உலகச் செய்திகள்


இஸ்ரேலுக்கான சீன தூதுவர் திடீர் மரணம்

சீனாவின் அங்கமாக இருப்பதை தாய்வான் ஜனாதிபதி நிராகரிப்பு

இஸ்ரேல், அமெரிக்காவுடனான பலஸ்தீன ஒப்பந்தங்கள் ரத்து

வனவிலங்கு வர்த்தகத்தை நிறுத்த சீனாவில் சன்மானம் அறிவிப்பு

அமெரிக்காவில் வைரஸ் தொற்று அதிகம்: பெருமை கூறும் டிரம்ப்

கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையப் புள்ளியாக மாறும் பிரேசில்

107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது

அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சீன நிறுவனங்களை அகற்ற செனட் ஒப்புதல்

இரு யுவதிகளை கௌரவ கொலை செய்தவர் கைது

தென் சூடானில் சமூகங்களிடையே மோதல்: 300 பேர் வரை உயிரிழப்பு


இஸ்ரேலுக்கான சீன தூதுவர் திடீர் மரணம்




இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டு வெய் (Du Wei) வடக்கு றநகர் பகுதியில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதாக,  இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பொலிஸார் இது பற்றிய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த மரணத்தில் எந்த சதியும் இடம்பெறவில்லை என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதுவராக இருந்தவர் டு வெய் (58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதுவராக அவர் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார்.
திருமணம் புரிந்து ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்தபோதும் அவரது குடும்பத்தினர் இன்னும் இஸ்ரேலுக்கு வந்து அவருடன் இணைந்துகொள்ளவில்லை. டெல் அவிவ் புறநகர் பகுதியான ஹெர்ஸ்லியாவிலேயே அவர் வசித்து வந்துள்ளார்.
Ema

நன்றி தினகரன்     











சீனாவின் அங்கமாக இருப்பதை தாய்வான் ஜனாதிபதி நிராகரிப்பு




சீனா வழங்கும் சுயாட்சி அதிகாரத்தை ஏற்று அந்நாட்டின் ஓர் அங்கமாக இருப்பதை தாய்வான் ஏற்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி ட்சாய் இங்-வென் நேற்று உறுதியாக அறிவித்துள்ளார். தாய்வான் மீதான சீனாவின் இறைமையை வலுவாக நிராகரித்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தாய்வானை ஒன்றிணைப்பது தவிர்க்க முடியாதது என்றும் தாய்வானின் சுதந்திரத்தை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் சீனா இதற்கு பதிலளித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதியாக தனது இரண்டாவது தவணைக்காக பதவி ஏற்ற பின்னரே ட்சாய் இதனை அறிவித்தார். சீனா மற்றும் தாய்வானுக்கு இடையிலான உறவுகள் வரலாற்றுத் திருப்பு முனையை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“விரோதம் மற்றும் வேறுபாடுகளை தவிர்த்து நீண்ட காலத்திற்கு இணங்கி வாழ்வதற்கான வழியை இரு தரப்பும் கண்டறிவது அவசியமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் ட்சாய் மற்றும் அவரது ஜனநாயக முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதும் சீனா அதனை மீட்பதற்கு தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்துவதாகவும் எச்சரித்து வருகிறது.     நன்றி தினகரன் 










இஸ்ரேல், அமெரிக்காவுடனான பலஸ்தீன ஒப்பந்தங்கள் ரத்து




அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பலஸ்தீன ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் (பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உட்பட) முடிவுக்கு வருகின்றன” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பது குறித்து இஸ்ரேல் முடிவு எடுத்த நிலையில் இந்த அறிவிப்பை பலஸ்தீனம் வெளியிட்டுள்ளது.
பலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பதுதான் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.
ஜெரூசலமை இஸ்ரேல் தலைநகராக டிரம்ப் அறிவித்தபோதே, பலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 












வனவிலங்கு வர்த்தகத்தை நிறுத்த சீனாவில் சன்மானம் அறிவிப்பு




சீனாவில் அரியவகை விலங்குகளை வளர்க்காமல் இருக்க விவசாயிகளுக்குப் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பழக்கத்தை முற்றிலும் ஒடுக்க அதிகாரிகள் விவசாயிகளுக்குச் சன்மானம் கொடுக்க இணங்கியுள்ளனர்.
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் கொவிட்-19 வைரஸ் பரவலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. உலகளவில் அந்த வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
சீனாவின் இரு மாநிலங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு பணம் வழங்கப்படும் என்ற விபரங்களை வெளியிட்டுள்ளன.
அரியவகை விலங்குகளுக்குப் பதிலாக கால்நடைகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் பணம் வழங்கப்படும். தேயிலை, மூலிகை மருந்துச் செடிகள் ஆகியவற்றையும் அவர்கள் வளர்க்கலாம்.
அரியவகை வனவிலங்குகளைத் திருப்பிக்கொடுப்போருக்குத் தொகை வழங்கப்படும்.
ஒரு கிலோ நல்ல பாம்புக்கு 16 டொலர், ஒரு கிலோ எலிக்கு 10 டொலர் என விலைகளை அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர்.
சார்ஸ் நோய்ப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்படும் புனுகுப் பூனையை வளர்க்காமல் திருப்பிக்கொடுத்தால், அதற்குப் பதில் 84 டொலர் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக கடந்த பெப்ரவரியில் அனைத்து வனவிலங்கு வர்த்தகம் மற்றும் நுகர்வுக்கு சீனா தற்காலிக தடை விதித்தது. எனினும் இது தொடர்பிலான சீனாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 











அமெரிக்காவில் வைரஸ் தொற்று அதிகம்: பெருமை கூறும் டிரம்ப்




உலகளாவிய நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிப்பது பெருமைக்குரியது என, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அது அதிகமானோரிடம் வைரஸ் தொற்றுக்கான சோதனை நடத்தப்படுவதைப் பிரதிபலிக்கிறது, அந்த வகையில் அது பெருமைக்குரியதே என்றார் அவர்.
அமெரிக்காவில் வைரஸ் பரவல் ஆரம்பித்தது தொடக்கம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பேசியபோதே இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க நோய்த் தடுப்பு நிலையம் வெளியிட்ட புள்ளிவிபரப்படி, இதுவரை அங்கே 12.6 மில்லியன் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எண்ணிக்கை அளவில் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா அதிகமான வைரஸ் தொற்றுச் சோதனைகளை நடத்தியிருப்பது உண்மையே.
ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் அது உலகின் முதல் நிலையில் இல்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவியல் அறிக்கையொன்று அதனைத் தெரிவித்தது.
ஆயிரம் பேருக்கு எத்தனை பேரிடம் சோதனை நடத்தப்பட்டது என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்கா உலக அளவில் 16ஆவது இடத்தில் உள்ளது.
அந்த அம்சத்தில் ஐஸ்லந்து, நியூசிலந்து, ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் உள்ளன.
கடந்த வாரம் அமெரிக்கா நாளொன்றுக்கு 300,000 முதல் 400,000 சோதனைவரை நடத்தியது. அமெரிக்காவை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பச் செய்ய அந்த எண்ணிக்கை 9 லட்சத்துக்கு அதிகரிக்கப்பட வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   நன்றி தினகரன் 












கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையப் புள்ளியாக மாறும் பிரேசில்

ஒரே நாளில் சுமார் 18,000 பேர் பாதிப்பு, 1,179 பேர் பலி
கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான நாள் ஒன்றை பதிவு செய்திருக்கும் பிரேசிலில் ஒரே நாளைக்குள் உச்ச எண்ணிக்கையாக 17,408 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 1,179 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாடு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மையப் புள்ளியாக மாறும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் உயிரிழப்பு எண்ணிக்கை 16,792 இல் இருந்து 17,971 ஆக திடீரென்று அதிகரித்திருக்கும் சூழலில் அந்த நாடு இன்னும் வைரஸ் தாக்கத்தின் உச்சத்தை எட்டவில்லை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரேசிலில் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 254,220 இல் இருந்து 271,628 ஆக உயர்ந்திருப்பதோடு, உலகில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து வைரஸ் தொற்று அதிகம் உள்ள மூன்றாவது நாடாகவும் அது உயர்ந்துள்ளது.
எனினும் வரும் ஜூன் மாதம் வரை வைரஸ் தொற்றின் உச்ச நிலையை எதிர்பார்க்க முடியாது என்று சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டிருப்பதோடு, போதிய சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் பாதிப்பின் அளவு கூறப்படுவதை விடவும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
எனினும் பிரேசிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ இந்த வைரஸ் பற்றி குறைத்து மதிப்பிட்டு வருவதோடு நாட்டில் பல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்படும் முடக்க நடவடிக்கைகளையும் எதிர்த்து வருகிறார். இதனை ஒரு சிறிய காய்ச்சல் என்று கூறும் அவர் இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று சாடுகிறார்.
கொவிட்-19 தொற்றினால் தற்போது 146,863 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 106,794 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் பிரேசில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் புதிய உயிரிழப்பு எண்ணிக்கையானது பிரேசிலில் ஒரு நாளைக்குள் இந்த நோய்த் தொற்றால் 1,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த முதல் சந்தர்ப்பமாக உள்ளது.
சாவோ போலோ மாநிலத்தில் 65,995 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ரியோ டி ஜெனிரோ பிராந்தியத்தில் 27,805 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உத்தியோபூர்வ கணக்கெடுப்பு காட்டுகிறது.
சாவோ போலோவில் 5,147 உயிரிழப்புகளும் ரியோ டி ஜெனிரோவில் 3,079 உயிரிழப்புகளும் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சாவோ போலோ, ரியோ டி ஜெனிரோ மற்றும் வடமேற்கு மாநிலமான அமேசோனாஸ் உட்பட சில பகுதி மருத்துவமனைகள் நிரம்பி அதன் நிலைகுலைவு நிலையை எட்டியுள்ளன.
பிரேசிலில் சுமார் 13 மில்லியன் மக்கள் சேரிப்புற பகுதியான பாவெலாவில் வாழ்கின்றனர். இங்கு அவசியமான சுகாதார நிலையை பேணுவது மற்றும் சமூக விலகலை கடைப்பிடிப்பது கடினமானதாகும்.
நாட்டின் முடக்க நிலையை ஜனாதிபதி கடுமையாக எதிர்த்தபோதும், பிரேசிலின் 27 மாநில ஆளுநர்களில் பெரும்பாலானவர்கள் அவரை பொருட்படுத்தாது அந்தந்த மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர்.
சாவோ போலோ அரசு இந்த மாத ஆரம்பத்தில் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவை வரும் மே 31 ஆம் திகதி வரை நீடித்தது. அந்த உத்தரவு மே 11 ஆம் திகதி முடிவடையவிருந்தது.
பொருளாதார நிலை தாங்கமுடியாததாக மாறும் ஆபத்து இருப்பதாகவும் வர்த்தகங்களுக்கு கூடிய விரைவில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பொல்சொனாரோ கூறி வருகிறார்.
கொரோனா வைரஸினால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் அளவுக்கு லத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் வறிய பிராந்தியங்களில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தாதபோதும் அதன் மோசமான நிலை இன்னும் அடையவில்லை என்று அச்சம் நிலவுகிறது.
ஆர்ஜன்டீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கொர்டோபாவில் நோய்த் தொற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நாட்டில் முடக்க நிலையை தளர்த்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் பின்வாங்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால் இழந்து, உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை ஐந்து மில்லியனை நெருங்கியுள்ளது. இதுவரை 325,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு மில்லியனை நெருங்கியுள்ளது.   நன்றி தினகரன் 











107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது





107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது-Pakistan Flight Crashed On Board 107 People
107 பேருடன் பயணித்த பாகிஸ்தான் பயணிகள் விமானமொன்று திடீரென வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.



பாகிஸ்தானின் லாஹூரிலிருந்து கராச்சி சென்ற, பாகிஸ்தான் விமான சேவைக்குச் சொந்தமான PK8303 எனும் குறித்த விமானம் 99 பயணிகள் மற்றும் 8 விமான சேவை ஊழியர்களுடன் பயணித்த நிலையில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக, பாகிஸ்தான் விமான சேவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது-Pakistan Flight Crashed On Board 107 People
இன்று (22) பிற்பகல் அந்நாட்டு நேரப்படி 1.00 மணிக்கு லாஹூரிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு கராச்சி விமான நிலையத்தை அடையவிருந்த நிலையில் கராச்சியில் வீழ்ந்து தீப்பிடித்துள்ளது.
குறித்த விமானம் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில் குடியிருப்பாளர்களும் பலியாகியிருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்திலிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளதோடு, அந்நாட்டு படையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Pakistani forces and fire brigade reach the residential area near Karachi airport where the PIA flight crashed this afternoon. Rescue efforts underway.





இது தொடர்பில், குறித்த விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
This is tragic. Pakistan International Airlines plane with 107 people onboard crashes into a heavily populated civilian area of Karachi. God bless the soul of the departed.





The PK 303 from Lahore to Karachi has crashed just before landing the officials confirm. The Airbus A320 went down onto the residential quarters, houses also damaged.


Heart Breaking visuals from the crash site Karachi 💔

PIA airbus 320 was carrying around 91 passengers and 8 staff members, Pak Army has started rescue operation ....



நன்றி தினகரன்









அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சீன நிறுவனங்களை அகற்ற செனட் ஒப்புதல்




அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் இருந்து சீன நிறுவனங்கள் சிலவற்றைத் தடைசெய்ய அனுமதிக்கும் சட்ட மூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசு, ஜனநாயகக் கட்சி இரண்டுமே அந்த சட்டமூலத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டன. அது நடப்புக்கு வந்தால் குறித்த சீன நிறுவனங்கள் தங்களது பங்குகளை அமெரிக்கப் பங்குச் சந்தையில் விற்பனைக்கு விடமுடியாது.
புதிய சட்டமூலம் அடுத்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்படும். அங்கும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி ட்ரம்ப் அதில் கையெழுத்திட்டுச் சட்டமாக்குவார்.
புதிய சட்டமூலத்தின்படி பங்குகளை விற்பனைக்கு விடும் நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றனவா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். வெளிநாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமாக இருந்தாலும் அதைத் தெரிவிக்கவேண்டும்.
புதிய சட்டமூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்துக்குமே பொருந்தும். இருப்பினும், அது சீனாவை இலக்காகக்கொண்டே வரையப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு, நாளுக்குநாள் சீர்கெட்டு வரும்நிலையில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.
இதற்குப் பதிலடியாக சீனாவும் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாமெனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 










இரு யுவதிகளை கௌரவ கொலை செய்தவர் கைது



பாகிஸ்தானில் இளம் பெண்களை கொலை செய்த சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்களுக்கு அவர் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்தே அவர் பிடிபட்டுள்ளார்.
முகமது அஸ்லம் என்ற அந்த ஆடவர் தமது உறவினப் பெண்களான 18 மற்றும் 16 வயது யுவதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை வீடியோ எடுத்த கைபேசியின் உரிமையாளர் மற்றும் கொல்லப்பட்ட பெண்களின் உறவினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் 52 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டை எட்டிய நிலையில் கடந்த ஒருசில வாரங்களிலேயே அது வைரலாகியுள்ளது.
கர்யோம் பிராந்தியத்தின் ஷம்ப்லான் கிராமத்தில் கடந்த வாரம் இந்த யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கௌரவக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பில் பொலிஸாருக்கு முறையிடத் தவறிய கொல்லப்பட்ட ஒரு யுவதின் தந்தை மற்றும் மற்றைய யுவதியின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சுமார் ஆயிரம் கௌரவக் கொலை சம்பவங்கள் பதிவாவதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.   நன்றி தினகரன் 










தென் சூடானில் சமூகங்களிடையே மோதல்: 300 பேர் வரை உயிரிழப்பு



தென் சூடானில் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல்களில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
ஜொங்லெய் மாநிலத்தில் பல டஜன் வீடுகள் அழிக்கப்பட்டு மற்றும் உதவிக் குழுக்களின் களஞ்சிய இடங்கள் களவாடப்பட்டிருப்பதோடு பெண்கள் மற்றும் கால்நடைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் மூன்று தொண்டுப் பணியாளர்களும் உள்ளனர். தென் சூடானில் ஆறு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டபோதும் சமூகங்களுக்கு இடையிலான வன்முறைகள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த பெப்ரவரி தொடக்கம் இவ்வாறான வன்முறைகளில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் வட கிழக்கு நகரான பீரியில் கால்நடை மேய்ப்பாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை புதிய வன்முறை வெடித்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதில் பலரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த சிலர் மருத்துவ சிகிச்சைக்காக தலைநகர் ஜுபாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 




No comments: