மீள் வாசிப்பு அனுபவம் 1 - தூக்குமேடைக் குறிப்பு - செ .பாஸ்கரன்

.


வாசிப்பு  என்பது மிகவும் பிடித்தமான ஒன்று, புதிய கதைகள், நாவல்கள் கட்டுரைகள் என்று வாசித்துக் கொண்டு போகின்ற இந்த வேளையில் பல காலங்களுக்கு முன்பு வந்த எழுத்துக்களை எல்லாம் மறந்து கொண்டே போகின்றோம், அல்லது அவற்றை  பார்க்காமல் விட்டு விடுகின்ற சந்தர்ப்பம்  அமைகின்றது.  சில தினங்களுக்கு முன்பு நண்பன் கானா பிரபாவிடம்  இருந்து ஒரு அழைப்பு வந்தது அதிலே ஒரு சிறு கதையை தன்னுடைய வீடியோஸ்பதி                தளத்துக்காக குரல் வடிவில் செய்து தர முடியுமா என்று கேட்டார்,  ஏற்கெனவே பல சிறுகதைகளை குரல் வடிவிலேயே தந்திருக்கின்றார்.  பலருடைய குரல்களில் அந்த சிறுகதைகள் வெளியிடப்பட்டுக்  கொண்டிருக்கிறது. பெரும்பாலானவை  நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியவை இவற்றிலே வலம் வந்து கொண்டிருக்கின்றன. கேட்டவுடன் எனக்கு முதலிலேயே நினைவில் வந்தவர் திரு மு .தலையசிங்கம் அவர்கள்.  அவருடைய பெரும்பாலான எழுத்துக்களையும் நான் வாசித்திருக்கிறேன்,  அதிலே எந்த ஒரு கதையை வாசிக்கலாம் என்ற சிந்தனையோடு என்னுடைய  Library அறையை நோக்கி நடந்தேன். 

 இந்த வாசிப்பு அறையை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று பலமுறை எனது மனைவி சாந்தியோடு பேசி இருக்கின்றேன்,  என்னுடைய வாசிப்பு அறையில்  முன்பு புத்தகங்கள் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டு,  கவிதைகள் சிறுகதைகள்,  நாவல்கள், கட்டுரைகள் என்று இருக்கும். இப்படி எல்லாம் மிக அழகாக அடுக்கி வைத்து அதை  எல்லாம் வாசித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய மகளின்  வாசிக்கின்ற ஆர்வம்  அதிகமாக உள்ளதால் என்னுடையவை  இருந்த பல இடங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. என்னுடைய இடம் குறைந்து புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளது. பலமுறை இவைகளுக்கு இன்னும் அலமாரிகள் போட்டு அதை முறைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கூட, இயந்திர மயமான ஓட்டம்,  வேலைப்பழு,  சமூக வேலைகள் இப்படி தொடர்ந்த நேரமின்மை காரணமாக அவை இன்னும் அப்படியேதான் கிடக்கின்றது.  அதற்குள் துளாவியபோது  அண்ணன் திரு பொன்னம்பலம் அவர்கள் தொகுத்த பிரபல எழுத்தாளர் மு .தளையசிங்கம் அவர்களுடைய எழுத்துக்கள் பலவற்றையும் உள்ளடக்கிய அந்த தொகுப்பு என் கையிலே கிடைத்தது,  அதை எடுத்து அதில் இருந்த ஒரு சிறுகதையான  புதுயுகம் பிறக்கிறது கதையை குரல் வடிவில் செய்து கானா பிரபாவிறகு அனுப்பி வைத்தேன். 

Library அறையில் இருந்த பல கதைகள்  மீண்டும் ஒருமுறை மீள் வாசிப்புக்கு உள்ளாக வேண்டும் .  எத்தனையோ புத்தகங்கள் அங்கேயே தூங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றை எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற அவா                  எப்போதுமே இருந்துகொண்டிருக்கும்,  ஆனால் இப்போது புதிய வரவுகள் மிக அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இவைகளை வாசிப்பதற்கு நேரங்கள் காணாமல் இருக்கின்றது. ஒரு முறை அந்த புத்தக அறையை  நோட்டமிட்டு  எல்லாவற்றையும் கையில் எடுத்து பார்த்தேன், இத்தனை மிகப்பெரிய எழுத்தாளர்கள் உடைய எழுத்துக்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றது, அதிலேயே குறிப்பாக ஒன்றை உருவி எடுக்கின்றேன் தூக்குமேடை குறிப்பு. 

தூக்குமேடை குறிப்பு என்பது ஜூலிஸ் பூசிக் அவர்களால் ஜெர்மன் சிறையிலே இருந்து எழுதப்பட்ட குறிப்பு, நம் நாட்டு  போராட்ட கால ஆரம்ப நாட்களிலேயே இவற்றை பல முறை படித்தும் பலருக்கு படிக்க கொடுக்கும் இது பிரபலமாக வலம் வந்துகொண்டிருந்த ஒரு குறிப்பு.  அவருடைய மனைவி அகுஸ்தினா பூசிக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு வெளியே சென்று, சிறையில் இருந்த  தனது கணவன் ஒவ்வொரு பேப்பரில் எழுதி பலரிடம்  கொடுத்து வெளியே அனுப்பியதை  தெரிந்துகொண்டு,  அவற்றை எல்லாம் சேகரித்து,  தொகுத்து இந்த புத்தகமாக 1949 ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தார். 

அந்த புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு சிந்தித்தேன்  இன்னும் எவ்வளவு விடயங்கள் இந்த அறையில்  அடங்கிக் கிடக்கின்றது இவற்றையெல்லாம் மீள்வாசிப்பு செய்ய வேண்டும், மறுவாசிப்பு செய்வது மட்டுமல்ல இவற்றை மற்றவர்களுடனும் சிறிய அளவிலாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு அவா நெஞ்சினிலே விழுந்தது, அந்த அவாவினால் இந்த குறிப்பை முதலில் எழுதத் தொடங்குகின்றேன் .  தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தமிழ்முரசில் இதை எழுதுவதாக தீர்மானித்தேன் .  நினைப்பது சுலபம் செய்வது கடினம் ஏன் என்றால் நான் மிகப்பெரிய சோம்பேறி  என்பது தயங்காமல் குறிப்பிடலாம்,  வாசிக்கின்ற அளவுக்கு அல்லது வானொலியில்,  பத்திரிகையிலே செய்கின்ற அளவுக்கு என்னுடைய ஆக்கங்களை,  என்னுடைய கவிதைகளை எழுதுவதற்கு மிகவும் சோம்பேறியாகி விடுவேன். தொடர்ந்து பத்து வருடங்களாக தமிழ்முரசு இணைய பத்திரிகையை  மூன்று நண்பர்களோடு  இணைந்து பத்து வருடங்களாக செய்து கொண்டு வருகின்றோம்.  குறைகள் நிறைகள் எல்லாமே இருக்கின்றது பலர் பலவிதமாக கூறுவார்கள்,  இது எப்படி செய்யலாம்,  அப்படி செய்ய வேண்டும் அப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் , அதற்கு பல தடங்கல்களும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றது,  அதுமட்டுமல்ல ஆரம்பத்திலேயே நினைத்தது போல அவுஸ்திரேலியாவில்  உள்ள விடயங்களை தாங்கி , அவுஸ்திரேலிய தமிழருக்கு ஒரு பத்திரிகை  இருந்தால் நல்லது,  இங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது இவற்றை கொண்டு வருவதற்கு இந்த தமிழ்ப் பத்திரிகையை உதவியாக இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் உதித்தது  அதை இன்று வரை செய்து கொண்டுதான் இருகின்றோம். அதுமட்டுமல்ல இங்குள்ள எழுத்தாளர்களிடம் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொண்டிருக்கின்றோம். நாம்  குறிப்பிட்டதுபோல மரணஅறிவித்தல்கள்,  பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்பவற்றை  எந்தவித கட்டணமும் இல்லாமல் பிரசுரிக்கின்றோம் , இது எல்லோருக்குமே தெரியும். நான் எழுதுவது  குறைவாக இருந்தது இனி ஒரு  முயற்சியை மேற்கொள்ளலாம்,  இந்த அறையில் உள்ளவற்றைப்  பற்றி ,  நான் வாசித்த எழுத்துக்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .தூக்குமேடை குறிப்பு 
போராளிகளை விடுதலை யாளர்களை உலகத்தில் எந்த நாடுகளும் ஓடுக்கிக் கொண்டே இருக்கின்றது.  நாம் கண்கூடாக பார்த்தது நம்  நாட்டினுடைய விடுதலைப்போர் அந்த விடுதலைப்போர் எப்படி எல்லாம் நசுக்கப்பட்டது,  அந்த விடுதலைப்போரில் ஈடுபட்டவர்கள் எல்லாம் எவ்வளவு சித்திரவதை  செய்யப்பட்டார்கள் ,  அவர்களுடைய வாழ்வு எப்படி எல்லாம் அழிக்கப்பட்டது எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டு  கொல்லப்பட்டார்கள் ,  எத்தனை பேர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்,  இன்னும் சிறைக்குப் பின்னால் இருக்கின்ற போராளிகளைப் பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது போராட்டம் முடிந்துவிட்டது, எல்லாம் முடிந்து விட்டது,  இப்போது அமைதிப்பூங்காவாக நாடு  நிற்கின்றது என்று பிரச்சாரங்கள் வந்து  கொண்டு இருக்கின்றது ஆனால் இந்தப் போரில் ஈடுபட்ட சாதாரண கைதிகள் போராளிகளுக்கு உணவு கொடுத்த,  போராட்டத்தை நேசித்த மக்கள்,  இன்னமும் அந்த சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்,  இது உலகத்திலேயே போராளிகளுக்கு எதிரான நிலமை,  உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு சென்ற விதம் தான் இது.  இந்த விடயத்தை பற்றி நான் பேசிக்கொண்டு இருக்கின்ற போது கூட அமெரிக்காவிலேயே வன்முறையாளர்கள் வன்முறையை செய்து கொண்டிருக்கிறார்கள்,  சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்,  எரியூட்டிக்  கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்திகள் எல்லா தொலைக்காட்சிகளிலும் முதலாளித்துவ  நாடுகளின் ஊதுகுழலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது ஏன் உருவானது,  எப்படி உருவானது,  அதற்கு அரசாங்கம்  என்ன செய்தது. மனித உரிமைகளை நேசிக்கின்றோம் என்று உலகம் முழுவதும் தம்பட்டம் அடிக்கின்ற  நாட்டு அரச யந்திரம்  என்ன செய்தது என்று கேள்விகளை கேட்கிறார்கள் இல்லை,  ஒரு சிலர் ஒரு மூலையில் இருந்து கேட்பார்கள் அது யார் காதிலும் விழாமலே போய்விடும் .  அதன் எதிரொலியாக நடக்கின்ற சம்பவங்களை மட்டும் பெரிதாக காட்டிக் கொண்டிருக்கும்.இதே போல்தான் ஜெர்மனியில் போராளிகள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் ,  அந்த போராளிகளில்  ஒருவராக  சிறை தண்டனை வழங்கப்பட்டு ,  தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட  ஜூலிஸ் பூசிக்கால் எழுதப்பட்டதுதான்  இந்த தூக்குமேடைக் குறிப்பு.  மிக அருமையாக ஒரு போராளியின் உடைய விடயங்களையும் அவர்கள் எப்படியெல்லாம் மவிதத்தை  நேசித்தார்கள் மக்களை எப்படியெல்லாம் நேசித்தார் அவர்களுக்கு மக்களை நேசித்து இதனால் கிடைத்த பயன் என்ன என்பதைப்பற்றி எல்லாம் மிக அழகாக எழுதிஇருக்கிறார் ,  அவருடைய மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், விடுவிக்கப்பட்டு வெளியில் வந்தபோது கணவன் தூக்கிலிடப்பட்டுவிடடார். அவர் சிறையில் இருந்து எழுதி பலரிடம் கொடுத்து வெளியே அனுப்பிய எழுத்துக்களை எல்லாம் திரட்டி இந்த தூக்கு மேடை குறிப்பை கொண்டுவந்ததாக  குறிப்பிடுகின்றார்.  முதற் பதிப்பாக  வெளிவந்தது 1949 ஆம் ஆண்டு, நான்காம் பதிப்பு  1972 ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பு 1977 ஆறாம் பதிப்பு 1979 ஏழாம்  பதிப்பு 1983, எடடாம் பதிப்பு 1985, ஒன்பது 1993 10ம் பதிப்பு 1997 இத்தனை பாதிப்புகளும் இந்த குறிப்பிற்கானது . உ லக போராளிகளுக்கான ஒரு நாவலாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது,  முடிந்தால் இந்த நாவலை வாசித்து பார்க்கலாம் இப்போது இணையதளங்களில்  கிடைக்கிறது.  அடுத்த வாரம் இன்னொரு பார்வையோடு வருகின்றேன்


No comments: