கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 25 கவிஞர் அடையாளத்தை தக்கவைக்கச்சொன்ன “எஸ்.பொ. “

சிறுகதை எழுதத் தொடங்கி,  தமிழ்த்தேசிய அரசியலினால் கவரப்பட்டு, கவிதை எழுதி,  தமிழ் மருத்துவ முன்னோடி கிறீன் பற்றிய ஆய்வும் எழுதி  இலக்கிய உலகில் என்னை தக்கவைத்திருந்தாலும், பொதுவாக கவிஞர் அம்பி எனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தேன்.

எனது கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த அதே சமயம்  தாயகத்தில் நாடெங்கும் நடந்த கவியரங்குகளில் பங்கேற்றும் வந்துள்ளேன்.

கவியரங்குகள், இலங்கையில் வடக்கிலிருந்து கிழக்கு மற்றும்  தெற்கு வரையில் நிகழ்ந்திருக்கின்றன. அதற்காக பயணங்கள் சென்றுள்ளேன்.

எனினும் எனது கவிதைகள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளிவரவில்லை. எனினும் எனக்கு அது ஒரு குறையாகவும் தென்படவுமில்லை.

எனது நீண்டகால நண்பர் எஸ்.பொ. அவர்கள் ஒருதடவை என்னுடன் தொடர்புகொண்டு,   “ அம்பி… நீங்கள்   மாணவர் உலகில் அம்பி மாஸ்டர் எனவும்  இலக்கிய உலகில் கவிஞர் அம்பி எனவும்தான் அறியப்பட்டுள்ளீர்கள். தற்போது நீங்கள் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டீர்கள்.  ஆனால், கவிதைப்பணியிலிருந்து இன்னமும் விடைபெறவில்லை. தொடர்ந்தும் கவிதை எழுதிவருகிறீர்கள். கவியரங்குகளிலும் பங்கு பற்றுகிறீர்கள். ஆனால், இதுவரையில் உங்கள் கவிதை நூல் எதுவும் வெளிவரவில்லையே… ஏன்…?   “ என்று நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

நான் யோசித்துப்பார்த்தேன். எஸ்.பொ. சொன்னதிலும் உண்மை இருந்தது.  அவ்வேளையில் அவர் அவுஸ்திரேலியா – தமிழ் நாடு என பறந்துகொண்டிருந்தார்.

சென்னையில் கோடம்பாக்கத்தில் தமது மகன் மித்ரவின்  பெயரில் ஒரு பதிப்பகத்தையும் தொடக்கியிருந்தார்.  இலங்கையில் முன்னர் அவர், கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் அமைந்திருந்த இளம்பிறை அச்சகத்தை நடத்திக்கொண்டிருந்த எழுத்தாளர் எம். ஏ. ரஃமான் அவர்களின் அரசு வெளியீட்டுக்கும் ஆலோசகராக இருந்தவர்.

அந்த அரசு வெளியீடு பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை சிறந்த வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது.

எனது இலக்கிய நண்பர்கள் இரசிகமணி கனகசெந்திநாதன், மஹாகவி , தளையசிங்கம், அகஸ்தியர், ரஃமான்,  ஆகியோரதும் இ.நாகராஜன், வள்ளிநாயகி இராமலிங்கம் உட்பட சிலர் இணைந்து எழுதிய நூல்களையும் அந்த அரசு வெளியீட்டகம் வெளியிட்டிருப்பதையும் நன்கு அறிவேன்.

அவர் கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் எனது மனைவியும் அங்கே பணியாற்றினார்.

நான் கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் பணியாற்றத் தொடங்கியபோது அவர் அங்குமிருந்தார்.

இவ்வாறு எமது இலக்கிய உறவு நீண்டகாலம் நிலைத்திருந்தது. அவர் இலக்கிய உலகில் பெரும் கலகக்காரன் எனப்பெயர் எடுத்தவர்.

பலருடன் இலக்கிய வாதங்கள் புரிந்துமிருப்பவர்.  முற்போக்கு இலக்கிய முகாமை கடுமையாக விமர்சித்துக்கொண்டு அதிலிருந்து வெளியேறி நற்போக்கு இலக்கிய முகாம் தொடக்கியவர். அது ஒரு அமைப்பாக இயங்காது போயினும் அவரைச்சார்ந்து பல எழுத்தாளர்கள் பின்தொடர்ந்தனர்.

எனக்கு எல்லா முகாம்களிலும் நண்பர்கள் இருந்தார்கள்.

அதனால் எனக்கும் எஸ்.பொ. அவர்களுக்கும் இடையே எந்த பிணக்கும் தோன்றவில்லை!

சென்னையில் அவர் தொடங்கியிருந்த மித்ர பதிப்பகத்தின் பின்னணியில் இளம்பிறை ரஃமானும் இருப்பதை அறிந்தேன். அத்துடன் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எஸ்.பொ. வின் மூத்த மகன் மருத்துவர் அநுராவையும் நான் நன்கு அறிவேன்.

அந்த மித்ர பதிப்பகத்திற்கு அநுராவின் மூலதனம் முக்கியமாகவும் இருந்தது.  அவரும் எனது கவிதை நூலை தங்கள் பதிப்பகம் சார்பாக வெளியிடவேண்டும் என விரும்பினார்.

எனது அம்பி கவிதைகள் நூல் உருவானதன் பின்னணிக்கதை இதுதான்.

இந்த நூல் 1994 ஆம் ஆண்டு வெளியானது.

எஸ்.பொ. இந்த நூல்பற்றி இவ்வாறு சொல்லியிருந்தார்:

 “ அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்ச்சேவையும் கவிதை ஊழியமும் கல்விப்பணியும் புரிந்துவரும் அம்பி நாவற்குழியில் பிறந்து, கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் புலம் பெயர்ந்த தமிழனாய் வாழ்கின்றனர்.

அவர் கவிதைக்கும் விஞ்ஞானக் கல்விக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர் பயிலும் தமிழுக்கும் நமது சிறுவரின் மழலைகளின் இனிமைக்கும் செய்துள்ள சேவைகள் காலத்தை வென்று நிற்கும்.

இந்த அறிமுகக்குறிப்பு 1994 இல் எழுதப்பட்டது என்பதையும் கவனித்தல் வேண்டும்.

அதில் எனது சகாக்கள் மஹாகவி,  நீலாவணன் பற்றியும் நினைவூட்டியிருந்தார்.

 

அம்பி கவிதைகள் நூலுக்கு பதிப்புரை எழுதியிருந்த  மருத்துவர் பொன். அநுரா,  “பாரதியாருக்குப் பின்னர், கவிதையின் உருவ அமைதியில் அதிசய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வழக்கம் போலவே, ஆரம்பத்தில் இந்த மாற்றங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. கடுமையான விமர்சன எதிர்ப்புக்கு உள்ளாயின. புதியன எழுதுவதற்கு புதிய மொழிதேவை என்கிற நியாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிய படைப்புகள் உரிய இடத்தினைப் பெற்றன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இக்காலத்தில்  ‘கவிதை ‘ என்றால் புதுக்கவிதையையே குறிக்கும். இலக்கணங்களுக்கும் யாப்புகளுக்கும் இசைத்தொழுகும் கவிதைகள்  ‘மரபுக் கவிதைகள்  ‘என்றழைக்கப்படுகின்றன. இருவகைக் கவிதைகளும் தமிழை வளஞ்செய்தல் சாத்தியம் மட்டுமல்ல, தக்கதுமாகும். “  என்று எழுதியிருந்தார்.

முனைவர் சாலை இளந்திரையன் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தார்.  

எஸ்.பொ.,  பின்னர் எனது கொஞ்சும் தமிழ், ( சிறுவர் கவிதைகள் – வண்ணப்படங்களுடன் ) அந்தச்சிரிப்பு ( கவிதை நாடகம் ) முதலான நூல்களையும் தமது மித்ர பதிப்பகத்தினால் வெளியிட்டார்.

எனது பவளவிழாக்காலத்தில் சிட்னியில் எனது நூல்களையும் பெரு விழாவெடுத்து அறிமுகப்படுத்தினார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு எனது அகவை 90 விழாவின்போது, அக்கினிக்குஞ்சு இணைய இதழ் சார்ப்பில் அதன் ஆசிரியர் யாழ்.பாஸ்கர் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதினை எஸ்.பொ. வின் புதல்வர் மருத்துவர் அநுரா என்னிடம் கையளித்தார்.

கவிஞர் அம்பியின் அடையாளம் இதுதான் என்பதை எஸ்.பொ. காண்பிப்பதற்கு  முயன்ற கதை இதுதான்.

இரண்டு உலகம் என்ற தலைப்பில் நான் எழுதிய தொடர்கவிதைகளையும் அக்கினிக்குஞ்சு ஆரம்பத்தில் அச்சு ஊடகமாக வெளியானபோது வெளியிட்டார் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு பதிவுசெய்கின்றேன்.

குறிப்பிட்ட இரண்டு உலகம் தொடர்கவிதையும் அம்பி கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளது.

( தொடரும் )


No comments: