காலையிலே எழுந்தவுடன்
கண்ணெதிரே கண்டேன்
கவலை இன்றிப் பூத்திருக்கும்
கட்டழகு ரோஜா
வேலைசெய்ய விருப்பமின்றி
சோம்பலிலே கிடந்தேன்
விருட்டென்று கேட்டதுமே
வெலவெலத்துப் போனேன்
யாருக்காய் பூக்கின்றோம்
என்று தெரியாது
பூக்கின்றோம் பூக்கின்றோம்
பூத்தபடி நிற்போம்
பூப்பதிலே சோம்பலின்றி
பூதந்து இருப்போம்
பூப்பார்த்த வுடனேயே
பூரிப்பைக் கொடுப்போம்
சோம்பல் வந்துவிட்டதென
சோர்ந்துவிட மாட்டோம்
சுறுசுறுப்பாய் இருந்தபடி
சுகம்கொடுத்து நிற்போம்
சாந்தம் எங்கள்போக்குவென
சகலருக்கும் தெரியும்
சந்தோஷம் கொடுப்பதுவே
எங்கள் குணமாகும்
மற்றவர் மகிழ்ச்சியுற
மகிழ்ந்து நாம்நிற்போம்
மற்றவர் மனமுடைய
வாழ்நாளில் நினையோம்
சோம்பலுற்று வாழ்வினிலே
சோர்ந்துவிட மாட்டோம்
சொர்க்கத்தைக் காட்டுவதே
சுகமென்று நினப்போம்
விழுகின்ற மலர்பார்த்து
விழுதழுதல் மாட்டோம்
விழுவது எழுவதற்கென
விழித்தெழிந்து நிற்போம்
அழுகின்ற தொழிலைநாம்
அழித்துமே விட்டோம்
ஆனதால் என்றென்றும்
அழகினையே தருவோம்
பறிப்பாரின் கையினைப்
பக்குவமாய்ப் பார்ப்போம்
பறித்தவர்கள் எம்மழகை
பார்த்தபடி நிற்பர்
குறித்தமலர் அழகையவர்
குதூகலத்தால் ரசிப்பர்
கொண்ட்டாட்டம் வந்துவிட்டால்
கொண்டையிலும் வைப்பர்
ஆண்டவனின் அருகினலே
அடைக்கலமும் ஆவோம்
ஆவேசக் கைகளிலே
அசிங்கமும் படுவோம்
ஆனாலும் ஆத்திரத்தை
அடக்கியே வைப்போம்
ஆதலால் என்றுமே
அழகாக இருப்போம்
மலர் சொன்னவார்த்தையால்
மலைத்துமே விட்டேன்
நிலைகுலையா நானும்
நிலைகுலைந்து விட்டேன்
அழகான மலர்சொன்ன
அத்தனையும் கேட்டேன்
அவைசொன்ன அத்தனையும்
அமுதமொழி அன்றோ
No comments:
Post a Comment