அஞ்சலிக்குறிப்பு: அமரர் நாகராஜா மாஸ்டர் ( 1926 – 2020 ) நினைவாற்றல் மிக்கவர் பற்றிய நினைவுகள் ! முருகபூபதி


பொதுமக்கள் நிரம்பிய மண்டபங்களில் தனது கணீர் குரலினால் பேசிவந்தவரும், தேவாரம், திருவாசகம் முதலானவற்றையும் ,  பழைய திரைப்படப் பாடல்களையும் பாடி வந்திருப்பவரும்   மெல்பன் வாழ் தமிழ் அன்பர்களின்  நல்லபிமானம் பெற்றவருமான  எமது அன்பிற்கினிய நாகராஜா மாஸ்டர் அவர்கள்,  தனது குரலை நிறுத்திக்கொண்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
1926 ஆம் ஆண்டில் இலங்கையின் வடபுலத்தில் கொக்குவிலில்  பிறந்திருக்கும் அவர்,   தனது இறுதிமூச்சினை புகலிட நாட்டில்  நிறுத்திக்கொண்டுவிட்டார்.
அவரை 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு அறிவேன். அவரை எமக்கு அறிமுகப்படுத்தியவர் எமது இலக்கியக்குடும்பத்தைச்சேர்ந்த சகோதரி ( அமரர் ) அருண். விஜயராணி.
அக்காலப்பகுதியில் நாம் உருவாக்கியிருந்த அவுஸ்திரேலியத்தமிழர் ஒன்றியத்தின் பாரதி விழா மெல்பனில் பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மண்டபத்தில் நடந்தது.
பாரதியாரின் பாடல்களை உள்ளுர் கலைஞர்களின் மெல்லிசையுடன் சில பாடகர்களைக்கொண்டு பாடவைத்த நிகழ்ச்சி ஒன்றையும் அந்த விழாவில் இணைத்திருந்தோம்.  அதற்கான ஒத்திகைகளுக்கு கிரமமாக அவர் வந்தவிடத்தில்தான் அவருடன் அறிமுகமாகி பேசிப்பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த பாரதி விழாவில் அவரும் சில பாரதி பாடல்களைப்பாடினார்.
அவ்வாறு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் எம்முடன் நல்லுறவுபேணிவந்தவர், தொடர்ந்தும் நாம் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.
உள்ளூர் அன்பர்கள் எவரேனும் மறைந்துவிட்டால்,  மறைந்தவரின் ஆத்ம சாந்திக்காக நடத்தப்படும் பிரார்த்தனைக்காக முதல் அழைப்பு நாகராஜா மாஸ்டர் அவர்களுக்குத்தான் செல்லும்.
அவரும் தாமதியாமல் வந்து,  துயரத்தில் பங்குகொண்டு இறைவணக்கப்பாடல்களை மெய்யுருக இராகத்துடன் பாடுவார். வருகை தந்திருப்பவர்களும் மெய்மறந்து கேட்பார்கள்.
அவ்வாறு தமிழர் பொது நிகழ்ச்சிகளில் பெருந்தொகையானவர்கள் கூடியிருக்கும் இடத்தில் பெருங்குரல் எடுத்து பாடியவரின் இறுதி நிகழ்வுகள்,  சமகால நெருக்கடியின் இடைவெளிபேணல் விதிமுறையினால், சொற்ப எண்ணிக்கையினர் மத்தியிலிருந்து  இடம்பெற்றதும்  காலத்தின் துயராகும் !

நாகராஜா அவர்கள் ஆசிரியராக பணிதொடங்கி, பின்னாளில் கல்வி அதிகாரியாக பதவி உயர்வுபெற்றவர். அவர் இலங்கையில் வவுனியா – முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றிய காலப்பகுதியில் அப்பிரதேசங்களில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை ஒழுங்குசெய்வதிலும், அவற்றில் உரையாற்றுவதும் அவரது முக்கிய பணிகளாக  இருந்ததாகவும்,  அத்தகைய  ஆசிரியர் கருத்தரங்குகளில் பங்கேற்ற எனது மனைவி மாலதி சொல்லித்தான் அறிந்திருக்கின்றேன்.
எவருடனும் இன்முகத்துடன்பேசும் அவர், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து தீர்வுகாண்பதிலும் செயலூக்கம் கொண்டவர் என்பதும் நான் அவர் பற்றி மாலதி மூலம் அறிந்துகொண்ட மேலதிக செய்திகள்.
விக்ரோரியா தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினர் மெல்பனில்  நடத்தும் மாதந்த நிகழ்ச்சிகளிலும் முடிந்தவரையில் தவறாமல் வருகை தந்து கலந்துகொள்ளும் அவர், சில வருடங்களுக்கு முன்னர் ஒரு அன்னையர் தின நிகழ்வில் நான் உரையாற்றிய சமயத்தில்,  அவரும் உரையாற்றியது நினைவில் தங்கியிருக்கிறது.
அவருடன் உரையாடக்கிடைத்த பல சந்தர்ப்பங்களில்,  நாம் பிறப்பதற்கு முன்பு ,  இலங்கை மற்றும் உலக அரங்கில் நடந்த பல அரசியல் மாற்றங்கள் குறித்தெல்லாம் விளக்கமாகச்சொல்வார்.  அவரிடமிருந்த நினைவாற்றல் சிறப்பான இயல்பு.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் எவரையும் சந்திக்கநேர்ந்தாலும் அடையாளம் கண்டு இன்முகத்துடன் பேசத்தொடங்குவார்.
“  1989 இல் நான் வவுனியாவில் ஆசிரியப்பணியிலிருந்தபோது சந்தித்திருக்கும் அவர்,  அந்த நினைவை மறந்துவிடாமல், என்னை 2002 ஆம் ஆண்டின் பின்னர் மெல்பனில் மீண்டும் சந்தித்தவேளையில், அடையாளம் கண்டு அதே இன்முகத்துடன் உரையாடியதை மறக்கவே முடியாது  “ என்று எனது மனைவி மாலதி  சொல்லியிருக்கிறார்.  ஆம்!  நினைவாற்றலும் ஒருவகையில் வரம்தான்!
நாகராஜா மாஸ்டர் ,  உலக மற்றும் இலங்கை அரசியல் வரலாறு பற்றி எம்முடன் உரையாடும் வேளைகளில்,  குறிப்பாக இலங்கை அரசியலில் தமிழர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஒப்பந்தங்கள் குறித்தெல்லாம் துல்லியமான தகவல்களை சொல்லுவார்.
இலங்கைத்தீவு என்றோ சகல துறைகளிலும் முன்னேறி அபிவிருத்தியடைந்திருக்கவேண்டும், ஆனால், இனவாதமும் பாகுபாடுள்ள அரசியலும் அனைத்திற்கும் குந்தகமாக இருந்துவிட்டது.  நாமெல்லாம் ஏன் இங்கு வந்து குளிரில் சிரமப்படவேண்டும்.  என்று அவர் சொல்லும்போது அவரது உள்மன ஏக்கம் புலம்பெயர்ந்துவந்த அனைவருக்கும் பொதுவானதாகவே அமைந்திருக்கும்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் அனைத்துலக பெண்கள் தினவிழாவை மெல்பனில் நடத்தியபோதும் நாகராஜா மாஸ்டர் அதில் கலந்துகொண்டு தமக்கு மிகவும் பிடித்தமான செந்தமிழ்த் தேன் மொழியாள் பாடலை பாடி மகிழ்வித்தார்.
செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

கவிஞர் கண்ணதாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தால் 1958 ஆம் ஆண்டில் வெளியிட்ட  மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடும் புகழ்பெற்ற பாடல் அது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொள்ளைகொண்ட பாடல் அது. கண்ணதாசனுக்கும் அதனைப்பாடிய டி.ஆர். மகாலிங்கத்திற்கும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – இரமமூர்த்திக்கும் பெரும் புகழ் ஈட்டித்தந்த பாடல்!  கடந்த ஆறு தசாப்த காலமாக மேடைகள் தோறும் பலராலும் பாடப்படும் பாடல்!
நாகராஜா மாஸ்டர்,  அந்தப் பாடலின் மூலப்பிரதியும்  கைவசம் வைத்திராமல், பின்னணி இசையும் இன்றி இனிய குரலுடன் அன்று அதனைப்பாடினார்.
இவ்வாறு  இனிய குரலினாலும் நற்பண்புகளினாலும் அன்பர்களை கவர்ந்த நாகராஜா மாஸ்டர் எம்மிடம் பல நினைவுகளை தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
அவரது மறைவினால் துயருற்றிருக்கும்  அவரின் குடும்பத்தினரின் கவலையில்  நாமும் பங்கேற்பதுடன்,  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
---0---
No comments: