“ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இரங்கல் - முருகபூபதி



அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில்  மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,  தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிபரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக  ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன்  கடந்த  29 -05 – 2020  ஆம் திகதி அதிகாலை மெல்பனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை பகிர்ந்துகொள்கின்றோம்.
சபேசனின் வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புகளை அண்மையில்தான் பதிவேற்றியிருந்தோம்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள தகவல் குறித்து,    சபேசனின் நீண்டகால நண்பரும் தமிழ்நாடு திராவிட இயக்கப்பேரவையின் தலைவருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தோம். அவரும் மிகவும்  வருந்தியதுடன் மேலதிக தகவலை கேட்டறிந்து சொல்லுமாறு தெரிவித்தார்.
எனினும்,  அதனையடுத்து மறுநாள்  அதிகாலை சபேசன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியைத்தான் அவருக்கு வழங்கமுடிந்தது.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தமது இரங்கல் செய்தியில்,                  “ அரியதோர் நண்பனை இழந்துவிட்டோம். கண்கள் கலங்குகின்றன. எங்கோ பிறந்து, எங்கோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோனது எமது நண்பரின் வாழ்க்கை. மெல்பனுக்கு என்னை முன்னர் அழைத்திருக்கும் அவர்,  தமது இல்லத்தில் தங்கவைத்து அன்போடு உபசரித்து பல நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அழைத்துச்சென்று பேசவைத்த தமிழ் உணர்வாளர்.  அவரைப்பற்றிய நினைவுகள்தான் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஆழ்ந்த வேதனையினால்  கலங்கியிருக்கின்றேன். நண்பர் சபேசனது குடும்ப உறவுகளுக்கும்  அவரை நேசித்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன் “  எனக் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனிலிருந்து ஐ.பி. சி.  ஊடகவியலாளர் எஸ்.கே. ராஜென் இரங்கல்


 “ தாயகமண்ணை விட்டுப் புலம்பெயர்ந்த பின்னரும் தாயக உணர்வோடு அந்த மண்ணுக்காகப் பணியாற்றியவர்களில் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்த மெல்பேர்ண் சபேசன் குறிப்பிடத்தக்க ஒருவர்.  “  என்று கலைஞரும் லண்டன் ஐ.பி. சி. வானொலி – தொலைக்காட்சி ஊடகவியலாளருமான  திரு. எஸ்.கே. ராஜென் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிவரஞ்ஜித் அவர்கள் ஐபிசி தமிழ் பணிப்பாளராக விளங்கிய 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொலைபேசி வாயிலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்தான் சபேசன் அவர்கள்.

ஒருமுறை  அவர் இலண்டன் வந்திருந்த வேளையில் நேரடியான சந்திப்பும் உரையாடலும் நிகழ்ந்தன.
சபேசன் அவர்கள் அறிமுகமான காலத்திலிருந்து வாரம் தோறும் அவரிடத்தில் பேசி நிகழ்ச்சி ஒலிப்பதிவு மேற்கோண்ட நாட்கள் மறக்க முடியாதவை.

தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவையான அவரது கருத்துக்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தவை.
காலத்துக்குப் பொருத்தமாகக் கருத்துக்களை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான காலம் வரை ஐபிசி தமிழ் வானொலியில் தமது நிகழ்ச்சியூடாக அவர் முன்வைத்தார்.
நிகழ்ச்சி ஒலிப்பதிவு வேளைகளில் எப்போதுமே எம்மை அவர் காக்க வைத்ததில்லை.

சபேசன் அவர்களின் தமிழ்த்தேசியப் பணியை காலம் மறக்காது. நாமும் மறக்கக் கூடாது. அன்னாருக்கு எமது
இறுதி வணக்கம்.

---0---




No comments: