மலையக வரலாற்றில் என்றும் அழியாத நாமம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவானது மலையகத் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையகம் சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் துயரத்தின் சாயல் படிந்துள்ளது. தங்களது தலைவரை இழந்த துயரத்தில் அம்மக்கள் உள்ளனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு இலங்கையில் இருந்து மாத்திரமன்றி இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இருந்து அனுதாபச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமுள்ளன.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் 1990ஆம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். அன்று தொடக்கம் தனது மரணத் தறுவாய் வரை மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்தார்.
1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர்  1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக பாராளுமன்றத் தேர்தல்களின் வெற்றியீட்டி வந்தார்.

கடந்த காலத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த அவர் மலையக மக்களுக்காகவும் இந்திய வம்சாவளி மக்களுக்காகவும் ஆற்றிய பணிகள் ஏராளம்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி  பயின்றுள்ளார். இன்றைய அரசில் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார்.

தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி  தமிழர்கள் இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அன்னார் மறைந்த இன்றைய காலகட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் நிறைந்த காலகட்டமாக உள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபாய தலைமையிலான அறுதிப் பெரும்பான்மை அரசாங்கம் ஒன்று அமையக் கூடிய வாய்ப்பு உள்ள நிலையில் ஆறுமுகன் மறைந்து விட்டார்.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமையவிருக்கின்ற புதிய அரசில் அமைச்சராக இருந்து தனது மலையக மக்களுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றக் கூடிய வாய்ப்புகள் இருந்த நிலையில் அவரது மறைவு துரதிருஷ்டமானதாகும்.
மலையகத் தமிழ் மக்களின் பலம் பொருந்திய அரசியல் தலைவர் ஒருவர் மறைந்து விட்டார்.  இந்த  இழப்பு என்பது மலையக மக்களைப் பொறுத்த வரை துயரம் நிறைந்ததாகும்.

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை   நடைபெற உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரின் பூதவுடல் கொழும்பிலுள்ள  மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் பத்தரமுல்லையில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னாரின் பூதவுடல் இன்று 29ம் திகதி கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் 31ம் திகதி இறுதிக் கிரியை நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.  பதாதைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. மக்கள் தங்களின் தலைவருக்கு இரங்கல்கலை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆறுமுகனின் மறைவை அறிந்ததும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகவே வைத்தியசாலைக்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசியல் தலைவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகம் தொண்டமானின் அகால மரணம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
"மலையக மக்களுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது. அமைச்சர் தொண்டமான் அவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் வழியில் மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவராவார்" என்று கூறியுள்ளார் சம்பந்தன்.
அமைச்சராகப் பதவி வகித்த காலப் பகுதிகளில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நன்மை கருதி அநேக பயன்தரு வேலைத் திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவராகவும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்ட ஒரு மக்கள் தலைவராகவும் ஆறுமுகன் தொண்டமான் விளங்குகிறார்.
அன்னாரது மறைவானது மலையக மக்களுக்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களுக்கும்  பாரிய இழப்பாகும் என்பதில் ஐயமில்லை.  பிரதானமாக இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்களின் தலைவரை இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நாமம் மலையக அரசியல் வரலாற்றில் என்றும் அழியாததாகும்.   நன்றி தினகரன் 

No comments: