வலிசுமக்கும் ஆற்றலில்லார் வாழ்வுதனை இழக்கின்றார்! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா

உற்றாரைப் பெற்றாரை

ஊரைவிட்டு ஓடிவந்து

பெற்றுவிடும் ஆசையினால்

பெருங்கனவை மனமிருத்தி

கற்றகல்விக் கேற்காத

கண்டகண்ட வேலையிலே

காலைமாலை பார்க்காமல்

காசுழைக்க  ஓடிநிற்பார் !

 

மொழியறிவு இருக்காது

முழுவயிறும் நிரம்பாது

படுகின்ற தொல்லைகளோ

படுநரகம் ஆகிவிடும்

விளங்காமல் பலவற்றை

விழுங்கவே செய்திடுவார்

வளஞ்சிறக்க பணங்காணும்

வாஞ்சையிலே மழுங்கிடுவார் !

 

சொர்க்கமென நம்பிவந்தார்

துவண்டிடுவர் சிலநாளில்

கடன்பட்ட இடமெல்லாம்

கனவாக வந்துவிடும்

இருந்தவிடம் சொர்க்கமென

இதயமங்கே இயம்பிடினும்

என்னசெய்வ தெனவறியா

இருட்டவரைச் சூழ்ந்துவிடும் !

 

தூக்கமும் வாராது

சுவைகூடத் தெரியாது

பார்க்குமிட மெல்லாமே

படுகுழியாய் ஆகிநிற்கும்

கற்பனைகள் அத்தனையும்

சுக்குநூறாய் நிற்குமங்கே

கடுகதிப் புகைவண்டி

காதலுடன் அணைத்துவிடும் !

 

வலிசுமக்கும் ஆற்றலில்லார்

வாழ்வுதனை இழக்கின்றார்

வாழ்கின்ற இடமனைத்தும்

வாழ்வளிக்கும் எனநினைப்பீர்

கற்பனையால் கதையெழுதல்

வெற்றியினை அளித்துவிடும்

கற்பனையை வாழ்வாக்கல்

காலனுக்கே விருந்தாகும் !No comments: