வித்தகத் தமிழுடன் அவுத்திரேலிய வளர் தமிழர் - -பரமபுத்திரன்


வித்தகத்  தமிழுடன் அவுத்திரேலிய வளர்  தமிழர் -  உலக அரங்கில் அறிமுகம் செய்யும் சிட்னி  கம்பன் கழகம் 

 

அவுத்திரேலியாவில் வளர்ந்து வரும் ஆற்றலுள்ள இளம் தமிழர்கள்  தங்களின் விவாதத்  திறனுடன்  வித்தகத் தமிழ்  வேள்வி விவாத அரங்கு மூலம் உலக அரங்கில் களம் இறங்கியுள்ளனர். இந்த நிகழ்வுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து,  பயிற்றுவித்து, போட்டிக்கு  வழங்கும் முயற்சியினை அவுத்திரேலிய கம்பன் கழக நிறுவுனர் திரு. ஜெயாராம்  ஜெகதீசன் அவர்கள் செய்திருக்கின்றார். வித்தகத் தமிழ் வேள்வி என்பது ஈழத்திலிருந்து இணைய வழியினூடாக உலகத் தமிழர்களை இணைத்து நடைபெறும் ஒரு விவாத நிகழ்வாகும். இதுவரையில் அவுத்திரேலியா, மலேசியா, இலங்கை, இந்திய அணிகள் விவாதம் புரிந்துள்ளன

 இன்றைய காலகட்டத்தின்  முக்கிய சிக்கல் ஒவ்வொருவரும் தாங்கள் சிறப்புடன் வாழும் காலத்தில் வேலை, வருவாய், குடும்பம் என்று அலைவதும், அதனூடாக  தங்களையும் குடும்பத்தையும் வலுப்படுத்துவதும், மூத்தோர்கள் ஆனபின் தொடர்ந்து தங்களை சமூகத்தில் தக்க வைக்க முயற்சிப்பதும் என்பதாக அமைகிறது. இதனால் இளையவர்கள் அல்லது இளம் பிள்ளைகளுடனான தொடர்பாடல் மற்றும் இணைப்பு குறைகின்றது. இது தமது சொந்த சமுதாயத்திலிருந்து பிள்ளைகள்  புறந்தள்ளப்படுகின்ற நிலைக்கு இட்டுச்செல்கின்றது. மறுவளத்தில் எம்மை சுற்றியுள்ளவரை இகழ்ந்தும் மற்றவரை புகழ்ந்தும் வாழும் தன்மை வெளிக் காட்டப்படுகின்றது. வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் மானப்பாங்கு இல்லாமல் போகின்றது. அவர்களை எங்களுடன் அணைத்துச் செல்லும் ஆற்றல் குறைகிறது.  இந்த அடிப்படைக் காரணம்தான் எங்களுடன் எமது பிள்ளைகளை சரியான தளத்தில் பயணிக்கவிடாமல் மாற்றுவழி தேடவைக்கின்றது. அவர்கள் தமிழை, தமிழ் மக்களை தவிர்க்க வைக்கிறது. குறித்த ஒரு நாட்டில், அல்லது  வேறுபட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் என்ற வகையில் நாம்தான் உறவுகள் எனப் பிள்ளைகளுக்கு வலுவாகச்  சொல்ல விரும்புதல்  அல்லது பிள்ளைகளை மற்றறைய தமிழர்களுடன் இணைந்து செயல்பட வழிகாட்டும் தன்மை குறைவாக உள்ளது. இது தொடருமாயின் எம்பிள்ளைகள் தமக்கென வலுவான சமுதாயம் அற்ற அநாதை  நிலையில் வாழவேண்டி வரும் என்பதை நாம் உணரவில்லை. இந்தவகையில் நோக்கும் போது தனது சொந்த நேரத்தினை இனாமாக வழங்கி கம்பன் கழகம் மூலம் குறித்த சிலரையாவது அறிமுகப்படுத்தி அத்துடன் தமிழையும் சிந்திக்க  வைக்கும் ஜெயராம் அவர்களை பாராட்டலாம். அதனுடைய அடுத்த பரிணாம நிலையாக வித்தகத் தமிழ் வேள்வி மூலம்  அவுத்திரேலிய இளைய தமிழரை உலக அரங்கில் களமிறக்கியுள்ளார். ஆற்றலுள்ளவர்கள் மிளிரவேண்டும், தமிழ்  வளரவேண்டும் என்ற நோக்கில் இயங்குவது நல்ல முயற்சி எனலாம்.தமிழ்  எங்கள் மூச்சு, அதுவே  எங்கள் பேச்சு என்று முழங்குவோர் பலர். தமிழில் உரையாடுங்கள், தமிழைக்  கொண்டாடுங்கள் என்று ஊக்கப்படுத்துவோர் சிலர். ஆனால் அதனை பின்பற்றுவோர் யார் என்பது முக்கியமான கேள்வி. பள்ளிக்கூடங்கள் கூட ஆள் எண்ணிக்கை காட்டி தமிழ்ப் பள்ளிகளை நடத்த விழைக்கின்றதே தவிர பொறுப்புடன் பங்களிக்கின்றன என்று சொல்லமுடியாது.  இன்னும் பலர் பழந்தமிழை தோண்டி எடுத்து அதன் ஆழத்தைக்கூறி அதனையே பிழைப்பாகவும் கொள்கிறார்கள். இளம் பிள்ளைகள் தமிழ்  படிக்கவேண்டும் என்றால்  அவர்களுக்கு முன் உதாரணங்கள் இருக்கவேண்டும். தாங்கள் படித்த தமிழை பிறர் முன் காட்ட வழி கிடைக்கவேண்டும். இல்லையேல் தமிழால் என்ன பயன் என்று அவர்கள் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.  மேலும் அவர்களிடம் இருக்கும்,  ஏன் தமிழ்  படிக்கவேண்டும்? என்ற கேள்விக்கும் எம்மிடம் விடை இல்லை. இன்னும் இந்திய நிகழ்வுகள், அல்லது இந்திய கலைஞர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, நிகழ்வுகளை நடத்துவோர் நடுவில் தமிழால் வளர்ந்த எமது பிள்ளைகளை உருவாக்குது மிகவும்  கடினம் என்றே  கூறமுடியும். இந்த நிலையில் அவுத்திரேலியாவில் இருந்து முதலில் திகட  சக்கரவின் கிணத்தடி மூலம் இரு விவாதப்  பேச்சாளர்களும்,  இப்போது வித்தகத் தமிழ் வேள்வியில்  மேலும்  ஒருவர் இணைந்து மூவர் பங்குபற்றுவது புதிய  முயற்சி என்று சொல்லமுடியும். அதுமட்டுமல்ல அவுத்திரேலியாவில் வாழும்  இளம் தலைமுறையினரை தங்களுடன் இணைக்கும் வித்தகத் தமிழ் வேள்விக் குழுவினருக்கு தமிழ் ஆர்வலர்கள் சார்பில் நன்றி கூறியே ஆகவேண்டும்.

இதற்கு முன்னர் உலக அரங்கில் 2018 ல் “அனைத்துலக பேசு தமிழா பேசு 2018” எனும் நிகழ்வுக்காக அவுத்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பேச்சாளர்களை தயார் செய்து அனுப்பியிருந்தது. இந்நிகழ்வு மலேசியாவின் ஆசுட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா இணைந்து நடாத்தும்  உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்கான உலக மட்டத்திலான  பேச்சுப் போட்டி ஆகும். இப்போட்டியில் மலேசியா, இந்தியா, இலங்கை, அவுத்திரேலியா, மொரிசியசு, மியான்மார் ஆகிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.அவுத்திரேலியாவில்


இதற்கான  போட்டியாளர்களைத் தெரிவுசெய்து, அவர்களிடையே போட்டிகளை நடாத்தி, அதில் வெற்றி பெற்ற மூவரான தாயகன் செல்வானாந்தம், மாதுமை கோணேசுவரன், பருணிதன் இரங்கநாதன் ஆகியோரை பயிற்றுவித்து மியான்மார் நாட்டிற்கு அவுத்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டிலேயே அனுப்பிவைத்தது.  இவர்களுக்கான பயணச் செலவு முதல் சகல ஒழுங்குகளும்  அந்த நிறுவனத்தாலேயே செய்யப்பட்டது மட்டுமல்ல, அந்த நிறுவனமே அவர்களை விமானநிலையம் வரை கூட்டிச்சென்று அழைத்து வந்தது.  அதன்பின்பு அவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கவில்லை. அதற்கான காரணம்  என்னவென்று தெரியவில்லை. 

வித்தகத் தமிழ் வேள்வி அவுத்திரேலிய நேரப்படி சனி ஞாயிறு தினங்களில் இரவு 11.30 ற்கே ஆரம்பமாகிறது. எனினும்,  பின்னர் பார்க்கக்கூடிய வகையில் “யூரீப்” இல் உண்டு. இருப்பினும், இரவில் இருந்து பார்ப்போரும் அவர்களை ஊக்கப்படுத்துவோரும் பெருமளவில் உள்ளார்கள்.  மேலும்  இந்நிகழ்வு தொடர்பாக  ஒரு சிறப்பம்சம்  கூறமுடியும். வழமையான விவாதப்  பேச்சாளர்கள்  போல இவர்கள் விரும்பும் எதனையும் பேசிவிட முடியாது. காரணம் தமிழ்  ஆர்வமுள்ள பலர் நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக சரி, பிழை கூறி பதிவுகள் போடுவார்கள்.  அதுமட்டுமல்ல ஊக்கப்படுத்துதலும் செய்த வண்ணம் இருப்பர்.  எனவே பேச்சாளர்கள் சரியாகவும், கவனமாகவும் பேசவேண்டும். நடைபெற்று முடிந்த போட்டியில் இன்றைய குழந்தைகளுக்கு பழைய ஆத்திசூடியிலும் புதிய ஆத்திசூடியே உகந்தது எனும் தலைப்பில் உகந்தது என்று  அவுத்திரேலியாவிலிருந்து மாதுமை கோணேசுவரன், குமரகுருபரன் ஜனார்த்தன், பருணிதன் இரங்கநாதன் ஆகியோரும், உகந்தது அல்ல என மலேசிய அணியினர்  அகிலன் திலிப்குமார், கோபிகாஸ்ரீ நண்பழகன், சுகுமார் தேவேந்திரன் ஆகியோரும்  வாதிட்டனர்.

 

இப்போட்டியின்  தலைமை நடுவராக அவுத்திரேலியாவில் பட்டிமன்ற நடுவர், பேச்சாளராக துடிப்புடன் இயங்கும் திரு. திருநந்தகுமார் அவர்களும், துணைநடுவர்கள் இருவர் மலேசியா நாட்டிலிருந்தும் கடமையாற்றினார்கள். தலைமை நடுவர் அவர்கள்  தலைமை நடுவராக மட்டுமே சிறப்பாக தொழிற்பட்டார். காரணம் பொதுவாக தற்காலத்தில் விவாத அரங்க நடுவர்களாக வருவோர் நக்கீர பரம்பரை சார்ந்த இயல்பையே வெளிக்காட்டுகின்றார்கள். அதாவது விவாதப் பொருள், விவாதத்தில் பங்குபற்றுவோரை மறந்து விட்டு தங்கள் வித்துவத்தைக் காட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். விவாத அரங்கில் நடைபெறும்  விவாதங்களுக்கு அப்பால் புதிதாக ஒரு  கருத்தைக் கூறி விவாத அரங்கைக் குழப்புவார்கள். விவாதம் செய்தவர்களை காட்டிலும் தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வார்கள். பட்டிமன்ற நடுவராக வந்தோம் எனவே  பட்டிமன்றத்தில் பேசியவர்களை கருத்தில் எடுத்து  விவாத அடிப்படையில் தீர்ப்புக் கூறவேண்டும் என்று எண்ணாமல்  தாங்கள்  தயாரித்து ஏற்கனவே  வைத்திருக்கும் முடிவை கூறிச்செல்வார்கள். ஆனால், பொதுவாகவே இளம் பேச்சாளர்களை ஊக்குவிக்கும்  விருப்புடைய திருநந்தகுமார் அவர்கள் தான் நடுவராக கலந்து கொள்ளும் பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து  வாதி, பிரதிவாதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கக்கூறும் வழக்கமுடையவர். எனவே போட்டியாளர்களை ஊக்குவிக்குமுகமாக கருத்துச் சொல்லி தன் பேச்சை நிறுத்திக்கொண்டார்.  

 

நடைபெற்ற நிகழ்வில் மலேசியா அணியின் சுகுமார் தேவேந்திரன் சிறந்த வாதியாக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அவுத்திரேலியா அணி விவாதத்தில் வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் அவுத்திரேலிய விவாத  அணி இந்திய விவாத அணியுடன் 09/08/2020 ஞாயிறு அன்று போட்டியிட உள்ளது. 
No comments: