- கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் இல்லை
- 2 1/2% இற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது
- கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்
நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பங்கிடப்படும் 196 ஆசனங்களில் ஐ.தே.க. விற்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ஐ.தே.க. பெற்றுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மொத்தமான 249,435 வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15% வாக்குகளாகும்.
கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் போனஸ் அல்லது தேசிய பட்டியல் ஆசனமாக ஒரு ஆசனத்தை அக்கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்கவின் 42 வருட அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, அவர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
ஆயினும் இம்முறை முதல் தடவையாக தேர்தலில் களமிறங்கிய, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து தனியாக களமிறங்கிய, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு, இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது, 2,771,984 (23.90%) வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களை (47 + 7 போனஸ்) பெற்றுக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். நன்றி தினகரன்
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும், ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்கின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல ஆசனம் பறிபோனது
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டுள்ளதோடு, திருமலை மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் கைப்பற்றியுள்ளன.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126,012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102,274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43,319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், தேசிய காங்கிரஸ் 38,911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், கைப்பற்றியுள்ளது.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 05 இலட்சித்தி 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 402,344 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 385,997 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவானதோடு, 16,347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 79,460 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 67,692 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 33,424 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி 28,362 வாக்குகளை பெற்ற போதிலும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 86,394 வாக்குகளைப் பெற்று 02 ஆசனத்தையும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 39,570 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், சிறிலங்கா சமாஜவாதி கட்சி, ஜனவத பெரமுனை, அகில இலங்கை தமிழ் மகாசபை, சிறிலங்கா ஜீவகஜாதிக பெரமுன, ஈ.பி.டி.பி, ஜே.வி.பி, லிபரட் கட்சி, அபே ஜனபல, தேசிய ஜனநாயக முன்னனி உள்ளிட்ட கட்சிகள் இதில் போட்டியிட்டன.
(ஒலுவில் விசேட நிருபர் - எம்.எஸ்.எம். ஹனீபா) - நன்றி தினகரன்
நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 5 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
பொதுஜன பெரமுன கட்சியில் வெற்றி பெற்றவர்கள்.
- ஜீவன் தொண்டமான் - 109,155
- சி.பி. ரட்நாயக்க - 70,871
- எஸ்.பி. திஸாநாயக்க - 66,045
- மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902
- நிமல் பியதிஸ்ஸ - 51,225
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றி பெற்றவர்கள்.
- பழனி திகாம்பரம் - 83,392
- வேலுசாமி இராதாகிருஸ்ணன் - 72,167
- மயில்வாகனம் உதயகுமார் - 68,119
இம்முறை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்குப் பதிவாக 75% வாக்குப் பதிவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(தலவாக்கலை குறூப் நிருபர் - பி. திருகேதீஸ்) நன்றி தினகரன்
இ.தொ.கா ரமேஸ்வரன் உறுதி
மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்பினையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொடுத்தது மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம்.
அதேபோன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சதான் இந்த நாட்டின் 10 வருடத்திற்கு ஜனாதிபதி. அந்த அரசாங்கத்தின் ஒரே பங்காளி கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.
அதனூடாக மலையகத்தின் பாரிய தொழில் வாய்ப்புக்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இ.தொ. கா. வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டம் நேற்று ஹட்டன் டி.கே.டப்ளியூ மண்டபத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வந்து ஆதரவளிப்பது மட்டு அல்லாது ஆசிர்வாதத்தினையும் செலுத்தி சென்றுள்ளனர்.
இன்றும் அவ்வாறே தான். ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு பெரும் சக்தியாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுக்கு இ.தொ. கா.வின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான், கணபதி கணகராஜ், பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உட்பட இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். நன்றி தினகரன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியிட்ட இருவர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கொலைக் குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவும் மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுமே இவ்வாறு இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
1,04,237 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள பிரேமலால் ஜயசேகர இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அதிக விருப்பு வாக்குகள் பெற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் காவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதே வேளை,மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் 54,198 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.(ஸ)
இரத்தினபுரி சுழற்சி நிருபர் - நன்றி தினகரன்
விக்கி, கஜேந்திரகுமாருக்கு சுமந்திரன் அழைப்பு
பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,
சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் இல்லையெனில் பாராளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
மனோ கணேசன் உட்பட இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிறுபான்மை வேட்பாளர்கள் மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட மனோகணேசன், எஸ். எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் மனோ கணேசன் 62,091 வாக்குகளையும் எஸ்.எம். மரிக்கார் 96, 916 வாக்குகளையும் முஜிபுர் ரஹ்மான் 87,589 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன கடந்த 1977 ஆம் ஆண்டு அமைத்த அரசாங்கத்தின் பின்னர் மிகவும் வலுவான அரசாங்கத்தை இம்முறை தமது கட்சி அமைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நேற்றுக் காலை 07 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களுக்கமைய 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனிக் கட்சியாக அதிகமான ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுமெனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையிலிருந்து வருகிறது. நன்றி தினகரன்
இலங்கை மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற கட்சியாக பொதுஜன பெரமுன இந்த தேர்தலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு எதிர்பார்த்ததுதான். இருப்பினும் பழம் பெரும் தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறாக பின்னடைவு காணுமென எதிர்பார்க்கப்படவில்லை.
2016இல் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன இன்று நாட்டு மக்களின் ஏகோபித்த கட்சியாக விளங்குகிறது. அதன் தேசியஅமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திகழ்கிறார்.
கட்சி உருவாக்கப்பட்டு நான்கு வருட காலத்தினுள் தேசிய ரீதியில் இவ்வாறு அமோக ஆதரவைப் பெற்றதற்கு பலவித காரணங்களைக் கூறலாம். கடந்த நல்லாட்சியின் மீதான வெறுப்பு, எதிர்க்கட்சிகளின் பிளவு, பொதுஜன பெரமுன மீதான நம்பிக்ைக போன்ற பல விடயங்களைக் குறிப்பிடலாம்.
1977க்குப் பிறகு விகிதாசாரத் தேர்தலின்படி மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கப் போகின்றதென்றால் அது பொதுஜன பெரமுன கட்சி ஆகும்.
இலங்கையின் 9ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கப் போகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
தேசிய காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அபே ஜனபலவேகய ஆகியன தலா ஒவ்வோர் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இதேவேளை 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் 7 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியு,ம் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளன.
2018இல் உள்ளூராட்சித் தேர்தலின் போது புதிய கட்சியாக முதலில் போட்டியிட்டது. அதனைத்தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தல் நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது.
இன்றைய தேர்தலில் பழம் பெரும் ஐ.தே.கட்சி இம்முறை ஒரு ஆசனத்தைக் கூட விருப்பு வாக்கில் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவியிருக்கின்றதென்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் முன்னாள் முதல்வர் ரணில்தான் ஏற்க வேண்டியவராக உள்ளார்.
எதிர்க் கட்சி இவ்வாறு ரணில் என்றும் சஜித் என்றும் சிதறியுள்ளது. சு.கட்சி கூட பிரிந்துபட்ட நிலையில் சென்று விட்டது. அந்த வகையில் சஜித் பிரேமதாசவின் 'தொலைபேசி' சின்னம் இரண்டாவது கட்சியாக எதிர்க்கட்சி நிலையிலிருக்கக் கூடிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுனவுக்கு சிங்கள மக்கள் மட்டுமன்றி சிறுபான்மையினங்களும் சேர்ந்து நியாயமான வாக்ளித்திருக்கின்றன என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும். சிறுபான்மை மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை இத்தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக உள்ளது. அதாவது உரிமைக்கு அப்பால் அபிவிருத்தி அரசியலை விரும்பும் போக்கு தென்படுகிறது.
அதன் காரணமாக வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்று வந்த த.தே.கூட்டமைப்பு இம்முறை சரிவை சந்தித்துள்ளது. தேசியரீதியில் ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொண்ட 3,27,168 வாக்குகளைப் பெற்ற காரணத்தினால் தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைத்துள்ளது. அதனை அரசியல்அநாதையாகவுள்ள அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
த.தே.கூட்டமைப்பு கடந்த காலத்தில் நடத்தி வந்த அரசியல் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை அல்லது வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது தெரிகின்றது. அதன் வெளிப்பாடாக யாழ்ப்பாணத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3ஆகக் குறைந்தது தொடக்கம் அம்பாறையில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமை வரை கூறலாம்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா, செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டதும் இவ்வெறுப்பின் அடையாளமாகவே கருத இடமுண்டு.
நிறைவேறாத உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறி வாக்குகளைப் பெற முடியாதென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இத்தேர்தல் உணர்த்தி நிற்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் காலாகாலமாக பிரதிநிதித்துவத்தைப் பெற்று வந்த த.தே.கூட்டமைப்பை விட இரண்டே மாதங்களில் மட்டக்களப்பில் இருந்து வந்த கருணா அம்மான் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
இது மக்களின் மனநிலையில் உள்ள மாற்றத்தைக் காட்டுகின்றது.
மட்டக்களப்பு முடிவும் இதனையே கூறுகிறது. த.தே.கூட்டமைப்பின் எதிரணி என்று சொல்லக் கூடிய பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனை மக்கள் தெரிவு செய்துள்ளமையும் மற்றுமொரு உதாரணமாகும். பழைய முகங்களை மக்கள் வெறுத்தொதுக்கியுள்ளனர். திருமலையிலும் கணிசமானளவு வாக்குகள் கூட்டமைப்பிற்கு குறைந்துள்ளன.
எனவே த.தே.கூட்டமைப்பு தன்னை விரைவாக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.
இந்நிலையில் வெற்றிவாகை சூடியுள்ள பொதுஜன பெரமுனை சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் பாங்கிலேயே அவர்களது எதிர்காலம் மற்றும் நாட்டின் சமாதானம், இனஐக்கியம், அபிவிருத்தி என்பன நிலைபேறாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.
பாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது எம்.பி. பதவிகளை இழந்து தோல்வியடைந்துள்ளனர்.
இத்தேர்தலில் ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் தெரிவாகாத நிலையில், தனது 42 வருட அரசியல் வரலாற்றில் ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக இம்முறை தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு
1. ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.க.)
2. ரவி கருணாநாயக்க (ஐ.தே.க.)
3. தயா கமகே (ஐ.தே.க.)
4. திலங்க சுமதிபால (ஶ்ரீ.ல.பொ.பெ.)
5. ஏ.எச்.எம்.பௌசி (ஐ.ம.ச.)
6. ஹிருணிகா பிரேமச்சந்திர (ஐ.ம.ச.)
7. சுஜீவ சேனசிங்க (ஐ.ம.ச.)
யாழ்ப்பாணம்
69. மாவை சேனாதிராஜா (த.அ.க.)
70. ஈ. சரவணபவன் (த.அ.க.)
71. விஜயகலா மகேஸ்வரன் (ஐ.தே.க.)
திகாமடுல்ல
66. அனோமா கமகே (ஐ.தே.க.)
67. கவிந்திரன் கோடீஸ்வரன் (இ.த.அ.க.)
68. சிறியானி விஜேவிக்ரம (ஶ்ரீ.ல.பொ.பெ.)
மட்டக்களப்பு
60. எஸ். யோகேஸ்வரன் (த.தே.கூ.)
61. ஞானமுத்து சிவனேஸ்வரன் (த.தே.கூ.)
62. அலி ஸாஹீர் மௌலானா (ஶ்ரீ.ல.மு.கா.)
63. அமீர் அலி (ஐ.ம.ச.)
திருகோணமலை
64. சுசந்த புஞ்சிநிலமே (ஶ்ரீ.ல.பொ.பெ.)
65. அப்துல் மஹரூப் (ஐ.ம.ச.)
நுவரெலியா
49. நவீன் திஸாநாயக்க (ஐ.தே.க.)
50. கே.கே. பியதாச (ஐ.தே.க.)
51. மயில்வாகனம் திலகராஜ் (ஐ.ம.ச.)
கம்பஹா
8. துலிப் விஜேசேகர (ஶ்ரீ.ல.பொ.பெ.)
9. ருவன் விஜேவர்தன (ஐ.தே.க.)
10. அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.க.)
11. அஜித் மன்னப்பெரும (ஐ.ம.ச.)
12. விஜித் விஜயமுனி சொய்சா (ஐ.ம.ச.)
13. சத்துர சேனாரத்ன (ஐ.ம.ச.)
14. எட்வட் குணசேகர (ஐ.ம.ச.)
களுத்துறை
15. அஜித் பீ. பெரேரா (ஐ.ம.ச.)
16. பாலித தெவரப்பெரும (ஐ.தே.க.)
17. லக்ஷ்மன் விஜேமான்ன (ஐ.தே.க.)
18. நலிந்த ஜயதிஸ்ஸ (தே.ம.ச.)
காலி
19. வஜிர அபேவர்தன (ஐ.தே.க.)
20. விஜேபால ஹெட்டியாராச்சி (ஐ.ம.ச.)
21. பந்துலால் பண்டாரிகொட (ஐ.ம.ச.)
22. பியசேன கமகே (ஐ.ம.ச.)
மாத்தறை
23. லக்ஷ்மன் யாபா அபேவர்தன (ஶ்ரீ.ல.பொ.பெ.)
24. நிரோஜன் பிரேமரத்ன (ஶ்ரீ.ல.பொ.பெ.)
25. மனோஜ் சிறிசேன (தே.ப.உ.)
26. சுனில் ஹந்துன்னெத்தி (தே.ம.ச.)
அம்பாந்தோட்டை
27. நிஹால் கலப்பதி (தே.ம.ச.)
குருணாகல்
28. அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.க.)
29. தாரானாத் பஸ்நாயக (ஶ்ரீ.ல.பொ.பெ.)
30. டீ.பீ. ஏக்நாயக்க (ஶ்ரீ.ல.பொ.பெ.)
31. இந்திக பண்டாரநாயக்க (ஐ.ம.ச.)
புத்தளம்
32. பாலித ரங்கே பண்டார (ஐ.தே.க.)
33. ஷாந்த அபேசேகர (ஐ.ம.ச.)
34. அசோக பிரியந்த (ஶ்ரீ.ல.பொ.பெ)
அநுராதபுரம்
35. சந்திராணி பண்டார (ஐ.ம.ச.)
36. பி. ஹரிசன் (ஐ.ம.ச.)
37. சந்திம கமகே (ஐ.ம.ச.)
38. வீரகுமார திஸாநாயக்க (ஶ்ரீ.ல.பொ.பெ.)
39. எஸ்.ஏ. முத்துக்குமார (ஶ்ரீ.ல.பொ.பெ.)
பொலன்னறுவை
40. சிட்னி ஜயரத்ன (ஐ.ம.ச.)
41. நாலக கொலன்ன (ஐ.தே.க.)
பதுளை
42. லக்ஷ்மன் செனவிரத்ன (ஐ.ம.ச.)
43. ரவி சமரவீர (ஐ.ம.ச.)
மொணராகலை
44. பத்ம உதயசாந்த (ஶ்ரீ.ல.பொ.பெ.)
45. சுமேதா ஜீ ஜயசேன (ஶ்ரீ.ல.பொ.பெ.)
46. ஆனந்த குமாரசிறி (ஐ.ம.ச.)
கண்டி
47. ஆனந்த அலுத்கமகே (ஶ்ரீ.ல.பொ.பெ.)
48. லகீ ஜயவர்தன (ஐ.ம.ச.)
மாத்தளை
52. வசந்த அலுவிஹாரே (ஐ.ம.ச.)
53. ரஞ்சித் அலுவிஹாரே (ஐ.ம.ச.)
54. லக்ஷ்மன் வசந்த பெரேரா (ஶ்ரீ.ல.பொ.பெ.)
கேகாலை
55. சங்தித் சமரசிங்க (ஐ.தே.க.)
56. துஷிதா விஜேமான்ன (ஐ.ம.ச.)
இரத்தினபுரி
57. துனேஷ் கன்கந்த (ஶ்ரீ.ல.பொ.பெ.)
58. கருணாரத்ன பரணவிதான (ஐ.ம.ச.)
59. ஏ.ஏ. விஜேதுங்க (ஐ.ம.ச.)
- 59 பேர் போட்டியிட்டனர்
2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சுமார் 59 பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்த போதிலும், 08 பேரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
2015 பாராளுமன்றத்தில் 12 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததோடு, பாராளுமன்றத்தில் முன்னைய பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 வீதமாகும்.
1. கோகிலா ஹர்ஷனி - 77,922
2. சுதர்சினி பெணான்டோபிள்ளை - 89,329
காலி
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
3. கீதா குமாரசிங்க - 63,358
மாத்தளை
ஐக்கிய மக்கள் சக்தி
4. ரோஹினி குமாரி கவிரத்ன - 27,587
இரத்தினபுரி
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
5. பவித்திரா வன்னியாராச்சி - 200,977
6. முதித்த பிரசாந்தினி - 65,923
ஐக்கிய மக்கள் சக்தி
7. தலதா அத்துக்கோரள - 45,105
கேகாலை
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
8. ரஜிகா விக்ரமசிங்க - 68,802
கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்காக தானும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருப்பதாக அதன் தலைவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பில் (07) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான நேர்மையான, ஊழலற்ற, தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இந்த முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தல் முடிவடைந்த பின்னர், ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ள சில செயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப் பாதையை கட்டியம் கூறிநிற்கின்றதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்தின் நன்மை கருதி தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது.
அதற்கு தானும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எஸ். நிதர்ஸன் - நன்றி தினகரன்
- 4 ஆவது தடவையாக பிரதமராக தெரிவு
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 13ஆவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இப்பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) முற்பகல் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த களனி ரஜ மகா விகாரை புனித பூமியில் இடம்பெற்றது.
நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினார்.
2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.
பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, சுமார் 30 வருட காலமாக நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து, நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச்சென்றார்.
குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது இலங்கையில் பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது.
இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்தார்.
மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமருக்கு ஆசிர்வாதம் வழங்கினர். பதவிப் பிரமாண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதியும் பிரதமரும் விகாரைக்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர்.
பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி பிரதமரை சூழ திரண்டிருந்த மக்களிடம் சென்று அவர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார்.
மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர், தூதுவர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள, புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment