புறநிலையை மனமிருத்தி பொறுப்புடனே நடந்திடுவோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


    ஆலையிட்ட கரும்பாக அவதியுற்ற மக்களெலாம்
    சாலையெலாம் திறந்ததென்று தாம்மகிழ்வு எய்துகிறார் 
    கோலோச்சும் கொரனோவோ கொன்றொழிக்கும் எண்ணமுடன்
     அடுத்தகட்ட நிலையபற்றி ஆளமாய் நினைக்கிறது !

  திறந்துவிட்ட காரணத்தால் திசைமாறிப் போகின்றார்
  நிறுத்திவிட்ட அத்தனையும் நெஞ்சமதில் நிறைக்கின்றார்
  சுயநினைவு இல்லாமல் செய்கின்றார் யாவருமே
  நமைமறந்து இயங்கிவிடில் நம்மியக்கம் மழுங்கிவிடும் !

  அளவுடனே நடப்பதால் ஆபத்து எமையணுகா
  அளவுதனை மீறிவிடின் ஆபத்து வீடுவரும்
  அரைகுறையாய் அறிந்துவிட்டு ஆட்டமெலாம் போடுவது
  அரைகுறாய் ஆக்கியெமை அடங்கிவிடச் செய்திடுமே !

  விடுதலை கிடைத்ததாய் வெற்றிவிழா நடத்துகிறார்
  வேதனைகள் சோதனைகள் விலகியெங்கும் ஓடவில்லை
  உலகத்தின் ஒருமூலை உணர்விழந்தே கிடக்கிறது
  உணர்விழந்து நாமிருந்தால் ஓலமிடும் நிலைமைவரும் !

  வெளிச்சம் வந்துவிட்டதென குதித்தெழுதல் குறைத்திடுவோம்
  சுயவுணர்வை மனமிருத்தி செயற்படநாம் நினைந்திடுவோம்
  அகமதிலே நற்கருத்தை அனைவருமே இருத்திடுவோம்
  புறநிலையை மனமிருத்தி பொறுப்புடனே நடந்திடுவோம் !

No comments: