அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 16 – பீனாச்சி/கொகாலு


பீனாச்சிகாற்றுக்கருவி

பீனாச்சி என்பது தமிழர் பழங்குடி மக்களின் ஊதுகருவியாகும்ஒன்றரை அடி நீளத்தில் பார்ப்பதற்கு நாதஸ்வரம் போன்று இருக்கும் பீனாச்சி பல பாகங்களையுடையது. மூங்கில் குழலில் 6 துளைகள் போடப்பட்டு இருக்கும். பீனாச்சியில் வாய் வைத்து ஊதும் இடத்தில் மூங்கில் துளை அடைக்கப்பட்டு ஒரு சிறு குச்சி சொருகும் அளவுக்கு துளை இடப்பட்டு உள்ளது. அதில் ஒரு உலோக தகடு வைக்கப்பட்டு அதன் மீது பில்லுவை பொருத்துகிறார்கள். பில்லுவை ஒரு வகை புல்லில் பீனாச்சி இசைக்கலைஞர்களே தயார்செய்கிறார்கள். ஒரு பில்லு தயார் செய்துவிட்டால் அதை ஒரு இசைக் கலைஞர் தன் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மறுபுறம் ஒரே மரத்துண்டில் குடைந்து உருவாக்கப்பட்ட புனல் வடிவ பகுதி உள்ளது. புனல் வடிவ பகுதி பலாமரத்து வேர், குமுளி மரத்து வேர், மூங்கில் வேர், எருக்கிலை வேர் இவற்றில் ஏதாவது ஒன்றில் செய்யப்படுகிறது. புனல் வடிவ பகுதி கோத்தர் இனமக்களிடத்தில், உலோகங்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாய் பகுதியில் வைக்கப்படும் உலோகத்தகடு இரும்பு, பித்தளை என்று அவரவர் விருப்பப்படி வைத்துக்கொள்கிறார்கள். மரத்தாலான, புனல் வடிவ பகுதியிலிருந்து வெளிப்படும் இசை, உலோகத்தாலான புனல் வடிவ பகுதியிலிருந்து வரும் இசையை விட சற்று வேறுபட்டுக் கேட்க, இனிமையாகவும் மென்மையாகவும் அமைகிறது. சில இடங்களில் புனல் வடிவ பகுதியும், குழல் பகுதியும், பிரித்துப் பொருத்த முடியா வண்ணம், ஒரே மரத்திலிருந்து, கடைந்து எடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கும்.

இருளர் பழங்குடி மக்களிடம் கொகாலு அல்லது 'பீக்கி' என்றும்கோத்தர்களால் 'கோலு' அல்லதுகோல்என்றும், உதகை படுகர்கள், சொளகர் மற்றும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களிடம் பீனாச்சி என்கிற பெயரிலும், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் பழங்குடிகளிடம் சீணம்/சீணி/கோல் என்கிற பெயரிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இக்கருவி வழக்கில் உள்ளது.

மூச்சை நன்றாக உள்ளே இழுத்து பீனாச்சியில் காற்றை செலுத்த துளைகள் வழியாக வெளியேறும் காற்று இசையாக மாறுகிறது. இதற்கு உறுதுணையாக மத்தளம் இசைக்கும் கலைஞர்கள் மத்தளத்தையும், பறையும் இசைக்கிறார்கள். மத்தளமும், பறையும் அனைத்து இசை கலாசாரங்களிலும் இருக்கிறது. ஆனால் பீனாச்சி மட்டும் எங்கள் பழங்குடி மரபு சொத்து என்று கூறுகிறார் ஊராளி இனத்தை சேர்ந்த மகாதேவன்
இவர் தமிழகம் ஆசனூர்  கிராமத்தை சேர்ந்தவர். சத்தியமங்கலம் மலைவாழ் மக்களுக்கான பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின்னர் சமவெளியில் குடி பெயர்ந்து விடாமல், ஆசனூரில் பீனாச்சி, மத்தளம் ஆகிய இசைக்கலைகளை வளரும் தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பழங்குடி கலைக்கூடத்தில் உறுப்பினராக இருக்கிறார். இளைஞர்களுக்கு பீனாச்சி இசையை கற்றுக்கொடுத்து வருகிறார்.

ஊராளிகள் இல்லத்து காது குத்து, பூப்படைதல், சீர், திருமணம்
மரணம் மற்றும் கிராமக்கோவில் திருவிழா எதுவாக இருந்தாலும் பீனாச்சி இசைக்கு முக்கியத்துவம் உண்டு. இப்போது பீனாச்சி இசைக்க பலருக்கும் தெரிவதில்லை. அல்லது கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அந்தக்காலத்தில் எங்களுக்கு பொழுதுபோக்கு எல்லாமே இசைதான். அது ஒரு காலம் என்கிறார் மகாதேவன்.

இருளர்களின் கொகாலு மரத்தினால் செய்யப்படும். நாகலிங்கம், கிளியமரம், புழுதமரம் என்று சில மரங்களால் கொகாலு செய்யப்படுகிறது. பில்லுவுடன் கோழி இறகில் செய்த சிறிய குழல் கொகாலுவில் சொருகப்படும். இந்த துளை வழியே காற்று வெளியேறி நாதம் பிறக்கின்றது. கொகாலுவிற்கு ஒத்திசைவாக “பொரே” எனப்படும் மண்மேளம் போன்ற இசைக்கருவியும் தவில் போன்று ஆனால் கைகளால் ஒருபுறம் மட்டும் அடிக்கக்கூடிய மத்தளக்கருவியும் இணைந்து வாசிக்கப்படும். இருளர்களின் பிறப்பு முதல் இறப்புவரையான அனைத்துச்சடங்குகளிலும் இந்த இசைக்கருவிகள் இடம்பெறும். வட்டமாக நின்று ஆடும் அனைத்துப் பழங்குடியினரின் இயல்பைப் போலவே இவர்களும் ஆடுகிறார்கள். கொகாலுவை தங்கள் அடையாளமாக கருதுகிறார்கள் இருளர்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் இருளர்களின் பாடல்கள் மூலமாக அவர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும்  பேசும் நூல் "சப்பே கொகாலு".

இருளர்கள் வெவ்வேறு, பாடல் மெட்டுக்களை, தாம் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்றாற் போல, கொகாலு வாத்தியம் கொண்டு வாசிக்கின்றனர். இதை வாசிக்கத் தொடங்கும் முன், வாயின் எச்சிலைச் செலுத்தி, ஒலிவெளிக் கிண்ணம் வரை அமைந்துள்ள குழல் பகுதியை ஈரப்படுத்துவது வழக்கம். ஏனெனில், குழல் பகுதி, ஈரத்தில் தோய்ந்தாலன்றி, நல்ல நாதம் தராது என்கிறார்கள். அவசரமாக வாசிக்க வேண்டிய, சூழ்நிலைகள் வந்தால், எச்சிலுக்கு மாற்றாகத் தண்ணீரையேனும் ஊற்றி, அந்த குழல் உறுப்புகளை ஈரப்படுத்துவது உண்டாம்.

ஆனைகட்டியை சேர்ந்த கொகாலு கலைஞர் ரெங்கன் அவரது தமிழில்  கூறுகையில் – ஒரு 15 வயசிலிருந்து ஊதுகே. எத்து அப்பெ ஊதுவா, எங்க தாத்தாவும் ஊதுவா.  அவுங்ககூட ஆட்டத்துக்கு போவே.  அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இதுல நல்ல பேரு.  அவுங்க கொகல் புடித்தாங்கன்னா ஆனேகூட மயங்கி நிக்கூம்பா! காத்த இழுத்து உள்ளவெத்து மூச்சே கெட்டி ஊதுகோனு.. கஸ்டமாத்தான் கெடக்கும். கொஞ்சம் ஏமாந்த புல்லு போயி தொண்டக்குழியில  சிக்கிக்கு. நேமேதே கொகால் செஞ்சுக்குவோம். இப்பவும் கொகால் செய்யறதுக்குந்தே ஆளுக இருக்கின. தண்டு, தொப்பி, ஆனைக்கல், கயிறு, கோழி ரெக்கே, புல், இப்படி பலபாகமா இருக்கும். இத ஒந்தா சேத்தாதான் கொகாலு.  தொப்பின்னு பேரு இத நாகலிங்க மரத்துல செய்வோம். கிளியமரத்துலயும் செய்வோம். கிளியமரத்தவெட்டி கத்தியில கொடஞ்சு தண்ணியில ஊறவெச்சு எடுப்போம். தண்டையும் ஆனைக்கால்ன்னு சொல்லற பகுதிய புழுத மரத்துல செய்துக்குவோம். ஆனைகாலெ கூமலமரத்துலயும்  செய்வோம்.  தகடு, இத கிளியமரத்துல வெட்டிச் செதுக்கி வட்டமா பண்ணி ஓட்டையப்போட்டு கொகல்ல மாட்டிக்குவோம்.  இப்பதான் இதெல்லா தகடுல இருக்கு. அப்பவெல்லாம் மரத்துல தான் இருக்கும்.அப்புறம்  கோழி றக்க. ஒரு கோழில ஒன்னோ ரெண்டோ எறக்க தான் இப்படி ஊதறத்துக்கு வசதியா நல்லா இருக்கும். அதப் பாத்து எடுத்துக்குவோம்.  புல்லு. இது கதிரம்பள்ளியில இருக்கு. அந்த ஊருல நெறைய வெளஞ்சு கெடக்கும். ஒரு அஞ்சு புல்லு இருந்தா வாழக்கைபூராம் ஊதிக் கெடக்கலாம். இந்த கட்டுக்கயிற எருக்கலாம் செடியிலிருந்து பிரிச்சு நாராக்கி கட்டிக்குவோம். மொதல்ல  ஒன்னு ரெண்டு பொன்றிகளும்(பெண்கள்) சும்மா ஊதிட்டுதா இருந்தாங்ன்னு தாத்தா சொல்லுவின. எல்லா சீமைக்கும் போயிறுக்கேன். மன்னார்காடு, காரமடே, கோயாமுத்தூர் இப்படி இதுவரைக்கும் நெறய இடத்துல ஊதிருப்பேன். இதெல்லாம் வெளியாளுக இருக்கற ஊரு. ஆனா எங்காளுக இருக்குற ஊருல போய் ஊதமுடியாது. அங்க அவுங்கதான் ஊதனும். அவுங்க ஒத்துகிட்டா நாமளும் ஊதலாம்.

பழங்குடிகளின் விழாக்கள் பெரிய அளவிற்கு வெடி வெடித்து, அதிரடியான மேளங்கள் முழக்கி காதுகளை கிழிய வைக்கும் தாம்தூம் சத்தங்கள் இல்லாமல் இருக்கின்றது.  இவர்களின் இசை அந்தப்பகுதியில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தொந்தரவு கொடுக்காத மெல்லிசையாகவே அமைகிறது என்கிறார்கள் இந்த மூத்தக்குடிகள்.

பீனாச்சி இசைக்கருவி சத்தியமங்கலம் அருகில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் பொழுது தினமும் மலைவாழ் மக்களால் இசைக்கப்படுகிறது. நீலகிரி மலையில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் மற்ற பழங்குடிகளின் தெய்வ திருவிழாக்களிலும் பீனாச்சியும் மற்ற இசைக்கருவிகளும் முழங்கும். கோவில்களில் பீனாச்சி இசைக்கும் பொழுது பீனாச்சியின் அனசு பகுதியில் பூச்சரத்தை சுற்றுகிறார்கள். இக்கருவியின் இசை இரவு நேரத்தில் ஓலிக்கும் பொழுது அது மயங்காதவரையும் மயக்க வைக்கும் இசையாகவே அமைகிறது.

பழங்குடிகள் தங்கள் வாழ்விற்கும் சாவிற்கும் வெவ்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்துவது இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வழிபாட்டு முறைகளிலும் இசைக்கப்படும் இசைக்கருவிகள் ஒன்றுதான். இசைக்கப்படும் முறை தான் மாறுகிறதே தவிர கருவிகள் ஒன்று தான். தமிழகம் மற்றும் கேரளத்தில் வாழும் பல்வேறு பழங்குடிகளின் இசை மரபுகளில் பல ஒற்றுமைகள் உள்ளன இவர்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு கொகாலு/பீனாட்சி, அதனுடன் சேர்ந்து பறை மேளம்(ஹரெ/பொரெ), மத்தளம்(தவிலு/ஹரெகொலு), சில இடங்களில் மண்மேளம்(மண்மகுடம்) ஆகியவற்றை இசைக்கிறார்கள்.  இவர்களின் இசைக்குழுவில் தாளமும் (ஜால்ரா) உண்டு. ஆட்டமும் இசையும் பழங்குடியினரின் சொத்து. நம்மை போல் அவர்கள் பார்வையாளர்களாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒரு இசை அல்லது நடன கலைஞராக வாழ்கிறார்கள். தமிழக அரசின் குடி வினியோக ஸ்தாபனமான டாஸ்மாக் பெரும்பகுதி பழங்குடியினரை மதுவுக்கு அடிமையாக்கி அவர்களின் இசை மரபை அழித்து வருகின்றது. அன்னிய இறக்குமதியான பேண்டு வாத்தியமும் க்ளாரினெட் போன்ற அன்னிய நாட்டு கருவிகளும் இம்மக்களின் மரபுகளை ஆக்கிரமித்து வருகின்றது. இந்த காரணிகளால் பழங்குடி மக்களின் ஆதியிசை அழிவின் விளிம்பில் உள்ளது.

காணொளிகள்
https://youtu.be/2z8j71MG7Pc
-சரவண பிரபு ராமமூர்த்தி
1.   சப்பெ கொகாலு, லக்ஷ்மணன்
2.   The Kotas of South India, Richard K Wolf





No comments: