பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 2 - எங்கிருந்தோ வந்தாள் - ச . சுந்தரதாஸ்

.


நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து திரைவானில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவர் நடித்த பல படங்களில் அழகு பதுமையாகவும் கவர்ச்சியாகவும் நடிக்க அவருக்கு வாய்த்தன, ஆனாலும் தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க கூடிய படங்களும் அவருக்கு அவ்வப்போது கிட்டின அவற்றில் ஒன்றுதான் எங்கிருந்தோ வந்தாள்.

சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர் பாலாஜி இப்படத்தை தயாரித்திருந்தார் . த னது வழமையான கதாநாயகியான கேஆர்விஜயாவை இம்முறை அணுகாமல் முதல் தடவையாக ஜெயலலிதாவை தன் தயாரிப்புக்கு கதாநாயகி ஆக்குகிறார் . இந்தியில் கிலோனா என்ற பெயரில் உருவாகி வெள்ளிவிழா படம் ஆனதை தமிழில் தயாரித்து சிவாஜிகணேசனை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.

கோடீஸ்வரர் ஒருவரின் மகன் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன் அவன் உயிருக்குயிராய் காதலித்த பெண் மற்றொருவனை மணந்ததால் அவளுடைய திருமண வரவேற்பில் கலந்து உருக்கமாக பாடுகிறார், அவள் மனம் தாங்காது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்கிறாள் . தன் கண்முன் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த காதலன் சித்தபிரமைக்கு உள்ளாகிறான். அவனை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடனப் பெண் ஒருத்தியின் உதவியை நாடுகிறார் கோடீஸ்வரர். உதவவரும் அவளை கோடீஸ்வரர் குடும்பத்தினர் துச்சமென மதிக்கின்றனர் போதாக்குறைக்கு சித்தப்பிரமை பிடித்தவனால் மற்றுமொரு பாரிய சோதனையும் ஏற்படுகிறது.






குல்ஷான் நந்தா எழுதிய இக்கதையை ஏசி திருலோகச்சந்தர் படமாக இயக்கினார் சிவாஜிதான் கதாநாயகன் என்ற போதும் அவருக்கு சமமாக நடனப் பெண்ணான ஜெயலலிதாவின் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. விரக்தி உருக்கம் பச்சாதாபம் என்று பல விதமான நடிப்பை வழங்கும் சந்தர்ப்பம் ஜெயலலிதாவுக்கு கிடைத்து அதனை அவர் சிறப்பாக பயன்படுத்தி இருந்தார். படத்தின் முக்கால் பங்குக்கு மனநலம் குன்றியவராக சிவாஜி வருகிறார் . தன் முகபாவங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார் இவர்களுடன் பாலாஜி முத்துராமன் நாகேஷ் சச்சு என்று பலரும் நடித்திருந்தனர்.நீண்ட காலத்திற்குப்பின் தேவிகா சிவாஜியின் அண்ணி யாக இதில் வருகிறார்.

படத்தில் பலர் இருந்தாலும் அவர்களை முந்திக்கொண்டு எட்டிப்பார்ப்பது கவிஞர் கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் சௌந்தரராஜன் சுசீலா கூட்டணியாகும் படத்தின் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.




நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் ஆகிய பாடல்கள் சிவாஜியின் நடிப்பு எம் எஸ் வியின் உருக்கமான குரல் என்று ரசிகர்களின் நெஞ்சைபி பிழிந்தன . சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாடல் இனிமையாக இருந்தது.

1970-ஆம் ஆண்டு தீபாவளிக்கு எங்கிருந்தோ வந்தாள் , சொர்க்கம் இரண்டும் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டன, இரண்டிலும் சிவாஜி தான் கதாநாயகன் அதாவது சிவாஜி படத்துடன் சிவாஜி படம் போட்டி, அப்படியிருந்தும் இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்டன.





ஜெயலலிதாவை பொறுத்தவரை தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு எங்கிருந்தோ வந்தாள் மூலம் தனக்கு கிடைத்ததாக கூறியிருந்தார்

No comments: