இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கத்தைக் காட்டும் நேபாளம்
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபானி என்னும் பகுதி இருப்பதைக் கண்டு நேபாள மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதற்காக நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசின் மேல் கோபத்தை வெளிப்படுத்தினர். அதனால் நேபாள அரசு இந்திய அரசு வெளியிட்ட இந்த வரைபடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போதிலிருந்து இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தம் நேபாள அரசுக்கு வந்தது.
இந்தியாவிலிருந்து சீனா வரையிலான வீதி ஒன்றை லிபுலேக்கில் அமைக்கத் தொடங்கியது இந்தியா. இந்நிலையில் நேபாளமும் சிறிது நாள் கழித்து தங்கள் நாட்டு அதிகாரபூர்வ வரைப்படத்தை வெளியிட்ட போது அதில் தங்கள் நாட்டின் பகுதி என எவற்றையெல்லாம் நேபாளம் உரிமை கொண்டாடியதோ அந்தப் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தன. இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விவாதம் ஏற்பட்டது.

நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கூறுகையில், தங்கள் இரு பெரிய அண்டை நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுடன் நேபாளம் ஒரு நல்ல உறவை வைத்திருக்க விரும்புவதாகக் கூறினார்.
ஆனால் தற்போது, நேபாளம், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. கே.பி ஷர்மா ஒலி 2015 பெப்ரவரியில் நேபாளத்தின் பிரதமர் ஆனார். அப்போதிலிருந்து அவர் மூன்று முறை இந்தியா வந்துள்ளார். தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் சீனாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் இந்தியாவை சார்ந்து இருப்பதை குறைப்பது குறித்தும் இவர் பேசியிருந்தார்.
கடந்த வாரம் நேபாள அரசு தங்களது நாட்டு அதிகாரபூர்வ வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. நேபாளத்தில் பெரும்பாலான மக்கள் இதை தங்கள் அரசாங்கம் எடுத்து வைத்த வலிமையான அடியாகப் பார்க்கின்றனர். ஆனால் ஒலியின் விமர்சகர்கள் பரவி வரும் கோவிட்-19 தொற்றை அரசு கட்டுப்படுத்தத் தவறியிருப்பதை திசை திருப்ப எடுத்த முடிவு இது என்கின்றனர்.
இந்த மூன்று இடங்களும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளன என இந்தியாவும், நேபாளத்தின் மேற்கு மாகாணத்தில் உள்ளன என நேபாளமும் கூறி வருகின்றன. 1816ல் கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தம் மற்றும் அதற்கு பிறகு கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களிலும் மகாகாளியின் கிழக்கு பகுதி நேபாளத்தின் கீழ் வருகிறது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது நேபாளம்.
நேபாளத்தில் எதிர்க்கட்சிகளும் எல்லைப் பிரச்சினையில் ஆளும் கட்சியோடு ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.
செப்டம்பர் 2015 இல் காரணமில்லாமல் எல்லையை மூடியதும் இந்தியாவுக்கு எதிராக ஒலி செயல்படுவதற்கு ஒரு காரணம் ஆகும். அதற்கு நான்கு மாதங்கள் முன்னால்தான் நேபாளத்தில் ஒரு மிகப் பெரிய நிலநடுக்கம் வந்தது.
இந்த எல்லை குறைந்தது ஆறு மாதம் முடியிருந்தது. இதனால் பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் நேபாளத்துக்குக் கிடைக்கவில்லை.அந்தச் சமயத்தில் ஒலி தலைமையிலான ஆளும் கட்சி இந்தியாவுக்கு முன்னால் பணிவாகச் செல்ல விரும்பவில்லை. அதற்கு பதில் அனைத்துப் பொருட்களுக்காகவும் சீனாவை நாடுவது நல்லது என நினைத்தது நேபாளம்.
சமையல் எரிவாயு இல்லாமல் நேபாளத்தில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அப்போது நேபாளம் சீனாவுடன் வணிக ஒப்பந்தம் செய்தது.
மீண்டும் நேபாளத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை தொடங்கியது இந்தியா. 2015இல் 1800 கிலோமீற்றர் நீளமுள்ள இந்தி- நேபாள எல்லையில் உள்ள முக்கிய வர்த்தக தொடர்பு புள்ளிகளை மூடியது இந்தியா. 1989-90களில் 21 முக்கிய புள்ளிகளில் 19 புள்ளிகளை அப்போதைய அரசு மூடியது போல இருந்தது அது. அந்த சமயத்தில் நேபாளத்தில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
1989-90களில் இந்தியா நேபாளத்தின் தனி வர்த்தக ஒப்பந்தங்களை நிராகரித்தது. இந்தியா ஒரே ஒப்பந்தத்தை மட்டுமே விரும்பியது. மேலும் அப்போது இருந்த நேபாள மன்னர் குடும்பம் சீனாவிலிருந்து விமானம் வாங்கியதால் இந்திய அரசு நேபாளத்தின் மீது கோபத்தில் இருந்தது.மேலும் இந்திய குடியேறி தொழிலாளர்களுக்கான பணி அனுமதி பெறுவதற்கான நடைமுறை இந்தியாவுக்கு திருப்தியளிக்கவில்லை.
இந்திய- நேபாள எல்லைகள் சந்திக்கும் தெற்கு தேராய் மக்களுக்கு நேபாள குடியுரிமை அளிக்கவும் மறுத்தது நேபாளம்.
ஆனால் நேபாள அரசர் பிரேந்திரா 30 வருடங்களாக அரசியல் கட்சிகள் மீது இருந்த தடையை 1990இல் நீக்கினார். அதன் பின்னர் வந்த புது அரசு இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
மேற்குறிப்பிட்ட பிரச்சினை நடந்து 30 ஆண்டுகள் கழித்து, தேராய் பகுதி தொடர்பாக இந்தியா- நேபாளம் இடையே பதற்றம் நிலவி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இரு நாடுகளும் எதிரும் புதிருமாக நிற்கின்றன.லிபுலேக் பற்றிய விவாதத்திற்குப் பிறகு நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் வெளியுறவு கொள்கை வல்லுநர்கள் அரசியல் தலைவர்களிடம் விரைவில் இராஜதந்திர பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்துகின்றனர். இப்போது கொரோனா பிரச்சினையால் இந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரிய நாடு என்பதால் இந்தியா முதலில் பேச வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இப்போது நடக்கும் நிகழ்வுகள் மூத்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளிக்கின்றன. நேபாளத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் நேபாள பத்திரிகை ஒன்றில் இந்த இராஜதந்திர பேச்சுவார்த்தையை தவிர இந்த பிரச்சினையை தீர்க்க வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார்.
முன்னாள் இந்தியத் தூதரான கே.வி.ராஜன் இந்த உறவு பழைமையானது மற்றும் வலிமையானது. உட்கார்ந்து பேசினால் இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையே தீராத பிரச்சினை இருக்க முடியாது. ஆனால் தேவையற்ற பொதுக் கருத்து உருவாக்கம் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தடையாக வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினையைப் பேச நேபாளமும் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். நேபாளத்தின் கோரிக்கையை இந்தியா முன்னரே ஏற்றுக் கொண்டிருந்தால் இந்நேரம் நல்ல திருப்பம் வந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா பேச்சுவார்த்தையை கொவிட்-19 முடிந்தவுடன் தொடங்கும். ஆனால் நேபாளத்தில் இருக்கும் சில நிபுணர்கள் வெளியுறவுத் துறை அளவிலான இந்த பேச்சுவார்த்தை வீடியோ கொன்ஃபரன்ஸ் மூலம் தொடங்கினால் இரு நாடுகள் இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் வளரும் என்கின்றனர்.
பழைய சுமுக உறவுகளால் இரு நாடுகளுக்கும் பெரிய பலன்கள் இருந்தன. விசா இல்லாமல் பயணிப்பதன் மூலம் நிறைய நன்மைகளும் தீமைகளும் இருந்தன. ஆனால் சுற்றுலாப் பயணிகள், குடியேற்றத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த நன்மை இருந்தது.
தற்போது கொரோனாவினால் இரு நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ந்துள்ளன. இரு நாட்டு எலலைகளிலும் தனிமைப்படுத்தும் மையம் அமைந்துள்ளன. வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் சிரமங்கள் உள்ளன. எப்போது பழைய நிலை வரும் என தெரியவில்லை.  நன்றி தினகரன் 

No comments: