களஞ்சிய அறையில், அபிதாவுக்கு கிடைத்த புதிய மடிக்கணினியை வைத்து பயிற்சிபெறுவதற்கென ஒரு சிறிய மேசையையும் ஜீவிகா ஒதுக்கிக்கொடுத்திருந்தாள்.

அதனைத் தொட்டு வணங்கத்தோன்றியது. இந்த புதிய உறவு தனது எதிர்காலத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தப்போகிறதோ..? நிகும்பலையூர் புதியது. இந்த வீடு புதியது. இங்கே சந்தித்தவர்கள் புதியவர்கள். எதிர்கொண்ட அனுபவங்கள் புதியன. எங்கிருந்தோ வந்திருக்கும் லண்டன்காரர் புதியவர்.
ஏற்கனவே வேர்ல்ட் கொமியூனிக்கேஷனில் பெற்ற பயிற்சியும் ஜீவிகாவும் மஞ்சுளாவும் சொல்லிக்கொடுத்த நுணுக்கங்களும் அபிதாவுக்கு பெரும் துணையாகியிருந்தன.

அவர்களிருவரும் அதனைத் தெரிவுசெய்து வாங்கியபின்னர், பணம் கொடுப்பதற்கு ஆயத்தமானபோது அபிதா, தனது கைபேக்கிலிருந்து ஒரு மஞ்சள் நிறத்தினாலான கடித உறையை சண்முகநாதனிடம் நீட்டி, “ அய்யா, இதில் ஒரு இலட்சம் ரூபா இருக்கிறது. தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் “ என்றாள்.
அவருக்கும் ஜீவிகாவும் திகைப்பாகவிருந்தது.
“ ஏது இவ்வளவு பணம்…? “ என்று இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.
ஜீவிகா, அவளை கனிவோடு பார்த்தாள்.
“ வீட்டிலதான் எனக்கு எல்லாம் கிடைக்கிறது. லெப்டொப் வாங்கவேண்டும் என்பது எனது ஒரு கனவு. சமையல்காரிக்கு ஏன் அப்படி எல்லாம் ஆசைவருது என்றும் நான் பல நாட்கள் யோசித்திருக்கின்றேன். அதற்காகத்தான் காசும் சேர்த்துவைத்திருந்தேன். வீட்டுக்கு வேலை செய்ய வந்தவிடத்தில் எனக்கு கிடைத்த நேரத்தில் பயிற்சிக்கும் ஜீவிகா அனுப்பிவைச்சாங்க. எந்த வீட்டு வேலைக்காரர்களுக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் அய்யா அது. நீங்களே வாங்கித்தரவிருப்பதாகச் சொன்னபோது எனக்கு வியப்பாகவிருந்தது. அதனால்தான் சொல்கிறேன் அய்யா. இந்தக்காசை எடுங்கள். “ அபிதாவுக்கு தொண்டை அடைத்தது.

“ ஏற்கனவே திறந்திருக்கிறேன் அய்யா. மஞ்சுளா வேலை செய்யும் பேங்கில்தான் மஞ்சுளா திறந்து தந்தாங்க. “
“ அப்படியா… எனக்குத் தெரியாது அபிதா. வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், எந்த அரசியல்வாதி என்ன சொல்லப்போகிறார் என்பதை தேடி ஆராய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறன். “ என்றாள் ஜீவிகா.
சுபாஷினி சுகமாக நுவரேலியா சென்றடைந்த தகவல் வந்தது. நல்லவேளை, மீண்டும் முழுநாள் ஊரடங்கிற்கு முன்னர் வந்து சேர்ந்துவிட்டதாக சுபாஷினி பெருமூச்சுடன் அபிதாவிடம் சொல்லியிருந்தாள். மலையகத்தலைவர் கொழும்பில் மறைந்தததையடுத்து முழு மலையகமுமே சோகமயமாக இருப்பதாகவும் அவள் அபிதாவுக்கு கோல் எடுத்துச்சொன்னபோது, அபிதா சற்றுநேரம் சுவரில் சாய்ந்து நின்றவாறு யோசித்தாள்.
ஈழத் தமிழர்களின் தலைவர் என்றும் தமிழ்த்தேசியத்தின் விடிவெள்ளி எனவும் பேசப்பட்ட தலைவர் மறைந்தபோது, தமிழர் பிரதேசங்கள் சோகமயமானதா…? அவர் எங்கோ இருப்பதாகத்தானே சொல்லிக்கொண்டிருந்தார்கள். அன்று தொடர்ந்த காட்சிகள் அபிதாவின் மனதில் சஞ்சரித்தன.
அவளது சிந்தனை மலையகத்தமிழர்களின் வாழ்வோடு வடக்கின் – கிழக்கின் தமிழர்கள்- தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் - நாட்டைவிட்டு வெளியே சென்ற தமிழர்கள் பற்றியெல்லாம் ஒப்பிட்டுப்பார்க்கத்தோன்றியது.
குளிரைப்பொருட்படுத்தாமல், அதிகாலையே எழுந்து, அடுப்பில் கோதுமை மாவு ரொட்டி தட்டிச்சுட்டு வைத்துவிட்டு, தங்கள் குழந்தைகளை பிள்ளை மடுவத்தில் ஒப்படைத்துவிட்டு, இடுப்பில் சாக்கை கட்டிக்கொண்டு தலையிலே கூடையை சுமந்தவாறு தேயிலை பறிக்கச்சென்று வரும் பெண்கள் பற்றி அப்பா சொல்லியிருக்கும் கதைகள் அபிதாவுக்கு நினைவுக்கு வருகிறது.
அட்டைக்கடியுடன் மலைகளில் ஏறி இறங்கி பாடுபட்டவர்களின் வீட்டுக்குடியிருப்புகள் பற்றியெல்லாம் அப்பா, அவளுக்கு கதைகதையாகச்சொல்லியிருக்கிறார்.
தேசத்திற்கு அறுபது சதவீதம் அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த அம்மக்களின் வலிநிரம்பிய வாழ்க்கையின் சோகங்களையும் மாதச்சம்பளத்திற்காக அவர்கள் நடத்திய போராட்டங்களையும் பற்றியெல்லாம் அப்பா சொன்னபோது, “ எங்கட தலைவர் அவர்களுக்கும் சேர்த்துத்தான் ஆயுதப்போராட்டத்தை கையில் எடுத்தவர் “ என்று அபிதாவின் கணவன் பார்த்திபன் சொன்னதும், அப்பா எதுவுமே பேசாமல் உதட்டைப்பிதுக்கி சிரித்த காட்சி அபிதாவுக்கு நினைவுக்கு வந்தது.
சண்முகநாதன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருக்கிறார். அபிதா அவருக்கு தேநீர் தயாரித்துக்கொடுத்தாள்.
மலையகத்தலைவரின் உடலுடன் வந்த சவப்பெட்டி ஒரு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் காட்சியுடன் செய்தி நகர்ந்துகொண்டிருந்தது.
“ இவருடைய பாட்டனார் அமைச்சராக இருந்தபோது, இந்த ஊருக்கு அழைத்திருக்கிறோம் அபிதா “ என்றார் சண்முகநாதன். எங்கட இந்து மன்றத்தில் நான் தலைவராக இருந்தபோது, அவர் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர்.
அவரையும் மட்டக்களப்பு எம்.பி. யாக இருந்தவரையும் - அவர் தமிழரசுக்ட்சியிலிருந்து வெளியேவந்து, இந்து கலாசார அமைச்சராகியிருந்தார். அவரையும் நேரில் சந்தித்துப்பேசிய குழுவுக்கு நான்தான் தலைமைதாங்கிச்சென்றேன்.
இந்து மன்றத்திற்கு - இப்போது இருக்கிறதே, அந்தக்கலாசார மண்டபம் – அதனைத் திறந்துவைத்தவரும், இதோ… இப்போது இறந்திருக்கும் இந்த மலையகத்தலைவரின் தாத்தாதான் வந்து திறந்துவைத்தார். “ தொலைக்காட்சியில் கண்களை வைத்துக்கொண்டு, தேநீர் அருந்தியவாறு, சண்முகநாதன் கடந்த காலங்களை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார். திடீரென, “அபிதா, உனக்கு 83 ஆம் ஆண்டில் என்ன வயசிருக்கும்…? “ என்று கேட்டார்.
“ அந்த வருடம்தானய்யா நானே பிறந்தேன். உங்களுக்கு தெரியுமா… யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் பரமேஸ்வரா சந்தியில் சில ஆர்மிக்காரங்கள் செத்தாங்கள். அன்றைய தினம்தான் என்று அம்மாவும் அப்பாவும் சொல்லியிருக்கிறாங்க அய்யா. “ என்றாள் அபிதா.
“ சரிதான், தமிழருக்கு கண்டம் தொடங்கியபோதுதானா நீயும் பிறந்திருக்கிறாய். அந்தக்கண்டம் வந்தபிறகுதான் எங்கட ஆட்கள் கண்டம் விட்டு கண்டம் வெளியே தப்பி ஓடத்தொடங்கினார்கள். அப்படியென்றால், வரும் ஆடிமாதம் உனக்கு முப்பத்தியேழு வயதாகுது… அப்படித்தானே…? “
“ ஓமய்யா…. “
“ உன்ரை அவர் காணாமல்போய் பதினோரு வருடமாச்சுது. திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இன்னமும் உனக்கிருக்கிறதா…? “
“ எதற்கய்யா… இப்போது அந்தக் கொடுமைகளை நினைவுபடுத்துறீங்கள். இப்படி யாராவது கடந்த கால இழப்புகளை நினைவுபடுத்தும்போதுதான், அந்தத் துயரங்களை மீண்டும் மீண்டும் காவிக்கொண்டு நகரவேண்டியிருக்கிறது. எல்லாம் போய்விட்டது. இன்னமும் அந்த நினைவுகளை காவிக்கொண்டிருக்கிறேன். இறக்கமுடியவில்லை. நினைவுகள் இறந்துவிடாது… என்ன… அய்யா…..? உங்களுக்கும் அப்படித்தானா…? யாழ்ப்பாணத்துக்கு பஸ் புறப்படப்போகிறது. கெதியா ஊருக்குப்போய் வருவதைப்பற்றி யோசியுங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. “ அபிதா, அங்கிருந்து அகன்று, சமையலறையில் சிங்கிலிருந்த பாத்திரங்களை கழுவத்தொடங்கினாள்.
அவளுக்கு கடந்த காலங்களை யாராவது நினைவுபடுத்தினால், அதிலிருந்து தப்பிச்செல்வதற்கு ஏதும் உபாயங்களைத் தேடுவாள்.
சண்முகநாதன், குளியலறைக்குச்சென்றார்.
சுபாஷினி தங்கும் அறையிலிருந்து வெளிப்பட்ட ஜீவிகா, “ என்ன அபிதா, லண்டன் பெரியப்பாவுக்கு இந்த நாட்டு நேரம் சரியாக வந்திட்டுதுபோலும். நேரத்தோடு எழும்பிட்டார்…? “ எனக்கேட்டவாறு வந்தாள்.
‘ சரிதான், இனி இவவின்ட கதைகளை கேட்கவேண்டும். சொல்லுவதை செய்யத் தொடங்கவேண்டும். அடுத்து மஞ்சுளா எழுந்து வருவாள். அவள் என்ன சொல்லப்போகிறாளோ…? ‘ அபிதா சலிப்புடன் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கிறாள்.
அபிதாவுக்கு தொந்தரவு கொடுக்காமல், ஜீவிகாவே சமையலறைக்கு வந்து கோப்பி தயாரித்து அருந்திக்கொண்டு, கைத்தொலைபேசியில் முகநூல் பார்ப்பதற்கு தயாரானாள்.
‘ இந்த முகநூலில் அப்படி என்னதான் இருக்குமோ…? ஒருகாலத்தில் இந்த கைத்தொலைபேசி இல்லாமலும் சனங்கள் சீவித்தார்கள். இப்போது, இது இல்லாமலும் சீவிக்கமுடியாத காலமாகிப்போச்சுது ‘ அபிதா மனதிற்குள் பேசிக்கொண்டாள்.
மஞ்சுளா எழுந்துவந்து, சுபாஷினி, நுவரேலியா போய்ச்சேர்ந்த தகவலை அபிதாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். சுபாஷினி சொல்லிவிட்டுச்சென்ற விடயம் அப்போது அபிதாவின் நினைவுப்பொறியில் தட்டியது.
அதனை எவ்வாறு, எங்கிருந்து தொடங்கிப்பேசுவது என்று அபிதா ஆழ்ந்து யோசித்தாள். லண்டன்காரரையும் ஜீவிகாவையும் அருகில் வைத்துக்கொண்டு பேசுவது உசிதமில்லை. பின்புறம் தோட்டத்தில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது, இந்த வசந்தமாளிகை வாணிஶ்ரீயையும் ஏதும் சொல்லி இழுத்துக்கொண்டு போய்விடவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அபிதா வந்தாள்.
சண்முகநாதன் மறுநாள் யாழ்ப்பாணம் போவதற்கு ஆயத்தமானார். நிகும்பலையூரில் தபால் நிலையத்திற்கு சமீபமாகவிருக்கும் தனது பழைய சிநேகிதனை பார்த்துப்பேசிவிட்டு வருவதாகச்சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
“ அய்யா, மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவீர்கள்தானே… இன்றைக்கு என்ன சமைக்கவேணும் சொல்லிட்டுப்போங்க அய்யா. “ அபிதா வாசலுக்கு வந்து குரல் கொடுத்தாள்.
“ இல்லை அபிதா, எனக்கு இன்று அங்கே மதியம் விருந்து. வருவதாகச்சொல்லிவிட்டேன். பின்னேரம்தான் வருவேன். வீட்டில் இப்போது நீங்கள் மூன்றுபேரும்தானே… விரும்பினதை சமை. “
“ பெரியப்பா, …. என்ன தண்ணி பார்ட்டியா… அதிகம் எடுக்கவேணாம். நாளைக்கு பயணம் மறந்திடவேணாம் சரியா..? “ ஜீவிகா உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
“ அய்யா… நீங்கள்…. “ அபிதா, கண்கள் மின்ன, தனது வலது கை பெருவிரலை வாயருகில் கொண்டுசென்று கேட்டாள்.
“ சம் டைம்ஸ் “ என்று சொல்லி கண்ணைச்சிமிட்டிக்கொண்டு சண்முகநாதன் கேட்டைத்திறந்தார்.
“ பேட் டைம்மாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்க அய்யா “ என்று சொன்ன அபிதா, கேட்டை சாத்திவிட்டு வீட்டுக்குள் வந்தாள்.
“ இங்கே பெண்களை வைத்துக்கொண்டு அய்யாவால் அதனைத் தொடமுடியாதிருக்கும். அதுதான் போகிறார். போயிட்டு வரட்டும். “அபிதா மெதுவான குரலில் முணுமுணுத்தவாறு, மஞ்சுளாவை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள்.
மாதுளை காய்த்திருந்தது. வாழை மரம் குலை தள்ளியிருந்தது. கத்தரியில் பூக்கள் மலர்ந்திருந்தன. பப்பாசி மரத்தில் ஒரு காய் சிவந்திருந்தது. அந்த வீட்டுத் தோட்டத்தின் செழுமை அபிதாவுக்கு நல்ல அறிகுறியாகத் தென்பட்டது.
தாவரங்களின் மலர்ச்சியிலிருந்து புதிய சந்ததி உருவாகும் அதிசயத்தை அபிதா ரசித்தாள். அந்த வீட்டுக்கு அவள் வரும்போது அந்தபின்புற வளவில் பற்றைதான் வளர்ந்திருந்தது. தனது கைவண்ணம் அங்கு ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை , மஞ்சுளாவை அழைத்துக்காண்பித்து, “ இவையள் என்னுடைய பிள்ளைகள். “ பெருமிதம் பொங்கச்சொன்னாள்.
மஞ்சுளா, தனது கைத்தொலைபேசியை எடுத்து அபிதாவை நெருக்கமாக நிற்கவைத்து ஒவ்வொரு மரங்களின் முன்னாலும் நின்று செல்ஃபி எடுத்துவிட்டு அபிதாவுக்கு காண்பித்தாள்.
“ மஞ்சு நான் இங்கே வரும்போது, இந்த இடம் எப்படி இருந்தது தெரியுமா…? “
“ நான் இந்தப்பக்கமே வருவதில்லை அபிதா. இங்கே இருந்த பற்றையைப்பார்த்து பயந்துமிருக்கிறேன். பாம்பு, பூச்சி, இருக்கும் என்ற பயம்தான். நீங்க இங்கே வந்து எல்லாவற்றையும் மாற்றிப்போட்டீங்க… இங்கே இந்த மரங்களெல்லாம் சுவாசிக்கும்போது உங்களைத்தான் நினைத்துக்கொள்ளும் என்றுதான் நினைக்கிறேன் அபிதா. வந்திருக்கும் ஜீவிகாவின் பெரியப்பாவுக்கும் உங்கள் மீது அபிமானம் வந்துவிட்டது. முன்பு வேலைக்கு வந்திருந்த பெண்களைப்போன்று நீங்கள் இல்லையாம் என்றும் ஒரு சேர்டிஃபிக்கேட் கொடுத்துள்ளார். அதுதான் உங்களுக்கு கிடைத்திருக்கும் லெப்டொப்பின் கதையின் முன்கதைச்சுருக்கம். “ மஞ்சுளா முகம் சிவக்கச்சொன்னபோது, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கு அபிதா தயாரானாள்.
“ மஞ்சு, இந்த மரங்களில் புதிய மாற்றங்கள் தெரிவதுபோன்று உங்களிலும் ஒரு மாற்றம் வரவேண்டும். உங்களுக்கு நான் ஒரு மாப்பிள்ளை பார்த்துவைத்திருக்கிறேன். “
“ அந்தத் தொழிலையும் எப்போதிருந்து ஆரம்பித்தீங்க…? “ குனிந்து தான் எடுத்த படங்களைப்பார்த்து ரசித்தவாறே மஞ்சுளா கேட்டாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment