உலகச் செய்திகள்


லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்

இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

லெபனான் வெடிப்புச் சம்பவம்: எச்சரிக்கையை அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது மக்கள் கோபம்

லெபனான் வெடிப்பு: தலைநகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை

கனடாவுக்கு கொலை கும்பலை அனுப்பியதாக சவூதி முடிக்குரிய இளவரசர் மீது குற்றச்சாட்டு

டிக்டொக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பம்லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்-Lebanon Beirut Blast

- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்
- குடியிருப்புகள், கட்டடங்கள் தரை மட்டம்
- வெடிப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை


லெபனானின் தலைநகரான, பெய்ரூட்டில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது பாரிய பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு என, தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்-Lebanon Beirut Blast

பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 'ஓரியன்ட் குயின்' எனப்படும் இத்தாலி கப்பலில் இருந்த பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அக்கப்பலின் கெப்டன் அல் ஜெஸீரா தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதோடு, குறித்த நிலப்பரப்பு முற்றாக தரைமட்டமானதாக காட்சியளிக்கின்றதோடு, பலர் காயமடைந்தும், கட்டடங்கள் மற்றும் கட்டங்களின் கண்ணாடிகள், வாகனங்கள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

இந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு தரப்பினரிடையே சுமுக நிலை ஏற்பட்டவில்லை. கடந்த ஜூன் மாதம் இந்திய_ சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில், 20 இந்தியா இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அப்போது ஆரம்பித்த பிரச்சினையானது தற்போது வர்த்தக ரீதியாகவும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

சீனா _இந்தியா இடையேதான் பிரச்சினை என்றில்லை. மறுபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்து வரும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

லடாக்கில் ஆரம்பித்த இந்தப் பிரச்சினையானது இன்று வரையில் புகைந்து கொண்டேதான் உள்ளது. இந்தப் பிரச்சினையில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதாக கூறப்பட்டாலும், சீனா தரப்பில் எத்தனை பேர் என்பது வெளியாகவில்லை எனலாம். எனினும் அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையின்படி, சீன வீரர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 என்றும் கூறப்படுகிறது. எனினும் சீன தரப்பில் இது குறித்ததான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியாவுக்கு ஆயுதங்களை அதிகளவில் விற்பனை செய்ய உள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்திய மாதங்களாக அமெரிக்கா இந்தியாவுக்கு புதிய ஆயுத விற்பனையின் அடித்தளத்தினை அமைத்துள்ளதாகவும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இதன் மூலம் நீண்ட கால ஆயுத அமைப்புகள் உட்பட அதிக அளவு தொழில்நுட்பம் மற்றும் அதி நவீன ஆயுதம், ட்ரோன்கள் என பலவும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற வெளிநாட்டு பங்காளிகளுக்கு இராணுவ டிரோன்களை விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் விதிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்விதமிருக்க மைக்ரோ​ெசாப்ட் ​ேகார்ப்பரேஷனின் டிக் டாக்கின் நடவடிக்கைகளை சீனாவின் அரசாங்கம் ஒரு போதும் ஏற்காது. விற்பனை கட்டாயப்படுத்தப்பட்டால் ​ேவாஷிங்டனுக்கு எதிராக நடவடிக்கையினை சீனா எடுக்கலாம் என்று 'சீனா டெய்லி' பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட, சீனாவின் பல செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய  ட்ரம்ப், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக் டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோ​ெசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் மைக்ரோ​ெசாப்ட் நிறுவனம் இது குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் 15-க்குள் சரியான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், தடை செய்யப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.   நன்றி தினகரன் 

லெபனான் வெடிப்புச் சம்பவம்: எச்சரிக்கையை அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது மக்கள் கோபம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சி தற்போது கோபமாக மாறியுள்ளது. இந்த வெடிப்புடன் தொடர்புடைய அபாயகரமான இரசாயன பொருட்கள் தொடர்பில் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் அதிகாரிகள் அவைகளை பொருட்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.  

ஆயிரக்கணக்கான தொன் அமோனிய நைத்திரேற்று வைக்கப்பட்டிருப்பது அபாயகரமானது என்பதை அதிகாரிகள் தெரிந்திருந்தது பற்றி மின்னஞ்சல்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஊட்பட ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.  

லெபனான் நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு இன்றி களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்து இந்த இரசாயனத்தை ‘மிதக்கும் குண்டு’ என்று அழைத்து வந்துள்ளனர். எனினும் அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தத் தவறியுள்ளனர்.  

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் என்று நாட்டின் அரசியல்வாதிகள் மீது அதிருப்தியில் உள்ள லெபனான் மக்கள் இந்த வெடிப்புச் சம்பவத்தில் அரசின் அலட்சியப் போக்கு பற்றி கோபத்தை வெளியிட்டு வருகின்றனர்.  

லெபனானின் நாணய மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டு, விலைவாசி உயர்வு மற்றும் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இந்த வெடிப்புச் சம்பவம் அரசின் இயலாமையை காட்டுவதாக உள்ளது என்று குறைகூறுகின்றனர்.  

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தினால் தலைநகரின் துறைமுகத்தின் பெரும் பகுதி அழிவடைந்துள்ளது. இதனால் 137 பேர் உயிரிழந்து 5,000 பேர் வரை காயமடைந்திருப்பதோடு பல்லாயிரம் பேர் தமது வீடுகளை இழந்துள்ளனர்.  

வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் 400 அடி அகலம் கொண்ட பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நகரில் இருக்கின்ற அடுக்குமாடிக் கட்டடங்கள் பேரும் சேதம் அடைந்து காலியாகக் காணப்படுகின்றன.  

நகரை சுத்தம் செய்யும் நடவடிக்கையை தன்னார்வலர்கள் நேற்று ஆரம்பித்தனர். நகரெங்கும் இருந்து மக்கள் வீதிகளை கூட்டி, குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதோடு குடிமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர். குடியிருப்பாளர்களும் தமது வீடுகளில் இருக்கும் இடுபாடுகளை அகற்றி வருகின்றனர்.  

நகரில் இருக்கும் எல்லா குடியிருப்பு மற்றும் வர்த்தகங்களும் இந்த வெடிப்பினால் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை சந்தித்திருப்பதாக லெபனான் பொருளாதாரத் துறை அமைச்சர் ரவுல் நஹ்மி தெரிவித்துள்ளார். தலைநகரில் இருக்கும் 90 வீதமான ஹோட்டல்கள் சேதமடைந்திருப்பதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 

மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெடிப்பு இடம்பெற்று இரண்டு நாட்கள் ஆகியும் தொடர்ந்து பலர் காணாமல்போன நிலையில் இருப்பதோடு 300,000 பேர் வரை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.       நன்றி தினகரன் 


லெபனான் வெடிப்பு: தலைநகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் லெபனான் பாதுகாப்பு படையுடன் மோதல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அருகில் கூடிய பல டஜன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோபத்தை வெளியிட்டனர்.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அம்மோனியம் நைட்ரேட் இரசாயனமே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 137 பேர் கொல்லப்பட்டு சுமார் 5,000 பேர் காயமடைந்த இந்த விபத்திற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தால் முழு தலைநகரிலும் அழிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் வர்த்தக இடங்கள் கற்குவியல்களாக மாறின. இதனால் தொடர்ந்தும் பலர் காணாமல் போன நிலையில் உள்ளனர்.

இது தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்பை அடுத்து இரு அதிகாரிகள் பதவி விலகினர். பாராளுமன்ற உறுப்பினரான மர்வான ஹமதாஹ் கடந்த புதனன்று இராஜினாமா செய்ததோடு ஜோர்தானுக்கான லெபனான் தூதுவர் ட்ராசி சமுனி கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார். இந்த பேரழிவு தலைமைத்துவத்தை மாற்றுவதன் தேவையை வெளிக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.   நன்றி தினகரன் 

 

இராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை

இராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள் இதுவாகக் கருதப்படுகிறது.

டெல்லியில் இருந்து வந்தது முதல் மீண்டும் டெல்லிக்கு திரும்பும் வரைக்கும் முகக்கவசம் அணிந்தவாரே விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி. இராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக கோடிக்கணக்கான இராம பக்தர்கள் 'ராம்' என்று பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்கள் அனைத்தும் இராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக பல ஆண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வசதி படைத்த பக்தர்கள், நிறுவனங்கள், மடலாயங்களில் இருந்து தங்கம், வெள்ளி, செங்கற்கள் கிலோ கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

குஜராத் அகமதாபாத் ஜெயின் சமூக மக்கள் இணைந்து இராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக 40 கிலோ வெள்ளி செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்களை ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூகத்தினர் வழங்கியுள்ளனர். இந்த செங்கற்களில் ஒன்றினை பிரதமர் மோடி எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை நேற்று தொடக்கி வைத்தார். 

இராமர் கோவிலுக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி அனுமான் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் குழந்தை இராமரை வழிபட்ட மோடி, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அதன் பின்னர் ஆரத்தி காட்டி வணங்கினார். இதனையடுத்து இராம ஜென்ம பூமியில் மரக்கன்றை நட்டு வைத்தார். 

இதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் நடைபெற்ற யாக நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பூமி பூசை நடைபெற்றது. யாகத்தில் பங்கேற்ற மோடி, மந்திரங்களை கூறினார். வரலாற்று சிறப்பு மிக்க இராம ஜென்ம பூமி பூசை விழா நேற்று நடைபெற்றதை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. பூமி பூசை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தந்ததன் காரணமாக அயோத்தி நகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்று உள்ளனர். பூமி பூசை, அடிக்கல் நாட்டுவிழா அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. 

'ஜெய் ஸ்ரீராம்' முழக்கத்திற்கு இடையே முதல் வெள்ளி செங்கலை எடுத்து கொடுத்தார் பிரதமர் மோடி. இந்த விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.    நன்றி தினகரன் கனடாவுக்கு கொலை கும்பலை அனுப்பியதாக சவூதி முடிக்குரிய இளவரசர் மீது குற்றச்சாட்டு

சவூதி அரேபியாவின் முன்னாள் உளவு அதிகாரியை கொல்வதற்கு கனடாவுக்கு கொலை கும்பலை அனுப்பியதாக சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

துருக்கியில் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இடம்பெற்ற சாத் அல் ஜபரி என்ற அந்த உளவு அதிகாரியை கொல்லும் முயற்சி தோல்வி அடைந்திருப்பதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்துள்ளது.

சவூதி அரசின் முன்னாள் அதிகாரியான ஜபரி மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அது தொடக்கம் அவர் டொரொன்டோவில் தனியார் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழைய முயன்ற கொலைக் கும்பல் பற்றி அமெரிக்க எல்லைக் காவல் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்த நிலையிலேயே குற்றம்சாட்டப்படும் இந்தக் கொலை முயற்சி தோல்வியடைந்துள்ளது.

61 வயதான ஜபரி சவூதி அரேபியாவில் பிரிட்டனின் எம்16 மற்றும் ஏனைய மேற்குலக உளவு நிறுவனங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக முக்கிய தகவல் பரிமாற்றுபவராக செயற்பட்டு வந்துள்ளார்.

வொசிங்கடன் டி.சி. இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒப்புதல் அளிக்கப்படாத 106 பக்க முறைப்பாட்டில், ஜபரியை மௌனிக்கச் செய்வதற்கு அவரை கொல்ல முடிக்குரிய இளவரசர் முயற்சித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மோசமான ஆவணங்கள் தமக்குக் கீழ் இருந்ததே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் என்று ஜபரி குறிப்பிட்டுள்ளார். இதில் ஊழல் விவகாரங்கள் மற்றும் புலிப் படையணி என்று அழைக்கப்படும் தனிப்பட்ட கூலிப்படையின் மேற்பார்வை குழு ஒன்று தொடர்பான ஆவணங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புலிப் படையணியின் உறுப்பினர்களே சவூதியை விட்டு வெளியேறி இருந்த ஊடகவியலாளர் கசோக்கியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களாவர். 2018 ஆம் ஆண்டு ஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்தில் வைத்தே கசோக்கி கொல்லப்பட்டார்.   நன்றி தினகரன் 

 

டிக்டொக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பம்

சீனாவின் இரு மிகப்பெரிய செயலிகளான டிக் டொக் மற்றும் விசாட் செயலிகளை இலக்கு வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவின் கீழ் குறித்த நிறுவனங்களுடனான வர்த்தகங்களை அமெரிக்க நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில்நுட்பம் தொடர்பில் சீனாவின் செல்வாக்குடனான அமெரிக்காவின் மோதல் போக்கின் முக்கிய நடவடிக்கையாக இது உள்ளது.

டிக் டொக்கின் அமெரிக்க செயற்பாட்டை மைக்ரோசொப் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி இறுதிக் கெடுவாக டிரம்ப் விதித்திருக்கும் நிலையிலேயே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் சீனாவுக்கு எதிராக டிரம்ப் நீர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக வீடியோ பகிர்வு தளமான டிக் டொக் மற்றும் டென்சன்ட் கொங்லோமெரட் நிறுவனத்திற்கு சொந்தமான குறுஞ்செய்தி சேவை தளமான விசாட் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிக்டொக், விசாட் செயலிகள் இரண்டும் சீனாவுக்குச் சாதகமாக தவறான தகவல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குறைகூறினார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை முன்னிட்டு தாம் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த இரு நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துவருகின்றன.   நன்றி தினகரன் 

 No comments: