உலகச் செய்திகள்


ஹொங்கொங் பாதுகாப்பு சட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற உறுதி

கொவிட்-19 தொற்றின் மூலத்தை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைப்பு

ஜெரூசலத்தின் புனித செபல்கர் தேவாலயத்தை திறப்பதில் தாமதம்

நெதர்லாந்து இறைச்சி ஆலையில் 147 பேருக்கு கொரோனா தொற்று


ஹொங்கொங் மக்கள் அமைதிகாக்க நகரத் தலைவர் கேர்ரி லாம் கோரிக்கை

கழுத்தை இறுக்கிய கறுப்பினத்தவர் மரணம்: 4 பொலிஸார் பணி நீக்கம்

ஹொங்கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங்கிற்கான சலுகையை முற்றிலும் நீக்க அமெரிக்கா திட்டம்

ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் சீன பாராளுமன்றத்தில் ஒப்புதல்

கறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்



ஹொங்கொங் பாதுகாப்பு சட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற உறுதி




ஹொங்கொங்கில் வளர்ந்துவரும் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு சீனா அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் அவசியமாக இருப்பதாக அந்த நகரின் பாதுகாப்புக்கான செயலாளர் ஜோன் லீ தெரிவித்துள்ளார்.

நகரம் வன்முறைகளால் மூழ்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹொங்கொங்கில் கடந்த ஒருசில மாதங்களாக நீடித்த அமைதி நிலைக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய பாதுகாப்புச் சடத்திற்கு எதிராகவே மக்கள் வீதிகளில் திரண்டனர்.
சுதந்திரம் மற்றும் அரசை விமர்சிப்பவர்களை கட்டுப்படுத்தும் நேரடி முயற்சியாக இந்த சட்டம் இருப்பதாக அதனை விமர்சிப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சட்டமூலம் சீன பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் சிறிதளவு தாமதம் இன்றி கொண்டுவரப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜோன் லீ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் வன்முறைகள் எல்லை மீறி இருந்தன. பல சம்பவங்களில் வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
“நகரில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதோடு அந்த செயற்பாடுகள் ஹொங்கொங் சுதந்திரம் போன்று தேசிய பாதுகாப்பிற்கும் பாதகமானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 










கொவிட்-19 தொற்றின் மூலத்தை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைப்பு




கொவிட்-19 வைரஸ் தொற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவை இழிவுபடுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்பியதாக அவர் கடுமையாகச் சாடினார்.
சீனாவின் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவும் கூறிவருகின்றனர்.
நோய்த் தொற்று குறித்து சீனா வெளிப்படையாகச் செயல்படத் தவறியதாகவும் அவர்கள் குறைகூறியுள்ளனர்.
வூஹானில் உள்ள அரிய விலங்குச் சந்தையில் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சர்வதேச நாடுகளுடன் வைரஸ் தொற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்தாலும் விசாரணை நியாயமானதாகவும் ஆக்ககரமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார் வாங்.
உலக சுகாதார அமைப்பும் வைரஸ் தொற்று குறித்த விசாரணையில் மற்ற நாடுகள் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சீனாவை கோரியது.
ஐக்கிய நாட்டு நிறுவனம் வைரஸ் தொற்றை உலக நாடுகள் கையாளும் முறை குறித்து சந்திப்பு நடத்தவுள்ள வேளையில், சீனா கொள்ளை நோய் முடிவுக்கு வந்த பின்னரே அத்தகைய சந்திப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றது.   நன்றி தினகரன் 













ஜெரூசலத்தின் புனித செபல்கர் தேவாலயத்தை திறப்பதில் தாமதம்




கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் ஜெரூசலம் புனித செபல்கர் தேவாலயம் திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்க முடியாமல் போயுள்ளது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் பழைய நகரில் இருக்கும் இந்த தேவாலயம் இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட தலத்தில் அமைந்திருப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் வருகை தரும் இந்த தேவாலயம் கடந்த மார்ச் 25 ஆம் திகதி மூடப்பட்டது. அது கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அன்றைய தினம் வழிபாட்டாளர்கள் தேவலயத்திற்குள் நுழைவது மறுக்கப்பட்டுள்ளது.
தேவாலயம் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டிருப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டபோதும் அதற்கான திகதி வெளியிடப்படவில்லை. தேவாலயத்தில் சமூக இடைவெளியை பேணுவதில் உள்ள சிக்கல் காரணமாக தேவாலயத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பல்வேறு ஆலயங்களில் இருந்து 50 மதகுருக்கள் வருவதால் பொதுமக்களுக்கு இடவசதி இல்லாமல் போவதாக அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.   நன்றி 











நெதர்லாந்து இறைச்சி ஆலையில் 147 பேருக்கு கொரோனா தொற்று




ஜெர்மன் எல்லையை ஒட்டிய நெதர்லாந்து பன்றி இறைச்சி பதப்படுத்தும் ஆலை ஒன்றில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. அந்த ஆலை கடந்த வாரம் மூடப்பட்டு ஊழிர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
657 பேர் பணியாற்றும் க்ரோனேலோ என்ற நகரில் இருக்கும் அந்த ஆலையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெர்மனியர்களாவர்.
கடந்த மே 20 ஆம் திகதி அங்கு 45 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகளால் அந்த ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில் 79 ஜெர்மனி ஊழியர்கள் மற்றும் 68 நெதர்லாந்து ஊழியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகம் கவலை கொள்ளச் செய்கிறது” என்று பிராந்திய பாதுகாப்பு முகவர் அமைப்பைச் சேர்ந்த டொன் ஹீர்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நோய்த் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பிராந்திய சுகாதார நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் 45,236 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 5,822 பேர் உயிரிழந்துள்ளனர்.   நன்றி தினகரன் 












ஹொங்கொங் மக்கள் அமைதிகாக்க நகரத் தலைவர் கேர்ரி லாம் கோரிக்கை




சீனா முன்மொழிந்துள்ள புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஹொங்கொங் மக்களின் உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை நசுக்கும் ஒன்றல்ல என்று ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேர்ரி லாம் உறுதியளித்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டத்தின் தகவல்கள் வெளியாகும்வரை அமைதி காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய சட்டம் தொடர்பான அண்மைய விபரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளைத் தமது அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார் லாம். புதிய சட்டம் பற்றிச் சீனா சென்ற வாரம் அறிவித்திருந்தது. பிரிவினைவாதம், அரசாங்கத்தைக் கீழறுக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாதம் ஆகியவை தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல்கள் என்று புதிய சட்டம் வரையறுக்கிறது.
அதனைக் காரணங்காட்டி சீனப் புலனாய்வு அமைப்புகள் ஹொங்கொங்கில் தளம் அமைக்க முற்படும் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீன பாராளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டத் தொடர் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் புதிய சட்டம்பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த சட்டத்திற்கு எதிராக ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 











கழுத்தை இறுக்கிய கறுப்பினத்தவர் மரணம்: 4 பொலிஸார் பணி நீக்கம்




அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கறுப்பின ஆடவர் ஒருவரின் கழுத்தின் மீது ஏறி இறுக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த ஆடவர் உயிரிழந்ததை அடுத்து நான்கு மினசோட்டா மாநில பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அந்தப் பிராந்தியத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதோடு பொலிஸ்கார்கள் மீது கிறுக்கினர்.
இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளும் தற்போது முன்னாள் ஊழியர்கள் என்று மென்னியாபொலிஸ் நகர தலைமை பொலிஸ் அதிகாரி மெடரியா அரடொன்டோ குறிப்பிட்டுள்ளார். வெளியாகி இருக்கும் வீடியோவில் ஜோர்ஜ் ப்ளொயிட் என்ற அந்தக் கறுப்பின ஆடவர், “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று அந்த வெள்ளையின பொலிஸாரிடம் முனகுவது பதிவாகியுள்ளது.
உணவு விடுதி ஒன்றில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 46 வயதான ப்ளொயிட், பொலிஸ் விசாரணைக்குப் பின் உயிரிழந்ததாக மினசோட்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதை நகர மேயர் ஜகப் ப்ரே உறுதி செய்துள்ளார்.
கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அமெரிக்க பொலிஸாரின் ஒடுக்குமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.   நன்றி தினகரன் 











ஹொங்கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம்




சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் சட்டமூலம் ஹொங்கொங் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு அந்த நகர பொலிஸார் மிளகுப் பந்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
பல இடங்களிலும் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருப்பதோடு பல டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொங்கொங்கில் சீனாவுக்கு எதிரான கருத்துகள் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த சட்டமூலம் நேற்று இரண்டாவது வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒருசில நாட்களுக்கு முன்னதாக ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை சீனா பரிந்துரைத்திருந்தது.
இது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சட்டமூலம் நகரில் சுதந்திரத்தை குறைக்கும் முயற்சி என்று அதனை விமர்சிப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மறுபுறம் தேசியகீத சட்டமூலம் சட்டமாக அமுலுக்கு வந்தால், செயற்பாட்டாளர்களின் பேரணிகளில் சீனா தேசிய கீதம் அவமதிக்கப்பட்டால் 50,000 ஹொங்கொங் டொலர் அபராதம் மற்றும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
ஹொங்கொங்கிற்கு சொந்தமாக தேசிய கீதம் இல்லை என்பதோடு கால்பந்து போன்ற சில நிகழ்வுகளில் சீன தேசிய கீதமே இசைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று பல இடங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் 80 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.   நன்றி தினகரன் 












ஹொங்கொங்கிற்கான சலுகையை முற்றிலும் நீக்க அமெரிக்கா திட்டம்




பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது ஹொங்கொங் எவ்வாறு சிறப்பாக நடத்தப்பட்டதோ அதுபோன்று இனி நடத்தப்படமாட்டாது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.
ஹொங்கொங்கில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பொம்பியோ அமெரிக்க பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனா முன்மொழிந்துள்ள பாதுகாப்புச் சட்டம் இந்த வட்டாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்கொங்குக்குத் தற்போது வழங்கப்படும் பொருளாதார சிறப்புச் சலுகைகள் சிலவற்றையோ, மொத்தமாகவோ நிறுத்தி வைப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுப்பார்.
அமெரிக்க சட்டத்தின் கீழ் ஹொங்கொங் ஒரு சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமாக தற்போது வரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசம் பிரிட்டிஷ் காலணியாக இருக்கும்போதே இந்த சாதகமான வர்த்தக அந்தஸ்து வழங்கப்பட்டது.
எனினும் அமெரிக்காவின் சலுகைகளைத் தொடர்ந்து பெற, தனக்குப் போதிய தன்னாட்சி உரிமை இருப்பதை ஹொங்கொங் நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்றம் கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றியது.
இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் ஹொங்கொங் சீனாவின் பெருநிலப் பகுதியாக கருத்தில் கொண்டே அமெரிக்கா செயற்படும்.   நன்றி தினகரன் 













ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் சீன பாராளுமன்றத்தில் ஒப்புதல்




ஹொ ங்கொங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குச் சீன பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சீன பாராளுமன்றத்தைச் சேர்ந்த 2,800க்கும் அதிகமான உறுப்பினர்கள் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரிவினையைத் தூண்டுதல், அடக்குமுறை, பயங்கரவாதம், வெளிநாட்டு உதவியுடன் செயல்படுவது ஆகியன அதன் மூலம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படும்.
அதேபோன்று இந்த சட்டத்தின் மூலம் சீனா தனது பாதுகாப்பு நிறுவனங்களை முதல் முறை இந்தப் பிராந்தியதல் நிறுவ வாய்ப்பு எற்படும்.
சீனா, ஹொங்கொங் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஹொங்கொங்கின் சுதந்திரத்திற்குப் புதுச் சட்டம் மிரட்டலாக இருக்காது என்று வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் இதனை ஒட்டி ஹொங்கொங்கில் ஏற்கனவே மற்றொரு சீன எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது. சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் மற்றொரு சட்டம் ஹொங்கொங் சட்டமன்றத்தில் கடந்த புதன்கிழமை விவாதத்திற்கு வந்தபோது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்ட மன்றத்தில் நேற்றும் விவாதம் நீடித்த நிலையில் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருப்பதோடு வரும் ஓகஸ்ட் மாதம் சட்டமாக அமுல்படுத்தவாய்ப்பு உள்ளது.
இந்த சட்டமூலத்தின் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் தேவை ஏற்படும்போது தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடர்புடைய பணிகளை நிறைவேற்ற ஹொங்கொங்கில் சீன மத்திய அரசின் தொடர்புடைய தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் நிறுவப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நிறுவனங்கள் ஹொங்கொங்கில் அந்த நகருக்கான சட்டத்திற்கு பதில் அங்கு சீன சட்டங்களை அமுல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் கையளிக்கப்பட்டபோதும், அந்த நகருக்கான சிறிய அடிப்படைச் சட்டத்திற்கு சீனா ஒப்புக்கொண்டது.
இதனால் சீன பெருநிலத்தில் இல்லாத சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு உள்ளது.
ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கவகை செய்யும் சட்ட திருத்தத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
எனினும் ஒட்டுமொத்த ஹொங்கொங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹொங்கொங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்தத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 












கறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்



-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்
டிரம்பின் ட்விட்டர் பதிவு
மின்னபொலிஸில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "மின்னபொலிஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு இடம்பெறுவதை நான் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். தீவிர இடதுசாரி கொள்கையுடைய மேயர் ஃப்ரே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசிய படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன்.
ரவுடிகள் ஜார்ஜ்ஜை அவமதிக்கின்றனர். நான் அதை நடக்க விட மாட்டேன். ஆளுநர் டிம் வால்சிடம் உரையாடியுள்ளேன். அவருடன் இராணுவம் துணை நிற்கும் என்று தெரிவித்தேன். ஏதாவது பிரச்சினையென்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும்" என பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
ஆனால் இந்த ட்விட்டர் பதிவு "வன்முறையை தூண்டுவதாக" உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸாரின் பிடியில் உயிரிழந்ததால், அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவது போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
"என்னால் மூச்சு விட முடியவில்லை" - ஜார்ஜ் ஃப்ளாய்ட்

அந்தக் காணொளியில் பொலிஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.
அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறுகிறார்.

அமெரிக்காவில் கறுப்பினர்த்தவர்கள் பொலிஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பொலிஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு பொலிஸார் கலைக்க முயன்றனர்.
அமெரிக்காவின் நியூயோர்க், லொஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட பொலிஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் மற்ற மூன்று பொலிஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், "எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்," என்று தெரிவித்தார்.
கண்ணீர் மல்கப் பேசிய அவர், "பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற பொலிஸார் கைது செய்யப்பட வேண்டும்" என்றும் "கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்," என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கமெரா மேன் மின்னெசோட்டா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸார் கூறுவது என்ன?
உணவகம் ஒன்றில் கள்ளப்பணம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க பொலிஸார் அவரை தொடர்புகொண்டனர்.
பொலிஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை. (பி.பி.சி.)









No comments: