பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 3 - தலைவன் - ச . சுந்தரதாஸ்

.

நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.


இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.

ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.
எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் சுமாரான வெற்றியையே பெற்றது.


No comments: