற்றவன் சிறைப்பிடித்து வதைத்தான். அதே ஆண்வர்க்கம், கண்ணகிக்கும் சீதைக்கு கோயில் கட்டி கும்பிடுறான்கள். இந்த வர்க்கம், பெண்ணுக்கு வீட்டிலும் அதிகாரம் தருவதில்லை. நாட்டிலும் தருவதில்லை. இராமனுக்கு கோயில் கட்டுறான்கள். அதுவும் ஆயிரத்து ஐநூறு வருடகால பழைமைவாய்ந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிப்போட்டு கட்டுறாங்கள். அதற்கு பூமி பூஜை செய்யும் நரேந்திரமோடியும் நம்பி வந்த பெண்டாட்டியை எட்டத்தில் வைத்துவிட்டுத்தான் அதிகாரம் பற்றி பேசுகிறார். - அபிதா மீண்டும் மௌனமாக மனதிற்குள் குமைந்தாள்.
அவளது நாட்குறிப்பில் எழுதுவதற்கும் இன்னும் பல விடயங்கள் இருந்தன.
( தொடரும் )
No comments:
Post a Comment