கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 15 தமிழில் விஞ்ஞானம் எழுத நேர்ந்து, அரசியல் பிரவேசம் தொடங்கிய காலம் ! அம்பிமாஸ்டர் - அம்பிகாபதியாகி, கவிஞர் அம்பியாகிய கதை !!


கல்விப்பணியிலிருந்தவாறு,  இலக்கியப்பிரவேசமும் செய்திருக்கும் நான், முதலில் எழுதிய சிறுகதை இலட்சியச்சோடி. அது தினகரனில்  வெளியானது.
எனது இளம்வயதிலேயே இச்சிறுகதை வெளியானது.  எனது கையெழுத்தில் அனுப்பப்பட்ட முதல் சிறுகதை தினகரனில் அச்சாகி வெளியானதைப் பார்த்து பேருவகைகொண்டேன்.
அந்தப் பெருமிதம்,   முதல் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்த  தாய்க்கு வரும் அளவுகடந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது.
எனது கன்னிப்படைப்புக்கு பத்திரிகையில் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து உற்சாகத்துடன் தொடர்ந்து இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கினேன்.
அக்காலப்பகுதியில் வெளியான ஈழகேசரி பத்திரிகையில் உறவு மலர்ச்சி என்ற குறுநாவல் ஒன்றையும் எழுதினேன். ஆசிரியர் இராஜ அரியரட்ணம் என்னை ஈழகேசரி காரியாலயத்திற்கு அழைத்து இலக்கியப்  புதினங்கள் பேசிக்கொண்டிருப்பார்.
என்னை இலக்கியத்துறையில் ஊக்குவித்தவர்களில் அவரும் முக்கியமானவர். அவரது மனைவியார் அண்மையில் கனடாவில் மறைந்துவிட்ட செய்தியையும் அறிந்தேன்.
ஈழகேசரியில் எனது எழுத்துக்கள் வெளிவந்த காலப்பகுதியில் பாடசாலைகளில் தாய்மொழி மூலம் விஞ்ஞானம் கற்பிக்கலாம் என்ற புதிய திட்டம் அறிமுகமானது.
அதுவரையில் ஆங்கில மூலம் கற்பிக்கப்பட்டு வந்த விஞ்ஞான பாடங்களை மாணவர்களுக்கு தமிழிலே அறிமுகப்படுத்தி கற்பிக்கவேண்டிய சூழல் உருவானது.
இவ்வேளையில் நண்பர் இராஜ. அரியரட்ணம் தக்க ஆலோசனைகளை எனக்கு வழங்கியதையும் மறந்துவிடமுடியாது.
ஆக்க இலக்கியம் எழுதத்தொடங்கியிருந்த நான்,   அதுவரையில் நடைமுறையிலிருந்த ஆங்கில மொழி மூலமான விஞ்ஞான பாடங்களை தமிழில் எவ்வாறு எழுதுவது, கற்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
அக்காலப்பகுதியில் வடமாகாண ஆசிரியர் சங்கம் என்று ஒன்றிருந்தது. அதனை Northern Province Teachers Association             ( N.P.T.A) என ஆங்கிலத்திலும் அழைப்பர். இச்சங்கம் வடபகுதியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக ஒரு பரீட்சையும் நடத்தி வந்தது.
அதற்கான பாடத்திட்டம், பாட விதானம் முதலான விடயங்களை அச்சங்கம் தமிழில் வெளியிட்டிருந்தது.
அதற்கு ஏற்ப மாணவர்கள்  பயன்பெறத்தக்க ,  பாடங்களை ஈழகேசரியில் எழுதுமாறு அன்பர் இராஜ ஆரியரட்ணம் ஆலோசனை தந்ததுடன், சில தமிழக நூல்களையும், கலைச்சொல் அகராதியையும் எனக்குத்  தந்து உதவினார்.
அதனால் தூண்டப்பட்ட நான்,  குறிப்பிட்ட N.P.T.A நடத்தவிருந்த எட்டாம் வகுப்பிற்கான பரீட்சைக்கு ஏற்ப மாணவர்கள் படித்து பயன்பெறத்தக்கவகையில் ஈழகேசரியில் விஞ்ஞானப்பாடங்களை வாரம்தோறும் எழுதத் தொடங்கினேன்.
அதனால், எமது தமிழ் மாணவர்களுக்கு முதல் முதலில் தமிழில் விஞ்ஞான பாடங்களை அறிமுகப்படுத்திய பெயரும் எனக்கு கிடைத்தது.
அதற்கெல்லாம் காரணம் இராஜ அரியரட்ணம் அவர்களே!
 “ ஈழகேசரியில் அம்பிகைபாகன் அவர்கள் எழுதிவரும் விஞ்ஞானப்பாடங்கள் தொடர்பான விளக்கங்கள்  பற்றி நான் ஏதும் அறியேன். எனக்கு விஞ்ஞான அறிவியலும் தெரியாது, ஆனால், பாடசாலைகளில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர்களும் அதனைப்படிக்கும்  மாணவர்களும், ஈழகேசரியின் மூலம் நல்ல பயன் அடைவதாக  என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.  “ என்று இரசிகமணி கனக செந்திநாதனும் வெளியே பேசத் தொடங்கியிருந்தார். அவருடைய அங்கீகாரமும் எனக்குத்  தூண்டலைத்தந்தது.
இதுவே நான் எழுத்துலகில் பிரவேசித்ததும் கண்டடைந்த முதலாவது திருப்பம்!
சிறுகதையில் ஆரம்பித்து, தமிழில் விஞ்ஞானப்பாடங்களும் எழுதத்தொடங்கி,  அந்த முயற்சியிலும் வெற்றி கண்டேன்.
“ முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  “  என்பது எமது ஆன்றோர்  வாக்கு. அந்த வாக்கு என்னைப்பொறுத்தவரையில் உண்மையாகியது. தொடர்ந்தும் விஞ்ஞானப்பாடங்களை மட்டுமல்லாது,  மாணவருக்கு ஏற்ற விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதினேன்.
காற்றினிலே வரும் கீதம் என்ற தலைப்பில் ஒலி பற்றியும் – கண்ணில் தெரியுதொரு தோற்றம் என்ற தலைப்பில் ஒளி பற்றியும் கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன்.  எளியமுறையில் விஞ்ஞானப்பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் எழுதினேன்.
முடிந்தவரையில் சில பாடல்வரிகளையே தலைப்பாகக்கொண்டு அக்கட்டுரைகளை எழுதியமையால், எனக்குள்ளிருந்து மற்றும் ஒரு உருவம்  என்னையறியாமலேயே வெளிக்கிளம்பியது.  அந்த உருவம்தான் கவிஞன் என்ற அடையாளம்.
அதனையடுத்து நான் அரசியலிலும் ஆர்வம் காண்பித்தேன்.  அதற்கு எனது கவிஞன் என்ற அடையாளம்தான்  காரணம். அந்த திசை திருப்பம் 1956 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
ஈழத்தின் வரலாற்றிலே, குறிப்பிட்ட 1956 ஆம் ஆண்டு மிக முக்கியமான காலகட்டம். அரசகரும மொழி தனிச்சிங்களமே என்ற சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காலம்.  அதுவரை காலமும் தமிழ்மொழிக்கு அரசகருமங்களில் பாரபட்சம் இருக்கவில்லை. அந்த பாரபட்சமான சட்டம் வந்ததும், தமிழ் எங்கள் உயிர்  என வாழ்ந்த தமிழ்மக்களுக்கு பேரிடியாக வந்து அமைந்தது.
தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ்மக்களையும் இணைத்துக்கொண்டு அறப்போரைத் தொடங்கிய காலம்தான் அது. கொழும்பில் பழைய நாடாளுமன்றத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகப்போரை தொடங்கியதையும் பொலிஸார் தடி அடிப்பிரயோகம் நடத்தி அறப்போராளிகளை கலைத்ததையும் அறிவீர்கள்.  இதுபற்றி பிறகு பல வரலாற்றுக்கட்டுரைகள் , நூல்கள் வெளிவந்துள்ளன.
தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு அத்தியாயம் அப்போது எழுதப்பட்டது.  இச்சமயத்தில் ஆசிரியப்பணியிலும் இலக்கிய எழுத்துப்பணியிலும்  ஈடுபட்டிருந்த எனது வாழ்வில் அந்த அரசியல் நெருக்கடி திருப்பத்தை ஏற்படுத்தியது.
அரசியலில் தீவிரமாக காலை ஊன்றினேன். அரசமொழியாக சிங்களம் மட்டும் சட்டம் வந்ததையடுத்து, அதற்கு எதிராக கவிதைகள் மூலம் உணர்வெழுச்சிகளை வெளிப்படுத்தினேன்.
அப்போதுதான் ஓடிடும் தமிழா எனத் தொடங்கும் கவிதையை எழுதினேன்.  இனவாதிகளிடம் அடிவாங்கிக்கொண்டு தமிழர்கள் ஓடத்தொடங்கிய காலம் அது. தமிழர்கள் அன்றுமுதல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பின்னாளில் தாய்நாட்டை விட்டே ஓடினார்கள்.
  இன்று தமிழர் இல்லாத நாடுகளும் இல்லை. தமிழர்க்கென்று ஒரு நாடும் இல்லை.  எதிர்காலத்தில்    ஈழத் தமிழினம்  உலகெங்கும்  பரதேசியாக அலைந்துழலப்போகிறது என்பதைத்  தெரிந்துகொள்ளாமலேயே ,   தமிழச்சாதியின் ஈனநிலை கண்டு, வெகுண்டு நான்  அன்று எழுதிய அக்கவிதை இவ்வாறு அமைந்தது:
                      ஓடிடும் தமிழா நில் நீ…
                              ஒருகணம் மனதைத் தட்டு
                   நாடெலாம் சுற்றிப்பார்
                          நம் தமிழ்க்கன்னிப் பெண்ணை
                வீடிலாக் கைம்பெண் போன்று
                         வீதியில் விரட்டுவோரை
                  மாடுபோல் தொடரும் நீ – ஓர்
                        மனிதனாய் வாழ்கின்றாயா…?
இந்தத் தொடரில் பின்னாளில் மேலும் சில கவிதைகள் எழுதியிருக்கின்றேன்.
அக்காலப்பகுதியில் நான் எழுதிய தமிழ் உணர்ச்சியூட்டும் கவிதைகளை அம்பிகாபதி என்ற புனைபெயரிலேயே எழுதினேன். அத்துடன் நிற்கவில்லை. இயலுமான வழிமுறையில் சாத்வீகப்போராட்டங்களிலும்  ஈடுபட்டேன். அதில் முக்கியமானது சிங்கள ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம். வாகனங்களில் பொறிக்கப்பட்டிருந்த இலக்கத்தகடுகளில் சிங்கள ஶ்ரீ இருந்தது. அதனை தார்பூசி அழித்த போராட்டமும் நடந்தது. அந்தப்போராட்டத்தை தமிழரசுக்கட்சி முன்னெடுத்தது.
அரச பேருந்துகளில் காணப்பட்ட இலக்கத்தகடுகளில் முதலில் கைவரிசையை காண்பித்தோம். அதனையடுத்து வடக்கில் பல தமிழ்த்தலைவர்கள் கைதானார்கள். நானும் எனது பங்கிற்கு அந்தப்போராட்டத்தில் ஈடுபட்டேன்.
மாணவர்களுக்காகவும் எனது  இலக்கிய எழுத்துப்பணிக்காகவும் பேனை எடுத்துக்கொண்டிருந்த நான், சிங்கள ஶ்ரீ எதிர்ப்பு போரின்போது கையில் தார்ச்சட்டியும் தூரிகையும் ஏந்தி வலம்வந்தேன். தற்காலத்தில் இலங்கையில் ஓடும் வாகனங்களில் அந்த சிங்கள ஶ்ரீ  எழுத்தை காணமுடியவில்லை என்பது காலம் செய்தகோலம்.
இளம் கன்று பயம் அறியாதது என்பதும் ஆன்றோர் வாக்கு.
தமிழ் அரசியல் ஈடுபாட்டினால் கவிதைத் துறைக்குள் வந்திருந்த நான், தொடர்ந்து கவிதைகள் எழுதியமையால் கவிஞர் அம்பி என அழைக்கப்படலானேன்.
அம்பி மாஸ்டர்,  கவிதைத்துறையில் அம்பிகாபதியாகி, பின்னர் கவிஞர் அம்பியாகிய கதை இதுதான். எனது கவிதைக்குரல் ஈழம் – தமிழ் நாடு – மொரிஷீயஸ் என்று ஒலிக்கத் தொடங்கியது. பாப்புவா நியூகினியில் வாழநேர்ந்த பன்னிரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியது மற்றும் ஒரு சுவாரசியமான கதையாகும்.
அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் பற்றியும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி , அவற்றை அவர்களிடமே நேரடியாக கையளித்தேன். அவ்வாறு எழுதப்பட்ட  ஆங்கிலக்கவிதைகளே, Lingering Memories  என்ற பெயரில் நூலாகவும் வெளியானது.
1956 ஆம் ஆண்டின் பின்னர் கவியரங்குகளிலும் பங்கேற்று கவிதை வாசித்தேன்.  சில அரங்குகளுக்கு தலைமையும் தாங்கினேன்.
குழந்தைகளுக்கான கவிதை முதல் பெரியவர்களுக்கான கவிதைகளையும் தொடர்ந்து எழுதிவரலானேன்.  இறுதியில் கவிஞர் அம்பி என்ற  அடையாளமே எஞ்சியது!
(தொடரும் )

No comments: